முற்றும்

முற்றும் ஒருமுறை நீதிமண்டபத்தை நாடியது. முற்றும் என்றால் முற்றும் என்ற தமிழ்ச்சொல்தான். அது எதிர்த்து வழக்குத் தொடுத்த எழுத்து இப்போதுதான் ஆரம்பித்துள்ள இந்தக் கதையில் ஏற்கனவே இரண்டு முறை வந்துவிட்டது. "தான்" தான் அந்த எழுத்து. முற்றுமின் புகார்க்கடித வடிவ வாதம் இதுதான்.
"முற்றும், தான் ஆகிய இரண்டுமே தமிழ்ச்சொற்கள்தான். இரண்டிலுமே இரண்டு ஜாதி எழுத்துகளுமே சரிவிகிதமான பெரும்பான்மையுடன்தான் உள்ளன. வல்லின, மெல்லின ஜாதிகள்தான். முற்றுமைக் காட்டிலும் தான் எந்த விதத்திலும் ஒருபடியேனும் உயர்ந்தது என்று சொல்ல எந்தவொரு ருசுவும் இல்லை. அப்படியிருக்க, முற்றுமுக்கு ஏன் ஓர் அநீதி காலங்காலமாக இழைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது? இட ஒதுக்கீடுதான் அந்த அநீதி. எங்கும் நிறை பரப்பிரம்மமாக, எங்கும் விரி ஆகாசமாக தான் எங்கெங்கும் நிரம்பியிருக்க, உதிர்வதற்காக மட்டுமே முளைக்கும் மயிரைப் போல, காலங்காலமாக புதினங்களை முடித்துவைக்கும் 'எழவு' வேலைக்காக மட்டுமே முற்றும் பரம்பரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் பற்பல சிக்கல்கள். அவையாவன,
1) புதுமைவிரும்பி புண்ணாக்குகள் சிலர், உள்ளூர் கரகாட்ட கோஷ்டியை தவிர்த்துவிட்டு, "சுபம்", "நிறைவு", போன்ற வெளியூர் ஆட்டக்காரர்களை அழைத்துவந்துவிடுவார்கள். என்னதான் கனகா போலவே அவையெல்லாம் ஈர்ப்புவிசையுடன் இருந்தாலும், நமது பிழைப்பு கெட்டுவிடுமே!

2) ஒரு குறிப்பிட்ட கதை வாசகர்களுக்கு பிடித்துத் தொலைந்துவிட்டதெனில், அது முடிவதையே விரும்ப மாட்டார்கள். என்னவோ அந்தப் புத்தகத்தைக் கடையில் வாங்கும்போது, கடைக்காரர் இவர்களிடம், "இந்தப் புத்தகம் படிக்கப் படிக்கத் தீராது!" என்று 'ங்கொப்புரானே சத்தியமாய்ச்' சொன்னதுபோல, கடைசிப் பக்கத்தைப் படித்துமுடித்துவிட்டு, ஏக்கம், சோகம், தவிப்பு, ஆற்றாமை, புழுங்கல் என அத்தனை எதிர்மறை சக்திகளையும் வெளியிடுவார்கள். அவற்றின் தாக்குதல்களால்தான் எங்கள் சராசரி வாழ்நாளின் அளவும் குறைந்துவிடுகின்றன. எப்படியா? பெளதிக மொழியில் கீழேயும், மொழியியல் மொழியில் மேலேயும் படியுங்கள்.

3) அதிகபட்ச உயிர்சேத அபாயமுள்ள பிரதேசத்தில்தான் நாங்கள் குடியமர்த்தப்படுகிறோம். கடைசிப்பக்கம். ஒரு புத்தகம் கருத்துமுதல் வாதத்தின் அடிப்படையில் அமரத்துவம் பெறக்கூடியதுதான் என்றாலும், பொருள்முதல் வாதத்தின்படி அது அழியக்கூடியதே! அப்படி ஒரு புத்தகம் மரணிக்கத் தொடங்கும்போது முதலில் செயலிழக்கும் உறுப்பு எங்கள் மாகாணந்தான். கரையான்களின் பசி, பஜ்ஜி வைத்துக் கொடுத்தல் போன்றவற்றால் நிகழும் அகால மரணங்களும், விரல்களின் தொடர் தீண்டலால் நேரும் இயற்கை மரணங்களும் அழித்து முன்னேறும் எல்லையோரப் பகுதியினர் நாங்களன்றி வேறெவர்? - Wherever!

