நாமம் அறியாதவரின் சிகரெட் - முன்னுரை

மரியுவானா அருந்துவதால் கிறக்கம் ஏறிப் போவதையும், புலன்களால் நுகரப்படும் மிகச் சாதாரண தகவல்கள் கூட அதி அற்புதமாகத் தோன்றுவதையும் தவிர்த்து, அதைப் பருகுவதில் எனக்கு இன்னுமொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. படைப்பூக்கம்!

இரண்டு உள்ளங்கைகளிலும் ஏந்திய பிறகும், மென்மேலும் கனிகளை நம்மீது பொழிந்து திக்குமுக்காடச் செய்திடும் ஓர் இலந்தை மரம் போல, நான் மூச்சுத் திணறக்கூடிய அளவுக்கு கற்பனையை அள்ளித் தந்திருக்கிறது Bay window! அதற்காக நான், அதற்கு ஆதரவளித்துப் பேசவில்லை. எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

சிற்சில இணையப் பக்கங்களை மேய்ந்தபோது, "மரியுவானா ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு, அவர் மனதில் தோன்றும் மிகவும் சாதாரணமானதொரு எண்ணம் கூட, சாலச் சிறந்த கற்பனை போலத் தோற்றமயக்கமளிக்கும். உண்மையில், நுரையீரல் காற்றறைகளிலிருந்து புகை முழுவதுமாக வெளியேறிவிட்ட பிறகு, அந்தத் தோற்ற மயக்கம் தெளிந்து, 'தான் ஒன்றும் க்ரிஸ்டோபர் நோலன் அல்லன்' என்பது விளங்கிவிடும்" என்ற சாரத்தினை நான் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இந்தக் கூற்றினை நான் ஒரு சுயபரிசோதனையின் வாயிலாக சோதித்துப் பார்க்க விரும்பினேன். எனக்கும் சமயங்களில் (அதிகாலைகளில்) அந்த 'நோ-நோலன்' எண்ணம் தோன்றும்தான்.
இருந்தபோதிலும், என் வாழ்வின் முக்கியமான இரண்டு நிகழ்வுகள், நான் சிவனாயிருந்தபோதே நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று, உருவமற்ற, நாமமற்ற, பாலற்ற, குணமற்ற, அனைத்தும் அறிந்த, சர்வ வல்லமை பொருந்திய எங்கும் நிறை பரப்பிரும்மம் என்னுடன் ஒரு light-hearted convo வைத்துக்கொண்டது. கடவுளிடமிருந்து ஒரு கடிதம் என்ற தலைப்பில், பள்ளிப் பருவத்தில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.ஆனால், Reality is stranger than fiction என்பது எத்துணை உண்மை! கடவுள் எனக்குக் கடிதம் ஏதும் எழுதவில்லை. மாறாக, ஒரு voice message-ஏ அனுப்பிவிட்டார். அவ்வனுபவத்தை விளக்க என் மொழியறிவு போதாதென்பதால், அதை ஒரு தகவலாக மட்டும் இங்கே பரிமாறிக் கொள்கிறேன்.
இரண்டு, எனது முதல் திரைப்படத்துக்கான திரைக்கதை கிடைத்தது. அதன் பக்கவிளைவே இந்த நாவல். கவனிக்கவும், நான் சொல்வது கதையின் கருவைப் பற்றி அல்ல. சத்தங்கள், பாட்டொலிகள், உரையாடல்கள், காட்சிகள், வெளிச்சம், கோணங்கள் இவையனைத்தும் தயார்நிலையில் இருக்கும் ஒரு திரைக்கதை அப்படியே கம்பத்துராயனின் கிரி உச்சியிலிருந்து பழம் போல் நழுவிப் பாலில் விழுந்தது. மேலே சொன்ன தமிழ்ப்பதங்களை மொழிமாற்றம் செய்தால், அவை முறையே Sound Engineeering, Re-recording, Dialogues, Scenes, Lighting, Frames என்றாகின்றன. அதைத் திரைக்கதையாக எழுதுவதற்கு முன்பாக, ஒரு நாவலாக எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன். இந்த நாவலைத்தான் பிற்பாடு திரைக்கதையாக வேடம் கட்டி, திரைப்படமாக இயக்கவுள்ளேன். So, here is the spoiler alert! ஆனாலுமே, வெக்கை படிப்பது ஒருவித அனுபவமெனில், அசுரன் பார்ப்பது வேறொரு அனுபவமென்று நீங்கள் நம்புபவராக இருந்தால், இக்கதையை நீங்கள் படிக்கலாம். மையப் பாத்திரமான சிவகார்த்திகேயனின் எண்ண ஓட்டங்களையும் பதிவு செய்திட வேண்டும் என்ற நோக்கத்தினாலும்,  கம்பத்துராயன் கிரியின் வனப்பும் எழிலும் எனக்கு வாரித்தந்த உவமைகளைப் பகிர்ந்திட வேண்டும் என்ற பிரயாசையினாலுமே இதனை முதலில் நாவலாகப் பதிவுசெய்திட விழைந்தேன்.
