கெட்ட வார்த்தை
பாகம் ஒன்று -
பொறுமை தேவைப்படும் முன்னுரை
நான் ஓர் ஆசிரியன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் இருந்த ஆசிரியன்.
அந்தக் கல்லூரியில் ஆண்டுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரம் அது. மே 9 ஆம் தேதி ஆண்டு விழா.
ஏப்ரல் 11 ஆம் தேதி குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணி (MoC) எனக்கு கொடுக்கப்பட்டது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் ஸ்க்ரிப்ட் எழுதி... மணிகண்டன் என்றொரு மாணவனை வைத்து அதற்கான பின்னணி இசையை எடிட் செய்து... தமிழுக்கு இரண்டு மாணவர்களையும், ஆங்கிலத்துக்கு நான்கு மாணவர்களையும் பயிற்றுவித்து அவ்வப்போது பயிற்சியளித்து வந்தேன்.
மணிகண்டனைத் தவிர மற்ற அனைவருமே கலை நிகழ்ச்சிகளிலும் இருந்ததால், அதற்கு அவர்கள் ஒத்திகை பார்க்கப் போன நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன்.
ஆண்டுவிழாவில் ஒரு மிக முக்கியமான பகுதி இருந்தது. முதல்வர் வழங்க வேண்டிய ஆண்டறிக்கை. அதாவது, கடந்த ஓர் ஆண்டில் செய்யப்பட்ட கல்லூரியின் சாதனைகள், மாணவர்களின் சாதனைகள் மற்றும் ஆசிரியர்களின் சாதனைகளைப் பற்றி முதல்வர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதனை முதல்வர் வெறுமனே வாசிக்காமல், ஒரு காட்சித் தொகுப்பாகக் (Audio Visual Presentation) காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கல்லூரியின் நிர்வாக இயக்குனர் (MD) கருதியதால், அப்படியே செய்ய முடிவானது. அதுவும் MoC அணியின் வேலையே. நான் தொகுப்பாளர்களின் வேலையைப் பார்த்துக் கொண்டதால், AV தயாரிக்கும் பணியை மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை வைத்துத் தயாரித்தனர்.
இந்த நேரத்தில், மே 5ஆம் தேதியன்று, எங்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் ஒரு புதுத் தகவலைச் சொன்னார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஓடக்கூடிய AV-க்கு பின்னணி குரல் சேர்க்கப்பட வேண்டும் என்றார். முதலிலேயே சொல்லியிருந்தால் அதற்கான நேரம் இருந்திருக்கும். கடைசி நேரத்தில் ஒரு புத்தம் புதுத் தகவலை இறக்குவதென்பது அந்தக் கல்லூரிக்கு கை வந்த கலை.
ஏற்கனவே நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த MoC வேலையே பாதியில் இருந்தது. ஏனென்றால், பரிசு வாங்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல், அது வரைக்குமே எங்களுக்கு வந்து சேரவில்லை.
அது வந்த பிறகு, அதனை ஸ்க்ரிப்டில் இணைத்து... அதன் வரிசையை பரிசு வழங்கும் அணியிடம் சரிபார்த்து... அதற்குப் பிறகு அனைத்துப் பெயர்களையும் படிப்பதற்கு மாணவர்களுக்குப் பயிற்சியளித்து... என்று அது ஒரு நீண்ட வேலை. (பெயர்ப் பட்டியல் எங்களுக்குக் கிடைத்தது மே 7ஆம் தேதி மதியம்)
எனவே, AV-க்கு பின்னணி குரல் சேர்ப்பது என்பது மிகக் கடினம்.
ஆனாலும், அது MoC அணியின் வேலைதான். எப்படியாவது முடித்துவிடலாம் என்ற முனைப்போடு குழு ஒருங்கிணைப்பாளரிடம் நான் சில விசயங்கள் மட்டும் கேட்டேன்.
1) அந்த AV ஒரே வீடியோவாக வேண்டும்.
2) அதைப் பற்றிய விவரங்கள் அறிந்த ஒருவர் உடனிருக்க வேண்டும்.
3) எடிட்டிங் தெரிந்த ஒரு மாணவர் உடனிருக்க வேண்டும்.
இது எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
மே 7ஆம் தேதி, பரிசு பெறுவோர் பெயர்ப் பட்டியலை வாங்கி MoC ஸ்க்ரிப்டில் இணைத்துக் கொண்டிருந்த போது, AV- யைப் பார்க்க போர்ட் ரூமுக்கு வரச் சொன்னார்கள்.
ஏழெட்டு வீடியோக்களை இரண்டு லேப் டாப்புகளில் போட்டுக் காட்டினார்கள். மாணவர்கள் எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு, அந்த வீடியோக்கள் பற்றிய தன்னுடைய அதிருப்தியை சொல்லித் திட்டினார் முதல்வர்.
வேறு ஒரு கல்லூரியின் ஆண்டறிக்கையை எல்லாருக்கும் அனுப்பி, அதை அடிப்படையாக வைத்து ஒரு புது AV தயாரிக்குமாறு சொல்லி விட்டுச் சென்றார். அந்த வேலையை IT துறைத்தலைவரிடம் ஒப்படைத்தார். அந்த வேலையை அவர் IT துறைத் தலைவரிடம் கொடுத்தபோது மே 7ஆம் தேதி மாலை 3 மணி.
பிறகு முதல்வர் என்னை அவருடைய அறைக்கு அழைத்து, அந்த AV தயாரான பின்பு அதற்கான ஸ்க்ரிப்டை எழுதித் தருமாறு சொன்னார்.
நான் IT துறைத் தலைவரிடம் சென்று, AV தயாரானவுடன் என்னைக் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு, MoC ஸ்க்ரிப்டை எடிட் செய்யப் போனேன்.
3:30 மணிக்கு எல்லாக் குழுவினரும் முதல்வரின் அறைக்கு வருமாறு அழைக்கப்பட்டோம். நான் வேலையைப் பாதியில் விட்டுவிட்டு அங்கே போனேன். ஒவ்வொரு குழுவாக அவருடைய அறைக்குள் போக, மற்ற அனைவரும் வெளியே காத்திருக்க வைக்கப்பட்டோம். நான் அவரைச் சந்திப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. பெரிதாக அவர் ஏதும் சொல்லவில்லை. எல்லாம் நல்லபடியாகப் போகிறதா என்று கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார். நான் பெயர்ப்பட்டியலை எடிட் செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் போது மாலை 6 மணி.
மே 8ஆம் தேதி.
