உலக இலக்கியம்

வால் ஸ்ட்ரீட்களோ, கேசினோக்களோ கவலைப்படாத ஓர் இந்தியக் கிராமம். அவ்வப்போது 'தலைக்கு இத்தனை' என்று மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கவும், தீபாவளி, பொங்கல்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதற்கும் மட்டுமே பயன்படும் கோடானுகோடி மாண்புமிகு இந்திய ஜனநாயகக் குடிமக்களில் ஐநூற்று சொச்சம் பேர் அந்த ஊரிலும் இருந்தார்கள்.  ஆங்காங்கே சுற்றிய மின்மினிப்பூச்சிகள், ஆயுளின் அந்திம காலத்தில் இருந்த நட்சத்திரங்கள், அவற்றைப் பிரதிபலித்த தெருநாய்களின் கண்கள், தெருவிளக்குகள், மாரியம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் முன்னிரவு ஏற்றப்பட்டு, நெய் தீர்ந்துபோய் அணைந்துபோயிருந்த அகல்விளக்கின் திரிநுனியில் மீதமிருந்த கங்கு, கண்டிப்பு நிறைந்த பெண் அணியும் புடவையின் கையறுநிலை அனுமதிக்கும் அளவுக்கு மட்டும் கிழக்கு ஆகாயத்தின் ஒரு மூலை  - இவற்றிலிருந்து மட்டுமே வெளிச்சம் வந்துகொண்டிருந்தது அந்த ஊருக்கு. சூரியன் இன்னும் உதிக்கவில்லை.

அந்த அம்மாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். இரவு வீட்டுக்குத் திரும்பியாகவேண்டிய கட்டாயம் இல்லாத கணவனையும், வெளியூரில் தங்கிப்படிக்கும் மகனையும் பெற்ற ஓர் இந்தியப் பெண். "உனது கண்ணின் நீர் துடைத்தால், ஊர்க்குழாயில் நீர் வருமா?" என்று புகழேந்தியைப் போலச் சொல்லிவிட்டுப் போய், அரசு கஜானாவை விடிய விடிய நிரப்புவார் அவரது மணாளர். தொண்ணூறு விழுக்காடு நரைத்திருந்த தலைமுடி, எங்கோ இருக்கும் தங்கத் தொங்கட்டானின் விடுதலை வரை பிணயக்கைதியாக இருக்கப்போகும் வேப்பங்குச்சிகள் உறைந்த காதின் மென்சதைகள், ஓய்வுக்காலம் வந்தும் உழைத்துக்கொண்டிருந்த உடைகள், உழைப்பதை நிறுத்திவிட்டிருந்த வலதுகால் செருப்பு, எதற்கென்றே தெரியாமல் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அணிந்துவந்திருந்த மெட்டி, அந்த மெட்டியின் எல்லை தாண்டிய தீவிரவாதம் அன்றாடமாகிப் போயிருந்த கால்விரலிடுக்குச் சேற்றுப்புண்கள் - ஆகியவை அவரின் அடையாளங்கள். பாரதமாதாவுக்கு நேரெதிர் பிம்பம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தார். நிதானமான நடையைக் கோரிய குறுகலான வரப்பில் நடந்தபோதும்கூட அவரது நடையில் ஒரு துரிதம் இருந்தது. அவரை இட்டுச்சென்ற வரப்பு முடிந்த இடத்தில் ஐந்தரை அடி உயரத்தில் ஒரு மணல்மேட்டுத் தொடர்ச்சி இருந்தது. அதனை அடுத்து ஒரு ஐநூறு சதுரமீட்டருக்கு விரிந்துகிடந்தது ஒரு முட்காடு. பச்சையாகவும், பட்டுப்போயும் வேலிமரங்கள், அவை காலங்காலமாக உதிர்த்து வந்திருந்த முட்கள், நாய்கள், பூனைகள், எலிகள், பெருச்சாளிகள், கீரிகள், பாம்புகள், சாணிவண்டுகள், குல்லாப்பூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றின் கழிவுகள் - சடலங்கள் - யாக்கைகள், காலி மதுபுட்டிகள், உபயோகித்து எறியப்பட்ட ஆணுறைகள். இதுதான் அந்தக் காட்டின் சென்சஸ் ரிப்போர்ட். ஈரோட்டு வழக்கில் சொல்வதானால், simply அது ஒரு சுண்டக்காடு. அம்மா மணல்மேட்டை நெருங்கினார். அதன்மேல் வேரூன்றியிருந்த குறுமரம் ஒன்றின் தண்டினைப் பற்றி அதன்மேலே ஏற எத்தனித்தார். வாழ்க்கைக்கு நல்லது என்று நான்கு கோடியும் தெரிந்த பெரியவர்களால் போதிக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ, வலதுகாலை முன்னெடுத்து வைத்தார். கீழே ஊன்றியிருந்த இடதுகாலைத் தூக்கியபோது, அதிலிருந்த ஆரோக்கியமான செருப்பு ஒரு நிலந்தொடா வேரில் கொக்கிபோல் மாட்டியதாலும், தொடர்ந்து இழுக்கப்பட்டதாலும் அறுந்து விழுந்தது. சேஃப்டி பின் ஏதும் கோக்கப்படாமல், உபயோகமற்றதாய்ப் போனது, அவர் கழுத்தில் மாட்டுச்சாண நிறத்திலிருந்த சரடு ஒன்று. அறுந்த செருப்பையே அணிந்து நடந்து பார்த்தார். அவருக்கு அதிலே First foot அனுபவம் இருந்தது. ஆனால் இரண்டு காலிலும் அறுந்த செருப்பை அணிந்து நடப்பதற்கு, வெறுங்காலில் நடப்பதைவிடப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. அதுவுமில்லாமல், 'ஒரு செருப்பை மட்டும் அணிந்து நடக்க வேண்டாம்' என்பதற்காக மட்டுமே வலதுசெருப்பை அதுவரை அவர் அணிந்து வந்திருந்தார். கண்பார்வையும், கண்களும் கிடைக்க வழியில்லாதவர்களுக்கு, தோற்றத்துக்காகப் பொருத்தப்படுவதாக அந்த ஊர் மக்களால் நம்பப்பட்ட வெள்ளாட்டுக் கண்கள் போலத்தான் அந்தச் செருப்பு. இந்திரப் பிரஸ்தத்தின் அரசவை போல என்றுகூடச் சொல்லலாம். எனவே இரண்டு செருப்புகளும் அவரைக் கைவிட்டன.