Objective ஊடகமான சினிமாவில், Subjective இயல்பு கொண்ட ஒரு நபரின் சொந்த எண்ணங்களைப் புகுத்துவது, காட்சி மொழிக்குச் செய்யும் இடையூறு என்று நான் கருதுவதாலேயே சிவகார்த்திகேயனை முதலில் சொற்றொடர் வனத்துக்குள் உலவவிடுகிறேன்.
இது நான் 'எழுதும்' நாவலன்று. ஒரு முப்பரிமாணத் திரைப்படத்துக்குள் நானும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்து, கண்டு, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, நடந்து, உண்டு, குடித்து, குளிரில் நடுங்கி, தீச்சுவாலையின் வெக்கையினை வெற்றுடம்பின் ஒவ்வொரு உரோமக் காலிலும் இறைஞ்சி, இரவு இரண்டு மணியிலிருந்து காலை ஆறு மணி வரையிலும் கட்டிடம் ஏதும் இல்லாமல், பத்துப் பதினைந்து வேல்களுடனும், சூலங்களுடனும் வீற்றிருந்த, கல்லுக்குள் உறைந்த மிக அழகிய திருமாலை sight அடித்துக் கொண்டே, அவனுக்கு இரண்டடி முன்பாக ஓர் இரும்புச் சட்டியில் தீப எண்ணெயை ஊற்றி, அணியப்படாத மேல் துண்டுகளை அதற்குள் போட்டு தீயைக் கொளுத்தி சுற்றி அமர்ந்து விடிய விடிய குளிர்காய்ந்து, ஓர் உன்மத்தத்தை அடைந்து அனுபவித்த நிகழ்வு இது.
மனித மூளை உட்கிரகிக்கும் தகவல்களை (காட்சிகள், சத்தங்கள், வாசனைகள், சுவையுணர்வு, தொடுவுணர்வு) அப்படியே ஒரு சிலிக்கான் தகட்டில் soft copy - யாகப் பிரதியெடுத்திட முடியுமெனில், எனது கம்பத்துராயன் கிரி அனுபவங்களை அப்படியே Ctrl+C மற்றும் Ctrl+V செய்து, ஒரு 5D படமாக வெளியிட்டுவிடுவேன். ஐந்து பரிமாணத் திரைப்படத் தொழில்நுட்பமும், மூளையில் உள்ள தரவுகளைப் படியெடுக்கும் தொழில்நுட்பமும், அவற்றைச் செய்துபார்க்கப் பணமும் காலமும் அமையும் வரை, எனது கம்பத்துராயன் கிரி அனுபவங்கள் இரத்தமும் சதையுமாகவும், கண்களும் பார்வையுமாகவும் என்னுடனே இருக்கும்.
இந்த அனுபவத்தை ஒரு பதிவாக வெளியிட வேண்டுமென என்னை எண்ணவைத்தது சிவபானமே. ஆனால், அந்தக் காரணத்தினால் நான் மையப் பாத்திரத்துக்கு சிவகார்த்திகேயன் எனப் பெயரிடவில்லை. இப்பெயரைத் தேர்ந்தெடுத்தது ஒரு சுவையான அனுபவம். Freewill மீது நம்பிக்கையுள்ளோர் அதனை இரசிக்க மாட்டர். அந்தச் சுவையான அனுபவமும் நாவலில் உள்ளது.
ஏனோ, கம்பத்துராயன் என்ற பெயரைக் கேட்டதும், எனக்கும் நண்பன் மற்றும் சக படைப்பாளி பிரபுவுக்கும் 'அது சிவன்தான்' என்ற எண்ணம் தோன்றியது. பாதி மலை ஏறிய பிறகே, திரிபு நீங்கி அது திருமால் என்று தெரிய வந்தது. ஆனாலும், உமக்குத் தெரியாததா!

அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவன் வாயிலே... கம்பத்துராயன் கிரியின் அத்தனை மண்ணையும் கொட்ட வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?