மாயச்சுவர்

பால்யத்தில் என்னுடைய ஹீரோக்கள் சற்றே வித்தியாசமானவர்கள். துப்பாக்கியெடுத்துச் சுடும் போலீஸ்காரர்களோ, மல்யுத்த வீரர்களோ என்னுடைய ஆதர்ச நாயகர்களாக இருக்கவில்லை. 

ஒருமுறை "பெரியவனாகி என்னவாகப் போகிறாய்?" என்று கேட்கப்பட்டதற்கு, "பஸ் கண்டக்டர்" என்று சொல்லியிருக்கிறேன். பயணிகளிடம் பணம் வாங்கிவிட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக, அவருடைய தோளிலே தொங்கும் பையினை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டும்போது, உள்ளே கிடக்கும் சில்லறைக் காசுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒரு சத்தம் உண்டாக்குமே! அதுவே எனக்கு கண்டக்டர் தொழிலின் பேரில் காதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நிற்க.

என்னுடைய நாயகர்களில் சர்வ வல்லமை பொருந்தியவராக நான் பார்த்தது எங்கள் ஊருக்கு வந்து சினிமா போஸ்டர் ஒட்டுபவரைத்தான். எங்களுடைய ஊர் நாமக்கல் பாளையம். எங்களுக்கு மிக அருகாமையிலிருந்த டவுன் என்றால் அது கொளப்பலூர்தான். ஒரு tongue twister போல இருக்கும்  இந்தப் பெயரை, எங்கள் ஊர் மக்கள் கொளப்பூர் என்று எளிமைப்படுத்தியே உச்சரிப்பார்கள். கொளப்பூரில் இருந்த ஒரு பழைய தியேட்டர் கருணாம்பிகா. அங்கே புதிதாக வெளியாகும் படங்கள் எல்லாம் போட மாட்டார்கள். பழைய படங்கள் மட்டும்தான். அந்தத் தியேட்டரில் ஓடும் படங்களின் போஸ்டரை ஒட்டத்தான் அவர் வருவார். இப்போது இவ்வளவு வியாக்கியானமாகப் பேசும் எனக்கு, அப்போது இதெல்லாம் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் அங்கே போஸ்டர் ஒட்டுவார்கள் என்பது மட்டுமே. 

வேலுமணியண்ணன் சோடாக்கடையின் பின்பக்கச் சுவர்தான், போஸ்டர் ஒட்டும் இடம். அந்தச் சுவரை ஒட்டித்தான் பள்ளிக்குச் செல்லும் இட்டாரி* இருக்கும். (*இட்டாரி- மாட்டு வண்டிகள் செல்லும் மண் பாதை. பாதையின் இரண்டு ஓரங்களிலும், இரண்டு ஒற்றையடிப் பாதைகளைப் போலிருக்கும். வண்டிச் சக்கரம் நெரிக்காத நடுப்பகுதி புல் பூண்டு முளைத்து சற்றே மேடாக இருக்கும்). அந்த வழியாகப் போகையிலும் வருகையிலும் போஸ்டர் மாறி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே போவேன் வருவேன். சராசரியாக ஒரு வார கால இடைவெளியில் போஸ்டர் மாற்றப்படும். அது சராசரிதான். அடுத்தடுத்த இரண்டு நாள்களில் இரண்டு போஸ்டர் கூட மாற்றப்படலாம். எனவே, போஸ்டர் மாறியிருக்கிறதா என்று தினமுமே பார்ப்பதென் வாடிக்கை. 

சில சமயம் ஒரே போஸ்டர் தொடர்ந்து பத்துப் பதினைந்து நாள்களுக்கு மாற்றப்படாது. எனவே, அதைப் பார்த்துப் பார்த்து சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்தச் சமயத்தில் போஸ்டர் மாற்றப்பட்டால், அதைப் பார்க்க மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். பல நேரங்களில் நாங்கள் பார்க்காத போது வந்து போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடுவார். ஆனால், அரிதாக சில சமயங்களில் அவர் எங்கள் ஊருக்குள் சைக்கிளில் வரும்போதே அவரைப் பார்த்துவிடுவோம். யாராவது ஒரு சிறுவன் மட்டும் அவரைப் பார்த்தானெனில், ஊரெங்கும் ஓடி மற்ற நண்பர்களுக்கும் அவர் வருகையை அறிவித்துவிடுவான். முரசறைவோன் அறிவிக்க, அரசவை புகும் மன்னவனைப் போல தன்னுடைய சைக்கிளில் அவர் வருவார்.

