அத்தியாயம் இரண்டு - இரண்டு குழந்தைகள்
சிவகார்த்திகேயனும் வெற்றியும் சற்றேறத்தாழ ஊர்ந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் மலையிறங்கத் தொடங்கிய சுந்தர் அவர்களுக்கு முன்னே சென்றுவிட்டான். வெற்றிக்கு காலில் அடிபட்டிருந்த காரணத்தால், அவனால் மெதுவாகவே இறங்க முடிந்தது. அவனுக்குத் துணையாக சிவகார்த்திகேயனும் மெதுவாகவே இறங்கிக் கொண்டிருந்தான். காலைப்பசி உண்டாகக் கூடிய நேரமாகையால், சுந்தர் அடிவாரத்துக்குச் சென்று ஏதாவது கடையில் சாப்பிட்டுவிட்டுக் காத்திருக்கட்டுமென்று எண்ணிய வண்ணம், கடிகார முட்களில் சிக்குண்ட உலகு பற்றிய கவலை ஏதுமின்றி எங்கெல்லாம் முகட்டுப் பாறைகள் தென்பட்டனவோ; எங்கெல்லாம் உடைத்த தேங்காய் மற்றும் ஊதுபத்தி கமழ்ந்த வாழைப்பழங்களுடன் நந்தியோ விநாயகனோ தென்பட்டார்களோ; எங்கெல்லாம் செல்போனில் பாட்டு கேட்டபடியே சிறுசிறு குழுக்கள் ஓய்வெடுத்தார்களோ; கருமஞ்சள் ஆவாரம் பூக்கள் எங்கெல்லாம் குதியாட்டம் போட்டனவோ; மிக முக்கியமாக எப்போதெல்லாம் வெற்றிக்கு ஓய்வு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அமர்ந்து இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இருவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்த காரணத்தால் அவர்களால் பாட்டு கேட்க முடியவில்லை. உண்மையில், அவர்களின் தேர்வுப்படி பாட்டு கேட்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். அவர்கள் மிக மெதுவாகவே இறங்கினார்கள் என்பதால், ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் கடந்து ஆட்கள் சென்றவண்ணம் இருந்தார்கள். அவர்களில் சிலர் தத்தம் செல்போன்களிலும், ஸ்பீக்கர்களிலும், ரேடியோக்களிலும் பாட்டு கேட்டபடி சென்றனர். தங்களுக்குப் பின்னால் மெல்லிய சத்தத்தில் ஏதாவது பாட்டு கேட்டபோதெல்லாம், அவர்கள் இருவரும் தங்கள் நடையை நிறுத்துவர். அந்தப் 'பாட்டு' மெள்ள மெள்ள நெருங்கி அவர்களை அடையும். அந்தப் பாட்டுடன் சேர்ந்து இவர்களும் நடையைத் தொடர்வர். ஆனால் வழக்கம் போல அவர்கள் மெதுவாகவே நடப்பார்கள் என்பதால், பாட்டு மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்து விடும். சிவகார்த்திகேயனுக்குப் பொதுவாகவே ஒரு வழக்கம் இருந்தது. சில புதுப்பாட்டுகளை அவன் முதல்முறை கேட்கும்போது, அதன் ஒருபகுதியை மட்டுமே கேட்பான். முதல் சரணம் முடியும் வரை மட்டும்; முதல் இடையிசை முடியும் வரை மட்டும்; முதல் இரண்டு நிமிடம் மட்டும் என்று ஏதாகிலும் ஒரு பகுதியைத்தான் கேட்பான். அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறை அந்தக் குறிப்பிட்ட பாடலைக் கேட்கும் போதும், முதன்முதலாகக் கேட்ட பகுதியை மட்டுமே கேட்பான். எப்போது அவன் அந்தப் பாட்டைக் கேட்கும்போது பாட்டை மாற்றும் கட்டுப்பாடு அவன் கையில் இல்லையோ, அப்போதுதான் அந்தப் பாட்டை