காலை 11 மணி வரைக்கும் எடிட் செய்து... பரிசு வழங்கும் குழுவினரிடம் அந்தப் பெயர்ப் பட்டியலின் வரிசையை சரிபார்த்து... (அப்போது கடைசி நேரத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசு பெறுவோர் பட்டியலில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார் அதற்கான பொறுப்பாசிரியர்), அந்த மாற்றங்களைக் குறித்துக் கொண்டு... அதை எடிட் செய்து இறுதிசெய்யப்பட்ட MoC ஸ்க்ரிப்டை தயாரித்தபோது, மணி மதியம் 2.
மே 9ஆம் தேதி நடக்கப் போகும் ஆண்டு விழாவிற்கு, மே 8ஆம் தேதி மதியம் 2 மணிக்குத்தான் இறுதி செய்யப்பட்ட MoC ஸ்க்ரிப்ட் தயாரானது.
அதனை ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து, MoC மாணவர்களை அழைத்தேன் - பயிற்சி செய்வதற்காக.
2:30 மணிக்கு AV தயாராகி விட்டதென குழு ஒருங்கிணைப்பாளர் அழைத்தார்.
மணிகண்டன் மட்டும் என்னுடன் இருந்தான். அவனிடம் MoC ஸ்க்ரிப்டைக் கொடுத்து, மற்றவர்கள் வந்தால் பயிற்சி செய்யச் சொல்லுமாறு சொல்லிவிட்டு, போர்ட் ரூமுக்குப் போனேன்.
போகும் வழியிலேயே, EEE துறைத்தலைவர் என்னை அழைத்தார். அட்மிஷன் தொடர்பாக Unibox என்றொரு விசயத்தைப் பற்றிய மீட்டிங் நடத்தினார்.
அதை முடித்துவிட்டு போர்ட் ரூமுக்குப் போகும் போது மணி 3.
103 ஸ்லைடுகள் உள்ள ஒரு AV-யைக் காட்டி ஸ்க்ரிப்ட் எழுதச் சொன்னார்கள்.
அங்கிருந்த லேப் டாப்பில், டைப் செய்யத் தொடங்கினேன். ஏழெட்டு ஸ்லைடுகளுக்கு எழுதி முடித்த போது, MoC ஒத்திகை பார்க்க அழைத்தார் குழு ஒருங்கிணைப்பாளர்.
ஆண்டு விழா நடக்கப் போகும் அரங்கிற்குப் போனேன்.
MoC மாணவர்கள் ஏற்கனவே அங்கேதான் இருந்தார்கள். MoC ஒத்திகை பார்த்தோம். AV-க்கான ஸ்க்ரிப்ட் எங்கே என்று கேட்டார் முதல்வர். பாதி மட்டும் டைப் செய்திருப்பதாகவும், அதனைப் போய் ப்ரிண்ட் எடுத்து வருவதாகவும் சொல்லிவிட்டு போர்ட் ரூமுக்குப் போனேன். அதனைப் ப்ரிண்ட் எடுத்துவிட்டு குழு ஒருங்கிணைப்பாளருக்கு அழைத்தேன். மேடையில் LED திரை தயாராகவில்லை என்று சொல்லி, என்னை போர்ட் ரூமிலேயே காத்திருக்கச் சொன்னார்.
முதல்வர், MoC குழு ஒருங்கிணைப்பாளர், நான், IT துறைத்தலைவர், ஒரு மாணவர் ஆகியோர் போர்ட் ரூமில் இருந்தோம். நான் ப்ரிண்ட் எடுத்த பேப்பரை முதல்வரிடம் கொடுத்தேன். அதை அவர் வாங்கிப் பார்த்துவிட்டு அதில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றிச் சொன்னார். நான் குறித்துக் கொண்டேன்.
ஸ்லைடுகளிலும் சில மாற்றங்களைச் சொன்னார். IT துறைத்தலைவர் அவற்றையெல்லாம் செய்யத் தொடங்கினார். அந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு, வீட்டிற்குக் கிளம்பிக் கொள்வதாக IT துறைத் தலைவர் சொன்னார். அதே நேரம் அந்த Canva ஸ்லைடுகளை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினார்.
என்னுடைய வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா என்று முதல்வர் கேட்டார். இருக்கிறது என்று சொன்னேன். இரவுக்குள் ஸ்க்ரிப்ட் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
நான் வீட்டுக்குக் கிளம்பினேன். வீட்டுக்கு வரும்போதே 7 மணியாகிவிட்டது. உடை மாற்றி வந்தேன். வெளியே போக வேண்டிய வேலை இருந்தது. அங்கேதான் ஆரம்பித்தது பிரச்சினை. 7:30 மணிக்கு வெளியே போன நான் 9:30 வரைக்கும் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
அந்த ஸ்க்ரிப்ட் எழுதும் பணியை வேறு நபர்களிடம் கொடுப்பதற்கு நானும், குழு ஒருங்கிணைப்பாளரும், IT துறைத் தலைவரும் ஏற்கனவே முயற்சி செய்து பார்த்திருந்தோம். எதுவும் சரி வரவில்லை. எனவே, நான் எழுத முடியாது என்றும் சொல்ல முடியாது. அதுவும் போக, கடைசி நேரத்தில் கை விரிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. எனவே, ChatGPT-யில் கொடுத்து சீக்கிரமாக ஸ்க்ரிப்ட் எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
9:30 மணிக்கு முதல்வர் அழைத்தார். "ஸ்க்ரிப்ட் ரெடியா?" என்று கேட்டார். 10:30-க்குள் அனுப்புவதாகச் சொன்னேன்.
பாகம் இரண்டு -
நான் செய்த தவறு
வீட்டுக்குப் போன உடனே, Canva ஸ்லைடை PDF ஆக download செய்தேன்.
ChatGPT-யில் தெளிவான prompts கொடுத்து, PDF-யை upload செய்து, ஸ்க்ரிப்ட் தருமாறு கேட்டேன். ஆனால், ChatGPT ஆறேழு ஸ்லைடுகளுக்கு மட்டும் ஸ்க்ரிப்ட் கொடுத்தது. AI அவ்வப்போது தவறு செய்யும் தான். எனவே, 100 ஸ்லைடுகளுக்கும் ஸ்க்ரிப்ட் தருமாறு கேட்டேன். உடனே 100 ஸ்லைடுகளுக்கும் ஸ்க்ரிப்ட் வந்தது. அவற்றைப் படித்துப் பார்த்தேன். நான் போர்ட் ரூமில் பார்க்கும் போது ஸ்லைடில் இல்லாத பல விசயங்கள் அதிலே இருந்தன. ஆனால், 3 காரணங்களுக்காக நான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அப்படியே அனுப்பினேன்.
