அருஞ்சொற்பொருள் - 2
இதுவரை...
எந்தச் சூழலுக்காக, என்ன அர்த்தத்தில் பாடலாசிரியரால் எழுதப்பட்டதோ, அச்சூழல், அவ்வர்த்தமன்றி - அந்தக் குறிப்பிட்ட பாடலாசிரியரே கூட யோசித்திருக்க வாய்ப்பில்லாத - வேறொரு அர்த்தமுடைய மற்றும் வேறொரு கற்பனையான சூழலுக்கும் பொருந்திப் போகக் கூடிய திரைப்படப் பாடல் வரிகளைப் பற்றி பேசி வருகிறோம்.
இனி...
இந்தப் பாட்டின் வரிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு இரண்டு நபர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இருவர்.
#### இவர்கள் பேசுவது பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏனென்றால், 'சரி' 'தவறு' என்ற பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் இயல்பு எனும் பேருண்மையை உணர்ந்தவர்கள் இவர்கள்.
பெண்ணுடலின் வனப்பை இரசிக்காமல் இருப்பதாய் நடிக்கும் ஆண்கள் இல்லை இவர்கள். எதிர்பாலினம் மீதோ, நேர் பாலினம் மீதோ ஓர் ஆணோ பெண்ணோ ஈர்க்கப் படுவதும், அவர்களது மனம் விரும்பாவிட்டாலுமே கூட அவர்களது கண்கள் அனிச்சையாகவே ஈர்த்தவர்களை நோட்டமிடுவதும் தவறும் அல்ல, சரியும் அல்ல. அதுதான் உயிர் கொண்டு நடமாடும் எந்தவொரு உடலின் இயல்பு என்று இவர்களுக்குத் தெரியும்.
மாலை நேரச் சூரியன்; மலையடிவாரத்தில் நீண்டு கிடக்கும் பச்சை ரோம வயல்வெளி; பல்லாயிரங்கோடிக் கண்கள் கொண்டு காணும் அளவுக்கு வியாபித்திருக்கும் நட்சத்திரப் பெருந்திரள்; பாதியிருள் பாதி வெளிச்சத்தில் தெரியும் வெகு நேர்த்தியான அம்மன் சிலை; நாத்திகவாதிகளுக்கும் கடவுள் நம்பிக்கையளிக்கும் வகையில், சர்வ நிச்சயமாக யாரோ ஒருவர் இரசித்து இரசித்து உருவாக்கிய ஓவியங்கள் போலத் தோன்றும் மயில் தோகையின் கருப்பு, நீல, பச்சைக் கண்கள்; மலையின் மீதிருந்து பார்த்தால் நீண்டதொரு பாம்பு போல் தெரியும் நதி; நூறு பேர் கூடி ஒரே மாதிரி ஆடும் நடன நளினம்; நிலத்திலும் நீர்ப்பரப்பிலும் ஒரே மாதிரி படர்ந்து வழுக்கிச் செல்லும் வாத்துக் கூட்டம்; கோழிக்குஞ்சை விரட்டிப் பிடிக்க முயன்று தவறி விழும் குட்டிக் குழந்தை; மங்கலான வெளிச்சத்தில் மேடு பள்ளங்களாய்த் தெரியும் மூதாட்டியின் முக வரிகள்; மழை ஈரம் படிந்த ரோட்டில் பட்டாம்பூச்சியாய் விரியும் பெட்ரோல் தடம்; மழை பெய்து முடிந்தபின் அடிக்கும் இளவெயிலைப் பிரதிபலிக்கும் மரங்களின் ஈர இலைகள் - இவற்றையெல்லாம் இரசிப்பதைப் போலவே, எந்தவொரு கல்மிஷமும் இல்லாமல் பெண்களையும் இரசிக்கும் பாங்கு கற்றவர்கள் இவர்கள் இருவரும். பெண்ணைத் தனித்தனி அங்கமாக இரசிக்காமல் - உருவம், பாவனை, பேச்சு, செயல் என்று மொத்தமாய் இரசிப்பவர்கள் இவர்கள்.
