கண்களால் சிரிப்பவள்!

நானும் அவளும் எதிரெதிரே அமர்ந்திருந்தோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது, அப்போது கடிகாரத்தில் மணிமுள் எங்கே இருந்தது என்பது. இரவு ஒன்பது முப்பதுக்கு அவளுடன் குறுஞ்செய்தி உரையாடல் புரிந்திருந்தால் கூட, மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன். சற்றேறக்குறைய முன்னூறு சதுரமீட்டர் பரப்பளவுள்ள டிபார்ட்மெண்ட்டில் நானும் அவளும் மட்டும் இருந்தோம், அவளுக்குப் பின்னாலிருந்த சுவரில் சாரை சாரையாகச் சென்ற எறும்புகளுடன் சேர்ந்து. அவளுடைய மேசைக்கு உடனடி இடதுபுறத்தில்தான் என்னுடைய மேசை என்றபோதிலும்கூட, அவளுடைய மேசைக்கு எதிரிலேயே ஒரு நாற்காலியைப்போட்டு அமர்ந்திருந்தேன். அவளுடைய நாற்காலியின் கைகளுக்கும் மேசைக்கும் இடையே ஒரு சாய்வுப்பாலம் அமைத்த ஓர் அட்டையின் மீது இருந்தது, ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. எனக்கு முன்னால் அவளது மேசைமேலிருந்தது அடுத்த நாள் விழாவுக்கான MoC வாசகங்களைத் தாங்கவேண்டிய ஒரு வெள்ளைத்தாள். கன்னத்தில் கைவைத்தபடி யோசிக்கும் சாக்கில், அவளுடைய மேலுதட்டின் விளிம்புகளை இரசித்துக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தரச்சான்றிதழ் தரும் அதிகாரிகள், எங்கள் கல்லூரிக்கு வரவிருந்ததால், எங்கள் துறையின் அனைத்து ஆசிரியர்களும் பணிநிமித்தம் தரைத்தளத்திலிருந்த வேதியியல் ஆய்வகத்தில் இருந்தார்கள். நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். ஆயத்தப்பணிகள் முடியும்வரை யாரும் வீட்டுக் கிளம்பக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆயத்தப்பணி என்பது ஏதுமல்ல. எம்.ஃபில் முடிக்காமல் பணியாற்றிக்கொண்டிருந்த என்னைப்போன்ற நபர்களுக்குப் பதிலாக, வேறு போலி ஆசிரியர்களையும், உரிய போலி ஆவணங்களையும் தயாரிக்கும் பணி. எங்கள் துறை பொறியியல்  முதலாமாண்டு மாணவர்களுக்கானது. பொறியியல் கல்லூரி கலைச்சொல்லகராதியில் S&H என்பார்கள். துறையில் நான்கு பாட ஆசிரியர்கள் இருந்தோம். அவள் இயற்பியல் ஆசிரியை. நான் ஆங்கிலம். எங்களுடைய பாடங்களுக்கு அனைத்து ஆவணங்களும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்ததால், மற்றவர்களுக்காகக் காத்திருந்தோம். உண்மையில் அவள் காத்திருந்தாள். ப்ரிண்டரோ, ஸ்கேனரோ வேலைசெய்யாமல் போய்விடவேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தேன் நான். ஜன்னல்களின் வழி நுழைந்த சோடியம் வேப்பர் விளக்குகளின் செம்மஞ்சள் வெளிச்சம், ஏற்கனவே எழிலான அவளது முகத்தில் பட்டு, மெருகூட்டிக்கொண்டிருந்தது. மாலைநேரமாதலால், அவளது கூந்தலிலிருந்து சில கற்றைகள், இராணுவ ஒழுங்கிலிருந்து விலகி அவளது காதுகளையும் கன்னங்களையும் உரசிய வண்ணமிருந்தன. அவையும் வெளிச்சம் பட்டு டங்க்ஸ்டன் இழைகள் போல மின்னின. பார்வைப் பரிமாற்றம் ஏதுமில்லாமல் அவ்வப்போது என்னுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"எழுதறீங்களா, படிக்கறீங்களா சார்?"

"எழுதணும். ஆனா இப்போதைக்குப் படிச்சுட்டு இருக்கேன்."

"என்ன படிக்கறீங்க?"

"சும்மா, ஒரு கவிதை படிக்கிறேன்."

நிமிர்ந்து பார்த்தாள் ஒரு நேர்கொண்ட பார்வை. புன்னகைத்தாள்.

"பாத்து. நாளைக்கு எம்.ஓ.சி-ல போயி கவிதை சொல்லிடாதீங்க. அது மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் ஃபங்ஷன்."

"இல்ல இல்ல. இந்தக் கவிதைய வேற யாரும் தெருஞ்சுக்க வேணாம்."