காரணம் 1
நான் கல்லூரியிலிருந்து கிளம்பும் போது, IT துறைத் தலைவர் தொடர்ந்து எடிட் செய்து கொண்டிருந்தார். எனவே, அவர் மேலும் இவற்றையெல்லாம் சேர்த்திருக்கலாம் என்று நினைத்தேன்.
கல்லூரியில் இல்லாத விசயங்களை அவர் சேர்ப்பார் என்று நான் எப்படி நினைக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம்.
காரணம் 2
இல்லாத கட்டிடங்களை இருப்பதாகக் கணக்கு காட்டுவது அந்தக் கல்லூரியில் இயல்பாக நடக்கும் விசயமே. வெளியூரிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் வரும்போது, பில்டப்புக்காக இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்தேன்.
நினைத்தால் போதுமா? அது சரியா என்று ஊர்ஜிதம் செய்ய வேண்டாமா என்றும் நீங்கள் கேட்கலாம்.
காரணம் 3
ஒருவேளை, நான் அனுப்புவது தவறென்றால், முதல்வர் அதைப் பார்த்து சொல்வார் அல்லவா? தவறுகள் நடப்பது இயல்புதானே? அவர் மாற்றங்கள் சொன்னால் செய்துகொள்ளலாம். முதலில், அனுப்புவோம் என்று முடிவு செய்து அனுப்பினேன்.
அனுப்பும் போது, மணி 10:30.
10:45 மணிக்கு முதல்வர் ரிப்ளை அனுப்பினார். ஒரு சில மாறுதல்களைக் குறிப்பிட்டிருந்தார்.
IT துறைத் தலைவரும் போனில் அழைத்து சில மாறுதல்களை முதல்வர் சொன்னதாகச் சொன்னார்.
நான் அந்த மாற்றங்களைச் செய்யத் தொடங்கினேன்.
11:08 மணிக்கு மீண்டும் முதல்வர் மெசேஜ் அனுப்பினார்.
"Thiru, Are you aware of what you have sent? Please read the report. Lot of irrelevant informations." என்று அனுப்பினார்.
11:11க்கு குழு ஒருங்கிணைப்பாளர் எனக்கு அழைத்து என்ன நடந்தது என்று கேட்டார். நான் ChatGPT-யை பயன்படுத்தியதைப் பற்றிக் கூறினேன். அவர் அது வேண்டாமென்றும், முதல்வர் அனுப்பப் போகும் Sample Report ஒன்றை வைத்துக்கொண்டு அதையே எடிட் செய்து அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார்.
PDF ஆக download செய்யப்பட்ட Canva ஸ்லைடுகளைப் பார்த்தேன். முதல்வர் சொன்னது சரிதான். நான் அனுப்பியதற்கும் அதற்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள்.
அப்போதுதான், ChatGPT-யில் நான் upload செய்த PDF-ஐப் பார்த்தேன்.
போர்ட் ரூமில் உட்கார்ந்து முதல் ஏழெட்டு ஸ்லைடுகளுக்கு நான் டைப் செய்தேனே, தவறுதலாக அதனுடைய PDF-ஐ upload செய்திருக்கிறேன். அதனால்தான் ChatGPT முதல் முறை குறைவான ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கிறது. நான் 100 ஸ்லைடுகளுக்கு ஸ்க்ரிப்ட் வேண்டும் என்று கேட்டவுடன், "நீ upload செய்ததில் 100 ஸ்லைடு இல்லையே மடையா?" என்று என்னைக் கேட்காமல், கர்ம சிரத்தையுடன் அதுவே கற்பனை செய்து பல தகவல்களைத் தந்திருக்கிறது.
ஒரு சின்ன கவனக் குறைவால் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்திருக்கிறேன்! முதல்வர் வேறு அகால நேரத்தில் இதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஆனாலும் அவர் கோபமாக இல்லை என்று எனக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால், அவர் கோபமாக இருக்கும் நேரங்களில் என்னை 'திரு' என்று அழைக்கமாட்டார். 'திருஞான சம்பந்தம்' என்று சொல்லுவார் அல்லது வெறுமனே 'சார்' என்று சொல்லுவார்.
எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு மெசேஜ் அனுப்பினேன். உடனடியாக தவறை சரிசெய்து அனுப்புவதாகக் கூறினேன்.
இதை நான் அனுப்பும் போது மணி 11:15.
11:27-க்கு Sample report ஒன்றை அனுப்பி, அந்த மாதிரி தயாரிக்குமாறு முதல்வர் ரிப்ளை அனுப்பினார்.
ஒரு மாதிரி ஆறுதலாக இருந்தது.
சரியான PDF-ஐ upload செய்து, சரியான ஸ்க்ரிப்ட் எடுத்து அவருக்கு அனுப்பும் போது, மணி 12:03.
ஆண்டுவிழா நடக்கும் நாளான மே 9 பிறந்து விட்டது.
பாகம் மூன்று -
கெட்ட வார்த்தை
12:03 மணிக்கு முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பிய பிறகு, ப்ளூ டிக் காட்டவில்லை. அவர் தூங்கியிருக்கலாம் என்று நினைத்தேன். எனவே, போனில் அழைப்பதற்கு தயக்கமாக இருந்தது. காலையில் MoC-யில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால், தூங்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால், தூக்கம் வரவில்லை. அவ்வப்போது போனை எடுத்து, ப்ளூ டிக் ஆகியிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.
1 மணிக்கு மேல், அவருக்கு last seen காட்டியது. ஆனாலும், ப்ளூ டிக் மட்டும் காட்டவில்லை.
அதாவது, அவர் எனக்கு பதில் அனுப்பவில்லை.
நான் தூங்கப் போனேன்.
மே 9.
காலையில் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. நான் அனுப்பிய ரிப்போர்ட்டைப் பார்த்து முதல்வர் எதுவும் ரிப்ளை செய்யாததை நினைத்து கலக்கமாக இருந்தது.
மீண்டும் ஒருமுறை அந்த ரிப்போர்ட்டை எடிட் செய்து 5:15 மணிக்கு அவருக்கு அனுப்பினேன்.
7 மணிக்கு முதல்வருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை.
கல்லூரிக்குக் கிளம்பினேன்.
இந்தக் கலவரங்களுக்கு மத்தியில், முன்தினம் இரவு 11 மணிக்கு குழு ஒருங்கிணைப்பாளர் ஒரு நீண்ட essay ஒன்றை அனுப்பி, அதனை MoC-யில் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தார். அதனை, ஒரு word document ஆக தயார் செய்து கொண்டேன்.