பெரும்பான்மையோரைப் பொருத்த வரையிலும் பெண்களை இரசிப்பது இழிசெயல் என்று கருதுகிறார்கள். நம்புகிறார்கள். எங்கே நாம் அதைச் செய்வதை மற்றவர்கள் அறிந்தால், நம்மைக் கீழானவன் என்று எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மேல்துண்டு போடாத பெண்களை விமர்சிக்கிறார்கள், சேலை கட்டிக் கொண்டு டென்னிஸ் ஆட வேண்டும் என்று வெதும்புகிறார்கள், பொதுவெளியில் ஒரு பெண் சோம்பல் முறித்தால் கொந்தளிக்கிறார்கள்.
இவையெல்லாம் எங்கே தங்களது விஸ்வாமித்திர தவத்தை கலைத்துவிடுமோ என்று கலக்கம் கொள்கிறார்கள்.
அவர்களின் கருத்துப்படி பெண்ணை இரசிப்பது பாவம்.
ஆனாலும், உள்ளூர அவர்கள் இரசிப்பார்கள். இரசிப்பதை வெளிக்காட்டவும் மாட்டார்கள். மனமறிந்து பாவஞ் செய்யும் பாவிகள் அவர்கள்.
ஆனால், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இந்த இருவருக்கோ, அது ஒரு தியானம். கடவுள் படைத்த அழகை ஆராதிப்பதன் மூலம் கடவுளுக்கு இவர்கள் செய்யும் மரியாதை அது.
இவர்களைப் பொறுத்தவரை மனிதரின் எந்தச் செயலும் பாவமுமல்ல புண்ணியமுமல்ல. எதுவுமே சரியுமல்ல தவறுமல்ல. இவர்களைப் பொறுத்தவரை இரண்டே வகையான செயல்கள்தான் உள்ளன. பிறருக்கு ஊறு செய்பவை; ஊறு செய்யாதவை.
இன்னும் பல விஷயங்களில் இவர்கள் பெரும்பான்மையோரிடமிருந்து வேறுபட்டவர்கள்.
#### சாமி கும்பிடுவதற்காக இல்லாமல், ஊதுபத்தி பற்ற வைப்பதற்காகவே ஊதுபத்தி பற்ற வைப்பவர்கள்;
#### படித்த கவிதை, பார்த்த படம், சிரித்த நகைச்சுவை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதற்கு மட்டுமே அலைபேசியில் அழைத்துக் கொள்பவர்கள்.
#### பிரபஞ்சத்துடன் உரையாடுபவர்கள்.
#### பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாவது, அடிக்கடி அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொள்வது, குறித்த வயதில் திருமணம் புரிவது, திருமணம் புரியாமல் தனித்திருப்பது, வேலை நிரந்தரம் பெறுவது, வீடு கட்டுவது, உயர் பதவி அடைவது, ஊதிய உயர்வு பெறுவது, நல்ல பெயர் சம்பாதிப்பது, கல்யாணம், காது குத்துக்குப் போவது, போகாமலிருப்பது, பராக்கிரமத்தை நிறுவுவது, சமுதாயத்தின் சட்ட திட்டங்களுக்கு உடன்படுவது, உடன்படாமல் போவது, லொட்டு, லொசுக்கு போன்ற பெரும்பான்மையோருக்கு அதி முக்கியமான விஷயங்களான இவையெல்லாம் இந்தச் சிறுபான்மையோருக்குச் துச்சமானவை.
