Posts

Showing posts from March, 2026

கவிதை

கவிதை கவலையற்றது ... கவிதை என்பது இயற்கை உபாதை அடக்கி வைத்தல் கடினம் வராதபோது வரவைப்பதோ அசாத்தியம் ... பொறிதட்டி பின் எழுத்தாகாமல்  போகும் கவிதைகளைப் போலவே காணாமல் போனது உருவகம் ... எழுதத் தெரியாதவருக்குத் தோன்றும் கவிதையானது அதிகப் பிரசங்கம் செய்வதில்லை ... எவருக்கும் தெரியாது எந்த வரியை அடித்துத் திருத்தி இந்த வரியை எழுதினேனென்று ... கவிதை என்பது புணர்ச்சியின்பம்  அதைப் படம் பிடித்து மாட்டி அவ்வின்பத்தைப் பகிரும் பிரயத்தனமே அக்கவிதையை எழுதுவதென்பது ... ஒரே ஆற்றில் இருவர் குளித்தாலும் ஒரே நீர் அவர்களை நனைக்குமா? கவிஞர் தம் கவிதை மூலம் உம்மை ஆற்றில் குளிக்க அழைக்கிறார் நீர் அவரது கவிதையைப் படிக்கையில் அது அங்கே இருப்பதில்லை ... ஒரு கவிதை தோன்றும்போது கவிஞர் பிறக்கிறார் அக்கவிஞரால் எழுதப்பட்டு அக்கவிதை மரிக்கிறது ... கவிதை என்பதொன்றும் சமையலல்ல அது கவிஞர் சப்பிப் போட்ட பனங்கொட்டை ... கவிதை ஓர் அனுபவம் அதைப் புரிந்துகொள்ளவே கற்பனை வேண்டும் எழுத வெறும் சரணாகதி போதும் ...

நீ உன் இயல்பிலில்லை என்றனர். என் இயல்பில்  இல்லாமல் இருப்பதும் என் இயல்பே.

நினைத்ததை முடிப்பதே வெற்றி என்றானால், தடுக்கி விழுந்து பல்லுடைக்காமல் கழிவறை சென்று, உரிய‌ தசையைத் தளர்த்தி சிறுநீர் கழிப்பதும் அதுவே.

வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று சொல்பவர்களும் தலைவாரிக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

என்னாலிதெழுதப்படாவிடினுமெழுதப்படுமிதின்னொருவரால்

எழுத்தின் உச்சம் எழுதாமலிருப்பது. எழுத ஏதேனும் நோக்கமுண்டு. எழுதாமல் இருப்பதிலும் நோக்கமுண்டு. நோக்கமற்றிருப்பதொரு நோக்கமில்லையா? ... இன்றெழுதப்படுவதென்பது என்றுமே எழுதப்படாததாகிப்போகும் காலம் வருமெனும்போது, எழுதுவதன் நோக்கந்தானென்ன? ... குழலெடுத்திசைத்திடுந்தேவையின்றி, மூளைக்குள்ளேயே கேட்டிடுமிசையெனும்போதும் குழலெடுத்திசைத்திடும் வீணரே கலைஞர். என்னிலே தோன்றியதோரெண்ணம் எல்லாரையுமடையட்டுமென்பதென்னெண்ணமா? அல்லதவ்வெண்ணம் என் மூலமேயவரையடையட்டுமென்பதென்னெண்ணமா? ... என்னில் தோன்றியவெண்ணம் என்னெண்ணமில்லை. அதோரெண்ணம்.  என்னாலதெழுதப்படாவிடினுமெழுதப்படுமதின்னொருவரால். எழுத்தழியும். எண்ணமழியாது. இப்போதிந்தவுலகில் எழுதப்பட்டுக்கிடக்கும் அனைத்துமிந்தக்காலமெனும் பெருவெள்ளத்தில் நிர்த்தாட்சண்யமாய் துடைத்தழிக்கப்பட்டபிறகும், லட்சங்கோடியுகங்கழித்து இன்னொரு மூளையிலுந்தோன்றலாமிப்படி மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே! ... மீண்டுமொரு காலத்தில் அதுவே மீண்டும் தடயமின்றியழிந்தோடும். ... பிரபஞ்சத்திலுலவித்திரியுமனைத்தெண்ணங்களையுமேந்திக்கொள்ளுமளவு பரந்த மடி மானிடர்க்கில்லை. ... இருந்துமெழுத...