THE SHY ROMEO

செய்துவிட்ட தவறுகள் உண்டாக்கும் குற்றவுணர்வைவிட செய்யாச் செயலால் உண்டாகும் மனக்கிலேசம் அதிகம். தைரியமின்மையும் சோம்பலும் இரண்டு கிங்கரர்கள் போல பாதுகாத்துவரும் தயக்கத்தைப் போட்டு உடைத்துவிட அவனுக்கும் ஆசைதான். ஆனால், குற்றவுணர்ச்சியால் வெந்து புழுங்குவது அவனுக்கொரு போதையைத் தந்திருக்க வேண்டும். அது அவனுக்கே தெரியாமல் போனதே பரிதாபம். தெரிந்திருந்தால், ஒரு கையால் சாராயக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டே இன்னொரு கையில் சிலம்பம் சுற்ற முயற்சி செய்யும் முட்டாள்தனத்தை அவன் செய்திருக்கமாட்டான்.

சுற்றி வளைப்பானேன்?
ஒரு பொது இடத்தில், அறிமுகமே இல்லாத ஓர் அழகிய பெண்ணுடன் தானே சென்று பேசிட வேண்டும் என்பதே அவனது விருப்பம். முடிந்தால் அவளது செல்போன் நம்பரையும் வாங்கிவிடவேண்டும்.

இப்பேர்ப்பட்ட இலட்சியம் கொண்ட அவனின் பொர்ட்ஃபோலியோ அவ்வளவு இரசிக்கும்படி இருக்காது. பெண்கள் கூட்டம் அருகாமையில் இருந்தாலே நடைமாறிப் போய்விடும் அவனுக்கு. எப்போதாவது கல்லூரிப் பேருந்திலிருந்து முன்பக்கப் படிக்கட்டின் வழியாக இறங்கிவேண்டி வந்துவிடின், அவன் இறங்கும்போது செய்த அத்தனை செயல்களையும், நான்கைந்து முறையாவது மனதிற்குள் ஓட்டிப்பார்த்து, 'எதுவும் நகைப்புக்குரிய செயல் இல்லை' என்ற எண்ணம்/திரிபு தோன்றியபின்னரே, கடைசிப்படிக்கட்டில் கால்வைப்பான். தொலைபேசியில் வெண்ணிற இரவுகளைப் பற்றிப் பேசக்கூடிய தைரியசாலிதான் அவன். ஆனால், நேரில் பார்த்தால் ஐயா மெளனி. ஓர் இளம்பெண்ணின் அருகாமையில் இயல்பாக இருமக்கூடத் தைரியம் கைக்கொள்ளாத பேராண்மை கொண்டவன். நமக்கெல்லாம் நாடாப்புழுக்களும் கொக்கிப்புழுக்களும் மண்டிக்கிடக்க, அவனது வயிற்றில் மட்டும் பட்டாம்பூச்சிகள் பறக்கும் - ஒரு பெண்ணின் பெயரை அவன் பார்த்தானெனில்.

ஒருநாள் பிற்பகல். கரட்டடிபாளையம் கல்லூரிப் பிரிவுக்கும் பங்களாபுதூருக்கும் இடையே நீண்டு கிடந்த, கோடிச் சக்கரங்கள் நசுக்கிய தார்சாலை மழைத்தூரலின் காரணமாக வண்டிச்சக்கரத்தின் மை போலக் கருமையாயிருந்தது. அரசின் கவனக்குறைவால், மேடு பள்ளங்களின்றிக் கச்சிதமாயிருந்தது சாலை. அதன் மையத்தில் நீண்ட வெள்ளைநிறக் கோட்டுத்துண்டுகளும் அவற்றிற்கு அழகுசேர்க்கும் விதமாக  சாலையோரங்களில் இருந்த இரண்டு மார்ஜின் கோடுகளும் ஒரு பரவசத்தைக் கொடுத்தன. மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால், காற்றிலோர் குளுமை மிதந்தது. தொலைதூர மலையடிவாரம் வரை நீண்ட வயல்கள் சாலையின் இருமருங்கிலும். நன்றாகப் பாடக்கூடிய ஹெட்போன்ஸ் அவனது காதுகளில் நுழைந்திருந்தது. 'அடடா, நாம் வேறு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோமே! இந்த நேரம் நம்மை யாராவது பார்க்கமாட்டார்களா?' என்று ஏங்கியபடியே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தான். இப்போது, எங்கிருந்தோ வந்த ஓடை ஒன்று ரோட்டுக்கும் வயல்வெளிக்கும் இடையே பாதிவரிசையில் நுழைந்துகொண்டது. இரண்டொரு நாள்களுக்கு முன்னே பெய்திருந்த பெருமழையின் காரணமாக ஓடை நீர், பால் குறைவான தேனீரைப் போலக் காட்சிமயக்கம் தந்தது. குறுங்கோண வளைவுகளில் வேகமாய் வண்டியைச் சாய்த்தவன் திருப்பியபோதெல்லாம், அவனது காதுகளில் சிறைப்பட்டிருந்த பாடல்வரிகள், அவனது உதடுகளிலும் தம் காலனியை விரிவுபடுத்தின. எதிர்க்காற்று அவனது நெற்றியில் விழுந்த மயிர்க்கற்றையை புரட்டிப்போட்டதை, பக்கக் கண்ணாடியில் பார்த்து இரசித்துக்கொண்டே வந்துகொண்டிருந்தான்.