#### இவர்களுக்கு உவகையளிக்கக் கூடியவை, இவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவையெல்லாம் ---
முதல்முறையாக ஓர் இசைப்பிரியர் ஹெட்போனில் பாட்டு கேட்பது, அரச மரத்தடியில் மட்டுமே முடிவெட்டிக் கொள்ளும் அனுபவம் வாய்க்கப் பெற்ற ஓர் ஆண், முதல் முறையாக ஏ.சி. சலூனின் சொகுசை அனுபவிப்பது, பேருந்தில் போகும் போது பிடித்த பாடல் ஒலிப்பது, அடுத்தவர்களுக்காகக் கதவு திறந்து விடுவது, தூக்கத்திலிருப்பவர்களை எழுப்பாமல் இருப்பது, பசிக்கும் போது உண்பது, ஆரோக்கியமானதை உண்பது, தூக்கம் வரும்போது தூங்குவது, நிலவொளியில் தூங்குவது, மரத்தோடு பேசுவது, சிரிப்பு வந்தால் சிரிப்பது, கொட்டாவி வந்தால் கொட்டாவி விடுவது, தெரிந்தோ தெரியாமலோ, மனதளவிலோ உடலளவிலோ அடுத்தவரைக் காயப்படுத்தாமலிருப்பது - ஆகியவையே.
#### இருவருமே சினிமாப் பைத்தியங்கள்.
இருவருக்குமே தொழில்முறை சினிமாக் காரர்களாவதே கனவு. குறும்படங்கள் சில எடுத்திருக்கிறார்கள். முழு மூச்சாக, சென்னைக்குச் சென்று சினிமா வாய்ப்பு தேடமுடியாத சூழலில் இருப்பவர்கள்.
#### நடைமுறைக் கல்வி முறையின் மீது எக்கச்சக்கமான அதிருப்தி கொண்ட இருவரில் ஒருவர் ஓர் ஆசிரியராகவும், கடிகாரம் காட்டும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்வதில் உடன்பாடில்லாத இன்னொருவர், காலை முதல் மாலை வரை இயங்கும் ஒரு கார் அலைன்மென்ட் கடையிலும் பணியாற்றுகிறார்கள்.
ஆணென்பவன் தொடர் வருமானம் பெறுபவனாக இருக்க வேண்டும் என்ற சமுதாய விதியைப் பல்லைக் கடித்துக் கொண்டு பின்பற்றி வருபவர்களே இவர்கள்.
#### தாம் நினைத்த பணியினை தாம் நினைத்த முறையில் செய்ய வேண்டும் என விரும்பும் இவர்கள் அந்த இலக்கை இன்னும் எட்டவில்லை. அதற்காக, அன்றாட வாழ்க்கையை சலிப்புடன் வாழ்வதில்லை இவர்கள்.
#### இசை கேட்பதும், புத்தகம் வாசிப்பதும், படம் பார்ப்பதும், உணவு உண்பதும், பயணம் செய்வதும், மனிதர்களுடன் பேசுவதும், மௌனமாக இருப்பதும் இவர்களது ஒவ்வொரு நொடியிலும் பரவசத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன.
#### நினைத்தால், வாரத்துக்கு ஒரு படம் எடுக்கக் கூடிய திறன் வாய்ந்தவர்கள். ஆனால், படம் எடுக்க வேண்டும் என்பதற்காக படம் எடுப்பவர்கள் இல்லை இவர்கள்.
#### கதை விவாதத்துக்காக அமர்கையில் வெறுமனே வேறு விஷயங்களை மணிக் கணக்கில் கதைப்பார்கள்; ஐந்து நிமிடக் குறும்படம் எடுப்பதற்கு ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்வார்கள்; சில சமயம் நாள் கணக்கில் தொடர்ச்சியாக பைத்தியம் பிடித்தது போல வேலை செய்வார்கள். கலை என்னும் கனியைத் தடியால் அடித்துக் கனிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள்.
#### ஒரு மனிதர் இருபது வயதில் செய்வதை இன்னொருவர் ஐம்பதில் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.
#### ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் ஒரு விளக்கவியலா உறவு கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
ரஹ்மான் பாடல் வெளியாகும் நாளெல்லாம் இவர்களுக்குத் திருவிழாக் கொண்டாட்டந்தான்.
இவர்கள் கேட்கும் இசை பெரும்பாலும் ரஹ்மானுடையதே.
