அருஞ்சொற்பொருள் - அறிமுகமும் முதல் பொருளும்
ஒரே ஓர் இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொற்கள் ஏராளம் உள்ளன நம்மிடம்.
முற்றும், வாழ்த்துதுமே, மட்டு, யாதும், கோடிட்ட - என்று நீளும் இவ்வரிசையில் அருஞ்சொற்பொருள் என்ற வார்த்தையும் ஒன்று.
பள்ளிப் பாடத்தின் தமிழ்ப் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் பிற்பகுதியில் மட்டுமே இடம்பெறக் கூடிய, அருகி வரும் உயிரினமே இவ்வார்த்தை.
அருமை + சொல் + பொருள் என்ற இவ்விணைப்பில் 'அருமை' என்ற சொல்லின் பொருள் 'அரிதான' என்பதாம். அரிதான சொற்களுக்கான அர்த்தமே 'அருஞ்சொற்பொருள்'.
ஓரிட வாசிகளான இவ்வார்த்தைகளை வேறிடத்தில் பயன்படுத்திப் பார்த்தால், அந்தப் புதுமையே ஓர் அழகைத் தருகிறது.
இந்த உதாரணங்களைப் பாருங்களேன்.
கோடை வெயில் ஆனியில் முற்றும்.
எங்கள் ஊருக்கு வருகை புரிந்திருக்கும் எழுத்தாளரை யாம் வணங்கி வாழ்த்துதுமே.
எனது அன்புக்கு மட்டில்லை.
யாதும் அவன் செயல்.
கோடிட்ட சட்டை.
அதைப் போலவே, அருஞ்சொற்பொருளையும் புத்தகத்திலிருந்து பிய்த்தெடுத்து இங்கே பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
இங்கே இது அருமை + சொற்பொருள் ஆகிறது. அதாவது, இங்கே அருமையானது சொல் அன்று. சொல் அன்றாடச் சொல்தான். அதற்கான பொருள்தான் அருமையானது, அதாவது அரிதானது.
அருஞ்சொற்பொருள் 1
பாடல்......மல்லிக மொட்டு
படம்.........சக்திவேல் (1994)
இசை.......இளையராஜா
வரிகள்....காமகோடியன்
'மல்லிக மொட்டு
மனசத் தொட்டு
இழுக்குதடி மானே!'
எனத் தொடங்கும் இந்தப் பாட்டின் பல்லவியில் ஒரு வரி வருகிறது.
'மானே மருதாணி பூசவா?'
மருதாணி பூசுதல் என்பது சரியான சொற்சேர்க்கை இல்லை. சரியான மரபுத் தொடர் இல்லை. மருதாணி வைத்தல் என்பதே சரி. அப்படியிருக்க, கவிஞர் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்?
புலவர் பாணப்பத்திர ஓணான்டி சொல்வது போல, அதற்கு முந்தைய வரியைச் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
'மந்தாரச் செடி ஓரத்தில,
மாமன் நடத்துற பாடத்துல,
மானே! மருதாணி பூசவா?'
மருதாணிச் செடி ஓரத்தில் என்றால் கூட சரிதான். மந்தாரைச் செடி ஓரத்தில் மருதாணியா? அதையும், வைத்து விடாமல் பூசுவதா? அதென்ன மஞ்சளா பூசுவதற்கு? என்ன இத்தனை குழப்பம்?
குழப்பமே இல்லை. மாமன் நடத்தும் பாடம் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் குழப்பம் நீங்கித் தெளிவு கிடைக்கும். இங்கே தலைவன் தலைவிக்கு எந்தவித ஊழியமும் செய்ய முன்வரவில்லை. அரைத்து வைத்த மருதாணி விழுதை எடுத்து அவள் விரல் நுனிகளில் வைத்துவிடும் அளவுக்கு சாந்தமான நிலையிலெல்லாம் அவன் மனது இல்லை.
அவள் ஏற்கனவே கைகளில் மருதாணி வைத்திருக்கிறாள். அதை நமது ஆள் சென்று பூச விரும்புகிறார். அவளுடைய கைகளில் மட்டும் இருக்கும் மருதாணியை பிற பகுதிகளிலும் பூசி, தன் மேலுமே கூட பூசிக்கொள்ள யோசனை சொல்கிறார் தலைவர்.
அவ்வாறு பூசுதல் முதன்மையான செயல் அல்ல. வேறொரு செயலின் பக்கவிளைவே இந்தப் பூசுதல்.
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா என்ன?
Comments
Post a Comment