கல்லூரிப்பிரிவை நெருங்கிய சமயம். ஓடையின் ஓரமாக ஒரு ஸ்கூட்டி நின்றிருந்தது. அவன் கேட்டுக்கொண்டிருந்த இசை இன்னும் கொஞ்சம் இனிமையானது. ஸ்கூட்டியின் அருகிலேயே, சிவப்பு வண்ண டாப்ஸும், வெளிர் நீல நிற ஜீன்ஸும் அணிந்த யுவதி ஒருத்தி செல்போன் கேமராவில் 'angle' பார்த்துக்கொண்டிருந்தாள் . அவளுக்கு அருகே இருக்கப்போகும் ஆணை அவனுக்கு நன்றாகத் தெரியும். நிறைய முறை பார்த்திருக்கிறான் - கொடிவேரி அணையில், மருதமலை படிக்கட்டுக்களில், மாநகரச் சாலைகளில், சினிமா தியேட்டர்களில். முகம் வேறுபடலாம். ஆனால், அவன் பார்த்திருக்கிறான். அந்த ஆண் யாராயிருந்தாலும் அவரது முகத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. ஆனால், தன்னையும் அந்த நபரையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நோக்கில் சிவப்பு டாப்ஸ் பெண்ணிடமிருந்து கண்ணை விலக்கினான். அவளைவிட்டுச் சற்றே விலகி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தவள்... ஆம், அந்த இன்னொரு நபரும் இன்னொரு சமவயதுப் பெண்.

அந்த இன்னொருத்தி, மயில்தோகையின் வண்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். ஓடையின் குறுக்கே இருந்த பாலத்தின் மீது நின்று உசேன் போல்ட்டின் சிக்னேச்சர் போஸ் தரும் முயற்சியில் இருந்தாள். அவனது இடதுகால் அனிச்சையாகவே இரண்டு கியர் குறைத்தது. அவர்களிருவரையும் நிறைய வழிப்போக்கர்கள் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றிருக்கவேண்டும். அவனுடைய வண்டி உச்சஸ்தாயிலிருந்து முனகலுக்கு வந்தபோதும் கூட, அவர்கள் அவனது இருப்பைக் கண்டுகொள்ளவில்லை. காரியத்தில் கண்ணாகவும் கேமராவாகவும் இருந்தனர்.
'நிற்கலாமா' என்று யோசித்தான். அவனது தயக்கம் அவனைத் தடுத்த ஒவ்வொரு மீச்சிறு நொடியும், அவனது வண்டி அவர்களைவிட்டு விலகிச்சென்றது. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று அவர்களிடம் பேசலாமா என்ற ஓர் எண்ணம் அவனுள் தோன்றியது அவனுக்கே தெரியும் முன்னர், 'அத்தகைய செய்கை ஆபத்தையோ அவமானத்தையோ வாங்கித்தரும்' என்ற அவனது பகுத்தறிவு மூளை இதயத் தசைகளுக்கு ஒரு தந்தி அடித்து, வேகமாக இயங்கச் சொன்னது. தன்னுடைய கால்விரல்களில் நறுக்கப்படாமல் துறுத்திக்கொண்டிருக்கும் நகங்கள் அவர்களுடைய பார்வையில் படுமோ என்று அஞ்சினான். சட்டைக்காலரில் மட்டும் சாயம் வெளுத்திருந்தது தன்னை அறிவிலியாகக் காட்டுமோ என்று கவலைகொண்டான். இது தேவைதானா என்று வியாக்கியானம் செய்தான். அவர்களிடமிருந்து அவன் எதிர்பார்த்ததுதான் என்ன? அவனுக்கே அது சரியாய்த் தெரியவில்லை. இருந்தபோதிலும், அவனது மனம் அலைக்கழிக்கப்பட்டது. ஓரிரு வினாடி யோசனையில் அவன் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வழிப்போக்கனாகக்கூட இல்லாமல் போனான். அவனுடைய வண்டியின் சத்தம் அவர்களுடைய கவன அடுக்கில் அரூபமாய்க் கேட்டதும், அங்கிருந்த ஆக்சிஜனை அவர்கள் மூவருமே சுவாசித்ததும் மட்டுமே அவனுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பாகிப் போனது. வழக்கம்போல குற்றவுணர்வும் சுயபச்சாதாபமும் தோன்றினாலும், 'அவர்களிடம் எப்படிப் போய்ப் பேசுவது' என்ற மலைப்பு விலகி ஓர் விடுதலையுணர்வு பிறந்திருந்தது. 'சரி, இந்தப் பரந்து விரிந்த இருபத்தியொன்பது சதவீத நிலப்பகுதியில் வேறு பெண்களா இல்லை' என்று நூற்றி எழுபதாவது முறையாக நினைத்துக்கொண்டான்.