முழுதாய்க் கேட்பான். அது இரண்டு வருடங்கள் கழித்தே நிகழும் என்றாலும் அதற்காகக் காத்திருப்பான். அப்படிக் கேட்ட பல பாடல்களின், வேறு சில பகுதிகளை இறங்கும் போது அவனால் கேட்க முடிந்தது. அது சுகந்தருமோர் அனுபவம். ஒரே நேரத்தில் அவனால் பழைய பாட்டும் கேட்க முடியும், புதுப்பாட்டும் கேட்கமுடியும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்த சமவெளியைக் கழுகுப் பார்வையில் பார்த்த பரவசம், மண்ணிலே ஒட்டியிருந்த சிறுதுளி தட்பம் பாதங்களுக்குத் தந்த ஈர ஒத்தடம் ஆகியவற்றோடு சேர்ந்து இந்தப் புதுவித பாடல் கேட்கும் அனுபவமும் சேர்ந்து கொண்டதால், அவனொரு பிள்ளையின் உற்சாகத்துடன் மலையிறங்கிக் கொண்டிருந்தான். ஒரு முகட்டுப் பாறையின் மீது ஓர் நந்தி சிலை இருந்தது. அங்கிருந்த தேன்வாழைப்பழங்களிலே மிகவும் வாடிய நிலையிலிருந்த இரண்டினை எடுத்துக் கொண்டு பாதையோரம் இருந்ததொரு சிறுகல்லின் மீது அமர்ந்தனர். அவர்கள் சென்றுசேர வேண்டிய அத்தியூர் கைநீட்டினால் எட்டிவிடும் தூரத்தில் தெரிவது போலத் தோற்றமயக்கம் காட்டியது. உரோமத் துவாரங்களில் முகிழ்த்திருந்த வேர்வைத் துளிகள் தோலோடு படிகமாயின. அடுத்த இரண்டொரு வினாடிகளில் வீசிய இளங்காற்று அவர்களைத் தழுவியபோது மிகுந்த ஆசுவாசமாயிருந்தது. பழத்தைத் தின்றுமுடித்த நேரம், அவர்களுக்குப் பின்னால் பாட்டுச் சத்தம் கேட்டது. இருவரும் பார்வைகளையும் புன்னகைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
முப்பதிலிருந்து நாற்பது வரை இருக்கக் கூடிய மூன்று ஆண்கள் மற்றும் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஆகியோர் வந்துகொண்டிருந்தனர். ஆண்கள் ஏதோவொரு சம்பாஷணையில் இருக்க, சிறுவன் இடைமறித்தான்.
"அப்பா..."
ஆனால் அப்பாவின் காதில் அது விழவில்லை.
"சொனைக்குப் போயி ஒரு குளியலப் போட்டுட்டமுனா, அப்புடியே நிக்காம எறங்கிடலாம்"
"அப்பாஅ!"
"என்னடா?"
"டாய்லெட் வருதுப்பா..."
"கீழபோயி போயிக்குவியாமா. வா."
"அப்பா, கண்ட்ரோலே பண்ண முடியலப்பா. அவ்வ்வசரமா வருது."
அவன் பேசிய வார்த்தைகளும், அதிலிருந்த கொஞ்சும் மழலையும் சிவகார்த்திகேயனையும் வெற்றியையும் புன்னகைக்க வைத்தன. இயல்பாகத் தோன்றிய உந்துதலால் திரும்பி அவர்களைப் பார்த்தனர். அவனை விட இரண்டு மடங்கு உயரமான குச்சியைக் கையில் வைத்தவாறு, பரிதாப முகத்துடன் வந்துகொண்டிருந்தான் இயற்கையால் அழைக்கப்பட்டவன். அப்பா இப்போது நின்றார். அவருடன் வந்தவர்கள் பாதையின் இடதுபுறமாக விலகி நின்றனர்.
"அப்பா, எங்க போறது?"
"அப்புடியே அந்தப் பக்கம் போ!" பாதையின் வலதுபுறம் கைநீட்டினார். அவன் விலகி அத்திசை நோக்கி நடக்கலானான். அப்பாவும் பாதையின் இடதுபுறமாக வந்து மற்ற இருவருடன் சேர்ந்துகொண்டார். இருவரில் ஒருவர் சொன்னார்.
"டேய்! அங்க பாரு. இங்கயே உக்கார்ரான். நீ போயி உட்டுட்டு வா."
அப்பா சிறுவனைப் பார்த்தார்.
