என் ஆசிரியர்கள்

ராமசாமி வாத்தியார்

அயலூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, நாமக்கல் பாளையம் - என்ற சொற்றொடரைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே முழுப் பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து விடலாம்.‌ அவ்வளவு சிறியதுதான் நான் படித்த பள்ளி.

அங்கே எங்களுக்குப் பாடம் சொன்ன ஆசிரியர்களில் மூவர் மட்டுமே என் நினைவில் நிற்கிறார்கள். அதில் முதலாமவர் ராமசாமி வாத்தியார். 

அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். பத்து வயதுக்கும் கீழிருந்த குழந்தைகளுக்கு அறுபது வயது ஆசிரியர் என்பதே எவ்வளவு அழகான சூழ்நிலை! அவருக்கும் எங்களுக்குமான உறவு, ஒரு தாத்தாவுக்கும் பேரப் பிள்ளைகளுக்குமான உறவாகவே இருந்தது. 

வெள்ளை வேட்டி சட்டையில்தான் வருவார்; எங்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடுவார்; 'கொல கொலயா முந்திரிக்கா' என்ற விளையாட்டை எங்களுக்கு சொல்லித் தந்தவரும் அவரே.  

எவ்வளவு சிரத்தையெடுத்து யோசித்தாலும், அவர் எங்களுக்குப் பாடம் நடத்தியதான நினைவு ஒன்று கூட வரவில்லை. பிறகு என்னதான் செய்வார்? கதைதான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அனைவரையும் சேர்த்து மொத்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையே முப்பதோ நாற்பதோதான் இருக்கும். அனைவரையும் தன்னைச் சுற்றி அமரவைத்து தினந்தினம் ஒரு கதை சொல்லுவார். கேட்டல் திறனின் பாலபாடமான 'உம்' கொட்டுதலை அவர்தான் சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்ன கதைகளில் ஒரு கதை எனக்கு இன்றும் அப்படியே நினைவிருக்கிறது‌. அந்தக் கதையிலே மரத்தின் மீது மத்தளத்தை வைத்தவாறு அமர்ந்திருக்கும் ஒருவன் பயத்திலே அதைத் தவறவிடுவான். அப்போது அந்த மத்தளம் எவ்வாறு சத்தம் எழுப்பியவாறு கீழே வந்தது என்பதை அவர் விளக்கினார் - வாயால் அந்த சத்தத்தை எழுப்பியபடியே. பசுமரத்தாணியது. அவர் கதைகளிலே அவர் உருவாக்கிய ஒரு கதாநாயகன் குப்பன் என்பவன். ஒரு பெரிய பண்ணையாரிடம் பண்ணைக் கூலியாக வேலை செய்த குப்பன் இன்றும் என் நினைவில் இருக்கிறான். 

ராமசாமி வாத்தியாரின் முகம் எனக்கு மறந்துவிட்டது. அவருடைய இருப்பைப் பற்றிய விவரம் கூட எதுவும் எனக்குத் தெரியாது. 

"டாம் டோம் டாம்னு மத்தாளம் வந்து கீழே உழுகுது. கீழ உழுகறதுக்குள்ளயே 'ஐயோ பேயிடோ'னு கத்தீட்டு எல்லாரும் ஓடறாங்க. ஒருத்தன் குட்டியாக் கரணம் போட்டு உழுந்து எந்திரிச்சு ஓடறான்" என்று அவர் சொல்லும் போது நீங்கள் கதை கேட்டுக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும். எங்களில் பலரும் கூட 'குட்டியாக்கரணம்' போட்டு விழுந்து சிரித்துக் கொண்டிருப்போம். 

நான் உயிருடன் இருக்கும் காலம் வரையிலுமே, ராமசாமி வாத்தியாரும் உயிருடன் இருப்பார் - எனக்குள்.

கூழமூப்பனூர் வாத்தியார்

அவருடைய இயற்பெயர் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. (இப்போதுள்ள மாணவர்கள் ஆசிரியர்களின் சம்பளம் எல்லாம் கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள்).

எங்கள் பள்ளியில் உடன் படித்த மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி ஒருநாள் நாங்கள் ஏழெட்டு பேராக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது எங்களிடம் சொன்னான்.

"டேய், எங்க மாமா நம்ம ஸ்கூலுக்கு வாத்தியாரா வர்றாருடா."

உடனே ஒரு கலக்கமான குரல் கேட்டது.

"அடிப்பாராடா அவரு?"

அதைவிட அதிகக் கலக்கத்துடன் மூர்த்தி சொன்னான்.

"பட்றெ இணுங்கி உட்ருவாருடா."

இப்போது ஒரு பொறாமைக் குரல்.

"டேய். நீ எப்புடியோ தப்பிச்சுட்ட! உங்க மாமாங்கறதால உன்ன உட்ருவாரு?"

இப்போது மூர்த்தி மெனக்கெட்டு நிமிர்ந்து, அந்தக் கேள்வி கேட்ட முகத்தை தேடிப்பிடித்து பதில் சொன்னான்.

"போடா டேய். என்ன தான்டா புழி புழினு புழீவாரு."

அவர் அவ்வாறே பிழிந்தார். முதலில் தன்னை மற்ற எல்லா மாணவர்களும் கூப்பிடுவது போலவே 'சார்' என்றுதான் கூப்பிட வேண்டும் என்றும், 'மாமா' என்று தப்பித் தவறி வாயில் வந்தாலும் கூட அடி விழும் என்றும் எச்சரித்தார். மூர்த்தியை லீடராகப் போட்டார். வகுப்பிலே யார் குறும்பு செய்தாலும், முதலில் லீடர் வெளுக்கப்பட்டான். 

"ஏன், இதெல்லாம் பண்ணா அடி உழுகும்னு சொல்ல மாட்டயா?" என்று சொல்லி அவனை அடிப்பார். அதற்குப் பிறகு அடி வாங்கப் போகும் பையனுக்கு, அவன் வாங்கும் அடியைவிட பெரிய தண்டனை மூர்த்தி அவனைப் பார்க்கும் பார்வையாகத்தான் இருக்கும்.

அவர் வைத்திருக்கும் விளாறு உடைந்துவிட்டால், அடுத்த நாள் வேறொன்று உடைத்து வரும்படி சொல்லுவார். நான் நீயென்று பலர் போட்டி போட்டுக் கொள்ளுவார்கள். வாத்தியாரிடம் நல்ல பேர் வாங்குவது எவ்வளவு பெரிய கௌரவம்! நல்ல மார்க் வாங்கி, நல்ல பேர் வாங்குவதெல்லாம் நடக்கிற காரியமா? இப்படியெல்லாம் ஏதாவது செய்தால்தான் உண்டு.