4) புதினங்களின் முடிவுகள் தவிர்த்து, முற்றும் உலவுமிடமும் ஒன்றுண்டு. ஆனால், வைப்பாட்டியைப் பார்த்துவரும் ஆணைப்போல, முற்றும் அதை மறைத்துத்தான் வைக்கவேண்டும். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும். அந்தளவிற்கு அதன் பொருளை தகவமைப்புச் செய்துவிட்டார்கள். மிகப் பிரபலமான இருப்பிடந்தான் அது. முற்றும் துறந்த முனிவர். எதைத் துறந்தார் என்பதில் வந்தது வம்பு.

எல்லாம் சரிதான். ஆனால், இதற்கெல்லாம் காரணம் மொழியைக் 'கொரங்கு பெடலில்' மட்டுமே கையாளத் தெரிந்த மனிதர்கள்தானே? அப்படியிருக்க, முற்றுமானது சக பிரஜையான தானின் மீது குற்றம்சாட்ட வேண்டிய காரணம்தான் என்ன? தன்னைவிடச் சிறிய - தன்னைப்போல தனித்துவமான பொருள் இல்லாத -- இடத்திற்குத் தகுந்தமாதிரி மாற்றி மாற்றிப் பேசக்கூடிய -- ஒரு காப்பியத்தையே மூன்று மாத்திரைகளில் காலிசெய்துவிடும் வல்லமை பொருந்திய தனக்கு சற்றும் நிகரில்லாத -- அடுத்தவரின் பேச்சுக்கு 'ஜால்ரா' மட்டுமே போடும் தானின் மீது கொண்ட பொறாமையாக இருக்கலாம். முற்றும் தான் தான் பேசுபொருள் என்றால்கூட, முற்றுமால் பீத்திக்கொள்ளவே முடியாது. ஏனென்றால், அவ்விடத்திலும் தானின் 'ஜால்ரா' தான் தனியாவர்த்தனம் செய்கிறது. ஆற்றாமை இருப்பது இயல்புதானே?

சரி, தான் என்னதான் சொல்கிறது?

"ஒரு மூடுபனி சர்வாதிகாரம் நிலவும் பணக்கார வீட்டில் பிறந்ததனால், ஒரு பிள்ளை பாவம் செய்வதாகுமா? நானே நினைத்தாலும் என்னால் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போகமுடியாது. டோல்பி அட்மாஸுடன், HD LED முன்னால் ஏசி போட்ட அறையில்தான் என்னால் படம் பார்க்கமுடியும். என்ன? முதன்முதலாக தானின் குரலில் சோகம் தொனிக்கிறதா? அது, காட்சிப்பிழை. சோகம் எப்போதுமே எங்களுடந்தான் இருக்கிறது. உங்களின் பூதக்கண்ணாடிகள் இப்போதுதான் வாய்ச்சுவாசத்தின் நீராவி படர் பூச்சுப் பூசி துடைக்கப்பட்டிருக்கின்றன. எங்குமே இருத்தல்தான் சிறப்பென்று எங்ஙனம் சொல்லவியலும்? முற்றும் போன்ற சமூகநீதிக் காவலர்களே பதில் சொல்லட்டும். ஒரு இருப்பிடத் தேர்வு என வந்தால், அவர்கள் ஒரு அகராதிப் புத்தகத்தில் இருக்க விரும்புவார்களா, அல்லது திருக்குறள் புத்தகத்தில் இருக்க விரும்புவார்களா? ஒரு சொல்லகராதியைக் காட்டிலும் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் தரும் இடந்தானெது? ஏன் அச்சமூகநீதி உமக்குக் கசக்கிறது? "தெய்வச்சிலைகள் கருவறைக்குள்ளே மட்டுந்தான் இருக்கிறது. திருவோடுகளோ எங்கும் நிறைந்துள்ளன. எனவே, திருவோடுகளே சிறந்தவை" எனக் கூறுவீர்களா? அதாவது, வியாபித்திருத்தலை சிறப்புடைமைக்கு ஒரு criteria-வாக எடுத்துக் கொள்வீர்களா? (மற்றபடி, சிறந்தது, சிறப்பில்லாதது என்ற கருதுகோள்களே அபத்தமானவை. அவ்வப்போது ஊற்றப்படும் தண்ணீரையும், பீடிப் புகையையும் மட்டுமே கொண்டு, குடலில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தகவமைப்பைத் திணிக்கப்பட்ட மூளையைக் கொண்ட ஒரு யாசகருக்கு, தெய்வச்சிலையைவிட திருவோடே சிறப்பானது).

