ஒளிக்கவிதை
நண்பன் ஒருவனின் மூலமே அப்படம் எனக்கு அறிமுகமானது. கொரிய மொழிப் படமான அதன் லிங்க்கை அனுப்பிய அவன் அதற்கான ஆங்கில சப்டைட்டில்ஸும் அனுப்பினான். சப்டைட்டில்ஸ் சரியாகப் பொருந்துகிறதா என்று பரிசோதிக்க படத்தை சிறிது தூரம் ஃபார்வர்டு செய்தேன். சப்டைட்டில்ஸ் வரவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றேன். வரவில்லை. மேலும் சிறுதூரம், பிரிதும் கொஞ்சதூரம் என்று Random ஆக எந்த இடத்திலிருந்து ஓடவிட்டாலும், சப்டைட்டில் வரவேயில்லை. ஏனென்றால், எந்த இடத்திலும் எவரும் பேசிக்கொள்ளவேயில்லை. இதுதான் Spring, Summer, Fall, Winter... and Spring என்னில் உண்டாக்கிய முதல் இம்ப்ரெஷன். இத்தனைக்கும், அப்படம் மௌனப்படம் கிடையாது. படத்தில் உரையாடல்கள் உண்டுதான். ஆனால், உரையாடல் என்பதற்குப் பின்னால் உள்ள கள் எனும் விகுதியளவுக்கு அவை குறைவானவையே. ஒரு மலைப்பகுதி. மலைகளுக்கு நட்டநடுவே ஒரு பெரிய நீர்நிலை. அதன் மையத்தில் மிதக்கும் ஒரு மரவீடு. அதில் வசிக்கும் ஒரு ஜென் குருவும் அவரது சீடனும். படத்தின் தொண்ணூற்றைந்து சதவீதக் கதையை நான் சொல்லிவிட்டேனென்றால் நம்பமுடிகிறதா? நான்கு பருவங்களிலும் அங்கே நடக்கும் நிகழ்வுகளே கதை. மிகப் ப...