கவிதாயினி
எல்லா தினங்களையும் போல உடன்பிறந்தோர் தினத்தையும் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மூலம் தான் தெரிந்து கொண்டேன். இனி, என்னுடைய உடன்பிறப்பு பற்றி. அக்காவுக்கும் எனக்கும் எட்டு வருட இடைவெளி. அது எப்படிப்பட்ட இடைவெளியென்றால், நான் 90'ஸ் கிட் என்றால், அவர் 80'ஸ் கிட். எங்கள் அப்பாவுக்கும் அத்தைக்கும் கூட அதே எட்டு வருட இடைவெளிதான். அவர் அத்தையை பெயர் சொல்லி விளிக்க மாட்டார். அதனாலேயே என்னவோ நானும் அக்காவை 'அக்கா' என்றே அழைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். ஆம்! எனக்கு நினைவு தெரியத் தொடங்கும் போதே அவரை நான் 'அக்கா' என்றுதான் அழைக்கத் தழைப்பட்டிருந்தேன். பிற சகோதர சகோதரிகள் அனைவருமே டா, டி சொல்லி விளிக்கும் போது எனக்கு தாளாத பொறாமையாயிருக்கும். வீட்டுக்கு வந்து 'கவிதா' என்று சொன்னால், கொங்குத்தமிழ் வசைமொழிகள் வரிசையாய் வந்து விழும் பெற்றோரிடமிருந்து. எப்படியோ,? காலப்போக்கில் அந்த விருப்பம் காணாமலேயே போய்விட்டது. ஒரம்பரை வீடுகளில் அடிக்கடி சொல்லப்பட்ட, ''பரவால்லயா பய்யன். அக்கானு சொல்லிக் கூப்புடறான்'' என்ற பாராட்டின் மீதிருந்த கவர்ச்சி கூட ஒரு காரணமாயிருக்க...