நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?

இப்போது தீர்ப்பு வந்துள்ள ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை எடுத்துக்கொள்வோம். 

அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இதை வாட்ஸேப் ஸ்டேட்டஸில் பதிவிடும் பலரும் "நீதி வென்றது" என்று பதிவிட்டு வருகிறார்கள். 

முதலில் எதிலெல்லாம் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.‌

அவ்வாறு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும்‌ போது அது பாராட்டப்பட‌ வேண்டும். 

அதிலே இரண்டாம்‌ கருத்தே இல்லை. 

இப்போது தண்டனை என்பதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம். 

பள்ளிக்குள்ளே குப்பை போட்டால் பத்து ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்வோம். அதன் நோக்கம் பத்து ரூபாயை இழப்பதற்கு அஞ்சி யாரும் குப்பை போடக்கூடாது என்பதேயொழிய, அந்தப் பணத்தை கூலியாட்களுக்குக் கொடுத்து குப்பையை அள்ளிப் போடலாம்‌ என்பதல்ல.

இந்த உதாரணத்தில் பிரச்சினை குப்பை இல்லை. குப்பை போட வேண்டும்‌ என்று ஒருவர் மனதில் தோன்றும்‌ எண்ணமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. தொடர்ந்து நூறு வருடங்களுக்கு அந்தப் பள்ளியில் தினந்தோறும் பத்து பத்து ரூபாயாக அபராதம் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்தப் பள்ளியில் நீதி நிலைநாட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று பொருளாகுமா?

எதற்காக சட்டம்‌ போடப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவே இல்லை என்றால், நீதி வென்றதாக அர்த்தமா இல்லை தோற்றதென்று அர்த்தமா? 

அதே பள்ளியில் ஒருவர் யாருக்கும் தெரியாமல் குப்பை போட்டுவிடுகிறார். அவர் யாரென்று தேடிக் கண்டுபிடித்து பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நீதியை நிலைநாட்டுவதில் இது பாதிக் கிணறுதான். முதல்வன் படத்தின் இறுதிக் காட்சியில் வருவது போல் புகார்ப் பெட்டியில் விழுவது பூக்கள் மட்டுமே என்ற நிலை வரும் வரை நீதித்துறை முக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்றே பொருள்.‌

ஆனால் இந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பை நாம் கொண்டாடுவதற்கு ஒரு மிக முக்கியமான‌ காரணம் உள்ளது.‌

உண்மையில் நான் சொன்ன பள்ளியில்-குப்பை-போடும் உதாரணத்தை அப்படியே நமது இந்திய தண்டனைச் சட்டத்துடன்‌ ஒப்பிட முடியாது. 

இப்படி யோசிப்போம். 

அதே பள்ளி.‌ அதே சட்டம். ஆனால், குப்பை போடும் ஒருவர் அபராதம்‌ கட்டாமலேயே தப்பிப்பது என்பது எளிதானது என்றொரு சூழல் நிலவுகிறது. (ஒரு குறிப்பிட்ட வகையினருக்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலோ)

இப்படியொரு சூழலில் அபராதமே ஏதும் கட்டப்படுவதில்லை. ஆனால் தினமும் குப்பை மட்டும் போடப்படுகிறது. ஒருநாள் திடீரென்று, குப்பை போட்ட ஒருவரை பள்ளி நிர்வாகம் கண்டு பிடிக்கிறது. அதாவது, தங்களுடைய‌ புத்திக் கூர்மையைக் கொண்டு அன்றாடம்‌ செய்ய வேண்டிய ஒரு செயலை - அத்திப்‌ பூத்தாற் போல ஏதோ ஒருநாள்‌ செய்கிறது.‌ உடனே அது ஒரு சாதனையாகிவிடுறது. நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

தினந்தோறும் குடித்துவிட்டு வீதியில் விழுந்து கிடக்கும் கணவன் - ஒருநாள் குடித்துவிட்டு வெற்றிகரமாக வீட்டுக்கு வந்துவிட்டால், பூரிப்படையும் மனைவியைப் போலத்தான் நாமும். 

