Posts

Showing posts from October, 2020

சிறுவூடற்பள்ளு

அவர்கள் இருவரும் தனியறையில் இருந்தார்கள். இரவு நேரம். தம்பதியர்தாம் அவர். இருவருக்குள்ளும் எவ்வித ஊடலும் இல்லை. நரம்புதளர் மூத்தோரும் அவர்கள் அல்லர். இன்னும் அவர்கள் இருவரும் தம்மிரு உடலிடை காற்றினைத் துரத்தாமலிருந்ததற்கான காரணம் என்னவெல்லாம் இருக்கமுடியுமோ, அதில் எதுவுமில்லை. ஆனாலும், அவர்கள் தனித்திருந்தனர். மந்திராலோசனையில் இருந்தனர். அது பிரபல இளம் கதாநாயகன் முகில் வண்ணனின் அலுவலகம். நேரம் இரவு பதினொன்றே கால். அவனுக்கு எதிரே புதுமுக இயக்குனர் சூடித்தந்த சுடர்க்கொடி. கட்டிலுக்குப் பதிலாக அவர்களுக்கிடையே மேசை இருந்தது. அவள் இயக்கப் போகும் முதல் படம் தொடங்குவதற்கு முன்பே, முகில் வண்ணனை இயக்க ஆரம்பித்துவிட்டனள். ஆனால் இப்போது இது ஒரு தொழில்முறை சந்திப்பு. தனது முதல் படத்துக்கு கதாநாயகனாக தன் காதல் கணவனையே ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறாள். அவன் அவளுடைய காதுமடலைப் பார்க்க மாட்டான். அவள் அவனுடைய கைகளைப் பார்க்க மாட்டாள்.  அவளுடைய கையில் ஒப்பந்தப் பத்திரம் இருந்தது. முகில் வண்ணனின் கண்களை இமைகொட்டாமல் பார்த்தவாறே பேசினாள். "ஸீ! இந்த டாக்யுமெண்ட்ஸ்-ல இல்லாத இன்னொரு முக்கியமான கண்டிஷன நா...

அத்தியாயம் - மூன்று - கடவுளிடமிருந்து ஒரு கடிதம்

நீஇ ஆம்நீயேதான் அந்தச்செய்யுளிசைஅளபெடையைப் படித்த நீ எனதுபடைப்பேநீ படைப்பதென்றால்என்னவென்று அறியாப்பிள்ளையல்லநீ உருவமல்லா நாமமல்லா சுவையல்லா குணமல்லா விதிகளல்லா ஏதுமல்லா யாவுமறிந்த எல்லாம்வல்ல எங்கும்நிறைபரப்பிரும்மம் உனக்கெழுதும்கடிதம்லெட்டர்ச்சே கடுதாசிவெச்சுக்கலாமா வேணா கடிதமேஇருக்கட்டும் என்னகெட்டுப்போச்சு குணமல்லாஇறை சீரியஸாகஇருக்கமுடியுமெனில் கிஸ்ஸாவாகவும்இருக்கமுடியும் ஆன்மிகமேகிஸ்ஸாதானே இந்தக்கடிதத்தை நீபடிக்க எதுகாரணமென்று நீநினைக்கிறாயோ அதுஎன்னவாகஇருந்தாலும் அதுஉண்மைஇல்லை உன்நண்பன் உன்னிடம் இதைப்படிக்கக்கொடுத்தானா வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸ் மூலம்பார்த்தாயா ஒருபுஸ்தகத்தில்வாசித்தாயா ஒருகல்வெட்டில்கண்டாயா UNESCOவாசலில்கண்ணுற்றாயா வேற்றுகிரகத்தின்உட்கருவில்கேட்டாயா சொர்க்கத்தின்வாசலில்கவனித்தாயா எல்லாம்பொய் . யாம்உம்முடன் கதைக்கவிழைந்தோம் அதுவே அதுமட்டுமே காரணம் அது மட்டுமே உண்மை . ( Rather, it's actually a monologue! Nevertheless, even if you'd like to converse with me while reading this, don't worry. I can listen to you...