ஏதாவது ஒரு குமாரு அந்தப் போட்டியில் ஜெயிப்பான். தனது நிபுணத்துவம் அனைத்தையும் பயன்படுத்தி கணுக் கணுவாகத் திரண்டிருக்கும் விளாரை உடைத்துக் கொண்டு வருவான் - தான் நல்ல பேர் வாங்கவேண்டும் என்ற சுயலாப நோக்கத்துக்காக, ஒன்றாகவே இலந்தைப் பழம் பொறுக்கி, ஒன்றாக டயர் வண்டி ஓட்டி, ஒன்றாக சுவர்களில் 'ஒண்ணுக்கு' அடித்து ஓவியம் வரைந்து திரிந்த காவிய நட்புக்கு துரோகம் இழைக்கத் துணிந்த கிராதகன்.

ஆனால், மனிதன் ஒன்று நினைத்தால் வேறொன்றை நினைப்பதுதானே அந்த இடியட் இறைவனின் வாடிக்கை!

சர்வ நிச்சயமாக விளாறு முறித்துக் கொண்டு வந்த அதே சுபநாளில், முறித்துக் கொண்டு வந்த குமாருக்கும் அடி விழும். காரணம்? விளாறு முறித்துக் கொடுத்து நல்ல பேர் வாங்கிய கொக்கரிப்பில் ஏதேனும் அடாவடி செய்திருப்பான். அடிக்கும் போது அந்த விளாறு உடைந்து விட்டால், நல்ல விளாறு கொண்டுவரவில்லையென்று அதற்கும் சேர்த்து அடி விழும். ஆக, நண்பர்களின் கோபத்துக்கும் ஆளாகி, அடியும் வாங்கி, வாங்க நினைத்த நல்ல பெயரையும் வாங்க முடியாமல் போய், கண்ணீர் மல்க அவன் போய் உட்காருவான். 

அடுத்தமுறை விளாறு உடைத்து வரச் சொன்னால், அனைவரும் கமுக்கமாக இருப்பார்கள். போனமுறை குமாரு அடி வாங்கியது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்த விளாறையே அவன்தான் கொணர்ந்தான் என்ற விசயம் தெரியாத யாரோ ஒரு முத்து கை தூக்குவான். நாங்கள் அனைவரும் அவனைப் பார்ப்போம். மனித வீழ்ச்சிக்குக் காரணமாகும் ஆணவம் கொப்பளிக்கும் பார்வையுடன் முத்து எங்களைப் பார்த்து வெற்றிப் புன்னகை பூப்பான். அவனை விட அதிகமாக ஒருவன் புன்னகைப்பான். குமாரு.

கூழமூப்பனூர் வாத்தியார் பாடம் சொல்லித்தரும் நேரம் தவிர மற்ற நேரம் அனைத்தும் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே வேலைதான். காலை நேரமென்றால் அ, க, ங, ச எழுதவேண்டும். மதியமென்றால் 1, 1, 2, 3 நூறு வரைக்கும் எழுதவேண்டும். ஒருமுறை அல்ல. எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.
1. எழுத வேண்டும். (ஸ்லேட்டின் இரண்டு பக்கமும்) 2. அவரிடம் கொண்டு போய்க் காட்ட வேண்டும். 3) அவரிடம் 'ரைச்' வாங்க வேண்டும். (அது அவ்வளவு எளிதல்ல. எல்லாமே சரியாக இருக்க வேண்டும்) 4. இடத்திற்குத் திரும்பிப் போய் அதை அழிக்க வேண்டும் 5) எழுத வேண்டும்.

காலையில் தொடங்கும் அ, க, ங, ச மதிய உணவு வரைக்கும் எழுத வேண்டும். உண்டுவிட்டு எழுத ஆரம்பித்தால், பள்ளிக்கூடம் விடும் வரைக்கும் 1, 2, 3 எழுத வேண்டும்.

அவர் வந்த முதல் நாளில், மூர்த்தி எல்லாரிடமும் அறிவித்தான். 
"எல்லாரும் சில்லேட்டுல ரண்டு சைடும் அ, க, ங, ச எழுதிக் கொண்டு போய் சார்கிட்ட காட்டணும்."

'காட்டிட்டே இருக்கணும்' என்று அவன் சொல்லியிருக்க வேண்டும்.
Continuous tense பற்றித் தெரியாத country brute மூர்த்தி! 

நான் ஒருமுறை எழுதிக் கொண்டு போய்க் காட்டி, 'ரைச்' வாங்கினேன். வேலை முடிந்த மகிழ்ச்சியில் என்னுடைய இடத்துக்கு வந்து 'நாயம்' பேசத் தொடங்கினேன். சற்று நேரத்தில் வாத்தியார் எழுந்து வந்தார். நான் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முதுகிலே ஒன்று போட்டார். 

"க, ங, ச எழுதுடா" என்று உறுமினார்.

"எழுதீட்டங் சார்" என்று மருட்சியுடன் சொன்னேன்.

"மறுபடியும் எழுதுடா" என்றார்.

'ரைச்' வாங்கிய அந்தப் பக்கங்களை மனதே இல்லாமல் அழித்தேன். 

"எங்கடா மூர்த்தி?" என்று இரைந்தார். 

அவர் திருகுவதற்குத் தோதாகக் காதைக் காட்டியவாறே வந்து சேர்ந்தான் மூர்த்தி. காது அவரை நோக்கியிருந்தது. கண்கள் என்னை நோக்கி இருந்தன. நான் ஸ்லேட்டைப் பார்த்துக் கொண்டேன்.

நான்கைந்து முறை எழுதிக் காட்டிவிட்டேன். அடுத்தமுறை போய்க் காட்டிய போது, சரிபார்க்காமலேயே 'ரைச்' போட்டார். ஸ்லேட்டை வாங்கிக் கொண்டு நான் திரும்பி நடக்க நடக்கவே, அவருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் கேட்டார். 

"அவம் பேரு என்னடா?"

"சம்பத்துங் மா..." 
இருமல்.
"சம்பத்துங் சார்."

அந்த சம்பாஷணையின் நீளம் அவ்வளவே. அவர் என்னுடைய பெயரைக் கேட்டதே எனக்கான உச்சகட்ட பாராட்டு. இந்தக் கட்டுரையில் எந்த எழுத்துப் பிழையும் இல்லையென்றால், அதற்கு முக்கியக் காரணம் கூழமூப்பனூர் வாத்தியார்தான்.

தமிழம்மாள் டீச்சர்

கௌதம் மேனன் படம், மணிரத்னம் படங்களில் எல்லாம் இருப்பார்களே பெண்கள் - தைரியமாக, அறிவாக, கெத்தாக. அப்படி ஒரு பெண்தான் தமிழம்மாள் டீச்சர். 