இவர்களைப் பொறுத்தவரை ரஹ்மான் இசை என்பது கடவுள் இவர்களுக்கு அனுப்பும் கடிதம்.
இவர்களின் தொண்ணூறு சதவீத வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ரஹ்மானின் இசையாகவே இருக்கும். ஆனால், ரஹ்மானின் பிறந்த நாளன்று உலகமே வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் ரஹ்மான் பாடல்களைப் பதிவிடும் போது, இவர்கள் அதைப் பற்றியே அறியாதவர்களாகக் கூட இருப்பார்கள்.
ஒருமுறை, இருவரில் ஒருவர் மற்றவரிடம் கேட்டார்.
"ரஹ்மான் மட்டும் செத்துட்டா நாம என்ன ஆவோம்?"
இன்னொருவர் சொன்னார்,
"ஃபிஸிக்கல் ரஹ்மான் நமக்குத் தேவையே இல்லையே! ரஹ்மான் என்ன நம்ம கூட டெய்லி காஃபியா சாப்புட்டு இருக்காரு. அவரோட உடம்பு இங்க இல்லைனாலும், அவரோட இசை நம்ம கூட பேசிட்டேதா இருக்கும். இந்த மானுடப் பிறவி உய்ய புள்ளினங்காள் பாட்டு ஒண்ணு போதாதா? சாகற வரைக்கும் அதவே பலகோடித் தடவ கேட்டுட்டு சந்தோஷமா அழுதுட்டே செத்துப் போகலாம். ஆனா, அந்த மனுசன் எத்தன பாட்டு போட்டு வெச்சுருக்காரு. அது போதாதா? கடவுளின் தூதனா இருக்கற ரஹ்மான் கடவுளாவே ஆகட்டுமே! என்ன இப்போ?"
இப்படிப்பட்ட இந்த 2 பேரும் ஒருநாள் ஒரு புது ரஹ்மான் பாட்டு கேட்கிறார்கள்.
அது வரையிலும் கடவுள் மொழியில் பேசிவந்த ரஹ்மான், இந்த முறை அவர்களுடன் நேரடியாக, பட்டவர்த்தனமான மனித மொழியில், தமிழில் பேசுவதாக அவர்கள் உணர்கிறார்கள். ரஹ்மானே பாடிய அந்தப் பாட்டு, சினிமாத் துறைக்கு இவர்கள் வருவதற்கு இவர்களை நோக்கி ரஹ்மான் விடுக்கும் அழைப்பாகத் தோன்றுகிறது.
போதாதென்று ரஹ்மான் இந்த அழைப்புப் பாடலை, இதுவரை இல்லாத வழக்கமாக, நடனமாடிக் கொண்டே பாடுகிறார்.
பைத்தியப் பேரின்பத்தில் திளைக்கிறார்கள் இருவரும்.
இனி வரிகளைப் பார்ப்போமா?
பாடல்...ஜிகு ஜிகு ரயில்
படம்... மாமன்னன் (2023)
இசை... ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள்... யுகபாரதி
அறிமுகக் கவிதை... மாரி செல்வராஜ்
புழு துளையிட்ட பழத்தின் விதையாக
குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்து போகிறேன்.
அறிவியல் என்ன சொல்லுகிறதென்றால், மண்ணில் விழும் பழங்களின் விதைகள் அனைத்துமே ஒரே நேரத்தில் முளைக்கத் தொடங்காதாம். எந்த இடத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து, ஒரு விதை முளைக்கவோ, அழுகிப் போகவோ அல்லது தூக்கத்துக்குப் போகவோ செய்யும்.
முளைப்பதும் அழுகுவதும் தெரியும். அதென்ன தூங்குவது? இதனை ஆங்கிலத்தில் dormancy என்கிறார்கள். மண்ணில் விழுகையில் முளைப்பதற்கு சரியான சூழல் இல்லை என்றால், முளைப்பதற்கான முயற்சிகளை எடுத்து ஆற்றலை வீணடிப்பதில்லை விதைகள்! தக்க சமயம் வரும் வரை மண்ணின் அடியாழத்தில் வெறுமனே கிடக்கின்றன.
