வெள்ளிக்கிழமை.
ஒரு கதவு.
தட்டப்படுகிறது.

ஏற்கனவே பளபளப்பாயிருக்கும் அந்தத் தேக்குக் கதவு, மாலையின் செம்மஞ்சள் கிரணங்களினால் மேலும் பளபளப்பு.

மீண்டும் தட்டப்படுகிறது.

தாழ் விடுவிக்கப்படும் ஒலித்துணுக்கு கேட்கிறது. கதவு மெதுவாக உள்வாங்குகிறது. அதன் முழு வீச்சில் சரி பாதியளவு திறக்கிறது. அப்படியே நிற்கிறது.

###
செவ்வாய்க்கிழமை.

கதவு அதே மாதிரி உள்வாங்கியது. அதே சரி பாதியளவு திறந்து அப்படியே நின்றது. மெதுவாக ஒரு கண் மட்டும் எட்டிப்பார்த்தது. ஓர் அழகான பெண்ணின் கண். அழகான பெண்ணின் ஒரு கண்.

"யாருங்க வேணும்?" கொஞ்சும் குயில் போன்றதொரு குரல்.

கரைந்து கரைந்தே கரைந்து போனதொரு காக்கைக்குரலும் தொடர்ந்து கேட்டது.
"நீதான்டி வேணும். ஆஆஆஅ..."

அந்த ஆண் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டான். அவளை அள்ளியெடுத்து, அவனுடைய முகம் புகுந்து போக சௌகர்யம் அமைந்த இடங்களிலெல்லாம், முத்தமிட்டான். அவள் சிரிப்பையும் அடக்க மாட்டாமல், அவனையும் சமாளிக்க முடியாமல் திண்டாடினாள். 

முகத்தை நிமிர்ந்து பார்த்து அவன் சொன்னான்.

"ம்ம்ம்... நீ கதவத் தொறப்பனு நெனைக்கவே இல்ல. ஆஹா, கேஸ் சிலிண்டர் போட வந்த எடத்துல இப்புடி ஒரு சான்ஸாஆஆஆ...!!! ஆஆஆஅ!!!"
மீண்டும் அவன் தன் முகத்தை அவளுக்குள் புதைக்க எத்தனிக்க, அவள் அவனுடைய தலைமயிரைப் பற்றி முகத்தை மீண்டும் நிமிர்த்துகிறாள்.

கூவுகிறாள். 
"ம்ம்ம்... எந்தக் கம்பெனிப்பா நீயி?"

அவன் அவளுடைய நைட்டியில் பொறித்திருந்த ரோஜாக்களைப் பார்த்தான்‌. உவமையெல்லாம் இல்லை. இரண்டும் இல்லை. நிஜமாகவே அவளுடைய நைட்டியின் டிசைனில் இருந்த பல ரோஜாக்கள்.

"ம்ம்ம்... நைட்டி ரோசா கேஸ் கம்பெனி..."

"நைட்டி ரோசாவா? ஏய் அது பக்கத்து வீட்டு ஆயா புக் பண்ண கம்பெனி."

"தெரியும். போயி பாத்த அப்பறம்தா தெருஞ்சுது, ஆயான்னு. பால்கனில உன்னப் பாத்தனா... அப்புடியே வந்துட்டேன்."

"ஏய் என்ன? ஆ!!! அந்த-இத்துப்போன-நைட்டி-ரோசா கம்பெனிக்கு இப்புடியொரு டிப்டாப்பான யூனிஃபார்மா?"

"ஏய்ய்ய்ய், என் கம்பெனிய பத்தி தப்பா பேசுனதுக்கு உனக்கு தண்டனை..."

இந்த முறை அவள் அவனுடைய தலைமயிரைப் பற்றவில்லை.

###
வியாழக்கிழமை.

கதவு அதே மாதிரி உள்வாங்கியது. முழுமையாகத் திறக்க, கதவின் பின்னால் அவள் நின்றாள். 

"யாருங்க வேணும்?"

"மிஸ்டர் சுந்தர மணாளன் இருக்காரா?"

"நீங்க யாருங்க?"

"நாந்தா இந்த உலகத்துல நம்பர் ஒன் பணக்காரன்."