அம்மா செய்வதறியாது திகைத்துப்போனார். கீழ்முதுகில் ஓர் இன்பப்பாரம் அழுத்தியது. தான் மேட்டின் மேலே நிற்பதை யாரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். இன்னமும் அவ்வளவு வெளிச்சம் வந்திருக்கவில்லை. ஒரே ஆறுதல்! திரும்பி முட்காட்டைப் பார்த்தார். கூசிய கால்களை இடைவெளி என்று நம்பிய இடங்களில் வைத்தார். இடதுகாலை ஊன்றி வலதுகாலைத் தூக்கி சிதம்பர நடராஜர் போல நின்று அடுத்த இடைவெளியைத் தேடினார். அவரது காலின் விரல்கள் மட்டுமே நிலத்தைத் தொட்டுக்கொண்டிருந்தன. குதிகால் அந்தரத்தில் இருந்தது. அடுத்த இடைவெளி கிடைக்கத் தாமதமானதால், உடல் எடையைத் தாங்கிய கால்விரல்கள் வலிகொண்டன. எனவே, அனிச்சையாகவே குதிகால் கீழே இறங்கியது. ஏற்கனவே பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த குதிகாலின் ஒரு பிளவுக்குள் கச்சிதமாய் நுழைந்தது அணுவின் அளவு கூர்மையும் சுள்ளாணியின் தடிமனும் கொண்ட வேலிமுள்ளொன்று. குதிகால் பாதியளவு கீழே வந்தவுடன் நின்றது. தொடர்ந்து கீழே இறங்கச்சொல்லியது விரல்களின் வலி. குதிகாலின் வலி ஏதும் சொல்லும் முன்னரே தூக்கியிருந்த வலது கால் வேகமாய்த் தரையிறங்கியது. வலது பாதம் மட்டுமல்லாது வலது முட்டியும் 'நங்கென்று' தரைமோதியது. அதைத்தொடர்ந்து இரண்டு உள்ளங்கைகள், பின்னிடுப்பு ஆகியவையும் தரையோடு படர்ந்தன. எத்தனை முட்கள் குத்தின, எத்தனை குத்தி ஏறி உடைந்து நின்றன என்று அவரால் அறியமுடியவில்லை. தாயை இழிவுபடுத்தும் கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி யாரையோ எதையோ திட்டினார். கூடவே அழவும் செய்தார், சத்தமாகவே. எங்கோ சுற்றிய நாயொன்று அதைக்கேட்டுக் குரைத்தது. அடுத்தடுத்த நாய்களின் குரைப்புகளும் கேட்டன. ஆனால், அழுவதற்கெல்லாம் அவகாசம் தரவில்லை இயற்கையின் அழைப்பு. உள்ளங்கைகளிலிருந்த முட்களைக் களைந்தார். உடலிலிருந்த அத்தனை முட்களையும் களையமுடியவில்லை. சிலவற்றைப் பிடுங்க வேண்டியிருந்தது. மெள்ள நகர்ந்து, தவழ்ந்து, ஊர்ந்து மீண்டும் மணல்மேட்டை அடைந்தார். என்னதான் செய்வது என்ற மனபாரத்தோடு எழுந்தார். இப்போது கொஞ்சம் வெளிச்சம் கூடியிருந்தது. எனவே அதிக நேரம் அவர் அங்கே நிற்க முடியாது. கீழே இறங்கினார். மேட்டை ஒட்டியபடியே இருந்தது அவர்களுடைய பங்குதான். 'அங்கே நின்றுகொண்டால்கூட, ஏதேனும் தோட்டவேலை என்று நினைத்துக்கொள்வார்கள்' என்று சிந்தித்து இறங்கினார். தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கம்பு விதைக்கப்பட்டிருந்தது. கம்பைப் பற்றிய எண்ணம் அவருக்கு நேரங்கெட்ட நேரத்தில் பழைய எண்ணங்களைத் தூண்டியது. எட்டு வயதுச் சிறுமியாக இருந்தபோது, தன் பிறந்தகத்தின் வாசலில், நிலவு காய்ந்த இரவுகளில், தன் அப்பாரு உருட்டித்தந்த கம்மஞ்சோற்றுக் கவளங்களின் பிஞ்சுக்கை பொறுக்குமளவு மெஞ்சூடு நினைவு வந்து கண்ணீர் சுரந்தது, இம்முறை மெளனமாக. தோட்டத்தின் உழவுமண் இன்னமும் இறுகிப்போகாமல் இருந்தது. எனவே அவரது பாதங்கள் சற்றே புதைந்து, முட்காயத்துக்கு இதமாக இருந்தது. வானத்தில் ஏகமாக வட்டமிடும் பருந்து சீரான நேர இடைவெளிகளில் வந்து நமது வீட்டுக் கோழிகளைக் கலவரப்படுத்துவது போல, உச்சத்தை அடைந்து, கட்டுப்படுத்தப்பட்டு, அடங்கிப்போய் மறுபடியும் மறுபடியும் உச்சத்தை அடைந்து அவஸ்தைக்குள்ளாக்கியது, வயிற்று வலி. விடிந்துவிட்டால் ஜனநடமாட்டம் தொடங்கிவிடும். மணல்மேட்டைக் கடக்கத் தேவையான ஆறு வினாடிகள் ஊரடங்கும் வரை கிடைக்காது. அதுவரையிலும் இந்த அடிவயிற்றுச் சிலுவையை சுமப்பதென்பதே நிகழாத காரியம். விடிந்ததிலிருந்து செய்ய வேண்டிய வேலைகளையும் நினைத்துப்பார்க்கவே அயர்ச்சியாக இருந்தது அவருக்கு. 'இந்த ஒருநாள் மட்டும் கடந்துவிட்டால் போதும். வாழ்வில் என்ன சூழ்நிலை வந்தாலும் சமாளித்துவிடலாம்' என்று தோன்றியது அம்மாவின் மனதில். ஆனால் அந்த ஒருநாள் அந்தமின்றிப் போய்க்கொண்டே இருப்பது போலவும் தோன்றியது. அந்த நேரத்தில் சென்று யாரிடமாவது 'வெளிக்குப் போக' செருப்பு இரவல் கேட்பதைப்போன்ற அவமானம் ஒன்று இருக்கமுடியாது. அப்படியே, சென்று வாங்கி வந்தாலும், 'பச்சுப்பச்சுனு' விடிவதற்குள் திரும்பி வருவது கஷ்டம். 'ஊட்டுக்குப் போயி...' என்று யோசித்தாலும், நாக்கின்மீது சீழ் ஒழுகியது போல, அருவருப்பால் உடல் கூசியது. சாங்கீதங்களால் கட்டப்பட்ட ஒரு பாமரப் பெண்ணின் மனது போலப் பரிதாபகரமான பறவை, தீங்கிழைக்கப்பட்ட படைப்பு வேறொன்றில்லை.