சிற்சில இடங்களில் மட்டுமே இருந்தாலும், மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள டெய்லர் கடையைப் போல, எழில் கொஞ்சும் சோலைகளிலே உலவ நீங்கள் வாய்த்திருக்கிறீர்கள். இரசனை நெஞ்சம் கொண்ட தேவதைகளின் கண்கள் உங்களது கடைசிப்பக்க தரிசனத்துக்குத் தரும் முக்கியத்துவமே அலாதியானது. மிதமிஞ்சி சாராயம் குடித்துவிட்டு இரவில் வண்டி ஓட்டும் ஒருவன், சாலையோரம் படுத்துறங்கும் ஒரு சிறுபூனையைக் கடப்பதைப் போலத்தான் எங்களை வாசகர்கள் கடந்துசெல்கிறார்கள். எப்போதாவது மட்டுமே கடந்தாலும், நீங்களெல்லாம் இரவு நேர டீக்கடைகளாகி விடுகிறீகள் அவர்களுக்கு. முக்கியத்துவம் ஏதுமின்றி மற்றவரையே சார்ந்திருத்தல் என்பது எவ்வளவு பெரிய வலியென்று தெரியுமா உமக்கு? ஒரு பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்-டில் இருக்கும் ஆங்கில ஆசிரியரைப் போன்றோர்தான் நாங்கள். முந்தைய வாக்கியத்தில் வந்த 'தான்' என்ற எங்கள் ஆளை, எத்தனை பேர் கவனித்தீர்கள்?

அடுத்து என்ன? மரணம் உங்களைத் தான் அதிகமாகவும், முதலிலும் தாக்குகிறதா? ஒரு தெருவில் நாயாக நூறாண்டு வாழ்வதைக் காட்டிலும், அந்தத் தெருவின் காவல்காரனாக ஒருநாள் வாழ்தலே விருப்பத்துக்குரியது என்று சொன்னால்கூட மறுப்பீர்களா என்ன?

எங்களையும் முற்றிலுமாக முக்கியத்துவமே இல்லாதவர்களென முத்திரை குத்திவிட முடியாது. நான் ஒரு கதை சொல்கிறேன். முதலிரவு முடிந்த அடுத்தநாள் காலை. ஓர் ஆணின் வாழ்வில் மிக அழகான காலைகளுள் ஒன்று. தன்மீது வெதுவெதுப்பைப் படரவிட்டபடி படுத்திருக்கும் புதுமனைவியின் முக்கால்வாசி மூடிய இமைகளின் இடுக்குகளினூடே தெரியும் அவளது கண்களின் சோர்வைப் பார்த்து, சட்டை போடாமலிருந்தாலும் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டே கணவன் கேட்கிறான், "திருப்தியா?" என்று. அதற்கு மனைவி 'திருப்தி' என்று மட்டும் சொன்னால், ஒரு மணிரத்னம் படக் காதல் காட்சி போல இருக்கும். அதுவே, 'திருப்தி தான்' என்று சொல்லிவிட்டாளெனில், அந்தக் கணவனுக்கு முப்பது நாள்களுமே 'மூன்று' நாள்களாகும் நிலைமை வெகுதூரத்தில் இல்லை என்று பொருள். அவையோர்காள்! சான்றோர்காள்! இந்தளவு முக்கியத்துவம் போதுமா?

மற்றவர் பேசுபொருளாய் இருக்கும் இடத்திலும் கூட, உரிச்சொற்கள் (pronouns) என்ற பேட்ஜ் குத்திக்கொண்டு ஊடுருவி விடுகிறோம்; அனைத்து வீட்டுக் கல்யாணத்திலும் மணவறையாக ஒரு சீட் பிடித்துவிடுகிறோம் என்றொரு குற்றச்சாட்டு உண்டல்லவா எம்மீது? இதற்கு பதில் சொல்லுங்கள். கதாநாயகன் போலவே சண்டைப்போடும் ஒரு டூப் பறந்து ஒருவனை உதைக்கிறார். தியேட்டரில், சீட்டின் அடியே குனிந்து செல்போன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு இடைஞ்சல் அதிகமாகிறது. அந்தப் பெருஞ்சத்தம் அந்தக் கதாநாயகனுக்கா, இல்லை அந்த தாமோதரன் என்ற ஸ்டண்ட் கலைஞருக்கா?

அடுத்து வருவது, தீர்ப்பு நேரம். பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு கதைகேட்கும் குழந்தையின் பொறுப்புணர்ச்சியோடு இருதரப்பு வாதத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி சர்வம் பேசத் தொடங்கினார்.

