ஒரு காலை

அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.

முக்கால்வாசி டவுனாக மாறி விட்டிருந்த அது ஒரு கிராமம். பால தண்டாயுதபாணி திருக்கோயில் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உள்ளூர் மக்களால் சுப்ரமணியர் கோயில் என்று செல்லம் கொஞ்சப்பட்ட அந்தக் கோயிலிலிருந்து காலையிசை கேட்டது; வாயில் கோபுரத்தில் புறாக்கள் வினோத சத்தங்கள் எழுப்பின; கோயிலின் உள்ளேயிருந்து மாலைப் பூக்கள், சந்தனக் குச்சி* மற்றும் கற்பூரப் புகை, இன்னும் பலவித பூஜைப் பொருட்களின் கலவையான வாசனை காலைப் பொழுதின் இளவெயிலுக்கு உகந்ததாக இருந்தது; 

(*கொங்கு வட்டார வழக்கில் ஊதுபத்தியைத்தான் சந்தனக் குச்சி என்பர்)

வீடுகளின் வாசல்களில் கோலங்கள் கிடந்தன; மிகுந்த சொகுசுடன் நான்கு நாய்கள் படுத்திருந்தன.

அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு வயது முப்பதுகளில் இருக்கலாம். ஓர் இரண்டடுக்கு வீட்டின் வாசலை அடைந்தான். மெயின் கேட் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஹவுஸ் ஓனர் வீட்டில் இருக்கவேண்டும். அழைப்பு மணியடித்தான்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் சாவியுடன் வந்தார். ஹவுஸ் ஓனர்.

அந்த ஹவுஸ் ஓனர் அவனிடம் அதுவரை பேசிய சில வாக்கியங்களாவன பின்வருமாறு.

"கண்ணு, கதவ சாத்தும் போது கொஞ்சம் மெதுவா சாத்துங்க. க்ரில் எல்லாம் போயிடும்."

"கண்ணு, ஒரு மாசமா வீட்டுக்கே வரல நீங்க. பால்கனில ஒரே குப்பையா கெடக்குது. போட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பாருங்க."

"கண்ணு, என்ன நீங்க வந்து வாசல் கூட்டறீங்க? பாப்பாக்கு ஒடம்பு செரியில்லையா?"

"கண்ணு..."

போதுமென்று நினைக்கிறேன். காலை வேளையில் எதற்கு!

பூட்டை விடுவித்து கேட்டைத் திறந்தார். அவன் உள்ளே போகும் போது, திரும்பிச் சென்றபடியே சொன்னார்.

"மறுபடியும் பூட்டிட்டு போயிடுங்க. யார் யாரோ வந்துட்டு போயிட்டு இருக்காங்க. யாராச்சும் உள்ள வந்துட்டா..."

பேசிக்கொண்டே அவர் உள்ளேயே போய்விட்டார். அதனால் மட்டும் அவர் கடைசியாகச் சொன்னது தெளிவாகக் கேட்காமலில்லை. முதலாவதாகச் சொன்ன கட்டளை வாக்கியத்தை மட்டும் தெள்ளத் தெளிவாக அவனிடம் சொல்லிவிட்டு, தொடர்ந்து அவர் சொன்னதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு புலம்பல்தான். தமிழில் 'கட்டளை வாக்கியம்' என்ற பெயருக்குப் பதிலாக வேறு ஏதாவது நாசூக்கான பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், அவர் இட்டது... ஆமாம், அது கட்டளைதான். 

அவன் கேட்டை சாத்தி பூட்டுப் போட எத்தனித்த போது, ஒரு குரல் கேட்டது. ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் குரல்.

"தம்பி!"

தம்பி நிமிர்ந்தான்.

அவருக்கு ஐம்பது வயதுதான் இருக்கும். பெரும்பான்மை நரைவெள்ளையாக இருந்த தலைமுடி வாரப்படாமல் இருந்தது. பல வாரங்கள் சவரம் காணா மீசையும் தாடியும். அவர் மிகவும் சோர்வாயிருந்தார். அழுக்குச் சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.

அவன் அவரை நிமிர்ந்து பார்த்த அடுத்த வினாடியே அவரது குரல் உடைந்தது.

"தம்பி, வேலைக்கு வந்தேன். வேலை இல்ல. பசிக்குது தம்பி."

அவர் அவனைக் கைகூப்பி நின்றார். அவர் சுப்ரமணியர் கோயிலைக் கடந்துதான் அங்கே வந்திருக்க வேண்டும். அவனுக்கும் சடுதியில் கண்ணீர் சுரந்தது. 

"அண்ணா, ஒரே ஒரு நிமிசம் இருங்க" என்று சொல்லிவிட்டு, கேட்டை பூட்டாமலேயே மேலே விரைந்தான். கடந்த இரண்டு நாள்களாக அவனும் அவன் மனைவியும், அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தனர். எனவே, வீட்டில் உணவு இருக்காது. பணமுமே இருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் விரைந்தான். படபடப்பாக.

ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் பார்த்தான், வாலட்டின் இரகசிய அறைகளில் கண்களாலும் விரல்களாலும் துழாவினான், காலேஜ் பேகின் (bag) எல்லாப் பகுதிகளிலும் ஆராய்ந்தான், ஹேங்கரில் தொங்கிய பேண்ட், சட்டைகளில் தேடினான். தான் தாமதிக்கும் நேரத்தில் அவர் நம்பிக்கையிழந்து திரும்பிவிடவோ, ஹவுஸ் ஓனர் அவரைத் திட்டி, திருப்பி அனுப்பிவிடவோ கூடாது என்ற எண்ணத்தினால் அவனுடைய படபடப்பு அதிகமானது. 

பீரோவின் கதவுதான் சட்டையென்றால், அதனுடைய பாக்கெட் போலிருந்த சிறு பெட்டியில் விரல்களால் துழாவினான், மனைவியின் பழைய ஹேண்ட் பேகில் அலசினான். எல்லா இடத்திலும் சேர்த்து ஒரு நூறு ரூபாய், ஓர் இருபது ரூபாய், ஒரு பத்து ரூபாய் தாள்கள் கிடைத்தன. கல்லூரியில் சம்பள பாக்கி.

முப்பது ரூபாய் நிச்சயமாகப் போதாது. ஹவுஸ் ஓனரிடம் நூறு ரூபாய்க்கு சில்லறை வாங்கி ஐம்பதை அவருக்கு தரப்போகிறானா, முப்பது ரூபாய் மட்டும் தரப் போகிறானா, நூறு ரூபாயே தரப் போகிறானா என்று அவனுக்கே தெரியாமல் கிளம்பினான்.

கதவைத் திறந்து வெளியே வந்தவுடனேயே அவர் வீதியில் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது. கேட்டின் அருகே ஹவுஸ் ஓனர் நின்றிருந்தார். அவன் அவரைக் கேட்டான்.

"அக்கா, ஏங்க்கா போறாரு?"

"நான் குடுத்துட்டேன்" என்றபடியே அவர் உள்ளே போனார். 

அவனால் நம்பமுடியவில்லை.

Comments

  1. Super bro..kelavi kuduthurukkum nambunga...

    ReplyDelete
  2. இத்தனை நாட்கள் குடியிருந்த 'அவன்' -இன் நல்ல மனதை ஓரளவு அறிந்திருந்த அந்த ஹவுஸ் ஓனர் அம்மா
    மீது அவனது இளகிய குணம் சிறிதளவேனும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஆகையால் அவர்கள் சொன்ன "நான் குடுத்துட்டேன்" என்பதை நம்பலாம் என்றே தோன்றுகிறது.

    கேட்டிற்கு வெளியில் உதவி கேட்டு நிற்கும் ஒரு மனிதர்,
    சொல்லியும் சாத்தப்படாமல் கிடக்கும் கேட்டை பார்த்து ஓனர் அம்மா யூகித்திருப்பார், பணம் இல்லாத நேரத்திலும் அவன் பணத்தை எடுத்து வர போயிருப்பான் என்று. எனவே அவரே சிறிது பணத்தை கொடுத்து அனுப்பியிருக்கலாம்.
    --------------------

    அப்படி இல்லையேல்,

    "மறுபடியும் பூட்டிட்டு போயிடுங்க. யார் யாரோ வந்துட்டு போயிட்டு இருக்காங்க. யாராச்சும் உள்ள வந்துட்டா..."
    என்று சொன்னதை பார்த்தால், அவர் ஏற்கனவே இதற்கு முன்பு வந்திருக்கக் கூடும். அப்படி பார்த்தால் ஓனர் அம்மா அன்று போல இன்றும் அவரிடம் ஒன்றும் இல்லை, அங்கு நிற்க வேண்டாம் என கூறி அனுப்பியிருக்கலாம்.
    ------------

    "அவனுக்கும் சடுதியில் கண்ணீர் சுரந்தது."

    இத்தனை இளகிய மனம் கொண்டவனிடம் தாராளமாக பணம் இருந்திருந்தால் அவன் அப்பொழுதே சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்திருப்பான். ஒருவருக்கு உதவவே வீட்டுக்கு போய் தான் எடுத்து வர வேண்டிய சூழல். யாரோ ஒருவருக்கு தருவதற்காக அத்தனை இடங்களில் துழாவி பார்க்கிறான். ஒன்றுமில்லை என்று சொல்லி இத்தனை பரிதவிப்பை தவிர்த்திருக்கலாம்.

    வீட்டில் பணம் தாராளமாக இருந்திருந்தால்கூட, அவன் ஓடிச் சென்று அவரிடம் கொடுத்திருப்பான்.

    "பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை.
    மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை." என்ற கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  3. Love your writing👌🏼

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?