முடிவிலா ஓவியம்

சின்ன வயதில் "நிவாரண் 90" பாக்கெட்டைப் பார்க்கும் போது, அது ஒரு முடிவிலி என்று தோன்றியது. 

அந்தப் பாக்கெட்டில் இருக்கும் படத்தை ஓவியமாக ஒருவர் வரையத் தொடங்கினால் அவர் நித்தியத்திற்கும் வரைந்து கொண்டேதான் இருக்க வேண்டும். அதை வரையத் தேவையான மை முடிவில்லாமல் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியென்ன பிரமாதமான படம் அது?

முதலில் நிவாரண் 90 என்பது ஓர் இருமல் மருந்து. ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ இருக்கும். ஒரு ஷாம்பூ சாஷே போலத்தான் இருக்கும். அதனை வாங்கி அதன் வாயைக் கிழித்தெறிந்து விட்டு வாய்க்குள்ளே கொட்டிக்கொள்ளலாம். கடைக்காரர் மீதிச்சில்லறை தருவதற்குள் மருத்துவத்தை முடித்துவிடலாம். 

அந்த நிவாரண் 90யின் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் படத்திலும் ஒருவர் அதையேதான் செய்துகொண்டிருப்பார். அவர் கையிலும் ஒரு நிவாரண் 90 இருக்கும் அதை அவர் வாய்க்குள் கொட்டிக் கொண்டிருப்பார். அதாவது, நிவாரண் 90 பாக்கெட்டில் இருக்கும் படம்‌ என்னவென்றால் ஒருவர் நிவாரண் 90யை வாய்க்குள் கொட்டுவது.

அந்தப் படத்தில் இருப்பவர் வேறு எதையாவது குடித்திருந்தாலாவது பரவாயில்லை. அவரும் அதையேவா குடித்துத் தொலைய வேண்டும்!

படத்தில் அவர் குடிப்பதும் நிவாரண் 90 என்பதால், அதிலே இருக்கும் படத்திலும் இன்னொருவர் இன்னொரு நிவாரண் 90யைக் குடிக்கவேண்டும். அந்த இன்னொரு நிவாரண் 90யில் இருக்கும் படத்தில் மற்றொருவர் மற்றொரு நிவாரண் 90யைக் குடிக்க வேண்டும். அந்த மற்றொரு நிவாரண் 90யில் பிறிதொருவர் பிறிதொரு நிவாரண் 90யைக் குடிக்க வேண்டும். இது இப்படியே போய்க்கொண்டே இருக்க வேண்டும். 

இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தப் படம் வெளிப்புறம் நோக்கி விரிவடைவதில்லை. மாறாக, உள்நோக்கி விரிந்து கொண்டே போகிறது. 

ஒரு நிவாரண் 90 பாக்கெட்டின் பரப்பளவு தோராயமாக ஐம்பது சதுர சென்டிமீட்டர் என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பரப்பளவுள்ள ஒரு காகிதத்தில் எல்லா இடத்திலும் ஒரே வண்ணத்தை இட்டு நிரப்ப வேண்டுமென்றால், எவ்வளவு மை தேவைப்படுமோ - அந்தக் காகிதத்தில் ஒரு படத்தை வரைவதற்கு அதைவிட அதிகமான மை தேவைப்படாது. இன்னும் சொல்லப்போனால் சற்றே குறைவான மை இருந்தால் போதும்.

ஆனால் இங்கே இருக்கும் முரணைக் கவனியுங்கள். ஒருவர் நிவாரண் 90 குடிப்பதை எண்ணிலடங்காத தடவை வரைந்து கொண்டே இருக்க வேண்டும்‌ என்பதால், அந்த ஐம்பது சதுர சென்டிமீட்டர் பரப்பில் ஒரே வண்ணத்தை இட்டு நிரப்புவதற்குத் தேவையான மையின் அளவைவிட, ஒரு நிவாரண் 90யின் படத்தை வரைவதற்கு மிக அதிக மை தேவைப்படும். ஏனென்றால், ஒரு நிவாரண் 90யில் எண்ணிலடங்கா நிவாரண் 90 உள்ளன.

எப்படி இந்தப் பிரபஞ்சம் ஒவ்வொரு நொடியும் வெளிநோக்கி விரிவடைந்து கொண்டே போவதாக நம்பப்படுகிறதோ, அதுபோலவே, அது உள்நோக்கியும்‌ முடிவின்றிப்‌ போய்க்கொண்டே இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படி மட்டும் இருந்தால், நிவாரண் 90 கம்பெனி எத்தனை கோடி ஈட்டினாலும் இந்த பாக்கெட் படத்துக்கே கட்டுபடி ஆகாது.