"சரியான சுயநலவாதியா இருப்பீங்க போல?"

"எங்கம்மா மடியில நா மட்டுந்தா படுக்கணும்-னு நெனைக்கறது சுயநலமா?"

இன்பத்துப்பால் எழுதிய வள்ளுவனால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வினாடி மெளனம்.

"எழுதுங்கப்பா சீக்கிரமா. ஒரு டென் மினிட்ஸ்ல கெளம்பிடுவோம்-னு நெனைக்கறேன். நீங்க வேற ஊருக்குப்போனா ரொம்ப பிஸியாயிடுவீங்க."

"பொய் அதிகமா சொன்னா, நரகத்துக்குப் போகணுமாம்."

"ஏன்? ஊர ஒரு ரவுண்டு விடமாட்டீங்களா?"

"அத சொல்லலப்பா. எத்தன நாளைக்குத்தா இந்த மேனேஜ்மெண்ட் மக்கள புகழ்ந்து புகழ்ந்து பேசறது. ஸோ, நாளைக்கு சும்மா இன்னாருக்கு அடுத்து இன்னார் பேசுவாங்கனு ஆன் தி ஸ்பாட்ல சொல்லிக்க வேண்டியதுதான்."

"உங்களுக்குனு ஒரு ஸ்டேண்டர்ட் இருக்குல? அத ஏன் விட்டுத்தர்றீங்க?"

"அதுக்காக, Simplicity personified, serving the rural அப்படினு எல்லாம் பொய் சொல்லச் சொல்றீங்களா திரும்பத் திரும்ப?"

"பொய் இல்ல. தொழில்தர்மம். புலவர்கள் பொய் சொன்னா தப்பில்லப்பா. அப்புடி உங்களுக்கு அதச் செய்ய விருப்பமில்லனா, அத தைரியமா சொல்லியாவது இருக்கணும். ஆனா, நீங்க ஒரு விசயத்த ஏனோ தானோனு செஞ்சு நா கேள்விப்பட்டதில்ல."

அவள் ஒரு சிந்தனாவாதி. என்னை நியாயமாக எதிர்த்துப் பேசியவர்களில் முக்கியமானவள். என்னைப்பற்றி எனக்குச் சொன்ன ஒரே ஒருத்தி. எனக்கு முன்னே இருந்த வெள்ளைத்தாள் கறைபடத் தொடங்கியது. முதலிரவுக் கட்டிலில் அமர்ந்து பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினேன். யோசனை செய்யாமலேயே காகிதம் நிரம்பியபோதும், அவ்வப்போது யோசிக்கவும் தவறவில்லை நான்.

நியாயப்படி நான் அப்போது அவளிடம் ப்ரொபோஸ் செய்திருக்க வேண்டும் - குறைந்தபட்சம் பதினாறாவது முறையாகவாவது. ஆனால், நான் அந்த மாலைநேரத்தின் அழகைக் கெடுக்க விரும்பவில்லை. எனவே, கல்வித்தந்தையைக் கவிபாடலானேன்.

ஐந்து நிமிடங்கள் கழித்து விக்னேஷ் வந்தான். வேதியியல் ஆசிரியன். கலைக்கல்லூரியில் நாங்கள் தாகூருடனும் ஷேக்ஸ்பியரோடும் உலவிவந்த அதே மூன்றாண்டுகள், அவன் அங்கிருந்த ஆய்வகங்களில் பிப்பெட்டுகளை உடைத்துக்கொண்டிருந்தவன். ஆனால், பணியில் சேர்ந்தபிறகுதான் அறிமுகமாயிருந்தான். சக வயதினன். 'வாங்க சார்' என்று ஆரம்பித்த உறவு, 'மூடீட்டு வாடா' வரை வளர்ந்திருந்தது. 'எந்த வகுப்பில் எந்தப்பெண் அழகு' என்பது பற்றியெல்லாம்கூட விவாதித்துக்கொள்வோம். சுருக்கமாகச் சொன்னால், 'ஜிகிரி தோஸ்த்'. உள்ளே நுழைந்து எங்களைப் பார்த்தபடியே ஹெச்.ஓ.டி நாற்காலியில் சென்று அமர்ந்தான். சத்தியமாக அவன் ஹெச்.ஓ.டி இல்லை. அங்கிருந்தே கத்தினான், indecent fellow!

"ஏண்டா டேய். ஊரே பரபரப்பா ஓடிட்டு இருக்கு. நீ என்னடா பண்ணிட்டு இருக்க?"

அவள் என்னைப் பார்த்தாள். உதடுகளைக் கடித்தபடி புன்னகைத்தாள். நான் அவளைக் காதலித்தது எனக்கு மட்டுமே தெரியும் - அதிகாரப்பூர்வமாக.