தான் அந்தப் பள்ளிக்கு வரும்போது, தன்னுடைய மகன் இன்பவாணனையும் அழைத்து வந்தவர். அழைத்து வந்தார் என்றால், அவனையும் எங்கள் பள்ளியிலேயே சேர்த்துவிட்டார்.

எங்களைவிட இரண்டு வயது இளையவனான இன்பவாணன் எங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். அவன் யாருடன் சேர்ந்து விளையாட விருப்பப்படுகிறான் என்று எங்களுக்குள் ஒரு சண்டையே நடக்கும். அவனுடன் ஊருக்குள் நடந்து செல்லும் போது, ஊர் மக்கள் எங்களிடம் அவனைப் பற்றி விசாரிப்பார்கள். அப்போது 'டீச்சர் பையன்' என்று சொல்லும் போதும், அந்த டீச்சர் பையன் அவர்களுக்கு முன்னாலேயே எங்களை 'அண்ணா' என்று விளிக்கும் போதும் சொல்லொணா உவகையில் திளைப்போம்.

தமிழம்மாள் டீச்சர் மற்ற டீச்சர்களைப் போல அடிக்கவெல்லாம் மாட்டார். ஆனால், அவர் கோபப்பட்டால் நாங்கள் மிகவும் பயப்படுவோம்.

பெரும்பாலான ஆசிரியர்களின் கோபம் இயலாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். ஆசிரியர் கோபப்பட்டு பேசும்போது, மாணவர் எதுவுமே பேசக்கூடாது என்பதும், அப்படிப் பேசினால் அது எதிர்த்துப் பேசுவதாகும் எனவும் பலரால் நம்பப்படுகிறது. ஆனால், தமிழம்மாள் டீச்சரின் கோபம் அவ்வளவு எழிலானது.

அவருடைய திட்டு என்பது அவர் மட்டுமே பேசும் ஒருவழிப் பேச்சு கிடையாது. அவர் கேள்விகள் கேட்பார். அதற்கு பதில் வந்தாக வேண்டும். சீக்கிரமாக பதில் சொன்னால் (அது சரியான பதிலாகவும் இருக்க வேண்டும்) சீக்கிரமாக அனுப்பி விடுவார்‌. தவறு செய்த மாணவருக்கு, 'டீச்சர் நம் மீது கோபமாக இருக்கிறார்' என்ற வருத்தம் இருக்காது. மாறாக 'டீச்சர் நம்மால் கோபமாக இருக்கிறார்' என்றுதான் வருத்தமாக இருக்கும். ஏனென்றால், டீச்சரை எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை, ஒரு பையனை நிற்க வைத்து திட்டிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி ஒரு சித்திரமாக என் மனதில் பதிந்துவிட்டது.

அவன் ஏதோ தவறு செய்திருக்கிறான். அதற்கான விசாரணைதான் அது. அவருடைய குரலில் கடுமை இல்லை. கேள்விகள் நிச்சயம் கடுமையானவை. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அவனை அருகே வருமாறு கையசைக்கிறார். அவன் போகிறான். தனது கேள்விகளைத் தொடர்ந்து கொண்டே, பையனின் சட்டையில் மாற்றிப் பிணைத்திருக்கும் பொத்தானைப் பிரித்து சரியான துளையில் பிணைக்கிறார். விசாரணை தொடர்கிறது. 

மகாத்மா காந்தி சொன்ன 'பாவத்தை வெறுத்திடு, பாவம் செய்பவர்களை அல்ல' என்பது இதுதானே!

அதுநாள் வரையிலும் எங்கள் பள்ளியிலே, எதற்காகக் கிடக்கிறது
என்றே தெரியாமல் ஒரு மரப்பெட்டி கிடந்தது. தமிழம்மாள் டீச்சர் பள்ளியில் சேர்ந்தவுடன் அந்தப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த கதைப் புத்தகங்களை எடுத்துப் படிக்கக் கொடுத்தார்; அதிலிருந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாடக் கொடுத்தார். 

எங்களுக்கே தெரியாமல் எங்களிடம் இருந்த ஒரு விசயத்தை எங்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இது அந்த மரப்பெட்டிக்குள்ளே இருந்த பொருட்களுக்கு மட்டுமல்ல - எங்கள் மனங்களுக்கு உள்ளே இருந்த சிந்தனைக்கும் பொருந்தும். நாங்கள் எல்லாம் சுயமாக சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். நாங்கள் சிந்திக்கிறோம் என்பதே எங்களுக்குத் தெரியாமல் எங்களை சிந்திக்க வைத்தவர் அவர். 

அப்படி இல்லையென்றால் ஐந்தாம் வகுப்பு முடித்து பள்ளியிலிருந்து வெளியேறும் ஒரு பையனுக்கு மு.வரதராசனார் உரையெழுதிய திருக்குறள் புத்தகம் பரிசளிப்பாரா அவர்?

வேலுச்சாமி சார்

வைரவிழா மேனிலைப் பள்ளி, கோபி. மேல்நிலைப் பள்ளி என்றில்லாமல், மேனிலைப்பள்ளி என்ற பெயரிலேயே வைரவிழாவின் மேனிலையைத் தெரிந்து கொள்ளலாம். 

ஏழாம் வகுப்பில் எங்களுக்கு அறிவியல் வகுப்பெடுத்தார் வேலுச்சாமி சார். மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவர். ஓர் அறிவியல் வகுப்புக்குள் அத்தனை சிரிப்புச் சத்தத்தை நான் அதற்கு முன்னும் பின்னும் கேட்டதில்லை. அடிப்பதிலும் குறை வைக்காதவர். 

பகுத்தறிவு என்றால் என்ன என்று அவர் ஓர் உதாரணம் சொல்லி விளக்கினார். அந்த ஓர் உதாரணத்துக்காகவே அவரை உயர்வாக மதிக்கிறேன்.

"இப்போ இந்த க்ளாஸ் ரூமுக்குள்ள, ஒரு டேபிள் மேல ஒரு எலையில பிரியாணி இருக்குது. ஒரு நாய் உள்ள வருது. அது என்ன பண்ணும்?"

"பிரியாணிய திங்கும்."

"கரெக்ட். பிரியாணிய திங்கும். அதுவே, நீ ஒருநாள் க்ளாசுக்கு நேரத்துல வர்ற. அதே மாதிரி டேபிள் மேல பிரியாணி இருக்குது. நீ அத திம்பியா?"

"மாட்டோம் சார்."

"ஏன்?"

அமைதி. 

அவரே தொடர்கிறார்.