"உங்க பேரே அதானுங்களா?"

"ஏய். எம் பேரு வந்து..."

அவளுடைய டிஷர்ட்டில் எழுதி இருப்பதைப் பார்த்தான்.

BALI

"எம்பேரு, பாலி. பாலிராஜா. நாந்தா நம்பர் ஒன் பண...."

"ஓகே ஓகே. நீ கேட்டவரு இங்க இல்ல. நீ போலாம்."

"ஏய்... அவரு எங்க போயிட்டாரு?

"ஏய்... அவர் ஒரு முக்கியமான எடத்துக்கு பொறுக்கப் போயிருக்காரு."

"ஏய், என்னோட குருநாதரப் பத்தி தப்பா பேசீருவியா?"

அவன் உள்ளே நுழைந்து, அவளை.

###
வியாழக்கிழமை.

கதவு அதே மாதிரி உள்வாங்கியது. முழுமையாகத் திறக்க, கதவின் பின்னால் அவள் நின்றாள்.

கேட்டாள், "நேப்கின் வாங்கீட்டு வந்தீங்களா?"

சொன்னான், "..‌.

"போயி வாங்கீட்டு வந்துருங்க."

கதவு சாத்தப்பட்டது‌.

###
வெள்ளிக்கிழமை மாலை

யின் செம்மஞ்சள் கிரணங்களினால், ஏற்கனவே-பளபளப்பாயிருக்கும்-அந்தத்-தேக்குக்-கதவு மேலும் பளபளப்பு.

மீண்டும் தட்டப்படுகிறது.

தாழ் விடுவிக்கப்படும் ஒலித்துணுக்கு கேட்கிறது. கதவு மெதுவாக உள்வாங்குகிறது. அதன் முழு வீச்சில் சரி பாதியளவு திறக்கிறது. அப்படியே நிற்கிறது.

அவன் உள்ளே நுழைகிறான். அவளைப் பார்க்கிறான். இரண்டு கண்களிலும் நீர் தேங்கி நிற்க, அவள் விம்மிக் கொண்டிருக்கிறாள். அவன் தன்னுடைய பையை அப்படியே நழுவவிட்டு, அவளுடைய கன்னங்களை தன் இரண்டு கைகளாலும் தாங்கியபடியே, அவளை விசாரிக்கிறான். விசாரிக்க விசாரிக்க, அவனுடைய மனதில் ஒரு பயம்.

###
வெள்ளிக்கிழமை மதியம்.

அவன் கல்லூரியில் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான்.

"சண்முகப்பிரியா சொல்லுடா."

சுட்டப்பட்டவன் திருத்திருவென விழிக்க, மற்ற மாணவர்கள் குறைந்த ஒலியில் கெக்களித்தவாறே, அவன் சொன்னதையே மீண்டும் அதே தொனியில் சொல்லிப் பார்த்து இரசித்தார்கள். 

சண்முகப்பிரியன் எழுந்து நின்றான்.

"ஸிட்டௌன் ப்ளீஸ்."

உட்கார்ந்தான். தலையைக் குனிந்து ஆசுவாசமானான். 

"ஸிட்டௌன் அன்ட் டெல் மி."

சிரிப்பொலி.

சண்முகப்பிரியன் மௌனம். 

"ஓபன் யுவர் மௌத் அண்ட் அட்ட(ர்) சம் ப்ரெஷஸ் வர்ட்ஸ்."

அனைவரும் மௌனம்.

இப்போது அவனுடைய செல்ஃபோன் ஒலிக்கிறது.

ராவண மவன்டா.
ஒத்தயில் நிக்கிற எமன்டா.

சண்முகப்பிரியனின் மீது நிலை குத்திய பார்வையை விலக்கி  அனைவரையும் ஒரு புன்முறுவலுடன் பார்த்தான்.

அத்தன பிம்பமும் அவன்டா.
உலகாண்டவன்டா.

"ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி."

செல்ஃபோனை மௌனமாக்கினான். சண்முகப்பிரியனைப் பார்த்தான். சண்முகப்பிரியன் சொன்னான்.