சைக்கிள் கேரியரில் போஸ்டரின் வெள்ளைப்பகுதி வெளியே தெரியும்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஹேண்டில் பாரில் தொங்கும் ஒரு பழைய‌ பெயிண்ட் பக்கெட்டில் மைதா மாவு பசை இருக்கும்.

அவர் பெயரெல்லாம் தெரியாது. அவர் பேசுவாரா என்பது கூடத் தெரியாது. அவருக்கும் எங்களுக்குமான ஒரே தகவல் தொடர்பு அந்தப் போஸ்டர்தான். அவர் சைக்கிளை நிறுத்தும் போது, அங்கே ஏற்கனவே நான்கைந்து பேர் நின்றிருப்போம். 'அடுத்த படம் என்னவாயிருக்கும்?' 'போஸ்டரில் எந்த மாதிரியான பொம்மைகள் இருக்கும்?' என்றெல்லாம் யோசித்தவாறே ஆர்வமாகக் காத்திருப்போம். 

பல போஸ்டர்கள் ஒன்றன் மீது ஒன்று ஒட்டப்பட்டு  தடிமன் அதிகமாகி இருந்தால், முதலில் அதைக் கிழித்து எடுப்பார். அப்படி அவர் கிழித்துக் கொண்டிருக்கும் போதே, ஹேண்டில் பாரில் இருக்கும் பசை பக்கெட்டை யாராவதொரு சிறுவன் எடுத்துக்கொண்டு போய் அவருக்கு அருகிலேயே நிற்பான். அவர் அதை வாங்கி, பசையை அள்ளி பழைய போஸ்டரின் மீது பூசுவார். பூசி முடித்தபின் பக்கெட்டை அந்தச் சிறுவனிடமே கொடுத்தால், அதை அவனொரு மரியாதைக்குரிய அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டு, பெருமிதம் பொங்க மீண்டும் ஹேண்டில் பாரில் வந்து மாட்டுவான். எனக்குப்‌ பயமாக இருக்கும் என்பதால், பக்கெட் தூக்கும் கௌரவத்தை நான் என்றுமே எட்ட விழைந்ததில்லை. 

பழைய போஸ்டரின் மீது பூசப்பட்ட பசை காய்வதற்குள், தோள் துண்டில் கைகளைத் துடைத்துக் கொண்டு, கேரியரில் இருக்கும் 'புதையலை' எடுப்பார். அதைப் பிரித்து சுவரில் படரவிட்டு, நன்றாகத் தேய்த்து விடுவார். அதற்கு பத்துப் பதினைந்து நொடிகள்தான் ஆகும் என்றபோதிலும், அதுவரைக்கும் காத்திருக்கப் பொறுமையற்று, அவருடைய முதுகைத் தாண்டி போஸ்டரைப் பார்த்துவிட அலைமோதுவோம். அவருடைய முதுகு மிகச் சரியான செவ்வகமாக இருக்காது என்பதால், போஸ்டரின் சிறு பகுதிகள் ஆங்காங்கே கொஞ்சம் தட்டுப்படும். அந்த அளவு தகவலை வைத்துக்கொண்டே, அது யாருடைய படம் என்று யூகித்துச் சொல்லிக் கொள்வோம். அவர் ஒட்டிவிட்டு விலகுவார். அதோடு அவருக்கு அளிக்கப்படும் இராஜ மரியாதையிலிருந்தும் விலகிக் கொள்வார். இப்போது எங்கள் எல்லாரது கவனமும் போஸ்டரின் மீதே.
இன்னாருடைய படம் என்று சரியாகக் கணித்துச் சொன்னவன், அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு அதையே சொல்லிச் சொல்லி தற்பெருமை பாடுவான்.

ஆசைதீர அந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு; அந்தப் போஸ்டரில் இருக்கும் கவர்ச்சியுடை கதாநாயகியுடன் எவனாவது ஒருவனைத் தொடர்புபடுத்தி, "டேய், அவதான்டா கோபாலன் பொண்டாட்டி" என்று கூறிச் சிரித்துவிட்டு; அதிலே ஏதாவது சண்டைக்காட்சி இடம்பெற்றிருந்தால், அதைப் போலவே கையைக் காலைத் தூக்கி, "ஏய் டிஸ்கோல் டிஸ்கோல்" என்று சவுண்ட் எஃபெக்ட் கொடுத்தவாறே பக்கத்தில் நிற்பவனைத் தாக்கியவாறே அங்கிருந்து ஓடுவோம். போஸ்டரில் உள்ள மனிதர்கள் நிரந்தரச் சிரிப்புடன், நிரந்தரக் கோபத்துடன் அங்கேயே உறைந்து கிடப்பார்கள். 

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?