"ஏன்னா, நீ யோசிப்ப. இங்க எப்புடி ஒரு பிரியாணி பொட்டலம் வந்துச்சு? இத யாரு கொண்டு வந்து வெச்சாங்க? எதுக்காக‌ இங்க கொண்டு வந்து வெச்சாங்க? இதுல எதாச்சும் கலந்து இருக்குமா? இதெல்லாம் யோசிப்ப. யோசிச்சுட்டு அத சாப்புட வேண்டாம்னு முடிவு பண்ணுவ. ஏன், எதுக்கு, எப்படின்னு இத்தன கேள்வி கேட்ட இல்லையா? இதுக்குப் பேருதான் ஆறாவது அறிவு, அதாவது பகுத்தறிவு."

தானே ஒரு பகுத்தறிவாளராக இல்லாத யாராலும் இவ்வளவு எளிதாக விளக்க முடியாது. ஐன்ஸ்டைன் சொன்னதுதான். "உங்களால் ஓர் ஆறு வயதுக் குழந்தைக்கு ஒரு விசயத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாதென்றால், உங்களுக்கே அது முழுமையாகப் புரியவில்லை என்று அர்த்தம்". வேலுச்சாமி சார் ஒரு பகுத்தறிவாளர்.


கந்தசாமி சார்

அதே வைரவிழா மேனிலைப் பள்ளி. பதினொன்றாம் வகுப்பில் இருந்தேன். கந்தசாமி சார் எங்களுக்கு ஆங்கில வகுப்பெடுத்தார்.

முதல் நாள். வகுப்புக்கு வந்தார். கரும்பலகையில் எழுதிப் போட்டிருந்த வாசகத்தைப் படித்தார். Suffer now, enjoy later. 

"இத யாரு எழுதிப் போட்டது?" என்றார்.

எழுதிய‌ மாணவன் பெருமிதத்தோடு எழுந்தான்.

"அத வந்து அழி" என்றார்.

மாணவனின் பெருமிதம் மிதமானது‌. அவன் சென்று அதை அழித்தான். அவர் விளக்கம் கொடுத்தார்.

"படிக்கிறது ஒரு என்ஜாய்மென்ட். அத ஸஃபரிங்கா நெனச்சா நீ எப்படி படிப்ப?"

என் மனதில் அவர் மலையளவு உயர்ந்தார்.

இன்னொரு நாள்.

வருகைப் பதிவு எடுக்கும் நேரம். லீடர் அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டரோடு நிற்பான். ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு எண் இருக்குமல்லவா? அதை அவரவரே சொல்லி 'ப்ரஸன்ட் லீடர்' என்றோ 'ப்ரஸன்ட் சார்' என்றோ சொல்ல வேண்டும். 

ஆங்கில வகுப்பு. லீடர் அட்டென்டன்ஸ் எடுக்கிறான். 

"ஒன் ப்ரஸன்ட் சார்."

"டூ ப்ரஸன்ட் சார்."

"த்ரீ ப்ரஸன்ட் சார்."

அந்த இடத்தில் நிறுத்துமாறு அவர் கை காட்டுகிறார். 

"அதென்ன ஒன், டூ, த்ரீனு? நீ எல்லாம் என்ன ஜெயில் கைதியா? லீடர், பேரு சொல்லிக் கூப்புடு" என்று சொல்கிறார். 

என் மனதில் இன்னொரு படி மேலே ஏறுகிறார்.

அவர் பேசும் போது, மெலிதாகப் புன்னகைத்தபடியே பேசுவது போலத்தான் இருக்கும். வகுப்புக்கு வந்த உடனே 'நேத்து என்ன பாத்தோம்?' என்ற சம்பிரதாயமான வாக்கியம் எல்லாம் இருக்காது. முதல் நாள் பேசிய கடைசி வாக்கியம் 'ராமு கடைக்குப் போனான்' என்பதாக இருந்தால், அடுத்த நாள் அவர் பேசும் முதல் வாக்கியமே 'அங்க எதாச்சும் வாங்கலாமானு யோசிச்சான்' என்றுதான் இருக்கும். 

அவர் நடத்தியது என்னமோ ஆங்கிலப் பாடம்தான். ஆனால், எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார். முதல் நாள் நடந்த இந்தியா பாகிஸ்தான் க்ரிக்கெட் மேட்ச்சில் இன்ஸமாம் உல் ஹக் -யாஸிர் ஹமீதின் பார்ட்னர்ஷிப் ஏன் அதி சிறந்தது என்று வாதிடுவார் - க்ரிக்கெட்டின் நுணுக்கங்கள் எல்லாவற்றையும் விளக்கியபடியே; ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு எப்படி பல குழுக்கள் இணைந்து உழைக்க வேண்டும் என்று விளக்குவார்; ஒரு நேர்கோடு என்பது முடிவிலி தொலைவு ஆரம் கொண்ட ஒரு வட்டம் என்று நிரூபிப்பார்; கடவுள் என்று வணங்கப்படும் கிருஷ்ணன் ஒரு கொலைகாரன் என்று அவர் பேசப்பேச அதைக் கேட்டு கட்டுண்டு கிடப்பதைத் தவிர வேறென்ன செய்வதென்று எங்களுக்குத் தெரிந்ததில்லை.

அவர் மிகவும் மெலிதாகத்தான் பேசுவார். அதற்காகவெல்லாம் அவர் அடிக்கமாட்டார் என்று நம்பி விடக்கூடாது. அவர் அடிப்பார், குட்டுவார், மற்றும் உதைப்பார் literally. மாணவர்கள் அவருக்கு வைத்திருந்த பட்டப் பெயரே 'கொட்டு கந்தன்' என்பதாம்.

பன்னிரண்டாம் வகுப்பில் ஜெய்க்கு நடந்ததைச் சொல்லாமல் கந்தசாமி சாரின் அத்தியாயம் முழுமை பெறாது. 

ஜெய். இரண்டாவது பென்ச்சில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன். ஹால்டல் மாணவன். கந்தசாமி சார்தான் ஹாஸ்டல் வார்டனும் கூட. எங்களை விட அவனுக்குத்தான் அவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், விதியோ கருணையற்றது.

ஜெய் அன்றைக்கு புது ஹேர் ஸ்டைலுடன் வந்தான். காதலர் தினம் படத்தில் குணால் வைத்திருந்த ஹேர் ஸ்டைல். சும்மா சொல்லக்கூடாது, மிக அழகாகவே இருந்தான். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட முடி நெற்றியின் இருபுறமும் கற்றையாக அலைபாய்ந்தது. பார்த்தவர்கள் எல்லாரும் அவனது ஹேர்ஸ்டைலைப் பாராட்டியதில் அந்த மயக்கத்திலேயே வலம் வந்தான். 

ஆங்கில வகுப்பு. கந்தசாமி சார் வந்தார். O. Henry எழுதிய The Last Leaf சிறுகதையை நடத்தினார். ஒவ்வொரு மாணவனாக அவர் சுட்டுவார். அந்த மாணவன் எழுந்து குறிப்பிட்ட பத்தியை வாசிக்க வேண்டும். பின்னர் அவர் அதைப் பற்றி விளக்குவார். 