"டேய்! இன்னும் உள்ள போ!"
"எங்க போறது? நீங்க வாங்க."
"இரு ஒரு நிமிசம்."
அப்பா ஒரு சிறுகல்லை எடுத்து அவனைத் தாண்டி வீசினார்.
"அட, அவன் மண்டைல கீது உலுந்தறப் போகுது." என்றார் ஒருவர்.
"அந்தக் கல்லு உலுந்த எடத்துக்கு போ!"
சிறுவன் இப்போது கொஞ்சம் புதர் மறைவுக்குப் போனான்.
அதற்குள் சிவகார்த்திகேயனும் வெற்றியும் அவர்களுடன் நட்பாகியிருந்தனர். வழக்கமான சொற்றொடர்களைப் பரிமாறிக் கொண்டனர். அந்த மூவரில் ஒருவர் குச்சி இல்லாமல் நின்றுகொண்டிருந்தார். சிவகார்த்திகேயனுக்கு சற்றுத் தள்ளிக் கிடந்த குச்சியைச் சுட்டிக் கேட்டார்.
"இது உங்களுதா?"
"நா கொண்டுவந்ததுதா. ஆனா நீங்க எடுத்துக்குங்க. நா யூஸ் பண்ணாம சும்மாதா தூக்கீட்டு வந்துட்டு இருக்கேன்." என்றான் சிவகார்த்திகேயன்.
அவனுக்கே அது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மலையில் கடந்த ஒன்றறை நாள்களாக அவன் பார்த்துப் பூரித்துப் போனதொரு அழகான விஷயம் அது. முன்பின் அறியாதவர்கள் சடுதியில் நட்பாகிவிடும் அற்புதம். தண்ணீரும் உணவும் தேவைப்பட்ட அனைவரும் அப்போதே தேவை தீர்க்கப்பட்டனர்; பீடி, சிகரெட்டுக்குத் தீப்பெட்டி கேட்டால், தருகிறார்கள் என்பதுகூட இரண்டாம் பட்சமே. ஒருவரிடம் இல்லையென்றாலும் கூட, அவர்களுடன் வரும் அனைவரையும் அக்கறையுடன் கேட்டுப் பார்த்தனர்; களைத்துப் போய், மலைத்துப் போய் நிற்பவர்களிடம் எதிரில் வருபவர்கள் "இன்னும் கொஞ்ச தூரந்தான், போங்க!" என்று ஊக்கப் படுத்தினர்; குறுகலான பாதைகளில் மேலேறுபவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அத்தனை உயரத்திலிருந்து பார்ப்பதால், மனித வாழ்வு எவ்வளவு அற்பமானது என்று உணர்வதாலோ; அதீத வானிலை, அருகிலிருக்கும் அனைவரையும் இரத்தமும் சதையுமான மனிதர்களாகப் பார்க்கத் தூண்டுவதாலோ; இறைவழிபாடு தரும் வாழ்வு குறித்த தன்னம்பிக்கையும், உயிர்கள் மீது அன்பும் தோன்றுவதாலோ என்னவோ, அந்தச் சூழல் முழுதுமே அன்பு மட்டுமே நிலவியது. அத்தகைய நிபந்தனையற்ற பேரன்பு தனக்குள்ளும் தொற்றிக் கொண்டதே என்று மிக மகிழ்ந்தான். அவர் சென்று அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டார்.
"வரூண், முடிஞ்சுதா இல்லையா?" என்றார் அப்பா.
"அப்பா, இங்க வாங்க."
"அங்க இருந்தே சொல்லு."
பாதையைக் கடந்த இருவர் செல்லும் வரைக்கும் காத்திருந்து பிறகு கத்தினான்.
"தண்ணி வேணும் வாஷ் பண்ண."
"அதெல்லாம் கீழ போயி பண்ணிக்கலாம் வாடா."
"அப்பா...."
"கல்லு எதாச்சும் கெடக்கும். எடுத்து தொடச்சுக்க."
"இங்க கல்லு எதும் இல்ல."