சரியான தட்ப வெப்பம் வரும்போது, அவை மண்ணின் மேற்பரப்புக்கு வருகின்றன - முளை விடுவதற்காக. விதைகள் தானே மேலே வருமா? வராது. மண்ணுக்குள்ளே குடைந்து செல்லும் மண்புழுக்கள் விதைகளை கொறித்து விழுங்கித் துளைத்து நகர்த்தி மேற்பரப்புக்குக் கொண்டு வருகின்றன. விதைகள் முளைக்கத் தொடங்குகின்றன. இது அறிவியல் உண்மை.
விதை முளைக்க வேண்டுமென்றால் சூரிய ஒளி தேவை. எனவே, சூரியனை நோக்கி மண்ணின் மேற்பரப்புக்கு நகர்கிறது புழு துளையிட்ட விதை.
குளிர்ந்த சூரியனென்றால் என்ன? 6000 டிகிரி செல்சியஸ் இருக்கும் சூரிய வெப்பம் பூமியை அடையும் போது 30 டிகிரி செல்சியஸாக இருக்கிறதென்றால் அது குளிர்ந்திருக்கிறது என்று தானே பொருள். அந்த விதை சூரியனின் மேற்பரப்புக்குப் போகவில்லை. சூரியனுக்குப் போகவில்லை. சூரிய ஒளி கிடைக்கும் பூமியின் மேற்பரப்புக்குத்தான் போகிறது. அதாவது, குளிர்ந்த சூரியனை நோக்கிப் போகிறது.
ஆமாம், புழு துளையிட்ட விதை முளைக்குமா?
புழுவால் சீண்டப்படாத விதையை விட, புழு துளையிட்ட விதைக்கே முளைக்கும் வாய்ப்பு அதிகம் என்று அறிவியல் சொல்லுகிறது.
சிறுபான்மையினர் இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து பொறுமையுடன் மண்ணுக்குள் உறங்கும் விதைகள். ஒருவருக்கொருவர் மண்புழுவாகி ஒருவரையொருவர் மேலே தள்ளுகிறார்கள்.
அவர்களைக் கலைஞர்களாக முளைக்க வைக்கும் குளிர்ந்த சூரியனே ரஹ்மானின் இசை.
ஏ! கிச்சு கிச்சு தாம்புலம்,
கியா கியா தாம்புலம்.
சினிமா கனவை எட்டுவதென்பது கடினமான பயணமல்ல. அது சவாலானதுதான். ஆனால், குழந்தைகள் எப்படி விளையாட்டை இரசித்து ருசித்து விளையாடுகிறார்களோ, அப்படி அணு அணுவாக இரசிக்க வேண்டியதே இப்பயணம்.
ஜிகு ஜிகு ரயில் கிளம்புது பார்
இருவரிடமும் ரஹ்மான் சொல்கிறார், "தம்பிகளா! ஓடி வாங்க, ஓடி வாங்க. அண்ணன் ரயில் வண்டிய கெளப்பப் போறேன். ஓடி வந்து ஏறிக்கங்க!"
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்.
இதுவரை கனவாகப் பொத்தி வைக்கப் பட்டிருந்த பயணம், நிஜங்களின் பயணமாகத் தொடங்குது பார். இதுவரை மண்ணுக்குள் தூங்கிய விதைகள் முளைக்குது பார்.
நீ புறப்பட்டு வா!
நீ எடுக்கும் படத்திற்கு நான் இசையமைக்கிறேன் புறப்பட்டு வா!
சரிகம சரித்திரம் படைத்திட வா!
இதுவரைக்கும் வந்த படங்களின் இசையை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடும் இசை ஆல்பங்களை நாம் சேர்ந்து உருவாக்குவோம் வா!
முன் பகை விட்டு வா!