முதல் மாணவன் படிக்கும் போது, கதையிலே pneumonia என்ற வார்த்தை வந்தது. அதை அவன் 'பினிமோனியா' என்று உச்சரித்தான். சார் அவனை நிறுத்தினார். தன் கையில் விரித்து வைத்திருந்த புத்தகத்தை தலைகீழாகப் பறக்கும் ஒரு பறவையின் வடிவத்தில் டேபிளின் மீது கவிழ்த்து வைத்தார்.

அது 'பினிமோனியா' இல்லை, 'நிமோனியா' என்று சொன்னார்; ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட silent letters நிறைய இருக்கிறது என்று உதாரணங்களுடன் விளக்கினார்; விமானம் ஒன்று பெங்களூரை நெருங்கும்போது, ஒரு குழந்தை 'Bangalore Bangalore' என்று கத்துகிறது - யாரோ ஒருவர் be silent என்று சொன்னவுடன் அதே குழந்தை 'Angalore Angalore' என்று கத்துகிறது என்ற ஜோக்கெல்லாம் சொல்லி முடித்துவிட்டு பாடத்துக்குத் திரும்பினார். 

அவர் இந்த விளக்கமெல்லாம் தந்து கொண்டிருக்கும் போது ஒரு split screen-ல் ஜெய்யை நீங்கள் பார்த்திருந்தால், அவன் உலகத்தையே மறந்து தன் கேச அழகைப் பற்றிய சிந்தனையிலே இலயித்து இருந்தது தெரிந்திருக்கும். நிற்க.

சார் பாடத்துக்கு திரும்பினார். அடுத்த பாகத்தைப் படிக்க ஜெய்யை எழுப்பினார். அவன் பதட்டமாக "டேய், எந்த லைனுடா?" என்று என்னைக் கேட்டான். நான் அந்த வரியை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். எழுந்து நின்றான். வாசிக்க ஆரம்பித்தான்.

"மிஸ்டர் பினிமோனியா வாஸ் நாட் எ நைஸ் ஓல்ட் ஜென்டில்மேன்."

கந்தசாமி சாரின் கண்கள் சிவந்தன. இந்த முறை தலைகீழாகப் பறக்கும் பறவை வடிவமுமில்லை ஒரு வெங்காயமும் இல்லை. புத்தகத்தை டேபிள் மீது வீசி எறிந்தார். ஓட்டமும் நடையுமாக ஜெய்யை நோக்கி வந்தார். அரவம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான். அவனது நெற்றியின் இருபுறமும் அலைபாய்ந்த முடிக்கற்றைகளை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டார். அது அவருக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. அப்படியே அவனை வெளியே இழுத்து மேடை வரை இழுத்துச் சென்றார். ஒரு கையை விடுவித்து, தனது பிரம்மாஸ்திரமான குட்டுகளைப் பிரயோகித்தார். ஜெய்யின் கண்களில் கண்ணீர் தேங்கி வழிந்தது. வலி தாங்க முடியாமல் குனிந்தான். கந்தசாமி சாரிடம் அடி வாங்கும் போது செய்யக்கூடாத செயல் என்று ஒன்று உள்ளதென்றால், அது குனிவதுதான். தனது முழங்கையை மடக்கி முதுகிலே இறக்கினார் பல தாக்குதல்களை. மொத்த வகுப்புமே ஆழ்கடல் அமைதியிலிருந்தது. அங்கே கேட்ட இரண்டே சத்தங்கள், அவர் அடித்ததும் அவன் விம்மியதும் தான். அவன் மேலும் குனிந்து அவரது பாதத்துக்கு அருகே மண்டியிட்டான். ஒரு புரோட்டா மாஸ்டர் எப்படி மாவுக் குவியலை குத்துவாரோ, அதே போல அவனது முதுகைப் பதம் பார்த்தார். மறுபடியும் அந்த குணால் ஸ்டைல் முடிக்கற்றையைப் பற்றினார். இப்போது அது ஜாஹிர் ஹூசைன் ஹேர் ஸ்டைலாக மாறியிருந்தது. அவனை அப்படியே வாசலுக்கு வெளியே தள்ளினார். 

இதெல்லாம் என்ன காரணத்துக்காக நடக்கிறது என்றே தெரியாத அப்பாவி ஜெய் துவண்டு போய் விழுந்தான். 

அதற்குப் பிறகு ஒருவனுமே அவர் வகுப்பில் அடி வாங்கவில்லை. அடி வாங்குமளவுக்கு நடந்துகொள்ள யாருக்கும்‌ துணிவில்லை என்பதே உண்மை. ஏனோ தெரியவில்லை, ஜெய் அதற்குப் பிறகு குணால் ஹேர் ஸ்டைலே வைக்கவில்லை. 

ராமசாமி வாத்தியார், கூழமூப்பனூர் வாத்தியார், வேலுச்சாமி சார் ஆகிய எல்லாரிடமும் நான் அடி வாங்கியிருக்கிறேன். கந்தசாமி சார் சொன்ன அனைத்து விதிகளும் எனக்கே மிகப் பிடித்த காரணத்தால், அவரிடம் நான் அடி வாங்கியதில்லை. ஆங்கிலப் பாடம் இவ்வளவு சுவாரஸ்யமானதா என்று என்னை நினைக்க வைத்தது, கந்தசாமி சாரின் வகுப்புகள்தான். 

அவரால்தான் நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

BP சார்

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இளங்கலை ஆங்கிலப் படிப்பு. BP சார் என்று அழைக்கப்படும் B பத்மநாபன் சார்தான் HoD.

கந்தசாமி சார் அடிப்பார், BP சார் அடிக்க மாட்டார். அவ்வளவுதான் வித்தியாசம். அவருடையதைப் போலவே இவரது வகுப்பும் மிகவும் சுவாரஸ்யமானது.

அவருடைய உயரம், துளி காற்றடித்தாலும் துள்ளிப் புரளும் ஹேர் ஸ்டைல், களையான முகம்‌, அறிவார்ந்த நகைச்சுவையுணர்வு போன்றவற்றின் காரணமாக பல மாணவிகள் அவருக்கு ரசிகைகள். அவருக்கு கல்யாணம் என்று கேள்விப் பட்டவுடன் வகுப்புத் தோழி ஒருத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கேள்வி. 

அடிக்க மாட்டாரே தவிர, அவர் பார்வை கண்டாலே நாங்கள் மிரண்டு போவோம். திட்ட ஆரம்பித்தார் என்றால், அவ்வளவுதான்.

