அத்தியாயம் ஒன்று - கடவுளுடன் கதைத்தல்
சிவகார்த்திகேயனின் கண்கள் மூடியிருந்தன. தலை ஆகாசத்தைப் பார்த்தவாக்கில் இருந்தது. மரணத்துக்கும் அவனுக்கும் ஓரடி இடைவெளி மட்டுமே இருந்தது. சுழன்றடித்த காற்று அவனது வெற்றுடம்பை புதுப்புனலைப் போலக் கழுவிச் சென்றது. ஆடுசதையில் மென்சுகம் காட்டிய இதமான வலி, காற்றை எதிர்த்து நின்ற கால்களை ஒரு நடுக்கத்துக்கு உள்ளாக்கியது. சிறு குழந்தை போலே கதறியழவேண்டும் போல இருந்தது அவனுக்கு. மேல் இமைகளை காற்று அசைத்து மேலேற்றிய போது, சிட்டுக்குருவியின் சிறுவாலைப் போல ஈரத் துளிகளைச் சிதறடித்துப் படபடத்தன அவை. இமை மயிர்களில் கோத்து நின்ற துளிகளில் நிறப்பிரிகை வானவில் துணுக்குகள் மிளிர்ந்தன. அவனது கண்களின் முன்பாக அகண்டு விரிந்து நீண்டு கிடந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். சிறுவர்கள் உப்பு ஒளித்து வைத்து ஆடும் விளையாட்டில் வைக்கப்பட்ட நீல நிற மண் குட்டுகளாகத் தெரிந்தன, சௌகர்யம் போல் வியாபித்திருந்த குன்றுகளும், மலைகளும். கண்களை நன்றாகத் திறந்தான். அவன் நின்றிருந்த முகட்டுப் பாறையின் கீழே வெகு தொலைவுக்கு ஆழ்ந்து கிடந்தது மலைச்சரிவு. ஓரடி முன்வைத்தானெனில், 'அவன்' என்றொரு ஜீவராசி இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியையும் மிச்சம் வைக்காமல், மென்று விழுங்கிவிட்டு, அதே சூனியத்துடன் அமைதி காத்து நிற்கும் அந்தப் பள்ளம். அச்சரிவு ஓரிடத்தில் மீண்டும் ஒரு குன்றாக மேலேறி அவனுக்கு எதிரே நின்றது. ஆனாலும், அப்பள்ளத்தாக்கின் ஆழத்தினையோ, அக்குன்றின் வீச்சினையோ அவனது மூளையால் உட்கிரகிக்க முடியவில்லை. நமக்கு ஏற்கனவே கனஅளவு தெரிந்த ஏதேனுமொரு பருப்பொருள் அங்கே இருந்தாலொழிய நம்மால் ஒரு பள்ளத்தாக்கின் ஆழத்தைச் சரியாகக் கணித்திட முடியாது. ஏதோ பத்தடி ஆழத்தில் கீழே கிடப்பது போல் தோற்றமளிக்கும் ஒரு பள்ளத்தின் சரிவில், ஒரு மனித உருவைப் பார்த்தால் மட்டுமே, அதன் வீச்சு புரியும். அவன் மேற்கு நோக்கி நின்றிருந்தபடியால், அவனுக்கு பின்னால் உதித்த சூரியன், அவனுக்கு முன்பிருந்த குன்றினை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேற்கிலிருந்து வீசிய கோடையில் சரிவெங்கும் மண்டிக் கிடந்த தருவைப் புற்கள் ஓர் ஒத்திசைவுடன் அசைந்தன. முன்னிரவு, கூடாரம் அமைப்பதற்காக அப்புற்களில் சிலவற்றை அவன் அறுத்து வந்திருந்தான். எனவே, அவற்றின் கனம் அவனுக்குத் தெரிந்திருந்தது. அத்தனை கனம் கொண்ட புற்களை, அனாயசமாக அசைத்த காற்றின் ஆற்றல் அவனுக்கு பிரம்மிப்பூட்டியது. அவன் நின்ற குன்றின் அடிவாரத்தில் இருந்த மலைக்கிராமங்களின் மேலே மிதந்த மேகத்துண்டுகள், அமிலக் குடுவைகளில் படரும் வீழ்படிவுகளைப் போலத் தெரிந்தன. இயற்கையின் பிரம்மாண்டம் அவனுக்குள் ஏற்படுத்திய பரவசம் அழுகையைத் தூண்டியது. காலை பூஜையின் போது கம்பத்துராயனின் முன்னால் நின்று வேண்டியிருந்தான். இருப்பினும், அவன் முன்பு ஓர் அசைவற்ற பச்சைத் திமிங்கலம் உறங்கிக் கிடப்பது போலக் கிடந்த மலைநீட்சியைக் காணும்போது, பிரார்த்தனையின் மீது புது நம்பிக்கை உண்டாகி, அனிச்சையாகவே அவனது மனம் மீண்டும் வேண்டிக் கொள்ளத் தொடங்கியது.
