2003 - 2023
க்ரிக்கெட் எனக்கு அறிமுகமானபோது, ரப்பர் பந்து என்பது எங்களுக்கு ஓர் ஆடம்பரம். குக்கிராமமான எங்கள் ஊரில் நாங்கள் க்ரிக்கெட் பந்தாகப் பயன்படுத்தியது, 'ஊமாங்கொட்டை' என்று அழைக்கப்பட்ட காய்ந்த பனங்கொட்டையைத்தான். ஐந்து ரூபாய் இருந்தால், கொளப்பலூரிலோ கோபியிலோ ரப்பர் பந்து வாங்கிக் கொள்ளலாம். 'ஹீரோ' என்றொரு பந்து இருந்தது. அது போக சற்றே சின்ன சைஸில் 'பெப்ஸி' பந்தும் கிடைக்கும். யார் காசு கொடுத்து வாங்குகிறார்களோ, அந்த நபர் வரும்போது மட்டுமே அதனைக் கொண்டுவருவார்கள். அதுபோக, பந்து எங்காவது வேலிக் காட்டுக்குள் தொலைந்து விட்டால், தேடிக் கண்டுபிடிப்பது பெரும்பாடு. தேடும்போது சில நகைச்சுவை சக்ரவர்த்திகள் "இங்க பாரு... பந்து இல்ல" என்றோ, "அட இங்க பாரு... ஒரு விட்ட கெடக்குது" என்றோ சொல்லி பெருமையுடன் எல்லோரிடமும் கெட்ட வார்த்தை வாங்கிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது, அந்தத் தொனியில் ஏமாந்து எத்தனை பேர் பந்து கிடைத்ததென அவர்களைப் பார்க்கிறார்கள் என்பதில்தான் சொல்பவருக்குப் பெருமிதம். ஆனால், ஊமாங்கொட்டைகள் எக்கச் சக்கமாகக் கிடைக்கும் என்பதால், ...