கலை என்றால் என்னவென்றே தெரியாமல், படைப்பு என்றால் ஏதென்று அறியாமல் உன்னைக் கேலி செய்தவர்களை எல்லாம் பற்றி யோசித்துக் காலம் கடத்தாதே நண்பா! கிளம்பி வா, நான் இருக்கிறேன்.
சரிசம உலகத்தில் மகிழ்ந்திட வா!
உன்னைப் போன்றவர்கள் அங்கே யாருமில்லை. இங்கே வந்து பார். இங்கே அனைவரும் ஒரே ஜாதி. படைக்கும் ஜாதி. படைப்புத் தொழிலில் மகிழ்ந்திருப்போம் வா.
வீண் திரை விட்டு வா!
தடைகள் என்னும் திரையைக் கிழித்தெறிந்து வா.
ஒளிதரும் முகங்களில் பளிச்சிட வா!
திரையரங்கின் இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களின் முகங்கள் ஒளி தரும். திரையில் ஓடும் படத்தின் ஒளிதான் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது. அத்தகைய ஒளியாய், திரையில் படமாய், அதிலே இசையாய் பளிச்சிடப் போவது நாம் தான் தோழா. வா!
பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம். வா.
எல்லைகள் கடந்து சேர்ந்து பறப்போம் வா. தேசம் கடந்து, மொழி கடந்து கலைகள் படைக்கப் பறப்போம் வா.
ஏ, லம்பா,
ஏலே நண்பா!
நீ தெம்பா
ஏறு நண்பா!
ஏ, லம்பா,
ஏலே நண்பா!
நீ தெம்பா
ஏறு நண்பா!
எல்லாம் மாறும்,
எல்லாம் மாறும்.
"ஒழுக்கமா வேலைக்குப் போ! இந்த வேண்டாத வேலையெல்லா எதுக்கு!" என்று உனைப் பார்த்து எல்லாரும் சொன்னது; காலையில் கண்விழித்து விருப்பமில்லாமல் வேலைக்குக் கிளம்புவது; ஒற்றை ஆளாக நின்று ஒரு படத்தின் எல்லா வேலைகளையும் பார்ப்பது; பெண் நடிகர்கள் கிடைக்காமல் அல்லாடுவது; சினிமாவுக்கு இறுதி முக்கியத்துவம் தந்து, பிற வேலைகளை முதன்மையாகச் செய்வது; உன்னை விரும்புவோர் உன் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த பயம்; சமுதாயக் கட்டமைப்புகளை உடைக்க நீ கொண்டிருந்த பயம். எல்லாமே மாறும்.
உள்ளம் சேர்ந்தா
எல்லாம் மாறும்.
உள்ளம் சேர்ந்தா
எல்லாம் மாறும்.
உங்கள் இருவரின் எண்ணங்களோடு என் எண்ணமும் சேர்ந்தால், உலகமே மாறும்.
நஞ்சை புஞ்சை
ரெண்டா நோகும்
எள்ளும் நெல்லும்
ஒண்ணா வாழும்
நீர் போதுமான அளவு உள்ள விவசாயப் பகுதி, நன்செய். குறைவாக உள்ளது புன்செய்.
நெல் விளைய நிறைய நீர் வேண்டும். எதுவும் முளைக்காத நிலத்தில் கூட முளைத்துவிடும் எள். நெல் விளைய நீரில்லாத போது எள் விதைப்பர்.
பணத்தின் தேவையின்றிக் கிடைக்கும் சந்தோசங்கள் - எள். அவற்றை இரசிக்கிறாய்.
பணத்தால் வரும் சௌகரியங்கள் நெல். அதையும் இரசிக்க வா.
இங்கே வா. எள்ளும் நெல்லும் ஒன்றாய் இரசிக்கலாம்.
ஜன்னலுக்குள் வானமுண்டு.
வெள்ளித்திரை எனும் சிறிதளவு ஜன்னலுக்குள் மொத்த பிரபஞ்சத்தின் கதைகளையும் சொல்லலாம், வா.
உள்ளங்கையில் பாதையுண்டு.