'திரும்பிச்செல்வது முட்டாள்தனமாகும்' என்ற அளவு தூரம் சென்றபின்னர்   அவனது உடலில் ஏதோ இரசவாதம் நிகழ்ந்தது. அப்போது ஹெட்ஃபோனில் அவன் கேட்ட பாடலோ, சிவப்பு டாப்ஸ் பெண்ணின் குதிரைவால் சடையோ, வழியில் பார்த்த கெளதம் வாசுதேவ் மேனன் படத்தின் போஸ்டரில் இருந்த காப்பு அணிந்த கதாநாயகனோ, கடவுளோ, விதியோ, அவனுடைய Free Will-ஓ - எதுவோ ஒன்று அவனது வண்டியை நூற்றெண்பது பாகைகள் திருப்பியது. துப்பட்டாவா, கலாபமா என்று தோற்றமயக்கம் ஏற்படுத்திய பெண் இருந்த திக்கில் சென்றான். கச்சேரி மேடு, கள்ளிப்பட்டிப் பிரிவு, நல்லகவுண்டன்பாளையம் ஆகிய இடங்களில் தான் முந்திச்சென்ற வாகனங்களை இப்போது நேரெதிரில் சந்தித்துக் கடந்து போனது அவனது வண்டி. கல்லூரிப்பிரிவை அடைந்தபோது மறுபடியும் ஒரு தந்தி. தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை அவனுடைய மூளைக்கு வாசித்துக்காட்டினான். அல்லது, மாட்டுச் சந்தையில் தன்னுடைய கையின் மேலே போடப்பட்டிருந்த தோள்துண்டின் கீழே, தன்னுடைய ஒருவிரலை மட்டும் பிடிகொடுத்தான் என்றுகூடச் சொல்லலாம். மந்திரம் போட்டதுபோல இதயம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது. அந்தச் சமாதானம் என்னவாயிருக்கும்?

கல்லூரிப் பிரிவிலிருந்து பங்களாப்புதூர் சாலையில் திரும்பியது வண்டி. ஓடையை நெருங்கியது. அவர்கள் அங்கே இருப்பார்களா, இல்லையா என்ற சிந்தனைகளுக்குள் அவன் போக விரும்பவில்லை. ஒருவேளை இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒருமுறை  வண்டியில் பயணித்தவாறே சற்றே எழுந்து அமர்ந்தான். தலையைத் தாழ்த்திக் கொண்டு ஆக்ஸிலேட்டரின் காதினைத் திருகினான். அதுவரை ஊர்வன இனத்திலிருந்த அவனது வண்டி, இப்போது பறப்பன இனத்திற்கு மதம் மாறியது. ஒரே பயணத்தில் நான்கு திசைகளிலும் செல்லவேண்டியிருந்தது & முப்பது மற்றும் எண்பதுகளில் செல்லவேண்டியிருந்தது - அவனது வண்டிக்கு மட்டும் பிரக்ஞை இருந்திருந்தால், நிச்சயம் குழம்பியிருக்கும். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இரு பிள்ளைகள் அவனுக்கு 'டாட்டா' காட்டினார்கள். இரண்டு கைகளையும் வண்டியிலிருந்து எடுத்து, அவர்களுக்குக் கையசைத்தவாறே தொடர்ந்து பறந்தான்.

அவர்களைப் பார்த்த இடத்தை அடைந்தான். முன்பு பார்த்தபோது இல்லாத செம்மஞ்சள் வெயில் இப்போது இருந்தது. அதுவா முக்கியம்? இரண்டு மயில்களும் அங்கேயே இருந்தன. ஸ்கூட்டியின் மீது ஒரு ரேடியோ இருந்தது இப்போது. இல்லையில்லை. ப்ளூடூத் ஸ்பீக்கராக இருக்கவேண்டும். 'அலைபாயுதே கண்ணா' பாடிக்கொண்டிருந்தது. அந்த ஸ்பீக்கரிலிருந்து மின்னும் மகரந்தத் தூள்கள் வெளிப்பட்டுக் காற்றெங்கும் பரவி அந்தப் பகுதியையே சுகந்தமாக்கியதாகத் தோன்றியது. இரண்டு பெண்களும் தத்தம் கால்களை ஓடைநீரில் தொங்கபோட்டபடி அமர்ந்து காரப்பொறி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சிவப்பு டாப்ஸ் கலாபத்திடம் முகத்தை அஷ்டகோணலாக்கிக் காட்டினாள். அவளது உள்ளங்காலும் மேல்பாதமும் சேர்ந்த இடம் எதுவென்று குழம்பிய மீன்கள், குத்துமதிப்பாக அவளது பாதத்தைக் கொறித்திருக்க வேண்டும்.