வகுப்பு எடுக்கும் போது, பல சமயம் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு உலக விசயங்கள் பேசுவார். வகுப்பில் எவனோ ஒருவன் கண்டுபிடித்துச் சொன்னான். 

"டேய், சிரிப்பு வந்தாலும் சிரிக்காதீங்கடா. சிரிச்சுட்டா மறுபடியும் லெசன்-க்கு வந்துருவாரு."

தமிழ்த் திரைப்பட கதாநாயகர்கள் செய்யும் சாகசங்களை பகடி செய்ய ஆரம்பித்தார் என்றால், அன்றைக்கு முழுக்க சிரிப்பு மழைதான். 

அவரது வகுப்பு எனக்கு மிகப் பிடித்தமைக்கான காரணம், சீரியஸான விசயங்களை நகைச்சுவையாகச் சொல்லுவார். சாதியத்தைப் பற்றிப் பேசுவார்; அரசியல் அபத்தங்களைப் பற்றிப் பேசுவார்; ரவி சாஸ்திரியைப் பற்றிப் பேசுவார். 

Don Quixote கதையை அவர் சொல்லிக் கேட்க வேண்டுமே!

அதே போல, ஹென்றி IV-ல் வரும் Falstaff எல்லாம் எங்களுக்கு மிகவும் பழக்கமான ஆளாகவே ஆவதற்கு BP சார்தான் காரணம். 

சினிமாவில் கல்லூரிகளைப் பார்த்துவிட்டு அதே மாதிரி கிறுக்குத் தனங்களைச் செய்ய விரும்பும் மாணவர்களை கலாய்க்க ஆரம்பித்தார் என்றால் வகுப்பே அல்லோல கல்லோலப்படும்.

Boot cut அப்போது மிகவும் ஃபேமஸ். ஒருமுறை எங்கள் வகுப்பு வேலுச்சாமி boot cut போட்டு வந்தான். 

"எதுக்குடா வீதி எல்லாம் கூட்டிட்டு வர்ற, வீதிகூட்டி?" என்றார்.

அதி சிறந்த ஃபேஷன் என்று நினைத்து கலர் கலராக சட்டை போட்டு வந்த மூவரைப் பார்த்து, "எதுக்குடா லுங்கி வேட்டியில சட்டை தெச்சு போட்டு வந்திருக்கீங்க?" என்றார்.

நான்கு மாணவர்கள் வகுப்பில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை ரெப்ரஸன்டேடிவ் அவரிடம் சென்று சொல்லிவிட்டாள். 

"ஏன்டா, கோமாளித் தனம் பண்றதுக்குனே, 'கோமாளிகள் அசோஸியேஷன்' ஒண்ணு ஆரம்பிச்சிருக்கீங்களாடா கோமாளிகளா?" என்றார். 

திருமூர்த்தி ஒருமுறை அவரிடம் திட்டு வாங்க நேர்ந்தது. 

"தம்பி! இந்த மாதிரியெல்லாம் பண்ணீட்டு இருந்தீனா, TC குடுத்து அனுப்பி விட்ருவோம். உன்னால தான் இந்த காலேஜ் நடந்தாகணும்னு எந்த அவசியமும் இல்ல. ஒரு திருமூர்த்தி இல்லீனா, இன்னோரு குருமூர்த்தி."

இந்த மாதிரி பற்பல வரலாற்று நிகழ்வுகள்.

இளங்கலை முடித்துவிட்டு முதுகலை படிக்க கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குப் போனேன். முதலாமாண்டு முடித்து இரண்டாமாண்டு போகும் போது, BP சார் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார். 

அங்கே அவ்வளவு கெடுபிடியான கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, அவரது கோபம் பற்றி அறியாத மற்ற மாணவர்கள் அவரிடம் வெகு சகஜமாகப் பேசிப் பழகினார்கள். 

எனக்கோ அவரிடம் பேசவே மிகவும் பயம். அது இன்றளவும் தொடர்கிறது. அது எப்போதுமே இருக்கும். அவருடன் போனில் பேசினேன் என்று முதுகலை நண்பர்கள் சொல்வார்கள். நானோ, அதி அவசியமாக ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் மட்டுமே அவருக்கு போனில் அழைப்பேன். அழைப்பதற்கு முன்பாக நான்கைந்து முறை என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துவிட்டே அழைப்பேன். அவரிடம் பேசி முடித்தபிறகு, எங்காவது தவறாகப் பேசிவிட்டேனா என்று பலமுறை யோசித்து யோசித்து பயந்து போவேன். 

அவருக்கு மெசேஜ் அனுப்புவதென்றாலும் நான்கைந்து முறை, படித்துப் பார்த்துவிட்டுத்தான் அனுப்புவேன். 

ஒருமுறை முதுகலை வகுப்பில் நான் எடுத்த செமினாரைப் பார்த்துவிட்டு வகுப்புத் தோழி பிருந்தா, "டேய், க்ளாஸ் எடுக்கும் போது, உன்னோட பாடி லேங்வேஜ் அப்புடியே BP சார் மாதிரியே இருக்குடா" என்றாள். 

அது எனக்கே தெரியவில்லை. சந்திரமுகியாகவே மாறிப்போன கங்கா போலத்தான் நானும். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். அதில் ஒரு துளியாவது இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தியிருப்பேனா என்பது சந்தேகமே. 

இதுவரைக்கும் நான் குறிப்பிட்ட ஆசியர்களின் தொலைபேசி எண் எதுவும் என்னிடம் இல்லை. அதனால் அவர்களுக்கு நான் வாழ்த்துகள் சொல்ல முடிந்ததில்லை. BP சாருக்கு ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்துக்கு மறக்காமல் வாழ்த்து சொல்லுவேன். இந்த வருடம் வெறும் வாழ்த்துகள் போதாது என்று நான் நினைத்ததாலேயே இக்கட்டுரை.

செந்தில் சார்

இளங்கலையில் கடைசி வரைக்கும் எங்கள் வகுப்புக்கு செந்தில் சார் வரவே இல்லை. ஆறாவது செமஸ்டரில் 'நான் இந்த வகுப்புக்கு போயே ஆக வேண்டும்' என்று கேட்டு வாங்கிக் கொண்டு வந்தவர். அவர் கல்லூரியில் படிக்கும் போது, BP சாரின் மாணவர். அவரும் BP சாரின் ஆராதனர்.

வகுப்பில் ஏதாவது சத்தம் கேட்டால், அவருக்கே உரிய தொனியில் சொல்லுவார். 

"தம்பி! இது சட்டமன்றம் கெடையாது. நானும் சபா நாயகர் கெடையாது. நீ கூச்சல் போட்டுட்டு இருந்தீனா, 'சார்ர்ர்ர்ர், ப்ளீஸ்ஸ்ஸ் சார்ர்ர்ர்ர். சிட் டவுன் ப்ளீஸ்ஸ்ஸ்'னு கெஞ்சிட்டு இருக்க மாட்டேன். தூக்கி வெளிய வீசிடுவேன்" என்பார்.