"நைஸ் ரிங்டோன் சார்."

சிரித்தார்கள்.

அவனுடைய சிரிப்பொலியும் சத்தமாகக் கேட்டது. இன்னும் எதற்கு, அவன் அவன்? சுந்தர மணாளன் என்கிற சுந்தரன் என்கிற சுந்தர் என்கிற வசீகரன் என்கிற கொடூரன்.

சுந்தரனின் அல்லது சுந்தரின் சிரிப்பு, சத்தமாகக் கேட்டது. 

ஆனால் சுந்தர் இப்போது வகுப்பிலில்லை. கல்லூரியிலேயே, வேறு எங்கோ. சிரிப்பினூடே செல்ஃபோனில் பேசினான்.

"டேய்... நா இப்போ கெட்டவார்த்த பேச முடியாத நெலமைல இருக்கறண்டா..."

"பேசூ. நீதா தைரியமான ஆளாச்சே. பேசூஉ."

"நா கண்ணாத்தாள் படம் பாக்கல."

"அப்போ உடு. சரி டேய் நண்பா!!! எப்படியாச்சும் நைட் ஸ்டேவுக்கு மட்ட்டும் பர்மிஷன் வாங்கிடு நண்பா. நெறைய்ய்யா கொட்டித் தீக்கணும்."

"ஓகே டா... ஓகே டா. நா இப்போ கால் பண்றேன், அவளுக்கு."

###
வெள்ளிக்கிழமை மாலை.

அவள் இப்போது அவன் மீது சாய்ந்து அழுகிறாள். அவன் தன்னாலில்லையென்றவொன்றிற்காக மட்டும், சற்றே ஆறுதலடைகிறான்‌. 

அவள் சொல்கிறாள். அவள் என்ன அவள்? வாகைக் குழலாள் என்கிற வாகை. 

வாகை சொல்கிறாள், "அது ஒரு விடியோ."

அவன் உடனடியாக அவளைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைக்கிறான். கண்களைத் துடைத்து விட்டு, தன்னுடைய மார்பில் அவளுடைய தலையைச் சாய்த்துக் கொள்கிறான். அவள் அழுகைக்கு மரியாதை தந்து, அப்படியே தலைமுடியை வருடித் தருகிறான். 

வழிந்து வரும் நீரைத் துடைத்து விடுகிறானேயொழிய, அழவேண்டாம் என்று சொல்லவில்லை.

அப்படியே அவளைச் சாய்த்துக் கொண்டே, எட்ட்ட்ட்டி,,, அவளது செல்ஃபோனை எடுக்கிறான். பாஸ்வர்ட் போட்டு யூட்யூபின் வாட்ச் ஹிஸ்டரிக்குள் நுழைகிறான். 

அவள் அதை எட்டிப் பார்த்துவிட்டு, செல்போனை அவனிடமிருந்து வாங்குகிறாள். அவனைப் பார்த்து பொய்க்கோபம் காட்டுகிறாள். செல்லக்கோபம். யூட்யூப் பக்கத்தை மூடிவிட்டு, இன்ஸ்டக்ராம் பக்கத்தைத் திறக்கிறாள். அவனிடம் தருகிறாள். கல்யாணமாகிப் போகும் ஒரு பெண்ணும், அவளது தந்தையும். அழுதபடி பாசங்காட்டிக் கொள்கிறார்கள். வாகையின் அழுகை இப்போது நின்றுவிட்டது‌. செல்லக் கோபம் போல, ஒரு செல்லச் சோகத்துடன் சொல்கிறாள்.

"இப்போதா அதப் பாத்துட்டு இருந்தேன்."

"ச்சேரி ச்சேரி ச்சேரி!" என்று சொல்லியபடி, அவளுடைய கன்னங்களை வருடிக் கொஞ்சிக் கொள்கிறான். 

நன்கு சௌகர்யமாக அமர்ந்து கொள்கிறான்‌. இத்தனை நேரமும் அவளுடைய முகம், அவனது மார்பிலும் தோளிலும்தான். இனிமேலும் அப்படியே தொடர்கிறது‌.

ஏதோ மின்சார விசையால் தூண்டப்பட்டவன் போல, சட்டென்று சொல்கிறான்.