இதுவே-போதும்-இதுவே-நீதி-நிலைநாட்டல் என்று சொல்லும் அளவுக்கு நம்மை இதற்கும் மோசமானதற்கு பழக்கி வைத்திருக்கும் ஒரு குடிகாரக் கணவனே நமது நீதித் துறை. 

1862 முதல் நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தால், 164 வருடங்களாகியும் ஒரு குற்றம் நடப்பதை முழுமையாகத் தடுக்க முடியவில்லையென்றால் என்ன பொருள்?

குற்றங்களைத் தடுப்பது நீதித்துறை மட்டும் செய்ய வேண்டிய வேலையில்லை. அதனை பின்னால் விரிவாகப்‌ பார்ப்போம்.

சரி. இந்த ஒன்பது காவலர்களும்‌ செய்த குற்றம் என்ன? இரண்டு பேரை சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.‌ அதனால் பாதிக்கப்பட்டது அந்த இரண்டு பேர் மட்டுமல்ல. அந்த இரண்டு பேரின் குடும்பத்தாரும், நண்பர்களுக்கும் அது பேரிழப்பு. சரி, அதற்கு நம் நாட்டின் சட்டம் கொணரும் நீதி என்ன?

"கொலைகாரர்களைக் கொன்றுவிடுவோம். நீதிக் கொடியை விண்ணில் பறக்கவிடுவோம்."

அந்தக் கொலைகாரக் காவலர்களுக்கு குடும்பம்‌ இருக்காதா? அவர்களுக்குக் குழந்தைகள் இருக்க மாட்டார்களா? அந்தக் குழந்தைகள் இந்நேரம் விளையாடிக் கொண்டிருக்க மாட்டார்களா?அந்தக் காவலர்கள் எந்தக் குற்றமும் அறியாத குழந்தைகளாக இருந்தபோது அவர்களுக்கு நடைபழக்கிய பெற்றோர்கள் இருக்க மாட்டார்களா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? தமக்குப் பிரியமானவர்களை நிரந்தரமாகப் பிரிய வேண்டும் என்று அவர்களுக்கும் சேர்த்து ஏன் தண்டனை?

மரணதண்டனை விதிக்கப்பட்ட காவலர்களுக்கு இலட்சக் கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அபராதத்தால் பெரிதும் பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்?

நீங்கள் இப்படிக் கூறலாம். அந்தக் காவலர்களை சட்டத்தை-மதிக்கும்-மனிதர்களாக வளர்த்தாத குற்றத்திற்காக அவர்களுடைய‌ பெற்றோர்களும்‌ தண்டனைக்குரியவர்களே என்று சொல்வீர்கள்‌ என்றால், அந்தக் காவலர்களுக்கு என்ன விதமான‌ கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததா இல்லையா? 

அவர்களுக்கு இருந்த கொலைவெறியை ஆரம்பித்திலேயே கண்டுபிடித்து, அவர்களை நல்வழிப்படுத்தத் தவறிய அதே கல்வித்துறை நாளை என்ன செய்யும்? அவர்களுடைய‌ பிள்ளைகளையும்‌ அதே மாதிரி வளர்த்தெடுத்து வெளியே அனுப்பும். அவர்கள்‌ கொலை செய்து மரண தண்டனை பெற்றால் சட்டங்கள் சரியில்லையென்று நீதித்துறையைக் கை காட்டும்.‌ 

ஹிட்லர் எதனால் யூதர்களைக் கொன்று குவித்தார் என்று கல்வித்துறையில் இருப்பவர்களுக்குத் தெரியுமா தெரியாதா? ஒரு குற்றம் இதனால் நடந்திருக்கிறது என்று வரலாறு கோடிட்டுக் காட்டுகிறது. அதற்குப் பிறகும் குற்றம் நடக்கும் வரை அதை வளர்த்தெடுத்துவிட்டு, குற்றம் நடந்த பின் குற்றவாளியைக் கொன்றுவிட்டு நீதி நிலைநாட்டப் பட்டுவிட்டது என்று பெருமை பாட அதீதமான மனநலக் கோளாறு வேண்டும். 