'மாணவர்கள் சிந்திக்க வேண்டும்; உலகம் ஒன்று சொல்லுகிறது என்பதற்காக அதையே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை' என்பதைத் தீவிரமாக நம்புபவர். 

ஒருமுறை வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் டாக்டர் விஸ்வநாத் (பிரகாஷ் ராஜ்) பேசும் I don't love my patients காட்சியை டாக்டர் விஸ்வநாத்தின் கோணத்திலிருந்து விவரித்தார். அதிலிருக்கும் நியாயத்தை விளக்கினார் - ஒரு மணி நேரம். "படம் பாக்கும் போது, இந்த மாதிரி என்னைக்காவது யோசிச்சு பாத்து இருக்கியா?" என்று கேட்டார். Lateral thinking என்பதை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவர் அவர்தான். 

கல்லூரி எல்லாம் முடித்த பிறகு ஒருநாள் கோபி ஜெயமாருதி தியேட்டருக்கு விக்ரம் வேதா படம் பார்க்கப் போயிருந்தோம். இடைவேளையில் செந்தில் சாரைப் பார்த்தோம். இடைவேளையின் கால் மணி நேரமும் முதல் பாதியைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. காஃபி ஆறுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்தோம்.

நான் படிக்கும் காலத்தில் அவருக்கு என்னைத் தெரியுமா என்பதே எனக்குத் தெரியாது. ஆனால், பல சமயங்களில் என்னுடைய ஜூனியர்களிடம்‌ நான் பேசும் போது, அவர்களுடைய வகுப்புகளில் அவர் அவ்வப்போது என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார் என்று தெரிய வந்தது. அவருக்கு என்னுடைய‌ பெயர் தெரியும் என்பதே எனக்கு பெரிய பெருமை. ஏனென்றால், என்னளவில் என்னுடைய நிஜ வாழ்வில் சந்தித்த ஒரு ஜீனியஸ் அவர்.

பழனிவேல் சார் 

Ahead of their time என்று சொல்லுவார்களே! பழனிவேல் சார் அப்படியானவர். முதுகலையில் என்னுடைய HoD.

என்னுடைய ப்ராஜெக்ட் கைடும் அவர்தான். ஒருமுறை அவருடைய கேபினில் நின்று அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது வகுப்புத் தோழி ப்ரணயா அங்கே வந்தாள். வந்தவள் அவரிடம் கேட்டுவிட்டு சட்டென அங்கே உட்கார்ந்து விட்டாள். வந்த விசயத்தைப் பேசி முடித்தாள். அப்போது, அவர் ஏதோ ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அவளிடம் கேட்டார்.

"ப்ரணயா, நாங்க அங்க போலாம்னு இருக்கோம். கம்‌ வித் அஸ்."

"நோ சார். ஐ காட்டு கோ. யூ கேரி ஆன்."

சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. வேறு எதுதான் பொருட்டு?

எல்லாரும் தங்களுடைய ப்ராஜக்டின் முதல் ட்ராஃப்டை தத்தம் கைடுகளுக்கு காட்டிக் கொண்டிருந்தார்கள். நானும் சுசியும் (சுசிக்கும் அவர்தான் கைடு) ஏதோ நான்கைந்து பக்கங்கள் எழுதியிருந்தோம். மற்றவர்கள் எல்லாம் நூறு நூற்றைம்பது பக்கமாவது இல்லையென்றால் கைடு திட்டுவார்கள் என்று அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சூழலில் அவருடைய வார்டுகளான நான், சுசி, இன்னொரு பெண் மூவரும் அவரைப் பார்க்கப் போனோம். 

நூறுக்கும் மேற்பட்ட பக்கமுள்ள ஒரு ட்ராஃப்டை அவள் அவரிடம் காட்டினாள். நாலைந்து வரிகள்தான் படித்திருப்பார். "போயி சொந்தமா எழுதிட்டு வா" என்று சொல்லி அனுப்பிவிட்டார். 

எங்களுடைய நாலைந்து பக்கங்களைப் படித்தார்.

ஆங்காங்கே சில மாற்றங்களைப் பரிந்துரைத்தார். முக்கியமாக எங்களுடைய வேலை நன்றாக இருந்தது என்று பாராட்டினார். இத்தனைக்கும் சுசியின் ப்ராஜெக்ட் என்னவென்றால், ஹாரி பாட்டர் படங்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையேயான ஒரு ஒப்பீட்டு விளக்கம். வேறு எந்த கைடும் ஒரு Popular Literature நாவலை வைத்து ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கவே மாட்டார்கள்.

என்னுடைய ப்ராஜெக்ட் 1984 நாவலுக்கும் ஆதார் கார்ட் திட்டத்துக்கும் உள்ள ஒப்பீடு. அதைப் பரிந்துரைத்ததே அவர்தான். அதிலே நான் ஒரு 'உங்களை நான் எப்படி இம்ப்ரஸ் செய்கிறேன் பாருங்கள்' என்ற ஒரு extrinsic நோக்கத்துடன் எழுதியிருந்தேன். அதை அவர் கவனித்தார். ஆனால், எழுத ஆரம்பிக்கும் ஒருவனது ஆர்வமிகுதியின் விளைவே அது என்றுணர்ந்து அவற்றில் மாற்றம் ஏதும் சொல்லவில்லை. 

நான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொன்னார் அவர். எனக்கு எழுத வரும் என்று எனக்கு முன்பே தெரிந்து சொன்னவர் அவர். 

எங்களுடைய கடைசி ட்ராஃப்ட் மற்றவர்களின் முன்னுரையை விடச் சிறியது. ஆனால், அவர் அதை ஏற்றுக் கொண்டார். 

Be Original என்று சொல்லிக் கொடுத்தவர் அவரே. என்னைத் தொடர்ந்து எழுதச் சொன்னவரும் அவரே. என்னுடைய மொபைலில் அவருடைய பெயர் Superhero. அது உண்மையும் கூட.

Comments

  1. Before reading the post, I want to say this. I was thinking that Teachers Day ku edhachum ezhudhuna nalla irukume nu
    🤭. Nenachapadi nenachapadi post onnu amanjadhadi.

    ReplyDelete
    Replies
    1. That was jolly good read of the reminiscences of student life😃😃..