நேரம் செல்லச்செல்ல யோசிப்பதுகூட இயலாத காரியம் ஆனது அவருக்கு. முட்டியை மடக்கிக் கீழே அமர்ந்தார். தன்னுடைய பூமியிலேயே கைதி போலுணர்ந்தார். அவரது பனித்த கண்களில் துயரமும் வலியும் ஊறின. அதுவரை மனதில் வைத்துப் புழுங்கிய பல்வேறு கோபங்கள் வடிகால் கிடைக்காமல் அலைமோதி, கரையுடைத்தன. அவரது கண்ணில் இப்போது நிம்மதியும் குரூரமும் கண்ணீரும் தெறித்தன. நடுங்கும் கைகள் கொண்டு உழவுமண்ணைத் தோண்டத் தொடங்கினார் அம்மா. அதே நேரம். அந்த ஊர்ப்பள்ளி தயாராகிக் கொண்டிருந்தது, சுதந்திர தின பவழ விழாக் கொண்டாட்டங்களுக்கு. ஜெய்ஹிந்த்!

Comments

  1. Your writing is so versatile. What a content and what a narrative"!!!!!! அந்த அம்மா காலுல முள்ளு குத்துனது எனக்கே குத்துன மாதிரி இருக்கு. ப்பா... Your narrative and choice of words absorbs the readers' senses. Readers will travel along and not stay aloof. Great writing. Keep going.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?