அந்த ஒன்பது பேரும் நம் நாட்டில் பிறந்து, நம் அரசு அனுமதித்த கல்வியைப் படித்து, அரசின் காவல்துறை அளித்த பயிற்சியைப் பெற்று காவலர்களானவர்கள். அவர்கள் ஒரு குற்றம் செய்தால் அதற்கு பொறுப்பு அவர்கள் மட்டுமே இல்லை. அதற்காக அவர்களுக்கு தண்டனையே தரக்கூடாது என்றில்லை. அவர்களைக் கொலை செய்வது என்பது "உங்களை நல்வழிப்படுத்த எங்களால் முடியாது" என்று சொல்வதுதான். நல்வழிப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களது மனங்கள் சிதைந்து போயிருக்கின்றன என்றால்; சக உயிர்களை சித்திரவதை செய்து கொல்லும் அளவுக்கு அவர்களது மனநிலை இருக்கிறது என்றால், நமது கல்விக் கொள்கைகளில் இருந்து, காவல்துறைக்கு அளிக்கப்படும் அதிகாரங்கள் வரை அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப் பட வேண்டியவையே.

நம் நாட்டு பிரஜை ஒருவரை இழப்பதென்பது, நல்ல நோக்கத்திற்காக என்றாலும், வருத்தத்திற்குரியதே.

இயக்குனர் பா.இரஞ்சித் ஒரு பேட்டியில் மிக அழகாகச் சொல்லியிருந்தார். அவர் இயக்கிய மெட்ராஸ் படத்தின் இடைவேளையில் காளி (கார்த்தி) ஒரு கொலை செய்ய நேர்கிறது‌. கவனிக்கவும் - "நேர்கிறது". அந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் பதட்டமாக வேண்டும். நம்முடைய அண்ணன் தெருவில் ஒருவரை அடித்துக் கொலை செய்ய நேர்ந்தால், நமக்கு எவ்வளவு பதட்டமாக இருக்கும்? ஐயோ, இப்படி ஆகிவிட்டதே என்று எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? ஆனால், அந்தக் காட்சியைப் பார்க்கும் இரசிகர்கள் விசிலடித்து கைதட்டியது தன்னை கோபப் படுத்தியதாக இரஞ்சித் ஆதங்கம் கொள்கிறார். 

வன்முறை இரசிக்கத் தக்கதல்ல என்று சொல்லத் தவறிய சினிமாக்களை எடுத்த இயக்குனர்கள், அதை அனுமதிக்கும் சென்சார் என்று இது ஒரு சிக்கலான வலைப்பின்னல். 

பாலியல் வன்புணர்வு செய்பவர்களின் ஆண்குறிகள் வெட்டப்பட வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்கள் நம்மில் இருக்கத்தான் செய்கிறோம். குற்றத்தின் கோரத்தை அனுபவிப்பவர்களால் அப்படித்தான் சிந்திக்க முடியும். ஆனால், எந்தப் பிரச்சினையையும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக அணுகி யோசித்து முடிவெடுக்க வேண்டிய அரசுத் துறைகள் கொலை செய்வதன் மூலம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்ப்பது தவறு. By sentencing someone to death, the government fails them.

குற்றங்களுக்கான ஊற்றுக்கண்ணை அறிந்து சரி செய்ய வேண்டும்‌. எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானாக அடங்கும் என்ற பழமொழியைத் தந்தது நம் மொழிதானே?

குற்றங்களைக் கொல்லாமல் குற்றவாளிகளைக் கொல்லுதல் அறிவாகாது.

Comments

  1. Gopinath Sithuraj7 April 2026 at 00:06

    Something to think about seriously.

