சிறுவூடற்பள்ளு

அவர்கள் இருவரும் தனியறையில் இருந்தார்கள். இரவு நேரம். தம்பதியர்தாம் அவர். இருவருக்குள்ளும் எவ்வித ஊடலும் இல்லை. நரம்புதளர் மூத்தோரும் அவர்கள் அல்லர். இன்னும் அவர்கள் இருவரும் தம்மிரு உடலிடை காற்றினைத் துரத்தாமலிருந்ததற்கான காரணம் என்னவெல்லாம் இருக்கமுடியுமோ, அதில் எதுவுமில்லை. ஆனாலும், அவர்கள் தனித்திருந்தனர். மந்திராலோசனையில் இருந்தனர்.

அது பிரபல இளம் கதாநாயகன் முகில் வண்ணனின் அலுவலகம். நேரம் இரவு பதினொன்றே கால். அவனுக்கு எதிரே புதுமுக இயக்குனர் சூடித்தந்த சுடர்க்கொடி. கட்டிலுக்குப் பதிலாக அவர்களுக்கிடையே மேசை இருந்தது. அவள் இயக்கப் போகும் முதல் படம் தொடங்குவதற்கு முன்பே, முகில் வண்ணனை இயக்க ஆரம்பித்துவிட்டனள்.

ஆனால் இப்போது இது ஒரு தொழில்முறை சந்திப்பு. தனது முதல் படத்துக்கு கதாநாயகனாக தன் காதல் கணவனையே ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறாள். அவன் அவளுடைய காதுமடலைப் பார்க்க மாட்டான். அவள் அவனுடைய கைகளைப் பார்க்க மாட்டாள். 

அவளுடைய கையில் ஒப்பந்தப் பத்திரம் இருந்தது. முகில் வண்ணனின் கண்களை இமைகொட்டாமல் பார்த்தவாறே பேசினாள்.

"ஸீ! இந்த டாக்யுமெண்ட்ஸ்-ல இல்லாத இன்னொரு முக்கியமான கண்டிஷன நா சொல்றேன். நா மொதல்ல ஒரு பெண். அப்பறம்தான் கலைஞர், இயக்குனர் எல்லாமே."

'அதற்கு என்ன' என்பதுபோல அவளையே அசுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"படத்துல இன்டிமேட் சீன்ஸ் வந்தே ஆகணும்ங்கற எடத்துல மட்டும்தா வெச்சுருக்கேன். அந்த சீன்ல எல்லாம் நீ நடிக்க மட்டும்தா செய்யற."

அ ஓடிவிட்டது. இன்னும் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து வந்தான்.

"ந்யூட் சீன்ஸ் இருக்கா? பெட்ரூம் சீன், பாத் டப் சீன்?"

அவனது அதீத உற்சாகம் அவளைக் கலவரப்படுத்தும் என்று தெரிந்தேதான் அப்படிச் செய்தான் என்று அவளுக்கும் தெரியாமலில்லை. 

நாக்கினை உள்கன்னத்தில் சுழற்றிக் கொண்டே, ஒப்பந்தத்தைக் கிழிக்கத் தயாராவது போல, அதனைக் கிடைமட்டமாகப் பிடித்து, இரு கைகளின் ஆட்காட்டி மற்றும் சுட்டு விரல்களை மட்டும் கொண்டு அதனைப் பிடித்தாள். இடதுகண் புருவத்தை மட்டும் உயர்த்தினாள்.

"சாருக்கு என்ன ஹாலிவுட்ல இருக்கறதா நெனப்போ!"

"ஹூம்! இருந்திருக்கலாம்."

"அப்புடியே இருந்து இருந்தாலும் ரொமான்ஸ் அ அப்புடியே தூக்கி சாப்புட்டுருவீங்க."

அவள் ஒரு genuine ஏளனத்துடன்தான் சொன்னாள்.

"ஏன், எனக்கு ரொமான்ஸ் வராதா?"

"என்ன, நூலு விட்றயா? இது ஆஃபிஸ்."

"ஏன்? ஆஃபிஸ்னா ஸீரோ க்ரேவிட்டி ஸ்பேஸ் ஷிப்பா? லவ் மேக் பண்ண முடியாதா?"

சர்வநிச்சயமாக அவனது குரல் முனகலாக மாறியிருந்தது.

"ஆஃபிஸ்லயா? நாசமாப் போயிருவோம்."

"சரி, அட்லீஸ்ட் ஒரு லிப் லாக்?"

முறைத்தாள்.

"நமக்குள்ள இல்ல. படத்துல."

அவள் பார்வையை வேறுபுறம் திருப்பினாள். அது நிச்சயமாக ஒரு நல்ல குறியீடு இல்லை. சீண்டல் ஊடலாகும் முன்னே காலில் விழுந்துவிட வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? 

"ஹெல்லோ! மிஸ் டைரக்டர். நீங்க காதலுக்கு மரியாதை மாதிரியே படம் எடுங்க. நா ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத் தான் கேட்டேன்."

காலில்தான் விழ வேண்டும். நெடுஞ்சாண்கிடையாக அல்ல. குறைந்தபட்சம் முதல்முறையாவது.

எந்த வினாடியும் அழுகையாய் உடைந்துவிடக் கூடியதொரு சீற்றம் அவளது சுவாசத்தில் இருந்தது. அவனைப் பார்த்தாள். அடுத்து அவள் என்ன கேட்கப் போகிறாள் என்று அவனுக்குத் தெரியும்.

"ஓக்கே! அந்த இன்ஃபர்மேஷன் தெருஞ்சுட்டு நா ஒண்ணும் பண்ணப் போறதில்ல. ஓக்கே, கம்மான். ஜோக்ஸ் அப்பார்ட் நா நடிக்க மட்டும்தா செய்யணும். இல்லையா? ஓக்கே! டன்."

ஒரு வினாடி இடைவெளி.

"ஹீரோயின ஃபிங்கரிங் பண்ணனும்னா கூட மனசுல திருப்புகழ் ஜெபிச்சுட்டே தா பண்ணுவேன். ஓக்கே வா?"

அவள் ஒப்பந்தத்தைக் கிழித்து வீசினாள்.

"ஹேய்! என்னடீ பண்ற.... ஏய்ய்ய்ய்ய்"
பதட்டத்தில் சிரித்தான்.

அவள் நாற்காலியைவிட்டு எழுந்து மேசை மீது ஏறினாள்! அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.
அப்படியே அவன்மீது விழுந்து நாற்காலியோடு சேர்த்துக் கீழே தள்ளினாள்.

"அம்மாஅ!"

"லிப் கிஸ் வேணுமா உனக்கு? ம்ம்ம்?"

"ஏய்ய்ய்ய்... ஆஃபிஸ் ஆஃபிஸ் ஆஃபிஸ் ஆஃபிஸ்... அம்மாஆஆஆஆ!!!! ஹைய்யோ!!! நாசமாப் போயிருவோம்.... ஹஹ்ஹாஹாஹா! அம்மா!!!"

அவன் பேசினானா, சிரித்தானா என்று நிச்சயித்துவிட முடியாது. அவனது மேஜையின் மீதிருந்த மூன்று குரங்கு பொம்மைகளும் கண், காது, வாயினைப் பொத்தியிருந்தன.

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?