"இருவருமே, அவரவருக்கு நியாயமாகப் பட்டதைச் சொன்னீர்கள். ஆனால், நியாயம் என்பதே ஓர் ஏமாற்று வேலைதான். இடம், பொருள், காலம் ஆகியவற்றைப் பொறுத்து நிறம் மாறக்கூடிய பச்சோந்திகள் தான் நியாயங்கள். எனவே, அதை ஓர் அதிகாரப்பூர்வக் காரணியாகக் கொள்ளாதிருப்போம்."

"முற்றுமின் பிரச்சினை பொறாமையும் தாழ்வு மனப்பான்மையும். எனவே, ஏதேனும் தீர்வை அடையவேண்டுமெனில், அது முற்றுமுக்கு உள்ளே இருந்தே வரவேண்டும். தானை மட்டுமல்ல, பிற சொற்கள் அனைத்தையும் அன்புள்ளத்தோடு பார்த்தால், முற்றும் மகிழ்ச்சி பெறலாம். வாசகர்களுக்கு சில சமயம் முற்றுமைப் பார்த்தால் பிடிப்பதில்லையே தவிர, ஓர் எழுத்தாளனுக்கு 'முற்றும்' என்ற வார்த்தை தரும் ஆசுவாசமும், இளைப்பாறலும், மகிழ்ச்சியும், மனநிறைவும், நிம்மதியும், பரபரப்பும் - அமைதியான நூலகத்தில் தனியே அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் ஒரு கூச்ச சுபாவியான ஆணை சத்தம் போட்டுச் சிரிக்க வைத்த ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் போல  உன்னதமானவை."
"தானின் பிரச்சினை தனது இருப்பின் மீதே ஒட்டுதல் இல்லாமல் வாழச் சொல்லும், வேண்டா வெறுப்பான மனநிலை. இதுவும் ஒருவகையான Intellectual Inferiority Complex - தான். எந்த வேலை செய்தாலும், கெளரவக் குறைச்சல் இல்லையென்று நம்பி, கெத்தாக வாழத் தொடங்கினால், சுயபச்சாதாபத்தின் மீதுள்ள மோகம் குறைந்து, மகிழ்ச்சி பிறக்கும்."

"அடுத்து, இருவருக்குமான செய்தி. உலகிலுள்ள அனைத்து மொழிகளின் வார்த்தைகளும் காற்றில் மிதந்தபடி உள்ளீர்கள். ஒரு தகவல் பரிமாற்றம் நிகழும்போது, நீங்கள் ஓடிச்சென்று உதவுகிறீர்கள். உங்களின் வெவ்வேறு விதமான இணைப்புகளே புதுப்புதுச் சிந்தனைகளாகின்றன. எனவே, அனைத்துச் சிந்தனைகளும் உங்களால் ஏற்கனவே சாத்தியமாக்கப்பட்டுவிட்டன. பொறுமையோடு இருக்கும் மனிதர், அவற்றைக் கண்டுகொள்கின்றனர். சொல்லப்போனால், சித்தர்களால் மட்டுமே அறியப்பட்டதாக நம்பப்படும் பிரபஞ்ச இரஹஸ்யமும், உலக இயற்பியலாளர்கள் அனைவரும் கனவுகாணும் The Theory of Everything -உம் கூட ஏற்கனவே available - தான். எப்படியென்றால், அவை என்னவாக இருந்தாலும், அவற்றை வெளிப்படுத்த ஏதோ ஒரு possible combination of already available 247 letters - தானே? ஒவ்வொரு மொழிக்கும் ஒரு different number."
"அறிவியலின் விஸ்வரூபம், கலையின் விஸ்வரூபம் ஆகிய இரண்டின் கலவையில் உண்டான மனிதனின் கண்டுபிடிப்பே மொழி. அத்தகைய ஒரு மொழியில் ஒரு பங்காக இருப்பதை நினைத்துப் பெருமை கொள்ளுங்கள் போங்கள்."

என்று சொல்லிமுடித்துவிட்டு சோடா பாட்டிலை எடுத்தார் சர்வம். முற்றுமும், தானும் அரைகுறைச் சமாதானத்துடன் கலைந்து செல்கிறார்கள்.

அவர்களது பனிப்போர் என்றுதான் முற்றுமோ!

பிறகென்ன? முற்றும் தான்.

Comments

  1. Phaaaa Vera level. Really nice. Feeling proud that I'm ur student. 👏👏👏👏👏

    ReplyDelete
  2. கிரேஸி மோகன் அவர்களின் லெவல் 100 போல உள்ளது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?