போலாகுதல்
பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் ஆசிரியர் ஒருவர் கரும்பலகையில் இருப்பதை அழிக்கச் சொன்னால், நான் நீயென்று போட்டி போட்டுக் கொண்டு முன்வருவர். (குறைந்தபட்சம் நான் ஒரு பிள்ளையாக இருந்தபோதாவது) கரும்பலகையை அழிப்பதில் அப்படியென்ன குதூகலம்? ஏனென்றால் அது ஒரு புது அனுபவம். அவ்வளவு பெரிய பலகை தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வரும் பெருமிதம், ஆசிரியருக்கு உதவி செய்வதில் கிடைக்கும் கௌரவம் ஆகியவற்றையும் தாண்டி - வேறு ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யாமல் அந்தக் குறிப்பிட்ட செயலில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவே செய்யும் ஒரு autotelic செயல் அது. வெறுமனே ஓர் இழுப்பு இழுத்தால் எழுத்துகள் அனைத்தும் மாயமாகிவிடும் பேராச்சர்யம், அழித்தபின் அந்த டஸ்ட்டரை தட்டி வருவதற்காக வகுப்பு நேரத்திலேயே வெளியே சென்று வருவதற்கான சிறப்பு அனுமதி, (அந்த அனுமதியை சில நேரங்களில் பெறக்கூடத் தேவையில்லை) டஸ்ட்டரை தட்டும்போது ஒரு மாயாஜாலம் போல அதிலிருந்து கிளம்பும் வெண்புகை என்று கரும்பலகை அழிப்பு என்பது குழந்தைகளுக்கு அலாதி இன்பம் தரக்கூடியது.
எல்லாச் செயல்களுமே அவர்களுக்கு அப்படித்தான். ஏனென்றால், பெரும்பான்மையானவை அவர்களுக்குப் புதிதானவை. தொலைபேசி அழைத்தால் எடுத்துப் பேசுவது, சைக்கிள் விடுவது, பைக் ஓட்டுவது, சமையல் செய்வது, வீட்டைக் கழுவுவது என்று வளர்ந்தபின் நமக்கு உப்பு சப்பில்லாத விசயங்கள் ஆகிவிட்ட அனைத்துமே நமக்கு ஒரு காலத்தில் பரவசத்தைத் தந்தவையே.
செயல்கள் எப்போது வேலைகளாகின்றனவோ அப்போது அதைச் செய்வதிலுள்ள உற்சாகம் வற்றிவிடுகிறது. கல்லூரி மாணவர்களிடம் கரும்பலகையை அழிக்கச் சொன்னாலும் அழிப்பர். ஆனால், ஒரு மூன்றாம் வகுப்பு குழந்தையின் குதூகலத்தோடு அதைச் செய்வார்களா என்றால் - (அந்தக் குதூகலம் வெளிப்படையாகத் தெரிய வேண்டிய அவசியம் கூட இல்லை) இல்லையென்றே சொல்ல வேண்டும்.
பஸ்ஸில் பாடும் பாட்டின் ராகத்திலேயே ஹார்ன் அடிக்கும் பஸ் ட்ரைவர்கள், கொத்து புரோட்டா கொத்தும் போது தாளம் போடும் மாஸ்டர்கள், 'தக்காளி, தக்காளி, தக்காளி' என்னும் வார்த்தைகளுக்கு இசையமைத்துப் பாடும் காய்கறிக் கடைக்காரர் என்று வளர்ந்த பின்னுமே ஒரு குழந்தையின் கொண்டாட்டத்தோடு வாழும் மாந்தர் அவ்வப்போது தென்பட்டாலும், பெரும்பாலோர் குழந்தைமையோடு இருப்பது கௌரவக் குறைச்சல் என்று ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொள்கிறார்கள்.
அடுத்தவரைப் பார்த்து அதே போலச் செய்தல் என்பதும் அப்படியொன்றும் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்க வேண்டிய விசயமல்ல. இதையெல்லாம் நான் எழுத உதவும் மொழி என்பதே 'போலச் செய்தல்' தானே! ஆனால் அதற்காக, மேலாண்மை பொன்னுச்சாமியின் கதையை நான் அப்படியே எழுதத் தேவையில்லைதானே? உப்பைப் போல பயன்படுத்திக் கொள்ளும் இலாவகம் வாய்க்க வேண்டும்.
நீங்கள் வழக்கமாக பைக்கில் போகிறவராக இருந்து ஒருநாள் பேருந்தில் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அநேகர் உங்களிடம் கேட்கக் கூடிய கேள்வி,
"வண்டி என்னாச்சு?"
அவர்களைப் பொறுத்தவரைக்கும் வழக்கமாக பைக்கில் வரும் ஒருவர் ஒருநாள் பேருந்தில் வந்தால் அதற்கு ஒரே காரணந்தான் இருக்க முடியும். அவர்களின் வண்டிக்கு ஏதாவது ஆகியிருக்க வேண்டும்.