      விளாரு பத்தி படிக்கும்போது எங்க மேத்ஸ் மிஸ் மேபல் ஞாபகத்துக்கு வந்தாங்க. அவங்க கொண்டு வர கம்பு அவங்க ஒசரத்துக்கு இருக்கும். Aisle ல நடந்துட்டே பெஞ்ச் கிட்ட நின்னு கம்ப நீட்டுனா பெஞ்ச் கடைசில இருக்கறவங்களுக்கும் அடி விழுகும்- ரெண்டு பேரும் நின்ன எடத்துல இருந்தே.
      ஒருவாட்டி கடைசி பீரியட். Whole கிளாஸ் க்கும் punishment. எல்லாரும் நின்னுட்டு இருந்தோம். மிஸ் ஒவ்வொரு பெஞ்சா நோட் செக் பண்ணிட்டு தப்பா எழுதுன நோட் எல்லாம் விசிறி எறிஞ்சுட்டு இருந்தாங்க. பேப்பர் லாம் கிளாஸ் முழுக்க செதருச்சு. அப்போ மிஸ் பாட்டு பாடுனாங்க அது இன்னும் நினைவு இருக்கு

      "பேப்பர் மழை பொழிகிறது, ஒவ்வொரு பேப்பரிலும் கிராஃப் (graph) உ தெரிகிறது"
      .....
      வேலுச்சாமி சாரோட பகுத்தறிவுக்கான எடுத்துக்காட்ட எங்க வேணும்னாலும் போய் சொல்லலாமே. 👌🏽

      கந்தசாமி சாரும் ஜெய் யும் 🤣🤣🤣🤣🤭🤭 அச்சச்சோ சிரிப்பாவும் இருந்துச்சு பாவமாவும் இருந்துச்சு. ஜெய்யோட நிலமைல இருந்து யோசிச்சு பாத்தா இவ்ளோ நல்ல ஹேர்ஸ்டைல் வெச்சு இருக்கற அன்னிக்கி இப்படி கும்மாங்குத்து வாங்குனா எப்படிதா இருந்திருக்கும். பாவம்.

      கந்தசாமி சார் ரியலி சூப்பர் 👌🏽(ஜெய்ய அடிச்சத சொல்லல )

      செந்தில் சாரோட சட்டமன்றம் படிச்சுட்டு ஒரே சிரிப்பு 🤣

      நெறய விஷயங்கள் நம்மள சுத்தி நடந்துருக்கு, நடந்துட்டு இருக்கு. ஆனா அதயெல்லாம் கவனிக்காம blinders ஓட வலம் வந்துட்டு இருந்தா, ஒருத்தங்க சொல்லக் கேட்டுதா "ஓ இப்படியெல்லாம் இருந்துச்சா!!!" ன்னு தெரிஞ்சுக்க வேண்டி இருக்கும்.

      BP சார் பத்தி படிக்கும்போது என்னோட ug ல KR சார் தா ஞாபகத்துக்கு வந்தாரு. நக்கலு நையாண்டி பயங்கரமா இருக்கும். அவரு சப்ஜெக்ட் எடுக்கறதெல்லாம் எப்பவாவதுதா. கத கதயா பேசுவாரு. அவரு பேசும்போது சிரிச்சு சிரிச்சு கன்னம் வலி தாங்காம கன்னத்தை புடுச்சுட்டே இருப்பேன். செம்ம்ம்ம ஜாலியா இருக்கும்.
      ஒருவாட்டி பாக்கெட் dictionary வெச்சு first bench ல உக்காந்து பாத்துட்டு இருந்தேன். சார் பாத்துட்டு "இதென்ன பஜ்ஜி போண்டா மடிக்கிற பேப்பரா?" ன்னு கேட்டாரு.

      அதே மாதிரி ஏதாச்சும் செமினார் னா chair tables லாம் போட்ருப்பாங்கல்ல? அதுல fancy யா துணி மாட்டி close பண்ணிருப்பாங்கல்ல? அத சார் என்ன சொல்லுவாருன்னா டேபிள் சேர் க்கு பாவாட கட்டி விட்ருக்காங்கன்னு சொல்லுவாரு.

      யாராச்சும் சீனியர்/other dept ஸ்டுடென்ட்ஸ் அவர பாத்து "சார் நல்லா இருக்கீங்களா?" ன்னு கேட்டா.

      "நல்லா இருக்கரதாலதான் பள்ளிக்கோடத்துக்கு (அவரு காலேஜ் அ பள்ளிக்கூடம் ன்னு தா சொல்லுவாரு) வந்துருக்கேன்" ன்னு சொல்லுவாரு.

      யு கேரி ஆன் சொன்னவங்களுக்கு ஒரு பட்ட பேரு வெச்சுதா கூப்பிடுவாரு. அவங்க language வெச்சு ஒரு nickname. I don't think she liked it.
      ....
      ChatGpt இருக்கற இந்த காலகட்டத்துல ஆசிரியப் பெருமக்கள் எல்லாருமே பழனிவேல் சார் மாடல follow பண்றதுதா advisable.

      Btw a great read👌🏽👌🏽👌🏽.. Thank you for writing.

      Delete
  2. I hope your story definitely made your viewers think about their teachers. It's a great thing reminiscing about your teacher and writing about them. I absolutely enjoyed the humorous touch in your story. I didn't expect such humor behind the hairstyle. Seriously, I can't help laughing!! I wish you all success and a Happy Teacher's Day.

    ReplyDelete
  3. ப்ராஜெக்ட் பத்தின டீடெயில்ஸ் இப்போ லேட்டரா add பண்ணதா? Or first டைம் போஸ்ட் பண்ணப்போவே இருந்துச்சா? I think I missed it reading it previously.

    ReplyDelete
  4. Reading Jai's part again and again🤣🤣🤣🤭🤭.. Btw correct detailing regarding The Last Leaf.. The placements of the words and events are exact👏🏽👏🏽.. Chumma ezhudhanumnu ezhudhama it's good that you referred to the original text.

    ReplyDelete
  5. Naandha romba late pola. Ellarume padichacha? Romba naal kalichu periya article...
    The contributors to the making of you. It's a privilege to know about your teachers.
    School and colleges oda avanga in-person roles mudunjurundhalume, their footprints speak volumes in our lives, right?
    In this new age of technological advancement and social media, people are becoming distanced from each other. Connected yet disconnected. I don't see anybody talking about their teachers anymore. It's heart-warming to see you writing about your teachers. Sometimes being old school keeps us grounded to who we are and were.
    I don't know why but I'm reminded of the art of letter writing. It got lost in the passage of time. Similarly do the art of writing itself is getting lost with the advent of AI. So writers like you are to be cherished and celebrated who keep the human touch and emotions to the writing. Not something generated by machines.
    Hope all the teachers mentioned here read your article. They'll feel proud.
    Keep writing.

    ReplyDelete
  6. My heart desires to meet two of my teachers, after I get a job. It's been eighteen years since I saw them. Don't know where they are. Thinking about finding them and getting blessings from them itself puts tears in my eyes.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?