தலைப்பில்லாமல் பேசுதல்
ஓர் எழுத்தாளனுக்கு மிகப் பெரிய சாபம், அவன் எழுதுவது யாருக்கும் புரியவில்லை என்பதே. என்னுடைய அக்காவே என்னிடம் சொல்லியிருக்கிறார், "தம்பி! நீ எழுதறது எதுமே புரிய மாட்டேங்குது" என்று. அதில் ஒரு சிறு கர்வம் உண்டாகிறதென்றபோதிலும், சுவரைப் பார்த்து உரையாடும் பைத்தியகாரனாய் இருக்க யார்தான் விரும்புவார்கள்? என் எழுத்தை நானே இரசித்துக் கொள்வது, பைத்தியக்காரனின் சீழ்புண்ணில் தோன்றும் அரிப்புக்குத் தோதான சொறிதல் போன்றதே! அவனுக்கு மட்டுமே அது இன்பம் தரும். 'என் எழுத்து புரியவில்லை' என்பது என்னுடைய கவலையல்ல. ஆதங்கம். ஆனால், நீங்கள் நல்லவர்கள். எழுதியதின் அர்த்தம் என்னவென்று ஓர் எழுத்தாளனைப் பார்த்துக் கேட்காதவர்கள் நீங்கள். 'அது என்ன கருமாந்தரமோ இருந்துட்டு போகட்டும்' என்று நினைத்து நீங்கள் அர்த்தம் கேட்காமல் போனாலும், உங்களுக்குப் புரிந்து போய், ஆனாலும் பிடிக்காமல் போனதால்தான் அதைப் பற்றி என்னிடம் கேட்காமல் போனீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன். என் எழுத்தைப் பற்றி என்னிடம் ஒருவர் திட்டியாவது பேசவில்லையென்றால், அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது பிடிபடவில்லை என்றே ந...