அதுபோக, அவர் பேசுவதற்கு நன்றியுரை எழுதித் தருமாறும் கேட்டிருந்தார். அதையும் தயார் செய்து வைத்திருந்தேன்.
முதல்வருக்கு வரவேற்புரை எழுதிக் கொடுத்ததில் அவர் சில மாறுதல்களைச் சொல்லியிருந்தார். அதனையும் தயார் செய்திருந்தேன்.
MoC மாணவர்கள் மேலும் 2 copy ஸ்க்ரிப்ட் கேட்டிருந்தார்கள். இது எல்லாவற்றையும் ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், நேரமே கிளம்பினேன்.
வழியில் ஜெராக்ஸ் கடை ஏதும் இல்லை. எங்களுடைய டிபார்ட்மெண்டிலோ A4 ஷீட் இருக்காது. A4 ஷீட் AO-விடம் தான் வாங்க வேண்டும். அவர் வந்திருப்பாரா என்று தெரியாது. எனவே, கடையில் A4 ஷீட் வாங்கிக் கொண்டு போனேன்.
டிபார்ட்மெண்ட்டில் எல்லாவற்றையும் ப்ரிண்ட் எடுத்துக் கொண்டு, விழா நடக்கும் இடத்திற்குப் போனேன்.
மணிகண்டன் இருந்தான். அவனிடம் சில குறிப்புகள் சொன்னேன்.
MoC குழு ஒருங்கிணைப்பாளர் அங்கேதான் இருந்தார். இயல்பாகத்தான் இருந்தார். அவருடைய நன்றியுரை குறித்துக் கேட்டார். அதைக் காட்டினேன்.
முதல்வரைத் தேடினேன். அவர் இரண்டொரு நிமிடத்தில் வந்தார். அவரைப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் பார்வையைத் திருப்பிக் கொண்டார்.
IT துறைத்தலைவர் அவரை நோக்கிப் போனார். நானும் பின்னாலேயே போனேன். அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டார்கள். நான் காத்திருந்தேன். துறைத்தலைவர் பேசிவிட்டுச் சென்றார். முதல்வர் என் பக்கமே திரும்பவில்லை. நான் கூப்பிட்டேன்.
அங்கே தொடங்கியது, இந்தக் கதை எழுதக் காரணமான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பாஷணை.
"சார்"
அவர் என் பக்கம் திரும்பினார். நான் கையிலிருந்த பேப்பரைக் காட்டி ஏதோ சொல்ல வந்தேன். அவர் என்னைப் பேசவே விடாமல் சொன்னார்.
"நீங்க போயி உங்க வேலையப் பாருங்க சார். நாங்க பாத்துக்குறோம்".
அது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. ஸ்போர்ட்ஸ் டே அன்றைக்குக் கூட, என்னை வரவேற்புரை தயாரிக்கச் சொல்லியிருந்தார். நான் கொண்டு போய்க் கொடுத்தபோது, கையசைப்பினாலேயே அதை வேண்டாம் என்று சொன்னவர்தான் அவர் - காரணம் ஏதும் சொல்லாமலேயே.
எனவே அவர் அப்படிச் சொன்னவுடன் நான் திரும்பி நடக்கத் தொடங்கினேன்.
அவர் என்னைப் போக விட்டிருக்கலாம். நான் இரண்டடி எடுத்து வைத்தவுடன் மறுபடியும் பேசத் தொடங்கினார்.
"ஒரு ப்ரின்சிபால் அவ்வளவு நேரம் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..."
என்று அவர் பேசத் தொடங்கியவுடன் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தேன். ஏனென்றால், ஒருவர் நம்மிடம் பேசும்போது நாம் அவரைப் பார்க்க வேண்டும் என்பது நான் கற்ற நாகரிகம். அவர் தொடர்ந்து பேசினார்.
"என்னத்தவோ எடுத்து அனுப்பிட்டு... என்னப் பாத்தா கேனக் கூதி மாதிரி இருக்கா?"
அவர் அப்படிச் சொன்ன அந்தக் காட்சி மிக மிகத் தெளிவாக என் மனதில் பதிந்து விட்டது.
அந்த வார்த்தையில் உள்ள ஐந்து எழுத்துகளையும் அவர் மிக அழுத்தமாகவும் தெள்ளத் தெளிவாகவும் சொன்னார் - குறிப்பாக நான்காவது எழுத்தை.
அந்த வார்த்தையைச் சொல்வதில் அவருக்கு ஒரு மைக்ரோ விநாடி கூடத் தயக்கமே இல்லை.
அந்த அரங்கில் எங்களைச் சுற்றிலும் நூறு, நூற்றைம்பது பேர் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
'அவர்கள் கேட்டால் மட்டும் என்னை என்ன செய்துவிட முடியும்' என்ற அதிகாரத் திமிர் அவருடைய உடல் மொழியில் தெரிந்தது.
அவருடைய தோரணையில் இருந்த தைரியத்தைப் பார்த்தால், கல்லூரிக்குள்ளே கெட்ட வார்த்தை பேசுவது அவருக்கு அது முதல் முறை இல்லை என்பது மாதிரி இருந்தது.
நான் சொன்னேன்.
"சார் கெட்ட வார்த்த பேசாதீங்க என்கிட்ட. கொஞ்சம் மரியாதையா பேசுங்க."
"நா என்னத்தா சொல்ற. என்னப் பாத்தாதான் கேனக் கூதி மாதிரி தெரியுதானு கேக்கறேன்."
அவருக்கு ஒரு விசயம் புரியவில்லை. அவர் அவரைப் பற்றிதான் அந்த வார்த்தையைச் சொன்னார். என்னுடைய பிரச்சினை அதுவல்ல. நான் வேலை செய்யும் இடத்தில் ஒருவர், ஆசிரியரான என்னிடம் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவர் என்னைத்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
என் முன்னிலையில், என்னிடமே அவர் கெட்ட வார்த்தை பேசுகிறார் என்றால், அதுவும் எனக்குச் செய்யும் அவமரியாதையே.
நான் சொன்னேன்.
"சார், எனக்கும் கெட்ட வார்த்தை பேசத் தெரியும். உங்களவிட எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே தெரியும். கெட்ட வார்த்த பேசாதீங்க என்கிட்ட."
"நீங்க போங்க. நாங்க பாத்துக்கறோம். இங்க எல்லாரும் ஒன்னும் தெரியாமலா இருக்கோம்?"
அவர் பேசியது குறித்து அவர் கொஞ்சம் கூட வருந்தியதாகத் தெரியவில்லை.