எங்கோ தொலைதூரம் போகவேண்டுமென்று மலைக்காதே. அடுத்த எட்டு எட்டி வை. அது உன் பக்கத்தில் தான் உள்ளது.
மண்ணுக்குள்ளே பூவும் உண்டு.
மண் பூவாக மலர்ந்திடும் மாயாஜாலத்தைப் போல, உன் மனதுக்குள் உள்ள கதைகள் ஊரெங்கும் மணக்கட்டும், வா.
புள்ளிக்குள்ளும் கோலம் உண்டு.
புள்ளி எல்லாம் வைத்து முடித்த பின்னர் தான் கோலம் போடப்படும். ஆனாலுமே, முதல் புள்ளி வைக்கப்படும் போதே அது கோலத்துக்கான ஆரம்பம் தானே? விதைக்குள்ளே மரம் உள்ளதைப் போல, புள்ளிக்குள்ளே கோலம் உள்ளதைப் போல, ஒரு முயற்சி தொடங்கும் போதே அதற்குள்ளே அதன் நிறைவும் உண்டு. நீ கிளம்பி வா! பயணத்தின் நிறைவு அங்கே தொடங்குகிறது.
புன்னகையில் ஞானம் உண்டு.
எந்தவொரு கேலிப் பேச்சையும் கோபத்தையும் புன்னகையுடன் கடந்து வா.
உண்மை அன்பில் யாவும் உண்டு.
உன்னை உண்மையாய் நேசிப்பவர்கள் உன் மேல் கோபமும் கொள்வார்கள். ஏற்றுக்கொள், கலங்காதே.
எவ்விடத்தும் ஏகன் உண்டு.
சிவன், சிவபானத்தில் மட்டுமல்ல - அவன் எங்கும் நிறைந்தவன். நிரந்தர போதை, கலையில் தான் உண்டு. அதை அனுபவிக்க, வா.
இலட்சம் கோடி நட்சத்திரம்
மின்னல் அள்ளி முத்தம் போட,
மேகத்துல ஊஞ்சலாட,
இடி இடிக்க கொடிப் பிடிக்க,
இதெல்லாம் செய்தால் எப்படியொரு பரவசம் கிடைக்குமோ, அந்தப் பரவசத்தை அடைய வந்து சேர்ந்து கொள்ளடா கண்மணி.
மழையடிக்கத் தமிழ் படிக்க
அமிர்த வர்ஷினி ராகத்தில் தமிழ்ப் பாட்டு பாடினால் மழை வருமாம். அப்படியொரு எண்ணக் கூர்மையுடன், கவனக் குவியத்துடன் வந்து சேர்.
மரம் முளைக்க, மண் மணக்க,
நீ வந்தால், உன்னைப் பார்த்து, உன்னைப் போன்ற எளியவரெல்லாம் உற்சாகம் கொண்டு வந்து சேர்வார்கள். நீ முளைத்ததைப் போல இன்னும் பல விதைகள் முளைத்து மரமாகி மணம் பரவட்டும் உலகெங்கும்.
ஓரஞ் சாரம் ஓட வேணாம்
வந்து சேந்துக்கோ
தாமதம் ஆகட்டும், பரவாயில்லை. மனதை விட்டுவிடாதே செல்லமே!
ஆடிப் பாடி, பாடி ஆடி
வந்து சேந்துக்கோ
இங்கே வந்து சேரும் பயணத்தை கஷ்டமாகக் கருதாதே. குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வந்து சேரடா வீரா.
https://youtu.be/JjJo_phsCoU?si=c5B8H4fiB7pdsJDQ
ReplyDeleteசெயற்கை நுண்ணறிவு...
நீங்கள் ரஹ்மானின் அதிதீவிர ரசிகர் என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஎனக்கொரு ஆசை இதை சொல்லவேண்டுமென்று. 90 களின் ஆரம்பத்தில் ரஹ்மான் இசையமைத்த பாடல்களை எப்பொழுதாவது கேட்கும்பொழுது ('எப்பொழுதாவது' - because i want to preserve that magical feelings for the very selective moments ) வரும் உணர்வு இருக்கிறதே... அதை 'nostalgia' என ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட இயலாது.
