மழலை
ஜெயக்குமாருக்கு சென்னை நகரைப் பிடிக்கவேயில்லை. சலூன் காரரிடம் நட்பாயிருக்க வாய்ப்பளிக்காத சென்னை; நள்ளிரவு வரைக்கும் தெருமுக்கில் நின்று நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்த அனுமதிக்காத சென்னை; மயில்கள் உலவாத சென்னை; வீட்டில் தேங்காய்ச் சோறு கிளறிவிட்டால், நைஸாக நழுவிச் சென்று கத்தரிக்காய் கூட்டும், கொள்ளு ரசமும் போட்டுச் சாப்பிட்டுக் கொள்ள பெரியப்பன் வீடோ மாமன் வீடோ இல்லாத சென்னை; இட்லியைப் பார்த்து உவகை கொள்ளாத சென்னை; ஆங்கிலத்தில் உரையாடிய சென்னை; பேருந்தில் 'அக்கவுண்ட்' வைக்க முடியாத சென்னை; மார்த்துணி விலகினால் கலவரப் படாத சென்னை மீது ஜெயக்குமார் வெறுப்பைக் கொண்டிருந்தான். அது ஒன்றும் அவனைக் கவலையில் ஆழ்த்தியிருக்காது, அவன் மட்டும் அந்த சாட்ஸாத் சென்னையில் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படாமலிருந்திருந்தால். ------------------------------------------------------------------- 4:30 மணி அலாரம் கத்தியபோதுதான், குளிருக்கு இதமாக போர்வையை இழுத்துப் போர்த்தியிருந்தான். அன்றைய அவனது நிகழ்ச்சி நிரல் கண் முன்னே தோன்றியது. அனைத்து மாணவர்களும் எழுந்து குளிக்கச் சென்றுவிட்டார்களா என்று ப...