நான் சொன்னேன்.
"நாங்க பாத்துக்கறோம்னா, MoC-யும் நீங்களே பாத்துக்கோங்க".
"கெளம்புங்க தேவையே இல்ல."
நான் எல்லாப் பேப்பரையும், ஒரு டேபிள் மீது வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
MoC அணி மாணவர்களிடம் பேசினேன். நானொரு முக்கியமான வேலையாக வெளியே கிளம்புவதாகவும், MoC-யை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
டிபார்ட்மெண்ட்டுக்குப் போய், பையை எடுத்துக் கொண்டேன். என்னுடைய துறைத் தலைவருக்கு அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவர் மீண்டும் அந்த அரங்கத்திற்கே வரச் சொன்னார். போனேன்.
அவர் என்னை மீண்டும் முதல்வரிடம் அழைத்துப் போனார். அவர் முதல்வரை சமாதானப் படுத்தத் தொடங்கினார். முதல்வர் ஒரே பதிலாக, "அவரைக் கிளம்பச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டார்.
துறைத்தலைவர் என்னிடம் பேசினார்.
நான் ஒரே முடிவாகச் சொன்னேன்.
"சார், நான் படிச்சுட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கேன். நான் ஒரு வாத்தியார். என்கிட்ட நீங்க கெட்ட வார்த்தை பேசக்கூடாது. நான் தப்பு பண்ணியிருக்கேன் தான். நீங்க கோபப்படலாம். திட்டலாம். ஆனா, கெட்ட வார்த்தை பேசக்கூடாது. என்ன பேசுனாலும் கேட்டுட்டுப் போக நா ஒண்ணும் உங்க அடிமை கெடயாது. எனக்கு சுயமரியாதை இருக்கு. மானம் மரியாதைய விட்டு நா மறுபடியும் அங்க போயி நிக்க முடியாது சார்."
அவர் கேட்டார், "இப்படி பாதியிலேயே விட்டுட்டு போனா எப்புடி சார்?"
நான் சொன்னேன், "நா students-அ ட்ரைன் பண்ணிட்டேன் சார். அவங்க பாத்துப்பாங்க. இந்த மாதிரி unexpected situation வந்தா அதையும் அவங்க சமாளிக்கப் பழகட்டும்."
அப்போது யாரோ வந்து அவரை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றனர். நான் வெளியே கிளம்பிவிட்டேன்.
வீட்டுக்கு வந்தேன். மதிய உணவு இடைவேளையில் மணிகண்டனுக்கு கூப்பிட்டேன். MoC-யில் எல்லாம் நல்லபடியாக நடந்ததாகச் சொன்னான்.
பெருமிதமாக இருந்தது. மன நிறைவாக இருந்தது. நான் அவர்களுக்குத் தர வேண்டிய கல்வியை தந்துவிட்டதாக உணர்ந்தேன்.
பாகம் நான்கு -
பின்கதை
மே 10
காலையில் கல்லூரிக்குப் போனவுடன், HoD-யிடம் சொல்லிவிட்டு முதல்வருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அந்த மெயிலின் CC-யை MD, CEO, COO, HoD என அனைவருக்கும் அனுப்பினேன்.
அதன் சுருக்கம் பின்வருமாறு.
## என்னுடைய கவனக் குறைவால் நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
## ஆனால், ஆண்டுவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளில் நிறைய நிர்வாகக் குறைபாடுகள் இருந்தன. அவற்றைத் தவிர்த்திருந்தால், நான் செய்தது போன்ற தவறுகளையும் தவிர்த்திருக்கலாம்.
## எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும், ஒரு கல்வி நிலைய வளாகத்துக்குள் கெட்ட வார்த்தை பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே, அதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்வரும் ரிப்ளை அனுப்பினார். அதன் சுருக்கம் பின்வருமாறு.
## உங்களுடைய கடிதத்தைப் படித்தேன். நீங்கள் உங்கள் தவறுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
## ஆனால், ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சியில் படிப்பதற்காக உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலையில் நீங்கள் செய்த தவறு ஏற்றுக்கொள்ள முடியாதது.
## நீங்கள் அனுப்பிய ரிப்போர்ட் சம்பந்தமே இல்லாமல் இருந்தது மட்டுமல்லாது, அது குழப்பத்தையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
## நன்றாக நடந்திருக்க வேண்டிய கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு அது களங்கம் ஏற்படுத்திவிட்டது.
## உண்மையிலேயே உங்களைப் போன்ற ஒரு பணியாளரைப் பெற்றதற்காகவும், நீங்கள் அனுப்பிய மதிப்பில்லாத ரிப்போர்ட்டை சத்தமாகப் படிக்க வேண்டிய துரதிர்ஷ்ட வசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்காகவும் என்னையே தான் நான் திட்டிக்கொண்டேன்.
## அதுபோக, நீங்கள் MoC பொறுப்பிலிருந்து விலகுவதாக சொல்லி மிரட்டிய போது நான் ஆடிப்போனேன். நீங்கள் இல்லாத நேரத்தில், MoC-யை ஏற்று நடத்திய திறமையான ஆசிரியர்கள் மூலம்தான் அந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து மானத்தைக் காப்பாற்றியது.
## நிர்வாகக் குறைபாடுகள் குறித்த உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.
## ஆனால், தனிப்பட்ட நபரின் விடுப்புக்கு அதைக் காரணமாகச் சொல்ல முடியாது.
## அதுபோக, முக்கியமான பிரச்சினையைப் பற்றிப் பேசாமல், நீங்கள் என்னுடைய நடத்தையைப் பற்றியே பேசுவதென்று முடிவெடுத்திருக்கிறீர்கள்.
## அந்த நேரத்தில் நான் பேசிய வார்த்தைகள் ஏற்படுத்திய தீவிரத்துக்கு நான் வருந்துகிறேன். ஆனால், அப்படியொரு முக்கியமான நேரத்தில் விழா நடப்பதைப் பார்க்காமல் வேறு ஒரு விசயத்துக்கு கவனத்தைத் திருப்பியது உகந்த செயல் இல்லை.
## உங்களுடைய செயலின் தீவிரத்தன்மை, உங்கள் மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்கு உங்களால் ஏற்பட்ட கெட்ட பெயர் - ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீங்கள் உங்களுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமென்று நான் பரிந்துரைக்கிறேன்.
## இது தனிப்பட்ட விரோதம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை. கல்லூரியின் தரம், கௌரவம் மற்றும் கொள்கைகளைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவாகும்.
