கவிதாயினி

எல்லா தினங்களையும் போல உடன்பிறந்தோர் தினத்தையும் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மூலம் தான் தெரிந்து கொண்டேன். இனி, என்னுடைய உடன்பிறப்பு பற்றி.

அக்காவுக்கும் எனக்கும் எட்டு வருட இடைவெளி. அது எப்படிப்பட்ட இடைவெளியென்றால், நான் 90'ஸ் கிட் என்றால், அவர் 80'ஸ் கிட். எங்கள் அப்பாவுக்கும் அத்தைக்கும் கூட அதே எட்டு வருட இடைவெளிதான். அவர் அத்தையை பெயர் சொல்லி விளிக்க மாட்டார். அதனாலேயே என்னவோ நானும் அக்காவை 'அக்கா' என்றே அழைக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். ஆம்! எனக்கு நினைவு தெரியத் தொடங்கும் போதே அவரை நான் 'அக்கா' என்றுதான் அழைக்கத் தழைப்பட்டிருந்தேன். பிற சகோதர சகோதரிகள் அனைவருமே டா, டி சொல்லி விளிக்கும் போது எனக்கு தாளாத பொறாமையாயிருக்கும். வீட்டுக்கு வந்து 'கவிதா' என்று சொன்னால், கொங்குத்தமிழ் வசைமொழிகள் வரிசையாய் வந்து விழும் பெற்றோரிடமிருந்து. எப்படியோ,? காலப்போக்கில் அந்த விருப்பம் காணாமலேயே போய்விட்டது. ஒரம்பரை வீடுகளில் அடிக்கடி சொல்லப்பட்ட, ''பரவால்லயா பய்யன். அக்கானு சொல்லிக் கூப்புடறான்'' என்ற பாராட்டின் மீதிருந்த கவர்ச்சி கூட ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால், இந்த விசயத்தில் இவ்வளவு திட்டவட்டமாயிருந்த எம் பெற்றோர், தங்களைத் தங்கள் பிள்ளைகள் ஒருமையில் அழைத்துக் கொள்ள அனுமதித்ததுவும், பெற்றோரை 'ங்க' suffix சேர்த்து அழைத்த பிள்ளைகளைக் கண்டும் நான் பொறாமை கொண்டதுவும் முரண்நகை.

அக்காவுக்கு மரியாதை என்பதை வெறும் வாய் வார்த்தையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளும் இலாவகத்தை நான் கொண்டிருந்தேன். எங்களுக்கு இடையேயான அனைத்து சண்டைகளையும் சச்சரவுகளையும் என் நாவில் உதித்த 'அக்கா' எவ்விதத் தொந்தரவும் செய்யவில்லை. அவை பாட்டுக்கு விமரிசையாக நடந்தேறிய வண்ணமே இருந்தன.

எனக்கு இலக்கியப் பரிச்சயம் நிகழ்ந்தது அக்காவால்தான். கவிதாக்காவும், கண்ணம்மாக்காவும் (பெரியப்பா மகள்) கண்மணி நாவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள். அக்கா வாங்கி வரும் புத்தகங்களை அவர் படிக்காத வேளைகளில் நான் எடுத்துப் படிப்பேன். நாவலுக்காக அல்ல. ஒரே புத்தகத்தில் இரண்டு நாவல்களுக்கிடையே இருக்கும் மாயாவி காமிக்ஸ் படிப்பதற்காக. இவ்வாறாக ராணி முத்து, க்ரைம் நாவல் என்று அவர் இரவல் வாங்கிய புத்தகங்களிலிருந்து வாசிப்பை நான் வாங்கிக் கொண்டேன். (எனவே, என் எழுத்து பிடிக்காமல் என்னைத் திட்ட விழைவோர் முதலில் என் அக்காவையே திட்ட வேண்டும்)

அவர் கல்லூரியில் மூன்றாமாண்டு இளங்கலை முடிக்கும் போது நான் ஏழாம் வகுப்பு. அவருடைய தோழிகள் அனைவரும் அவரைப் பற்றி எழுதிக் கொடுத்திருந்த ஆட்டோகிராஃப் டைரியை நான் பார்க்க நேரிட்டது. சரி நாமும் ஒரு பிரிவு மடல் எழுதிப் பார்ப்போமே என்றொரு விபரீத முடிவெடுத்தேன். சரி. தோழியருக்கோ பிரிவு மடல் எழுத ஒரு காரணமிருந்தது. நாம் எதற்காக எழுத வேண்டுமென யோசித்து,  அவர் புகுந்த வீடு செல்லப் போவதை பாடுபொருளாக வைத்து ஆட்டோகிராஃப் டைரியில் நான் எழுதிய பிரிவுமடல், அதீதச் சிரிப்பை வரவழைக்க வல்லது.