இந்த முரண் எதனால் ஏற்படுகிறது?

மிகப் பிரபலமான பார்பர் முரணும் இதைப் போன்றதே. 

அது என்னவென்றால்...

ஓர் ஊரில் ஒரு பார்பர் இருந்தாராம். அந்த ஊரில் இருந்த ஆண்களில் சுயமாக சவரம் செய்து கொள்ளாத ஆண்கள் எத்தனை பேரோ அவர்களுக்கு எல்லாம் அவர்தான் சவரம் செய்து விடுவாராம். இதுதான் கூற்று.

இந்தக் கூற்று எப்படி முரணாகிறது என்று பார்ப்போம். ஒரு முக்கியமான கேள்வி.

அந்த பார்பர் சுயமாக சவரம் செய்து கொள்பவரா இல்லையா?

அவர் சுயமாக சவரம் செய்து கொள்பவரென்றால், சுயமாக சவரம் செய்யும் ஒருவருக்கும் (அவருக்கேதான்) அவர் சவரம் செய்கிறார் என்றாகிறது.

அவர் வேறொரு பார்பரிடம் சென்று சவரம் செய்துகொள்கிறாரென்றால், சுயமாக சவரம் செய்து கொள்ளாத ஓர் ஆணை அவர் தவறவிடுகிறார் என்றாகிறது. 

எப்படிப் பார்த்தாலும் அந்தக் கூற்று பொய்யாகிறது. எனவே அது முரணாகிறது. 

இதற்குக் காரணம், பார்பரையும் அந்த ஊரிலிருக்கும் ஓர் ஆணாகக் கருதுவதே. தன்னையும் ஒரு பயனிலை ஆக்குவது. Self-reference.

மிக எளிய உதாரணம் சொல்கிறேன். 

இந்தக் கூற்று பொய்.

மேலே இருக்கும் கூற்று உண்மையா பொய்யா?

அது உண்மையென்றால், அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி அது பொய்யாகிறது. 

அது பொய்யென்றால், அது உண்மையாகிறது.

'அவள் சொன்னது பொய்', 'இவள் சொன்னது பொய்' என்று மற்ற வாக்கியங்களைப் பற்றிச் சொல்லாமல், தன்னைப் பற்றியே சொல்லிக்கொள்வதால்தான் இந்தக் கூற்று முரணாகிறது. Self-reference.

நமது நிவாரண் 90யிலும் வேறு படம் இருந்திருந்தால் தொல்லையில்லை. அதுவே ஒரு நிவாரண் 90. அதன் ஒரு பகுதியாக தன்னையே ஏற்படுத்திக் கொள்வதால் வரும் முரண் இது. Self-reference. 

இன்னொரு கூத்தைக் கேளுங்கள். விசயத்தை எளிமையாகப் புரிய வைப்பதற்காகவே நான் மற்றொருவர், இன்னொருவர், பிறிதொருவர் என்றெல்லாம் சொன்னேன். உண்மையில், உள்நோக்கிச் சென்றவாறே இருக்கும் அனைத்து நிவாரண் 90யிலும் இருப்பவர் ஒருவரே. நமக்குப் பரவாயில்லை. நாம் கடையில் சென்று நிவாரண் 90 வாங்குகிறோம். அதிலே வேறொருவருடைய படம்தான் இருக்கிறது. ஆனால், அவர் கையிலே பிடித்திருக்கும் படத்தில் அவரேதான் இருக்கிறார். அது அவருக்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும்!


Comments

  1. Hey, my comment is gone!!! Nalla illaya? Seri paravala.

    Kindly write an article on self-discipline and dopamine detox in your style.

    ReplyDelete
    Replies
    1. Self discipline. It is one of those things nobody can teach nobody. Dopamine detox. If you're a dopamine lover, let me tell you one thing. Only if you detox, the further experiences can be as fruitful as the first one.

      Delete
  2. என்னாத் தம்பி... மாசம் ஒண்ணு ஓடிப்போச்சு... புதுசா ஒண்ணும் எழுதலையா? எத்தன நாள்தா வெயிட்டிங்லயே இருக்கறது?

    ReplyDelete
  3. https://youtu.be/6bXvPf_RbbU?si=wzLaiovWiuxNF7iy

    Sore: Istri dari Masa Depan

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?