அவர் பேருந்தில் வருவது, பேருந்து நிறுத்தம் வரைக்கும் நடக்கும் நடைக்காக இருக்காது; அந்த நடையின் போது கடக்கும் முகங்களைப் பார்ப்பதற்காக இருக்காது; ஜன்னல் திரையில் நகரும் உலகத்தைக் காண்பதற்காக இருக்காது; பேருந்தில் கமழும் ஊதுபத்திக்காக இருக்காது; மெத்தென்று உடலை வாங்கிக் கொள்ளும் இருக்கைக்காக இருக்காது; மிக முக்கியமாக - அவர் பைக்கில் வராமல் பஸ்ஸில் வருவதற்கு காரணம் என்ற ஒன்று இல்லாமல் இருக்கவே முடியாது.
ஏன்?
ஏனென்றால், அவர்கள் மேற்சொன்னது போன்ற "அற்ப" காரணங்களுக்காகவோ அல்லது காரணமே ஏதும் இல்லாமலோ பேருந்தில் வர மாட்டார்கள். பேருந்தில் வருவது என்றில்லை. எதைச் செய்வதற்குமே அவர்களுக்கு ஒரு "முக்கியமான" காரணம் வேண்டும்.
ஏன்?
ஏனென்றால், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் மேற்சொன்னது போன்ற "அற்ப" காரணங்களுக்காகவோ அல்லது காரணமே ஏதும் இல்லாமலோ பேருந்தில் வர மாட்டார்கள். பேருந்தில் வருவது என்றில்லை. எதைச் செய்வதற்குமே அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு "முக்கியமான" காரணம் வேண்டும்.
கடந்த இரண்டு பத்திகளும் ஒரே மாதிரி இருப்பதிலேயே எத்தனை அலுப்புத்தன்மை தோன்றுகிறது. பல நூறு பேர் இந்த உலகத்தைப் பார்ப்பது மாதிரியே நாமும் பார்த்து, அவர்களின் வார்த்தைகளையே கடன்வாங்கிப் பேசி வாழ்வது எத்துணை அசுவாரஸ்யமானது.
குழந்தைகளைப் பார்த்தால் பெயரைக் கேட்டபிறகு கேட்கக் கூடிய கேள்விகளென்று சில உள்ளன.
"எத்தனாவது படிக்கிற?"
"எந்த ஸ்கூல்?"
"என்ன ரேங்க்?"
"எத்தன மார்க்?"
"உனக்கு அம்மாவப் புடிக்குமா அப்பாவப் புடிக்குமா?"
ஸ்ஸ்ஸ்ஸ்ஸபாஆஅஅஅ!
குழந்தைகளைச் சந்திக்கையில் எண்களைப் பற்றிய கேள்விகளையே கேட்கக் கூடாது என்று மனோத்தத்துவவியலாளர்கள் கூறுகிறார்கள்.
கற்பனைத்திறன் முகிழ்த்திடும் அந்தப் பருவத்தில் அவர்களிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்பதன் மூலம் இரண்டு தவறுகள் செய்யப்படுகின்றன.
ஒன்று, 'இவையெல்லாம் முக்கியம், இவையெல்லாம் முக்கியமில்லை' என்று ஒரு மறைபொருள் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. அடுத்து, இத்தனையாண்டு காலமும் இந்த உலகில் நிலவி வரும் அநீதிகளை மாற்றும் வல்லமை மிக்க எண்ணங்கள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன.
குப்பை வண்டி தள்ளி வருபவரை ஒரு குழந்தை 'மாமா' என்று அழைக்கிறது. அதைத் திருத்தும் பெற்றோர் 'அவரும் நாமும் வேறு வேறு' என்று இந்த உலக நடைமுறைக்கு அந்தக் குழந்தையைப் பழக்குகிறார்கள்.
அக்குழந்தையும் தனக்குத் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் முட்டாள்தனமானவை என்று நம்பி, இந்த உலகுக்குத் தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அதே குழந்தை வளர்ந்தபின் வேலைக்குப் போகிறது. வழக்கமாக பைக்கில் வரும் ஒருவர் பேருந்தில் வந்தால் அவரிடம் கேட்கிறது, "வண்டி என்னாச்சு?"
போய் பார்த்த இடங்களை பல நாட்கள் பார்க்காமல் விட்டு, மீண்டும் பார்க்க செல்லலாம் என்ற எண்ணம் வராமலும் போகலாம். போய் வரலாம் என்ற எண்ணமும் வரலாம். எது எதுவோ. ஆனால் அப்படிச்சென்று பார்க்கும்பொழுது டேஜாவூக்களும் இருக்கலாம், ஆச்சர்யங்களும் இருக்கலாம். எது எப்படியோ. அப்படி போய் பார்க்கும்போழுது தினமலரயோ, தந்தியையோ, தமிழ் திசையையோ பார்க்கும் கண்கள் நம்மை நோக்கி வரும் கேள்வி "எங்க ரொம்ப நாளா ஆளே காணோம்?"
ReplyDelete