முடிவிலா ஓவியம்
சின்ன வயதில் "நிவாரண் 90" பாக்கெட்டைப் பார்க்கும் போது, அது ஒரு முடிவிலி என்று தோன்றியது. அந்தப் பாக்கெட்டில் இருக்கும் படத்தை ஓவியமாக ஒருவர் வரையத் தொடங்கினால் அவர் நித்தியத்திற்கும் வரைந்து கொண்டேதான் இருக்க வேண்டும். அதை வரையத் தேவையான மை முடிவில்லாமல் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியென்ன பிரமாதமான படம் அது? முதலில் நிவாரண் 90 என்பது ஓர் இருமல் மருந்து. ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ இருக்கும். ஒரு ஷாம்பூ சாஷே போலத்தான் இருக்கும். அதனை வாங்கி அதன் வாயைக் கிழித்தெறிந்து விட்டு வாய்க்குள்ளே கொட்டிக்கொள்ளலாம். கடைக்காரர் மீதிச்சில்லறை தருவதற்குள் மருத்துவத்தை முடித்துவிடலாம். அந்த நிவாரண் 90யின் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் படத்திலும் ஒருவர் அதையேதான் செய்துகொண்டிருப்பார். அவர் கையிலும் ஒரு நிவாரண் 90 இருக்கும் அதை அவர் வாய்க்குள் கொட்டிக் கொண்டிருப்பார். அதாவது, நிவாரண் 90 பாக்கெட்டில் இருக்கும் படம் என்னவென்றால் ஒருவர் நிவாரண் 90யை வாய்க்குள் கொட்டுவது. அந்தப் படத்தில் இருப்பவர் வேறு எதையாவது குடித்திருந்தாலாவது பரவாயில்லை. அவரும் அதையேவா குடித்துத் தொலைய வேண்டு...