அப்போது எங்கள் ஊரிலிருந்த ஒரே டிவி பஞ்சாயத்து போர்டு டிவி-தான். வெள்ளி, சனி இரவுகள் மற்றும் ஞாயிறு மாலைகளில் படம் பார்ப்பதற்காக என்னை கேரியரில் உட்கார வைத்துக் கொண்டு சைக்கிளில் கூட்டிச் செல்வார். அங்கே செல்லும் வரைதான் ஒன்றாக இருப்போம். பிறகு நான் சிறுவர் அமர்ந்து பார்க்கும் படிக்கட்டுக்குப் போய்விடுவேன் ''டேய்! சண்டைப்பயிற்சி போட்டாங்களா எழுத்துல?" என்று கேட்டபடியே. அவர், அவருடைய தோழிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிடுவார். படம் முடிந்த பிறகு கலைகின்ற கூட்டத்தினூடே வரும் அக்காவின் குரலுக்காகக் காத்திருப்பேன். நான் மட்டுமல்ல. ஒவ்வொரு சிறுவனுமே ஒவ்வொரு குரலுக்காகக் காத்திருப்போம். அக்குரல் வந்தவுடன் அவர்களுடன் சென்று வீடடைய வேண்டும். அனேகச் சிறுவர்களை அழைத்துச் செல்வது அவர்களுடைய அம்மாவாக இருக்கும். என்னை மட்டுமே என் அக்கா அழைத்துச் செல்வார்.

நான் நிஜவாழ்க்கையில் பார்த்த முதல் காதல் கதையும், படித்த முதல் காதல் கடிதமும் அக்கா & மாமாவினுடையதே! எங்கள் வீடும் மாமா வீடும் சொந்தம்தான். என்னுடைய பள்ளிப் பருவக் கோடைவிடுமுறை நாள்களை நான் தாசக்காளியூரில் தான் கழித்திருக்கிறேன். எங்களுக்கு அது அமத்தாவின் ஊர். அமத்தாவின் மக்கள் இருவர். பெரியவர் சந்துரு மாமா, சிறியவர் செல்வ மாமா.  இருவரும் என்னை கிரிக்கெட் விளையாட அழைத்துச் செல்வர். அவர்கள் வீட்டில் நிறைய சாம்பியன் இதழ்கள் இருக்கும். அதன் நடுப்பக்க ஃப்ளோ-அப் என்று ஏதாவதொரு விளையாட்டு வீரரின் பெரிய சைஸ் வண்ணப்படம் இருக்கும். அதைப் பார்ப்பதற்காகவும், கிரிக்கெட் கட்டுரைகளைப் படிப்பதற்காகவும் சந்து பொந்துகளிலெல்லாம் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக அகப்பட்டது ஒரு கடிதம்.  அதிர்ஷ்டவசமாக அதன்  Content ஏதும் இப்போது எனக்கு நினைவிலில்லை. நான் வெளிப்பார்வைக்கு அமைதியான பையனாகத் தோற்றமளித்த போதும், நான் சற்றே பிஞ்சிலே பழுத்த கேஸ் என்பதால் அது சந்துரு மாமா கவிதாக்காவுக்கு எழுதிய காதல் கடிதம் என்பது எனக்குக் கண்கூடானது. அங்கே வந்து அதை வாங்கிப் பார்த்துவிட்டு முகத்தில் எவ்விதச் சலனமுமின்றி "இதெல்லா பாக்கக் கூடாது" என்று சொல்லி அதை மடித்து பரணிலேயே தூக்கிப் போட்டார் இளையபாரதி மாமா. சந்துரு மாமாவின் பேனாப் பெயரே இளையபாரதி. உலகிலேயே ஒரே ஒரு வாசகருக்காக (வாசகிக்காக rather) மெனக்கெட்டு புனைப்பெயரெல்லாம் வைத்து எழுதிய ஒரே கவிஞர் அவராகத்தான் இருக்க முடியும்.
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக நிகழ்ந்தது அவர்களது மணம். இப்போது வரை அதன் backstory எனக்குத் தெரியாது. காதல் படங்களிலெல்லாம் காதலர்கள் மணம் முடித்த பிறகு சுபம் போட்டு முடித்துவிடுவார்கள். அவர்களின் கஷ்ட காலத்தில் அதைப் பார்த்தோமே, அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதை நாங்கள் பார்க்கக் கூடாதா என்று சினிமா இயக்குனர்கள் மீது ஒரு செல்லக்கோபம் எனக்கு எப்போதும் உண்டு. சுபத்திற்குப் பிறகும் நான் பார்க்க அமையப் பெற்ற ஒரு காதல் கதையே அக்கா மாமா வீடு.

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?