    ReplyDelete
  2. Never have I been able to concentrate wholly while reading your thoughts.
    Number of 'wahh'-s, 'omg'-s, 'what the'-s, 'mind-blowing'-s, and other reflections even before I reach the end.
    No matter whether it's about dusting the board or death sentence, reading your words has been an exhilarating experience. One of a kind.
    When I read about the duster episode, I was immediately reminded of a meme and I'm dedicating that to you -Jon Hamm dancing meme.

    ReplyDelete
  3. பள்ளியில குப்பை போடறாங்க. அபராதம் கட்டணும். பணம் கட்டிட்டே இருக்கணும்ங்கிறது நோக்கம் இல்ல. மனசு மாறனும்னு சொல்றிங்க. 10th படிக்கற ஒருத்தன் பயங்கர அடாவடி பண்றான். பிரின்சிபால் ரூம்லயே குப்பைய கொண்டு போய் போடறானு வெச்சுப்போம். யார் அவனுக்கு அந்த தைரியத்தை குடுத்தது? சரி நீங்க சொன்னது போலவே அவன் வளர்ந்த சூழ்நிலை, இத்தனை நாள் குப்பை போடறத தண்டிக்காத ஒரு சிஸ்டம் ன்னு வெச்சுப்போம்.
    பால்வாடில இருந்து சொல்லித்தரணும். வீட்ல சொல்லித்தரணும்னே வெச்சுப்போம்.
    இப்போ அந்த 10த் பையன் கிளாஸ் லயே இன்னும் நாலைஞ்சு பேர் இதே மாதிரி பண்ண தயாரா இருக்காங்க ன்னு வெச்சுப்போம். பிரின்சிபால் ரூம் ல கொண்டு போய் குப்பைய போட்டாலும் தண்டனை இல்லனா போய் போடத்தான் செய்வான்.
    இதுக்கும் அபராதம் வசூலிச்சுட்டு விட்ருவாங்கன்னா அப்பொவும் அவன் அதைத்தா செய்யப்போறான். இந்த மாதிரி பசங்களை உதாரணமா காட்டி இனி வரப்போற பிள்ளைகளுக்கு வேணும்னா கிளாஸ் எடுக்கலாமே ஒழிய, இப்போ இருக்கற இந்த மாதிரி பசங்க பயப்படணும்னா தண்டனை கடுமையாதா இருக்கணும்.
    "டேய் அவன் பிரின்சிபால் ரூம் ல குப்பை போட்டதுக்கு வெளுத்து விட்டுட்டாங்க டா " ன்னு சொன்னா இனிமே குப்பை போட்றவனுக்கு கொஞ்ச பயம் வரும்ல?

    அப்படி பயம் வராமயும் அராஜகம் பண்றவங்க இருந்தா அதற்கும் நடவடிக்கை எடுக்கணும். 9 பேர் தீர்ப்பை பார்த்ததுக்கு அப்புறமும் highways ல பைக்க ஓரம்கட்டி நெஞ்சுல குத்துறவங்கள என்னனு சொல்றது? ஏதாவது ஆயிருந்தா? அப்போ இந்த தண்டனையும் இவங்கள பயமுறுத்தல.

    இப்போ தப்பு செய்றவங்களுக்கு கடுமையான தண்டனையை கொடுப்போம். அத பாத்து இப்போ immedieta தப்பு செயலாம்னு இருக்கவன் கொஞ்சம் பயப்படுவான். இதையெல்லாம் உதாரணமா காட்டி இனி வரப்போற பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம். வருங்காலம் நல்லா இருக்க இதெல்லாம் இவங்க பண்ற தியாகம்ன்னு நெனச்சுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. திருத்தம் : வருங்கால பிள்ளைகளுக்கு எப்படி இருக்கூடாது இருந்தா என்னாகும்ன்னு உதாரணம் காட்ட இவங்க உதாரணபுருஷர்களாக இருந்துட்டு போகட்டும். எந்த எடுத்துக்காட்டுமே இல்லாம ஆகாசத்த காட்டி பாடம் எடுக்க முடியுமா? இருந்துட்டு போகட்டும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்