'மொத்த உலகெங்குமே ஆனந்தக் களிப்பு மட்டும் பெருக வேண்டும். தமிழினியுடனான காதல், கல்யாணத்தில் கைகூடவேண்டும். இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கை பல பேருடைய வாழ்வுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். அவர்கள் பயணிக்கும் திக்கெங்கும் காதல் மகரந்தம் தூவிச் செல்ல வேண்டும். வெறுப்பு என்பதே துளியும் இல்லாமல், எல்லாரிடமும் அன்பை விதைக்க வேண்டும். பசித்தவருக்கு உணவு கிட்டிட வேண்டும். முன்தினம் மலையேறி வரும்போது மனிதர்களிடையே அவன் கண்ட நிபந்தனையற்ற பேரன்பு, அகிலமெங்குமே விரவ வேண்டும். நம் கண்ணில் நீர் வடியும் நேரம், ஐந்து விரல்களாவது துடைத்திட வேண்டும். பெற்றோரின் கவலைகளும் துயரங்களும் நம்மால் தீர்க்கப்பட வேண்டும். அம்மா ஒருநாளாவது புதுச்சேலை கட்ட வேண்டும். அப்பாவுக்கு வீட்டிலேயே ஒரு பார் செட்டப் வைத்துக் கொடுத்து, கூலி வேலைக்குப் போவதிலிருந்து அவருக்கு ஓய்வளிக்க வேண்டும். பரிசுத்த இதயங்கொண்டோரின் கண்ணீர்த் துளிகள் சந்தோஷத்துக்காக மட்டுமே சிந்தப்பட வேண்டும்.'
அவன் எண்ணி முடித்த அடுத்த வினாடி, மேலிருந்த ஆகாசத்தையும், முன்பிருந்த மலைகளையும், மலைகள் தாங்கிய பூமியையும் புரட்டிப் போடுவதைப் போல ஒரு முழக்கம் கேட்டது. சங்கு முழக்கம். காப்பான் திருமாலுக்குப் பிடித்தமான அந்த ஆதிமுழக்கம் அங்கிருந்த அத்தனை பாறைகளிலும் பட்டு எதிரொலித்தது. காதுகளை அடைத்து விடுவது போன்றொரு அடாவடியான முழக்கம் அது. காற்று இப்போது சூறையாக ஊழியாட்டம் போடத் தொடங்கியிருந்தது. கோயிலுக்கு அருகே போடப்பட்டிருந்த கூடாரங்களின் கூரைகள் ஏறத்தாழ விசிறியடிக்கப்பட்டன. காற்று வெளியிடை தவழ்ந்து திரிந்த பெயரறியாப் பறவைகள், தத்தமது திட்டமிடப்பட்ட பாதைகளிலிருந்து விலகி அல்லாடின. கம்பத்துராயனுக்கு அருகே நெடிதுயர்ந்து நின்ற இரண்டு வேல்கள் ஒன்றோடொன்று தீராத்தாபத்தோடு உரசியதில் உண்டான தாளகதியான உலோக முனகலும் சங்கொலியுடன் சேர்ந்து கொண்டது. காடாமணிக்குப் பக்கத்தில் நின்றிருந்த காவியுடை தரித்த பூசாரி உன்மத்தம் பிடித்தவர் போல, மணியை அடித்தார். மணியோசையைக் கேட்டதும் சங்கினை ஊதிக்கொண்டிருந்தவரும் வீறுகொண்டு உச்சஸ்தாயியில் ஒலியெழுப்பினார். சங்கொலி, மணியோசை, வேல்களின் உறுமல், காற்றின் சீழ்க்கை ஆகிய அனைத்து சத்தங்களும் ஏதோ ஒரு செய்தியை அறிவித்ததைப் போலிருந்தது. சிவகார்த்திகேயனுக்கு அருகே ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாய் கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெருங்குரலெடுத்து, "கோவிந்தவராஅ கோவிந்தோ! கோவிந்தவராஅ கோவிந்தோ!!!" என்று ஆதிமனித மூர்க்கத்துடன் கத்தியது, அவனது இரத்தநாளங்களைப் புடைக்கச் செய்தது. இருகைகளையும் கூப்பி, உச்சிக்கு மேலே எல்லையற்று விரிந்த ஆகாசத்தை நோக்கி உயர்த்தி அந்தச் சப்த சமுத்திரத்தில் தனது கூக்குரலையும் கரைத்தான். 'கோவிந்தவராஅ கோவிந்தோ, கோவிந்தவராஅ கோவிந்தோ' என்று காயடிக்கப்படும் வெள்ளாட்டைப் போல ஓலமிட்டான். அவனது அடக்கப்பட்ட கோபங்களைக் கரைத்தான், தாபங்களைக் கரைத்தான். உண்மையில் அவனே அந்தப் பிரவாகத்தில் கரைந்துபோனான் என்பதே உண்மை. குரல்வளையில் உண்டான வலி பின்காதுகளை எட்டும்படி காட்டுக்கத்துக் கத்தினான். 