அத்தியாயம் இரண்டு - இரண்டு குழந்தைகள்

சிவகார்த்திகேயனும் வெற்றியும் சற்றேறத்தாழ ஊர்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் மலையிறங்கத் தொடங்கிய சுந்தர் அவர்களுக்கு முன்னே சென்றுவிட்டான். வெற்றிக்கு காலில் அடிபட்டிருந்த காரணத்தால், அவனால் மெதுவாகவே இறங்க முடிந்தது. அவனுக்குத் துணையாக சிவகார்த்திகேயனும் மெதுவாகவே இறங்கிக் கொண்டிருந்தான். காலைப்பசி உண்டாகக் கூடிய நேரமாகையால், சுந்தர் அடிவாரத்துக்குச் சென்று ஏதாவது கடையில் சாப்பிட்டுவிட்டுக் காத்திருக்கட்டுமென்று எண்ணிய வண்ணம், கடிகார முட்களில் சிக்குண்ட உலகு பற்றிய கவலை ஏதுமின்றி எங்கெல்லாம் முகட்டுப் பாறைகள் தென்பட்டனவோ; எங்கெல்லாம் உடைத்த தேங்காய் மற்றும் ஊதுபத்தி கமழ்ந்த வாழைப்பழங்களுடன் நந்தியோ விநாயகனோ தென்பட்டார்களோ; எங்கெல்லாம் செல்போனில் பாட்டு கேட்டபடியே சிறுசிறு குழுக்கள் ஓய்வெடுத்தார்களோ; கருமஞ்சள் ஆவாரம் பூக்கள் எங்கெல்லாம் குதியாட்டம் போட்டனவோ; மிக முக்கியமாக எப்போதெல்லாம் வெற்றிக்கு ஓய்வு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அமர்ந்து இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இருவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்த காரணத்தால் அவர்களால் பாட்டு கேட்க முடியவில்லை. உண்மையில்...

அத்தியாயம் ஒன்று - கடவுளுடன் கதைத்தல்

சிவகார்த்திகேயனின் கண்கள் மூடியிருந்தன. தலை ஆகாசத்தைப் பார்த்தவாக்கில் இருந்தது. மரணத்துக்கும் அவனுக்கும் ஓரடி இடைவெளி மட்டுமே இருந்தது. சுழன்றடித்த காற்று அவனது வெற்றுடம்பை புதுப்புனலைப் போலக் கழுவிச் சென்றது. ஆடுசதையில் மென்சுகம் காட்டிய இதமான வலி, காற்றை எதிர்த்து நின்ற கால்களை ஒரு நடுக்கத்துக்கு உள்ளாக்கியது. சிறு குழந்தை போலே கதறியழவேண்டும் போல இருந்தது அவனுக்கு. மேல் இமைகளை காற்று அசைத்து மேலேற்றிய போது, சிட்டுக்குருவியின் சிறுவாலைப் போல ஈரத் துளிகளைச் சிதறடித்துப் படபடத்தன அவை. இமை மயிர்களில் கோத்து நின்ற துளிகளில் நிறப்பிரிகை வானவில் துணுக்குகள் மிளிர்ந்தன. அவனது கண்களின் முன்பாக அகண்டு விரிந்து நீண்டு கிடந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். சிறுவர்கள் உப்பு ஒளித்து வைத்து ஆடும் விளையாட்டில் வைக்கப்பட்ட நீல நிற மண் குட்டுகளாகத் தெரிந்தன, சௌகர்யம் போல் வியாபித்திருந்த குன்றுகளும், மலைகளும். கண்களை நன்றாகத் திறந்தான். அவன் நின்றிருந்த முகட்டுப் பாறையின் கீழே வெகு தொலைவுக்கு ஆழ்ந்து கிடந்தது மலைச்சரிவு. ஓரடி முன்வைத்தானெனில், 'அவன்' என்றொரு ஜீவராசி இருந்ததற்கான எந்தவொரு ...

நாமம் அறியாதவரின் சிகரெட் - முன்னுரை

மரியுவானா அருந்துவதால் கிறக்கம் ஏறிப் போவதையும், புலன்களால் நுகரப்படும் மிகச் சாதாரண தகவல்கள் கூட அதி அற்புதமாகத் தோன்றுவதையும் தவிர்த்து, அதைப் பருகுவதில் எனக்கு இன்னுமொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. படைப்பூக்கம்! இரண்டு உள்ளங்கைகளிலும் ஏந்திய பிறகும், மென்மேலும் கனிகளை நம்மீது பொழிந்து திக்குமுக்காடச் செய்திடும் ஓர் இலந்தை மரம் போல, நான் மூச்சுத் திணறக்கூடிய அளவுக்கு கற்பனையை அள்ளித் தந்திருக்கிறது Bay window! அதற்காக நான், அதற்கு ஆதரவளித்துப் பேசவில்லை. எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். சிற்சில இணையப் பக்கங்களை மேய்ந்தபோது, "மரியுவானா ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு, அவர் மனதில் தோன்றும் மிகவும் சாதாரணமானதொரு எண்ணம் கூட, சாலச் சிறந்த கற்பனை போலத் தோற்றமயக்கமளிக்கும். உண்மையில், நுரையீரல் காற்றறைகளிலிருந்து புகை முழுவதுமாக வெளியேறிவிட்ட பிறகு, அந்தத் தோற்ற மயக்கம் தெளிந்து, 'தான் ஒன்றும் க்ரிஸ்டோபர் நோலன் அல்லன்' என்பது விளங்கிவிடும்" என்ற சாரத்தினை நான் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இந்தக் கூற்றினை நான் ஒரு சுயபரிசோதனையின் வாயிலாக சோதித...