"நாந்தா இங்க வேலையே செய்யலயே! எம்.ஃபில் படிச்ச எத்தனையோ அறிவாளிங்க இருக்கறீங்க. "

அப்போது என்னுடன் இருந்த இருவருமே எம்.ஃபில் முடித்தவர்கள்.

"அஆ! அங்க லேப்-ல வந்து பாரு. எம்.ஃபில் பண்ண மோகன் சார் என்ன பண்றாருனு. தேவி மேடம் சர்டிஃபிகேட்ஸ்-ல அட்டஸ்டேஷன் சைன் போடச் சொன்னார்ரா ஹெச்.ஓ.டி. நம்மாளு தெள்ளத் தெளிவா அவரோட பேர சைன் போட்டு வெச்சிருக்காரு ஒரு நாப்பது பக்கத்துக்கு."

அதைக்கேட்டு அவள் சிரித்தாள். அத்தகைய அமைதியான சூழலில் அது அதிகச் சத்தமாகக் கேட்டது. உடனே தனது இடதுகையைக் குவித்து உதடுகளைப் பொத்திக்கொண்டாள்.

விக்கி ஹெச்.ஓ.டி இழுப்பறையிலிருந்து எதையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

"மறுச்சும் ப்ரிண்ட் எடுக்கோணும் போயி. நான் போயி எடுத்துக் குடுக்கறேன். மறுபடியும் எதாச்சும் காமெடி பண்ணட்டும்."

"எப்படா முடியும்?"

"காத்தாலச் சோறு ஆயிட்டு இருக்குது எல்லார்த்துக்கும்." என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.

அவள் புத்தகத்தைக் குப்புறக் கிடத்தினாள், பறக்கும் ஒரு பறவையின் வடிவத்தில். 'ஓர் ஆண் எதிரில் இருக்கிறான்' என்ற பிரக்ஞையுடன் செல்லச் சோம்பல் முறித்தாள்.

"ப்ச். லேட் ஆகுது." என்று சொல்லி உதடுகளைக் குவித்துக் காண்பித்தாள். நிராயுதபாணியான எனது இமைகள் சரணடைந்தன.

"எழுதிட்டீங்களா?" என்றாள்.

ஆமென்று தலையாட்டினேன்.

"வெரி குட்" என்று சொல்லி இரண்டு கண்களையும் ஒருசேர மூடித்திறந்தாள். இமைப்பதற்கும் அதற்கும் கால அளவில் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

"நீங்க புக் படிக்கலயா?" என்றேன்.

'இல்லை என்ற பதில்தானே உனக்கு வேண்டும்' என்பது போலத் தலையாட்டினாள்.

"பாட்டு கேக்கலாமா?" என்றேன். என்னுடைய மொபைலில் டேட்டா இல்லை என்பது இருவருக்கும் தெரியும். அவளுடைய மொபைலை எடுத்து பேட்டர்ன் வரைந்து, யூட்யூப் பக்கத்திற்குள் சென்று, என்னிடம் கொடுத்தாள்.

"நா லேப்-க்கு போறேன்." என்றுசொல்லிவிட்டு, என் தலையசைப்புக்குப் பின்னால் எழுந்தாள். நான் வேகவேகமாகத் தேடி பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டேன்.

'இன்னுங் கொஞ்ச நேரம் இருந்தாத்தா என்ன?' என்றது பாட்டு. நான் மொபைல் போனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். இருந்தாலும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது, அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தது.

Comments

  1. Sir semaa feel la write panirukeenga...

    Really nice sir

    ReplyDelete
  2. Ezhuthala Thiru, nee ezhuthala Vazhanthirukka.. Arumai

    ReplyDelete
  3. Though I know the story, Ur words bring visual to the senses.

    ReplyDelete
  4. மக்களே இது கதை அல்ல நிஜம்...
    அடேய் மாட்டிகிட்டியா

    ReplyDelete
  5. Font Style mathu da... cant read it...

    ReplyDelete
  6. A lively script sir... But I think it's your own real life script.

    ReplyDelete
  7. Paarra....Innum pesa kooda thodangalaye nenjamum konjamum nerayala.....

    parakkum paravayin vadivathil kuppurak kidathiya puthagam....yenaa oru karpanai....

    i've lost this side of mine for such a long time... i feel so happy that it is being revived through reading your writings....

    ReplyDelete
    Replies
    1. The creative side of yours is being revived through reading my writing! I'm really delighted. And, it's so kind of you. Waiting to read your writings.

      Delete
  8. Andha song a play pannumbodhu , andha beginning musical piece composed of mouth organ, gadam, flute etc... idhellam mudiyara varaikum avanga angayeva irundhanga? Illa fast forward panni vijay prakash ku poitingla? Just curious... :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?