இதையெல்லாம் எழுதி, அந்த மெயிலுடன் நான் தவறாக அனுப்பிய ரிப்போர்ட்டையும் இணைந்திருந்தார்.
அதற்கு நான் அனுப்பிய பதிலின் சுருக்கம் பின்வருமாறு.
## நான் சொன்ன எல்லா விசயங்களைப் பற்றியும் பதில் எழுதியதற்கு நன்றி.
## ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்வதென்று முடிவு எடுத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய கடமையை செய்யத் தவறினேன் என்று ஒத்துக் கொள்வதற்காக இல்லை. என்னுடைய பதவிக்கு உண்டான மரியாதை கிடைக்காத காரணத்திற்காக நான் ராஜினாமா செய்கிறேன்.
## MoC பொறுப்பிலிருந்து விலகியதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது மிரட்டலோ, பணிவின்மையோ இல்லை. என்னுடைய மனம் புண்பட்ட காரணத்தால் என்னால் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை.
## நான் இல்லாத நேரத்தில் MoC-யைப் பார்த்துக் கொண்ட ஆசிரியர்களை நான் மதிக்கிறேன். ஆனால், அவர்கள் இல்லையென்றாலும் அந்த MoC நடந்திருக்கும். நான் MoC மாணவர்களுக்கு அந்த அளவுக்கு பயிற்சி அளித்திருந்தேன். அவர்களால் தனியாகவே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதனால் தான் நான் அங்கிருந்து போனேன்.
## தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கும் அழுத்தங்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துப் பேச வேண்டும் என்பதுதான் நல்ல பணிச்சூழல் என்று நான் கருதுகிறேன்.
## தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய ஆசிரியர் பணிக்கான மரியாதை கண்டுகொள்ளப் படாமல் போனதால், கனத்த இதயத்துடன் நான் ராஜினாமா செய்கிறேன்.
## என்னுடைய சான்றிதழ்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை நான் அனுப்பிய போது, மணி 1:15. மதிய உணவை முடித்துவிட்டு, HoD-யிடம் அடுத்து என்ன செய்வதென்று கேட்டேன். முதல்வரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். முதல்வரின் அறைக்குச் சென்றேன். அவர் மதியம் விடுப்பில் சென்றிருந்தார். திரும்பி விட்டேன்.
மாலை வீட்டுக்கு வந்தபோது எனக்கொரு எண்ணம் வந்தது.
'சரி. மரியாதை தரவில்லை என்பதற்காக நாம் ராஜினாமா செய்கிறோம். ஆனால், கல்லூரிக்குள்ளே கெட்ட
வார்த்தை பேசிய முதல்வருக்கு என்ன தண்டனை?'
'நடந்ததற்கு வருந்துகிறேன்' என்று சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? எனக்கு மனம் ஒப்பவில்லை. அவர் செய்த தவறுக்கு நான் தண்டனை அனுபவிப்பதாகப் பட்டது.
எனவே, இன்னொரு கடிதம் எழுதினேன்.
இந்த முறை, கல்லூரியின் Chairperson, MD, CEO ஆகியோருக்கு அனுப்பினேன். CC-யில் முதல்வர், COO, CAO, AO மற்றும் S&H HoD.
நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கடைசியில் பின்வருமாறு எழுதினேன்.
துளிகூடத் தயக்கமே இல்லாமல் கல்லூரிக்குள்ளேயே கெட்ட வார்த்தை பேசும் ஒருவருக்கு தொழில் தர்மமோ, சுய கட்டுப்பாடோ இல்லை என்றே அர்த்தம்.
ஒரு கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எனவே, இதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதை அனுப்பியது மே 10, இரவு 9:19.
மே 12 - திங்கட்கிழமை
காலையில் வழக்கம் போல கல்லூரிக்குப் போனேன். Bio metric-ல் ரேகை வைத்தேன்.
முதல்வரைப் பார்க்க வேண்டுமென்றால், 10 மணிக்கு மேல்தான் பார்க்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது கல்லூரியில். எனவே, பையை அங்கேயே வைத்துவிட்டு ஸ்டாஃப் ரூமுக்குப் போனேன்.
HoD 10:30 மணிக்கு வந்தார். அவருடைய வேலைகளைப் பார்த்தார். நான் காத்திருந்தேன். அடுத்த நாள் டெஸ்ட்டுக்கு என்னுடைய வகுப்புக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படாமலேயே இருந்தது. எனக்கு ஒரே குழப்பம்.
ராஜினாமாவுக்கு விண்ணப்பித்து விட்டேன். இப்போது என்னை உடனே அனுப்பிவிடுவார்களா? அல்லது, இரண்டு மாதம் நோட்டிஸ் பீரியட் வரை இருக்க வேண்டுமா?
பொதுவாக அந்தக் கல்லூரியில் என்ன வழக்கம் என்றால், ஆசிரியர்களே தாமாக ராஜினாமாவுக்கு விண்ணப்பித்தால், இரண்டு மாதம் வேலை செய்து விட்டுத்தான் போக வேண்டும். அது ஏன் அப்படி?
ஏனென்றால், அவர்கள் உடனடியாகப் போய்விட்டால், கல்லூரி நிர்வாகத்தால் உடனடியாக இன்னொரு ஆசிரியரை நியமிக்க முடியாது. வேலைகள் பாதியிலேயே நிற்கும். இரண்டு மாதத்திற்கு முன்பே சொல்லிவிட்டால் அதற்கு தகுந்தவாறு கல்லூரி நிர்வாகத்திற்கு வேறு ஒரு ஆசிரியரை நியமிக்க அவகாசம் கிடைக்கும். நியாயமான ஒரு விசயம்தான்.
அப்படி ஒருவேளை, ஏதாவது ஓர் ஆசிரியர் உடனடியாக வேலையை விட்டுப் போக வேண்டும் என்றால், அவருடைய இரண்டு மாத சம்பளத்தை கல்லூரியில் கட்டினால் தான் அவருடைய சான்றிதழ்களைத் தருவார்கள். இது ஒருவகையான எச்சரிக்கை போலத்தான்.
தவறு செய்தால் அபராதம் கட்டவேண்டும் என்ற விதியின் நோக்கம் பணம் வசூல் செய்வதல்ல. 'அபராதம் கட்டவேண்டுமே' என்ற பயத்தில் தவறுகள் செய்யாமல் இருப்பார்கள் என்பதே அதன் நோக்கம்.
அதேபோலத்தான், கல்லூரிகளிலும். இரண்டு மாத சம்பளத்தைக் கட்ட வேண்டுமே என்ற பயத்தின் காரணமாக, ஆசிரியர்கள் உடனடியாக வேலையை விட்டுப் போகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த அபராதம்.
