மாயச்சுவர்
பால்யத்தில் என்னுடைய ஹீரோக்கள் சற்றே வித்தியாசமானவர்கள். துப்பாக்கியெடுத்துச் சுடும் போலீஸ்காரர்களோ, மல்யுத்த வீரர்களோ என்னுடைய ஆதர்ச நாயகர்களாக இருக்கவில்லை. ஒருமுறை "பெரியவனாகி என்னவாகப் போகிறாய்?" என்று கேட்கப்பட்டதற்கு, "பஸ் கண்டக்டர்" என்று சொல்லியிருக்கிறேன். பயணிகளிடம் பணம் வாங்கிவிட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக, அவருடைய தோளிலே தொங்கும் பையினை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டும்போது, உள்ளே கிடக்கும் சில்லறைக் காசுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு சத்தம் உண்டாக்குமே! அதுவே எனக்கு கண்டக்டர் தொழிலின் பேரில் காதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நிற்க. என்னுடைய நாயகர்களில் சர்வ வல்லமை பொருந்தியவராக நான் பார்த்தது எங்கள் ஊருக்கு வந்து சினிமா போஸ்டர் ஒட்டுபவரைத்தான். எங்களுடைய ஊர் நாமக்கல் பாளையம். எங்களுக்கு மிக அருகாமையிலிருந்த டவுன் என்றால் அது கொளப்பலூர்தான். ஒரு tongue twister போல இருக்கும் இந்தப் பெயரை, எங்கள் ஊர் மக்கள் கொளப்பூர் என்று எளிமைப்படுத்தியே உச்சரிப்பார்கள். கொளப்பூரில் இருந்த ஒரு பழைய தியேட்டர் கருணாம்பிகா. அங்கே புதிதாக வெளியாகும் படங்கள் எல்லாம் போட மாட்டார்கள்...