"தேடு. தேடுனா கெடைக்காதது எதுமே இல்ல." என்றார் அப்பாவுக்கு அருகிருந்தவர். நிச்சயமாக அவன் மனதிற்குள் கம்பத்துராயனைக் கருவியிருக்க வேண்டும். அதிருப்தியான முகத்துடன் திரும்பி வந்தான். குச்சியை எடுத்தவருக்கு அருகே நின்ற மூன்றாமவர் ஒரு மரக்கொம்பினை வைத்திருந்தார். வெற்றி அதனைச் சுட்டியபடி சொன்னான்.
"நீங்க கையில வெச்சுருக்கறதும், நா போட்டுட்டு வந்ததுதான்."
அவர் அவனைத் திரும்பிப் பார்த்தார்.
"ஆமா, அந்த அண்ணாதா போட்டாங்க." என்றான் சிறுவன். அவன் எங்களைப் பற்றிப் பேசியபோதிலும், எங்கள் மீது பார்வையைச் செலுத்தாமலேயே பேசினான். அம்மூவரும் எங்களிடம் விடைபெற்றுச் சென்றனர். அப்பா அவனது தோள்மீது கைபோட்டு அழைத்துச் சென்றார்.
"அப்பா, பேண்ட்-ல எல்லாம் ஆயிடுச்சு!" என்றான்.
"கழுவிக்கலாம் வா!"
"எங்க போயி?"
"வீட்டுக்குத்தான்" என்றேன் நான், அவனைச் சீண்டிப் பார்க்கும் விதமாக. ஆனால், அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவர்கள் எங்களைவிட்டு விலகிச் சென்றது தேய்ந்துகொண்டே சென்ற பாட்டொலி மூலம் புலப்பட்டது. அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே, இன்னும் மூவர் வந்தனர். இரண்டு ஆண்களுடன், ஒரு பெண் குழந்தை. ஏழு வயதிருக்கலாம். அவளது முகத்தில் இம்மியளவுகூட களைப்புத் தெரியவில்லை. அவர்களும் வந்து முகட்டுப்பாறையில் அமர்ந்தனர். வந்து அமர்ந்திருந்த ஓரிரு நிமிடங்களிலேயே அவள் ஓராயிரம் கேள்விகள் கேட்கலானாள். தாவரவியலாளருக்குக் கூட பெயர் தெரியாத புற்களையும், பூண்டுகளையும் காட்டி அப்பாவிடம் பெயர் கேட்டாள். அவளுடைய அப்பாவோ அவளது கேள்விகளில் கவனம் செலுத்தாதவராக உடன்வந்தவரிடம் லௌகீக விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலுமே அவள் தன் முயற்சிகளைக் கைவிடுவதாக இல்லை. ஓடிச்சென்று அவரது மடியில் அமர்ந்து, அவரது தாடையை தன் முகத்துக்கு நேராகத் திருப்பிக் கேட்டாள்.
"அது என்ன பில்லுப்பா?"
"தெரீல சாமி"
"அப்பா, உனக்கென்ன எதுமே தெரில, போப்பா"
இறங்கி அவள் சுட்டிய புற்புதரை நோக்கி ஓடினாள்.
"பாப்பா! அங்கெல்லாம் போகாத!"
"இங்க தாப்பா இருக்கறேன்."
"வெளயாட்டு பண்டீட்டு இருக்காத சித்த."
"என்ன வெளயாட்டு பண்றாங்க உப்பொ?"
என்று சொல்லிவிட்டு புற்புதர்களைத் தாண்டி, கீழிறங்கும் பாதைக்கு மீண்டும் வந்து கீழே குடுகுடுவென ஓடியேபோய்விட்டாள். இன்னும் சற்றே இளைப்பாறலாம் என எண்ணியிருந்தார்களோ என்னவோ, வேறுவழியில்லாமல் மற்ற இருவரும் நடையைக் கட்டினார்கள்.