என்னால் இயன்றவரை விவரிக்கிறேன்...
அந்த இசை... அந்த இசையை முதலில் கேட்டபொழுது இருந்த சிறு பிரயாத்தின் நினைவுகள்....பள்ளி நினைவுகள்...இத்தனை காலங்கள் உருண்டோடி விட்டனவா என்ற ஏக்கம்... இப்பிறவியில் நாம் சந்தித்த நண்பர்களும் இதே வயதில்தானே இப்பாடலை கேட்டிருப்பார்கள்... அப்படி எங்கோ இப்பாடல்களைக் கேட்டவர்களை காலம் சந்திக்க வைத்திருக்கிறதே....அவர்களுக்கும் வயதாகிக்கொண்டே போகிறதே... ARR வாழ்கின்ற இதே காலகட்டத்தில் நாமும் வாழ்கிறோமே...அது எத்தனை பெரிய ஒரு பொக்கிஷம்...அதுவும் அவர் தமிழன்... இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்... இப்படி பல பல எண்ணங்கள்.. குறிப்பாக சிறு வயதில் பதிவான அந்த நினைவுகளை அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது... Choose the moments to relive the magic..
அப்படி ஒரு தருணத்தை தான் சற்று முன்பு தேர்ந்தெடுத்து 'நேற்று இல்லாத மாற்றம்' கேட்டேன்...
இதை நான் எழுத காரணம் நேற்று யூடியூபில் 'நேற்று இல்லாத மாற்றம்' composing வீடியோ பார்த்ததுதான்.
அழு அழு என்று அழுது...cannot be put in words
ஒரு இளைஞன் was brewing magic on his keyboard...
அப்புறம் Ashwini Kaushik என்ற flautist வாசித்த இந்த இசையைக் கேட்டு
https://youtube.com/shorts/l1vKysMqhwE?si=lsdKfe-l5gonQCGi
பிரம்மிப்பு பெருகியது...
டூயட் படம் வெளிவந்து 30 வருடங்கள் ஆகின்றது...'என் காதலே' பாடலில் SPB அவர்கள் இப்படித்தான் பாடவேண்டும் எனவும் 'அஞ்சலி அஞ்சலி ' பாடலின் இடையில் வரும் சித்ரா அவர்களின் humming இப்படித்தான் இருக்கவேண்டும் எனவும் எப்படி தீர்மானிக்கிறார் ரஹ்மான்? அது எப்பேர்ப்பட்ட ஒரு ஞானம் என்பது அதை recreate செய்யும்போதுதான் தெரியும். Super singer இல் SPB அவர்களே பாடிய 'என் காதலே ' (two versions are there ) வைக் கேட்கும்பொழுதும், ஜீ தமிழ் சரிகமப லிட்டில் champs இல் ரிக்ஷிதா hum செய்த அஞ்சலி அஞ்சலியைக் கேட்கும்பொழுதும் மெய் சிலிர்த்தது what a genius composition!!! சித்ரா அவர்களுக்கு எப்படி சொல்லி hum செய்ய வைத்திருப்பார்!!!
Happiness shared is multiplied என்பார்கள்.. அதற்காகவே இதை நான் இங்கே பதிவிடுகிறேன்..
உங்கள் பதிவில் குறிப்பிட்ட 'புள்ளினங்காள்' பாடலை earphones இல்லாமல் வெறுமெனே கேட்பது என்பது அப்பாடலுக்கு அநீதி இழைப்பதாகும்.. எத்துணை மானுடர்கள் டிவியில் மட்டுமே இப்பாடலைக் கேட்டுவிட்டு கடந்து சென்றனரோ.. பாவம்..
Namuku pogaam😊
ReplyDeletehttps://youtube.com/shorts/i4-0qsjRA6c?si=wPhbJz54r1ivLVtL
ReplyDelete