"ஓக்க்கே! கெளம்பு!!"

அவள் களுக்கென்று சிரிக்கிறாள்.
அவனும் தான் சொன்னதில் இருந்த நகைச்சுவையை இரசித்தவனாக சிரித்துக் கொள்கிறான்.

"நா மட்டும் ஒரு ராஜஸ்தான்காரனா இருந்திருக்கணுமாமா..."

மீண்டும் சிரித்தாள்.

"ராஜஸ்தான் பாலைவனத்துக்கு நடுவுலதா வீடாமா..."

"ம்ம்ம்ம்ம்ம்ம்... அப்படி இருந்திருந்தா, எங்கப்பா பொண்ணே குடுத்துருக்க மாட்டாரு."

"கல்யாணப் பந்தில எல்லாம் ராஜஸ்தான் காரங்களா இருப்பாங்களாமா. 'அரே ஜீ! சப்பாத்தி எங்கேனு' கேப்பாங்களாம். அப்பா பாத்துட்டு... 'சப்பாத்தியா?'..."

சிரிக்கிறாள்.

"அண்ணா கால் பண்ணிருந்தாரு."

"என்ன சொன்னாரு?"

"உங்கள அப்படியே புகழ்றாரு போட்டு."

"அப்படியா? ஏனாம்?"

"உடனே குதூகலமாயிடுவாரு."

"ம்ம்ம். ஆமா! ஆமா! சொல்லு. கேட்டு பெருமிதப்பட்டுக்கறேன், க்ரித்திக் கிஷோர் மாதிரி."

"ஹா ஹா... நீங்க வந்து... இப்போ ரொம்ப மாறிட்டீங்களாம்ம்ம்ம்... பொறுப்பாயிட்டீங்களாம்ம்ம்ம்... அஞ்சு நிமிசம் புகழ்றாரு."

"அஞ்சு நிமிசமா?" மேலும் குதூகலம்.

"ஆமா. ஆனா... ஒரு ஒன்ற மணிநேரம் அவனப் பத்தி பொலம்புனாரு‌. அந்த ஒன்ற மணி நேரத்துல, ஒரு அஞ்சு நிமிசம் உங்களப் பத்திப் புகழ்ந்தாரு."

"ம்ம்ம். அவன்கூட கம்பேர் பண்ணா யார வேணாலும் புகழலாம், தாராளமா."

"அப்றம்ம்ம் (மழலைத் தொனியில்)...

வரச் சொன்னாருப்பா. அண்ணியும் வரச் சொன்னாங்க."

"ஓக்கே. கெளம்பலாமா?"

"ஆனா..."

"ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல. கெளம்பு கெளம்பு."

"ஆனா நம்மகிட்ட டூ ஹண்ட்ரட் தா இருக்கே!"

"அதெல்லா பாத்துக்கலாம் கெளம்பு."

"உங்களுக்கு..."

"எனக்கு?"

"இன்ஸ் இல்லையே!"

"அதெல்லாம் எடுத்துட்டுப் போயி அங்க தொவச்சுக்கலாம்."

"அப்படியா? ஆமா எனக்கும் போலாம்னுதா இருக்கு. பேக் பண்ணி எடுத்துக்கலாம்."

"ஓகே. சூப்பர்."

"அம்மா...!!! இப்போ எல்லாம் நாலு மணி ஆனாவே, எப்படா அவ வருவாங்ங்ங்ங்கற... மாதிரி ஆயிடுது எனக்கு. அப்படி ஆயிடுச்சு என் நெலமைனு சொல்றாரு. நா சொன்னேன்‌. அண்ணா, உங்களுக்காவது நாலு மணி ஆனாத்தான் அப்படி இருக்கு. எனக்கு லன்ச் டைம் ஆனாவே... எப்படா அஞ்சு மணி ஆகும்... எப்படா அவரப் பாக்கலாம்னு ஆயிடும்னு சொன்னேன்."

அவன் அவளைக் கட்டிக் கொள்கிறான்.