ஹெட்போனைக் கழற்றினான். வண்டியை நிறுத்தினான். ஆனால், ஸ்பீக்கரின் ஒலி அளவு அதிகமாக இருந்ததால், அந்தச் சப்த மாற்றம் அவர்களுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை. சாலையோரப் பக்கம் இருந்த கரையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள் ஆகையால், அவனது வருகையை அவர்கள் பார்த்திருக்க முடியாது. வண்டியை ஸ்டேண்ட் போட்டான். ஆனாலும் இறங்கிச் செல்லாமல் காத்திருந்தான். அவர்கள் திரும்பிப்பார்த்தால் தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ என்ற பயம் எல்லாம் இல்லாமலில்லை. இருப்பினும் காத்திருந்தான்.

இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்கும். சிவப்பு எழுந்து வந்தாள். அவளையே பார்த்தான். வயலின் இசை ஏதும் கேட்கவில்லை. ஸ்லோ-மோ ஏதுமின்றி பெளதிக விதிகள் அனுமதித்த வேகத்திலேயே நடந்து வந்தாள். ஆனாலும் அந்நடை ஒரு வயலின் இசையைக் காட்டிலும் இன்பமயமாய்த் தெரிந்தது. நிலையாற்றல், அசைவாற்றல் - இரண்டும் தெரிந்துகொண்டான். தன் வசீகரம் ஒருவனைப் பாடாய்ப்படுத்துவதை இலட்சியம் செய்யாதவளாய்க் காணப்பட்டாள். "இது தகுமோ? இது முறையோ? இது தருமந்தானோ?" என்று முறையிட்டாள் ஸ்பீக்கர் தலைவி. அவ்வரிகள், தனக்கும் பொருந்திப்போவதை உணர்ந்து இரசித்தான். நேராக ஸ்கூட்டியை நோக்கி நடந்தவள், ஒரே ஒரு வினாடி மட்டும் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வை இன்னுமொரு இரண்டு வினாடிகள் நீண்டிருந்தாலோ, அவளது நடைவேகம் மட்டுப்பட்டிருந்தாலோ, அவன் பதட்டப்பட்டிருப்பான். ஆனால், அந்த ஒரு வினாடி ஏவுகணைக்குப் பதிலாக, ஒரு புன்னகையை அளித்தான். உள்ளர்த்தம், வன்மம், உடல் இச்சை, காதல், காமம், அசடு, ஜொள்ளு ஏதுமில்லாத, ஒரு டெட்டால் புன்னகை. அந்தப்புன்னகையை அவள் சமாளித்த பாங்கு, சாலையில் திடுமென வாகனத்தின் குறுக்கே ஓடிவரும் ஒரு குழந்தையை இமைக்கும் நேரத்தில் தவிர்க்கும் இலாவகத்துக்கு ஈடானது. அவளது புருவங்கள் சுருங்கவில்லை, திரும்பிப்பார்க்கவில்லை. 'யார்ரா இவன்?' என்று முகபாவம் செய்யவில்லை. அவள் வேறு எதுவுமே செய்யவில்லை. தனக்குக் கிடைத்த புன்னகைக்கு இன்னொரு புன்னகை மூலம் 'பதில் பொங்கல் வாழ்த்து அட்டை' அனுப்பினாள். அடுத்த நுண்வினாடி, அவளது பார்வை ஸ்பீக்கரின் மீது இருந்தது. அதன் அருகே சென்று அதை எடுத்துக்கொண்டாள். நிமிர்ந்து மீண்டுமொரு புன்னகை. அவளது குறுங்கூந்தல் கன்னத்தை வேகமாக மோதுமாறு திரும்பினாள். ஓடையை நோக்கி நடந்தாள். அதைப் பின்னாலிருந்து பார்க்கும் மனோபலம் அவனுக்கு இல்லாததால், வேறுபுறம் திரும்பிக்கொண்டான். ஹெட்போனை மாட்டினான். 'அலைபாயுதே கண்ணா'-வை ஒலிக்கவிட்டான். வண்டியை ஸ்டார்ட் செய்தான். மீண்டும் முப்பதில் பயணப்பட்டது அவனது வண்டி.

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?