ஓ! உலகோரே!

கவிஞர்களின்
மனங்கள் தான் 
எத்துணை அழகானவை!

பறவைகளை 
இரசிக்காதவர்களை,

சடங்குகளை
சடங்குகளாக மட்டுமே
சமைத்து விட்டவர்களை,

இசை கேட்டும்
இசையாதர்களை,

உண்மையை
முகங்கொள்ளத்
துணியாதவர்களை,

பொய்களைக் கொண்டே
ஆசுவாசப் படுபவர்களை,

இயல்பினை
மறைக்கும்
எந்திரங்களை,

பிரபஞ்சத்தையே 
வெல்லும்
பராக்கிரமர்களை,

எல்லாம் அறிந்த
அதிமேதாவிகளை, 

காதலால்
கசிந்துருகாதவர்களை,

தூங்கும்
குழந்தைகளை
எழுப்புபவர்களை,

அளவிட்டு
சிறுநீர் கழிக்கவல்ல
பரிபூரணவாதிகளை,

உன்மத்தம்
உணராதவர்களை,

கவிதையையோ
கவிஞரையோ
கிஞ்சித்தும்
உணர முடியாத்
துர்பாக்கியசாலிகளை,

இத்தகையோரின்
பல்லாயிரம் கோடிப்
பிரதிகளை,

அனுசரித்துப்
போகும்
கவிஞர்களின்
மனங்கள்தான்
எத்துணை அழகானவை!

கவிஞர்கள்
பரிதாபத்துக்குரியவர்கள்!

அவர்களின் 
மொழியை
எவரும் பேசுவதில்லை,

அவர்களின்
பேச்சில்
தர்க்கம் வாய்ப்பதில்லை,

முழுப் பைத்தியம்
அவர்களுக்கு
எட்டுவதில்லை,

தமதறிவை
தாமே 
நொந்து கொள்பவர்களே
அவர்கள்,

சொல்ல
வருவதை
அவர்களால்
சொல்லவே முடிவதில்லை,

நகையாடுவோருக்கு
கேளிக்கையும்

நேசிப்போருக்கு
வலியையும்

அளிக்க வேண்டுமெனச்
சபிக்கப் பட்டவர்கள் அவர்கள்.

ஆனாலுமே,

இத்தனை விலைகள்
கொடுத்து அவர்கள்
வாங்குவதென்னவோ,

கடவுளின் அணுக்கம்.

எத்துணை 
அற்பமானதும்
அவர்களுக்குப்
போதுமானது.

மறந்து போனதொரு
ஊதுபத்தி வாசனை,

பேருந்தில் முதியவர்
தந்த
அந்தப் புன்னகை,

அலுவலின் போது
ஜன்னலமரும்
ஒரு சிட்டுக்குருவி,

எங்கிருந்தோ
கேட்கும்
எல்.ஆர். ஈஸ்வரியின்
"ஆனந்த ஞானரதம்",

தொட்டி மீனின்
விடுதலை மரணம்,

தனித்து வந்த
ஆட்டுக் குட்டியின் 
ஓலம்,

சாலைகளில்
அலையும்
மனப்பிறழ்வுற்றோரின்
உச்சாடனம்,

நொண்டி நொண்டிச்
செல்லும்
தெருவோர நாய்,

பள்ளிப் பேருந்தில்
தூங்கும் குழந்தைகள்,

இவைகளே
அவர்களுக்குப்
போதுமானவை.

ஓ! உலகோரே!

உம்மால் 
அவர்களுக்கு
ஆகப் போவதோ
ஒன்றுமில்லை,

இருந்தாலும்,
ஒன்று இருக்கிறது.

கவிஞர்களுக்காய் 
ஒன்றே ஒன்று செய்வீரா?
அல்லது செய்யாமல்
இருந்தாலே போதுமானது.

ஓர் எழுத்தாளர்
எழுதப் போகையில்
ஏவல் செய்யாதீர்.

ஒரு கவிஞரின்
தவத்தில் 
கிலுகிலுப்பை ஆட்டாதீர்.

எழுத்துகள்
உதிர்க்க
அவள் ஆயத்தமாகும் சமயம்
காலத்துடன் அவள்
கலவி கொள்ளும் சமயம்.

கலவிக்கு முன்பே
கர்ப்பக் கலைப்பைச்
செய்யாதீர்கள்.

விடிகாலை
சுபக் கனவின்
பேரானந்தம்
கலைந்து போக
நொடிகள் போதும்.

அவள்
எண்ணி
எழுதாமல்
போகும் 
அந்த வரிகள்
பிரபஞ்ச இரகசியமாகக் 
கூட இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?