ஆனால், கல்லூரி நிர்வாகமாகப் பார்த்து ஓர் ஆசிரியரை பாதியிலேயே வேலையை விட்டு நீக்குகிறது என்றால், அந்த ஆசிரியர் உடனடியாகக் கிளம்பிக் கொள்ளலாம். Rather, உடனடியாகக் கிளம்ப வேண்டும்.
அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கினால், அடுத்த வேலையில் சேரும் வரை, அவர் எப்படிச் சமாளிப்பார்? அதெல்லாம் பற்றி கல்லூரி நிர்வாகம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதை விடுங்கள்.
என்னுடைய சிந்தனை என்னவென்றால், என்னை உடனே போகச் சொல்லுவார்களா அல்லது இரண்டு மாதம் வேலை செய்யச் சொல்லுவார்களா என்பதே. இரண்டு மாதம் இருக்க வேண்டுமென்றால் நான் போய் கேள்வித்தாள் தயாரிக்க வேண்டுமே?
நான் செய்த ராஜினாமா விண்ணப்பம் HR App-ல் காட்டவில்லை என்று S&H HoD எல்லாரையும் போனில் கூப்பிட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.
காத்துக்கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டு, என்னுடைய வேலையாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும், அவர் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் சொன்னார்.
எப்படியோ அந்தக் குழப்பம் சரி செய்யப்பட்டு HR App-ல், என்னுடைய ராஜினாமா அங்கீகரிக்கப்பட்டது.
பலமுறை அலைந்து திரிந்து, என்னுடைய சான்றிதழ்களை நான் கையில் வாங்கியது டிசம்பர் 17.
அதற்கு முன்பாகவே நான் வேறொரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அங்கே என்னுடைய சான்றிதழ்களின் நகலை மட்டும் வாங்கிக் கொண்டு வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். ஒருவேளை, அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே வேலையில் சேர முடியும் என்றிருந்தால், ஆறு மாதங்கள் நான் வேலையில்லாமல்தான் இருந்திருக்க வேண்டும்.
பாகம் ஐந்து -
சில கேள்விகள்
நடந்த இந்த சம்பவங்களில் எனக்கு சில கேள்விகள் உள்ளன.
1) AV-க்கு பின்னணி குரல் தரவேண்டும் என்பதை Annual Report Meeting நடந்த ஏப்ரல் 15 அன்றே ஏன் சொல்லவில்லை? அதை ஏன் அவ்வளவு தாமதமாக மே 5ஆம் தேதி சொல்ல வேண்டும்?
1.a) அந்த AV-யைத் தயார் செய்ய அவ்வளவு நேரம் எடுக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதுவும் மாணவர்களின் உதவியோடு. அப்படி இருக்கையில், நான் ஒரே ஆளாக, ஒரே மாலையில் அதற்கான ஸ்க்ரிப்ட் எழுத வேண்டும் என்பது என்ன நியாயம்?
(அது முன்னமே அறிவிக்கப் பட்டது என்று யாராலும் நிரூபிக்க முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் Google Chat Space-ல் தான் நடக்க வேண்டும் என்று கல்லூரியில் ஒரு விதி இருக்கும் போது, Annual Report Meeting-ல் விவாதித்தவற்றை Chat Space-ல் பதிவிடாத போதே, அதில் சொன்ன எதுவுமே கூட இல்லையென்றுதான் ஆகும்.)
2. 10:30 மணிக்கு நான் தவறான ரிப்போர்ட் அனுப்பினேன். 11 மணிக்கு கோபமில்லாமல் அல்லது கோபத்தைக் காட்டாமல் இயல்பாக ரிப்ளை அனுப்பினார் முதல்வர். அப்போதுகூட, "நீங்கள் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை?
ஆனால், 12 மணிக்கு நான் சரியான ரிப்போர்ட் அனுப்பிய போது, ஒரு நாகரிகத்துக்காக கூட ரிப்ளை அனுப்பவில்லை. ஏன்?
11 மணிக்கே தவறான ரிப்போர்ட்டை பார்த்து இயல்பாக ரிப்ளை அனுப்பிய முதல்வர், 12 மணிக்கு கோபமானது ஏன்? இடையில் இருந்த 1 மணி நேரத்தில் என்ன காரணத்தினால் கோபமானார்?
3. கல்லூரி வளாகத்துக்குள் ஒரு மாணவர் தகாத வார்த்தை பேசுவதை முதல்வர் கேட்கிறார் என்றால், அவர் என்ன செய்வார்?
3.a) அதைக் கண்டிப்பார் என்றால், அவரே தகாத வார்த்தை பேசுபவர்தானே? அதைக் கண்டிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
3.b) அதை அவர் கண்டிக்க மாட்டார் என்றால், அப்படிப்பட்ட முதல்வர் இருக்கும் கல்லூரியில் பெற்றோரால் எப்படி தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முடியும்?
4. அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது, அங்கே நடமாடிக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லாரும் அவருடைய மகளின் வயதில் இருந்தவர்களே. அவருடைய சொந்த மகள் பக்கத்தில் இருக்கும் போதும் அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பாரா? அல்லது, அவருடைய சொந்த மகள் இருக்கும் இடத்தில் அவரின் காதுபட வேறு யாராவது அதே வார்த்தையைச் சொல்லியிருந்தால் அதை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பாரா?
5. MoC-யை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று முதல்வர் என்னிடம் சொன்னார். நான்தானே ஸ்க்ரிப்ட் எழுதினேன் என்பதற்காக, கிளம்பும் போது, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடம் இருக்கும் வரை காத்திருந்துவிட்டு, நைசாக MoC மாணவர்களின் கையில் இருந்த ஸ்க்ரிப்ட் பேப்பரை வாங்கி என்னுடைய பையில் போட்டுக் கொண்டு, என்னால் கிளம்பியிருக்க முடியாதா? நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை?
6. நான்தான் அங்கே இல்லையே தவிர, எனக்கு தரப்பட்ட வேலை
அங்கே சரியாக நடந்ததா இல்லையா? அதில் என்னுடைய பங்கு இருக்கிறதா இல்லையா? MoC-யை சரியாகச் செய்த மாணவர்களால், அங்கிருந்த ஆசிரியர்களின் உதவி இல்லாமலேயே சரியாகச் செய்திருக்க முடியாதா?
7. எனக்கு அனுப்பிய மெயிலில் முதல்வர் ஒரு விசயம் குறிப்பிட்டு இருந்தார். அதாவது, நான் அனுப்பிய தவறான ரிப்போர்ட்டை சத்தமாகப் படித்ததால், ஆண்டு விழாவுக்கு களங்கம் வந்தது என்று.
