என்னிடம் ஒரு ஜோக் உள்ளது. இதோ இந்த ஓட்டலில் எனக்கு முன்பாக உட்கார்ந்து, புரோட்டாவைத் தின்று முடித்த பின்னும் தேங்காய்ச் சட்னியையும் சாம்பாரையும் கலந்து உறிஞ்சிக் குடிக்கும் இந்தத் தாத்தனிடம் சொன்னாலும், புரையேறச் சிரிப்பார். ஏனோ சொல்லமாட்டேன். ட்ராஃபிக் சிக்னலில் பச்சை வருவதற்குள்ளாக ஒரு பத்துப் பேரிடமாவது சொல்லிச் சிரிக்க வைத்திடலாம். சொல்லவில்லை நான். நீண்ட நாளாக நான் தேடும் ஒரு விடுகதைக்கான விடை, இதோ இந்த ஆஸ்பத்திரியில் வருவோரையெல்லாம் இன்முகத்தோடு விசாரிக்கிறாரே, இந்த வடிவான உதடுகளையுடைய செவிலிக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு மிகப் பிடித்த திரைப்படம் ஒன்று, சரியான சில்லறை தராததற்காக என்னிடம் சிடுசிடுக்கும் நடத்துனருக்கும் மிகப் பிடித்ததாயிருக்கும். பந்தியின் கடைசி இட்லியை மட்டும் பிசைந்து சாப்பிடும் பழக்கம், இதோ சாலையில் என்னைக் கடந்து போகும் இந்த தேன்குரலாளுக்குமிருக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டால் படத் தலைப்பின் எழுத்துரு மீது எனக்கிருக்கும் காதல் என் பக்கத்து தெருக்காரருக்கும் இருக்கலாம். ஆனாலும் என்ன? நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டதையே பேசி, பேசாததைப் பேசாமல் தவிர்...