"எப்படா இந்தச் செல்லத்த பாக்கலாம்னு ஆயிடும்னு சொன்னேன்" என்று அவனுடைய தாடையைப் பிடித்து கொஞ்சல் மொழி பேசுகிறாள்.

மேலும் சொல்கிறாள், "நம்மள விட மோசமான நெலமை போலன்னு நெனச்சுருப்பாரு‌."

"ம்ம்ம்ம்."

"அப்பறம் நானு, அண்ணா இதெல்லாம் ஒருவகை காதலின் மிகுதிதான்னு சொன்னேன்‌."

"ம்ம்ம், சூப்பர்‌. அப்படித்தா சொல்லணும். ஓகே ஓகே. கெட் ரெடி கெட் ரெடி."

"நா என்ன, அவ்வளவுதான். நைட்டி மாத்திட்டு சுடிதார் போட்டா முடுஞ்சுது."

"ஓகே. அப்பறம்... பா..."

"ம்ம்ம்?" இதமாக.

"உன்ன அஞ்சானூர்ல விட்டுட்டு நா அப்புடியே வந்துடவா?"

"எங்க?"

"அதான் சொன்னேனே? கோபி போறேன்னு."

அமைதியாகிவிட்டாள்.

சில வினாடிகள் கழித்து.

"என்ன்னப்பா?"

அமைதி.

"ஸ்ஸ்ஸ் அப்பா, இதான்பா செம டென்ஷன் ஆகுது எனக்கு."

"நான்தா காலைல போயிக்கோங்கனு சொன்னேன்ல?"

"பா... அந்த நைட் லைஃப நா ரொம்ப மிஸ் பண்றேன்பா. ரொம்ப நாளாச்சுப்பா. என்னப்பா இது? காலைல போறது... நைட் போறதுன்னு? இப்போ என்னப்பா ஆயிடும் நைட் போனா? ஏன்னு சொல்லு."

"சரி நீங்க போயிட்டு வாங்க. நா இங்கேயே இருக்கேன்."

"ஏன்ன்ன்ன்ன்ப்பா?" ஆற்றாமை கொப்பளிக்க.

அமைதி.

அவன் அங்கேயே ஓரிரு நிமிடங்கள் அமர்ந்திருக்கிறான். பின்னர் எழுந்து வந்து, வேட்டிக்கு மாறிக் கொள்கிறான். செல்ஃபோனை எடுக்கிறான். ராமிடம் பேசியபடியே வெளியே போகிறான். வெளியே சென்று படிக்கட்டில் அமர்கிறான்‌. பவா செல்லத்துரை வீடியோ பார்க்கிறான். இரண்டொரு நிமிடங்களில் மீண்டும் உள்ளே போகிறான்‌. அதற்குள் அவள் பாத்ரூம் போய்விட்டு வந்து ஹால் கதவைத் திறக்கிறாள். அவன் அவளைப் பார்த்து கோபமாகக் கேட்கிறான்.

"இப்புடியேதா இருப்பியா?"

அவள் அவனை வெறித்துப் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் அத்தனை பரிதாபம். 

இப்போது எரிச்சலான முகத்தோடு, ஒரு முடிவாகக் கேட்கிறான். 

"ஊருக்குப் போலாமா, வேண்டாமா?"

அவள் அப்படியே நிற்கிறாள். வெளியே போகிறான். திண்டைப் பிடித்து நின்று வீதியைப் பார்க்கிறான். உள்ளே போகிறான். படுக்கையறைக்குள் போகிறான். பேண்ட் சட்டைக்கு மாறுகிறான். ஹாலுக்கு வந்தால், அவள் ஸோஃபாவில் அமர்ந்திருக்கிறாள்.

"சரிப்பா, நா போயிட்டு வரேன்" என்கிறான்.

அவள் இயல்பான குரலில் "ஓகே" என்கிறாள். 

அவன் வெளியேறுகிறான். 

அவள் கதவைச் சாத்துகிறாள்.

லன்ச் டைமிலிருந்து திறப்பதற்காகக் காத்துக் கிடந்த கதவு, மொத்த இரவுக்குமாக மூடிக்கொள்கிறது.

தளும்பி வழியுது காதல்
அத்தியாயம் ஒன்று - காதல்

Comments

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?