சிவகார்த்திகேயனுக்கு வியப்பாயிருந்தது. 'பொதுவாகவே, ஆண்பிள்ளைகள் வெளியுலகு சுற்றி அறியவேண்டும் எனவும், பெண்பிள்ளைகள் வீட்டோடு இருக்க வேண்டும் எனவும் சொல்லிச் சொல்லியே வளர்க்கப்படுபவர்கள். பெண்ணுக்குள் இருக்கும் நாடோடித் தன்மை உதாசீனப்படுத்தப்படும் அதே அளவுக்கு ஆணின் கூச்ச சுபாவமும் நிராகரிக்கப் படுகிறது. வயலெங்கும் துள்ளியோடும் ஆட்டுக்குட்டியாக திரிந்த அப்பெண் பிள்ளை நிச்சயமாக அவளது அப்பாவிடம் திட்டு வாங்கியிருப்பாள். அதே சமயம், ஒரு கங்காரு குட்டியினுடையதைப் போன்ற மருட்சியுடன், அப்பாவைவிட்டு விலகப் பயந்த அச்சிறுவன், உதவிகள் ஏதுமின்றி தன் பாதையை தானே அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறான். அது ஆரோக்கியமான வளர்ப்புமுறைதான் என்ற போதும், வருணின் இடத்தில் அந்தப் பெண் குழந்தை இருந்திருந்தாலும், அவனுக்குக் காட்டப்பட்ட வழிமுறைதான் அவளுக்கும் காட்டப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆணின் கூச்ச சுபாவந்தான் எத்துணை அழகானது! அது ஏன் சிலாகிக்கப்படுவதில்லை. கூச்ச சுபாவியான ஓர் ஆண் ஒருவர் மனதும் புண்படும்படி பேசுவதில்லை. ஏனெனில் அவன் பேசுவதே இல்லை. அவனுக்குத் தியாகங்களினால் கிடைக்கும் கள்வெறி தெரியும். பிறர் பேசுவதைக் கூர்ந்து கவனிக்கும் வித்தையை அவனேயறிவான். பிறர் மீது குற்றமிருப்பினும், அதில் தன்னுடைய பங்கு என்னவென்பதற்கே முக்கியத்துவம் தருபவனவன். மன்னிக்கும் தயை கொண்டவனவன். தன் மகிழ்ச்சியை மற்றவர் பாதிக்காத வண்ணம் வாழும் இலாவகம் கைக்கொண்டவன் அவன். பாரதிதாசன் சொன்ன தாயுள்ளம் கொண்டவனே அவன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கூச்ச சுபாவி ஆணே தன் சுயத்துடன் அதிகம் பேசுகிறான். சிவகார்த்திகேயனின் பதின் பருவங்களில், அவன் ஒரு மௌனியாக இருந்ததற்காக, அனைவராலும் அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறான்.
"இப்புடி, வெப்பளத்தானா இருந்தீனா இந்த ஊருல எப்புடி நீ குப்ப கொட்டுவ?"
"வாயத் தொறந்து பேசு. இல்லீனா எரும மேய்க்கப் போட்டுருவாங்கொ."
"குன்னுடையாக் கவுண்டன மாதிரியே இருந்தீனா, தலையில மொளகா அரச்சுருவாங்கொ."
போன்றவை அவன் அடிக்கடி கேட்ட க்ளிஷே வாசகங்கள். விண்மீன்களுடனும், மேகங்களுடனும், மரங்களுடனும், சுழித்தோடும் ஓடைகளுடனும், வானெங்கும் வியாபித்த நீலத்துடனும், பல இலட்சம் கோடி இடங்களில் பிரதிபலிக்கும் சூரியனின் கிரணங்களுடனும், தன்னுடைய உள்மனதுடனும் உரையாடும் பெருமொழி வாய்க்கப் பெற்ற ஒருவனுக்கு, ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, கட்சிகளின் கூட்டணித் தாவல்கள், ஊதிய உயர்வு, சாராயம், பெண்களின் மார்புகள் போன்ற சில்லறை விஷயங்களைப் பேசுவதில் ஆர்வம் குறைவாயிருப்பதில் வியப்பென்ன?
ஒருவேளை அவன் மனிதர்களுடன் அதிகம் பேசாமலிருந்த காரணத்தினால்தான் அவனுக்கு அந்த அற்புதம் நிகழ்ந்திருக்க வேண்டும். அது நிகழ்ந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு. அவனுடன் பேசியது ஓர் வியக்கவியலா ஆற்றல். அவ்வாற்றலுக்கு அவன் கடவுளெனப் பெயரிட்டிருக்கிறான்.
Comments
Post a Comment