'சரணாகதி தந்து, என்னை அப்படியே அணைத்துக் கொள்ளடா முகுந்தா!' என்று எல்லைகளற்ற கடவுளிடம் சினங்கொண்டு முறையிடுவதுபோல் கத்தினான். அவனது கண்களிருந்து வெளிவந்த உப்புநீர் கன்னத்தை அடையும் முன்னரே இரண்டாக, நான்காக, எட்டாக, பதினாறாக, பல்லாயிரம் துளிகளாகச் சிதறின. எனவே, அவனையறியாமலேயே அழுதுகொண்டிருந்தான். உயிரின் விம்மல் வானைக் கிழித்துச் சென்று பரந்தாமனின் செவிகளை எட்டும் என்று அறிந்தவனாக - சேலையைப் பிடித்த கையையும் எடுத்து, இருகைகளையும் கூப்பியழைத்த பாஞ்சாலியைப் போல சுவாசமெங்கும் நம்பிக்கையுடன் தனித்திருந்தான். காற்று இப்போது தனது சீற்றத்தை மட்டுப்படுத்தியிருந்தது. சுற்றி நின்றிருந்தவர்கள் இப்போது ஆசுவாசமான பின்னரும், தொடர்ந்து கோவிந்த நாமத்தில் ஊனுயிர் கரைத்தான். அப்போதுதான் அவனது குரல் அவனுக்கே கேட்டது. தனது குரலைக் கேட்டபோது, அந்த கோவிந்தனின் குரலையே கேட்டதைப் போலோர் உள்ளுணர்வு கொண்டான். அது தந்த போதை உச்சி மண்டைக்கேற, அக்குரல் கேவலாகும்படி கத்தினான். அப்போது சுற்றியிருந்தவர்களுக்கும் அவனது குரல் கேட்டது. அப்போதுதான் அவர்கள் அனைவரும் பாறைமுகட்டில் நிற்கும் அவனைக் கவனித்தார்கள். காவியுடையுடன் எலும்பும் தோலுமாக அமர்ந்து சில்லம் வைத்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், அவனைப் பார்த்தார். அவனது குரலுடன் ஒத்திசைவு ஏற்படும் வண்ணம் கத்தத் தொடங்கினார். "கோவிந்தவராஅ கோவிந்தோ!" அதனை ஒரு குறிப்பாக எடுத்துக்கொண்டு மீண்டும் அனைவரும் கத்தத் தொடங்கினார்கள். இப்போது, அவர்களுடைய குரல் எதுவுமே அவனுக்குக் கேட்கவில்லை. தன்னுடைய குரலே பல்லாயிரம் கோடிக் குரல்களாகக் கேட்பது போலொரு மயக்கம் தோன்றியது. பத்து வினாடிகள். என்னவென்று விளங்காத ஒரு சூன்ய நிலை அவனை ஆட்கொண்டது. பல்லாயிரம் அடி உயரத்தில் ஒற்றையாளாய் நின்று உலகனைத்தும் இரட்சிக்கும் சாட்சாத் அந்தக் கம்பத்துராயனே தான்தான் என்றெண்ணினான். அவ்வெண்ணம் அவனுக்கு கலக்கத்தையும், அச்சத்தையும் நடுக்கத்தையும் அளித்தது. 'தொடர்ந்து ஜெபித்தால், பாறை முகட்டிலிருந்து இருகைகளையும் விரித்தபடி கீழே குதித்துவிடுவோம்' என்றொரு வினோதமான எண்ணம் தோன்றியது. நாராயண நாமம் ஜெபித்த ஒவ்வொரு நொடியும், கண்கள் சொருகிக் கொள்ள ஒரு போதை உடலின் ஒவ்வொரு திசுவிலும் பரவி, அவனது உடலின் எடை மறந்தான். பயத்தையும் பொருட்படுத்தாது, அவனது குரல்வளை அனுமதித்த அளவுக்கு மீண்டும் மீண்டும் இரைந்தான். ஒரு வெப்பச்சலனக் காற்று அவனது வெற்று மார்பையும், மார்க் காம்புகளையும், தொப்புள் குழிவையும் இதமாய்த் தழுவியது. அதற்குப் பிறகு அவன் தன்னுடலின் பிரக்ஞையையே இழந்தான். அலைந்து திரிந்த மேகங்களுடன் தானும் ஒரு மேகப்பொதியாய் மிதப்பதாய் உணர்ந்தான். தொடர்ந்து கோவிந்த நாமத்தை அவன் ஜெபித்துக் கொண்டிருந்தாலும், அவனது வாய் அசைந்து கொண்டிருந்ததை அவன் உணர்ந்தானில்லை. காலைநேரப் பனிப்படலம், மேலுயர்ந்த மேகங்கள் கடந்து, மேகங்களுக்கிடையே தெரிந்த ஒரு சிறு நீலப் பொட்டில் அவனது கண்கள் நிலைகுத்தியிருந்தன. அப்போது அவன் காதுகளில் எந்தச் சப்தமும் கேட்கவில்லையென்றபோதிலும். கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
வாழ்க்கைல ஒரு தடவயாவது இந்த மலை மேல ஏறி நிக்கணும். நின்னுட்டு இத ஒருவாட்டி படிச்சு பாக்கணும்.
ReplyDelete