அவருக்கு நான் தவறான ரிப்போர்ட் அனுப்பியது, முந்தைய இரவு 10:30 மணிக்கு. அது தவறென்று தெரிந்தும் அதையே ஏன் மேடையில் வாசித்தார்? அவர் என்ன வாசித்தார் என்பது இன்னுமே எனக்குத் தெரியாது. அவருடைய மெயிலில் அவரேதான் என்னுடைய unworthy report-ஐ வாசித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
8. என்னைப் பற்றி என்னுடைய துறைத் தலைவரிடம் பேசும் போது, முதல்வர் "நேத்து சாயங்காலம் வேலைய முடிச்சுட்டு தான் வீட்டுக்கு கெளம்பணும்னு எனக்கு சொல்லியிருக்கத் தெரியாதா?" என்று கேட்டார். ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பித்த வேலைகள் மே 8 ஆம் தேதி மாலை 4:30 வரையிலுமே வேலைகள் முடியவில்லை என்றால், அது முதல்வரின் நிர்வாகத் திறமையைக் காட்டுகிறதா அல்லது அவரது இயலாமையைக் காட்டுகிறதா?
9. ஒரு டீக்கடை மாஸ்டரிடம் கடையின் முதலாளி ஏதாவது மரியாதைக் குறைவாகப் பேசினால், மாஸ்டர் நடையைக் கட்டி விடுவார். அன்றைய வியாபாரம் அம்பேல். அதனால், எந்தவொரு முதலாளியும் அப்படிப் பேசவே தயங்குவார். டீ மாஸ்டர் வேலையை நான் மிக உயர்வாகப் பார்க்கிறேன். "நாம் கெட்ட வார்த்தையில் பேசினாலும், அதைக் கேட்டுக் கொண்டு போய்விடுவார்கள்" என்று ஒரு கல்லூரி முதல்வர் நினைக்கும் அளவுக்கு தைரியம் அவருக்கு எதனால் வந்தது?
பாகம் ஆறு -
முடிவுரை
சரி, இதையெல்லாம் நான் ஏன் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும்?
ஏனென்றால், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் பல பேராசிரியர்கள் திடீர் திடீரென வேலையை விட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் என்னவென்று மாணவர்கள் யாருக்குமே தெரியாது.
தமிழ் ஆசிரியர் இல்லாமலேயே, ஒரு செமஸ்டர் முழுக்க தமிழ் படித்திருக்கிறார்கள் முதலாமாண்டு மாணவர்கள்.
ஓர் ஆசிரியரைப் பாதியிலேயே அனுப்பினாலும் அதன் மூலம் தங்களுக்கு எந்த நெருக்கடியும் வராது என்ற தைரியம் ஒரு கல்லூரி நிர்வாகத்துக்கு இருந்தால், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அனுப்பப்படலாம்.
நான் வேலையை விட்டுப் போவதற்காவது என்ன காரணம் என்று மாணவர்கள் தெரிந்து கொள்ளட்டும்; ஆசிரியர்களுக்கு எந்த அளவு மரியாதை தரப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இதை எழுதினேன்.
சரி, இதை ஏன் நான் certificates எல்லாம் வாங்கி வெளியே வந்தபிறகு சொல்ல வேண்டும்? முதலிலேயே ஏன் சொல்லியிருக்கக் கூடாது? என்னுடைய certificates-ஐத் தராமல் இழுத்தடிப்பார்கள் என்ற பயத்தினாலா?
நிச்சயமாக இல்லை.
எனக்கு மரியாதை தராத கல்லூரியில், இருக்க விரும்பாமல் தான் நான் வெளியேறுகிறேன். ஒருவேளை, நான் வெளியே போவதற்கு முன்பே இதை மாணவர்களுக்குச் சொல்லியிருந்தால், என்னுடைய வேலையைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்களைத் தூண்டி விடுவது போலாகும் என்ற காரணத்தினாலேயே, இதை முதலிலேயே சொல்லவில்லை.
இதை முழுவதுமாகப் படித்திருந்தாலே, அது நீங்கள் எனக்குச் செய்யும் நன்றி.
நான் முன்னமே சொன்னதுதான். அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு நான் தரவேண்டிய கல்வியை தந்துவிட்டேன் என்ற மனநிறைவுடன் தான் வெளியேறினேன்.
I remember this was posted last May but was taken down very soon. Glad that you've written the remaining portions too.
ReplyDeleteMay 12 - Dec 17 varaikum certificates a kudukama vechurukaradhellam diabolical. Enakellam paadhi usuru dha irundhirukum. 7 months a adha vechutu yenna pannitu irundhanga? Couldn't imagine what all reasons they gave for not returning them.
Neraya vishayangal kathuka mudunjudhu. Self-respect 🫡
"என் முன்னிலையில், என்னிடமே அவர் கெட்ட வார்த்தை பேசுகிறார் என்றால், *அதுவும் எனக்குச் செய்யும் அவமரியாதையே.*" - Reread this several times. Deep.
"அவருடைய சொந்த மகள் பக்கத்தில் இருக்கும் போதும் அவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பாரா? அல்லது, அவருடைய சொந்த மகள் இருக்கும் இடத்தில் அவரின் காதுபட வேறு யாராவது அதே வார்த்தையைச் சொல்லியிருந்தால் அதை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பாரா?" - Ippadiyellam yosikaravara irundhirundha first appadi pesirukave maataru. How profound!
The work pressure and the changes made even until the last minute will put anyone under stress and confusion.
Paagam 5- anaithu kelvigalum nyayamanadhe. Na nenaikaren, andha rendavadhu kelvikana badhil vandhu- first paathutu iyalba pesi maatha sollitaru. After that the disappointment culminated inside him. Sila samayangal la nama memboka oru vishayathuku seri solliruvom. But konja neram kalichu yosichu paatha adhoda perspective maarirukum. Adhudha kaaranama irukumnu nenaikaren. Adhuku first thappu avangalodadhudha. AV panradhu yenamo instant a kedaikumnu nenachutanga pola. Idhenna omelette a that could be whipped up in seconds?
Oru velaya pathi theriyadhavanga adhoda nelivu sullivugala pathi puriyama adhigaram pannitu aadumbodhudha kadupagum. "Yenga neenga vandhu senju kaatunga paapom" nu solla thonum.
Btw I learned a lot. Don't take this down. This will be a good example set out for those who are interested and willing.
Respect to you for standing up for yourself.