மறக்குமா நெஞ்சம்?
அந்தப் பசுமையான மரத்திலிருந்து காகிதப் பூக்கள் ஒரு தாளகதியுடன் விழுந்து கொண்டிருந்தன. உண்மையில் 'விழுந்து' கொண்டிருந்தன என்று சொல்வது சற்றே வன்முறையான வார்த்தை. புவியீர்ப்பு விசை மற்ற பொருட்களின் மீது செயல்படுவது போல் அல்லாமல் அந்தப் பூக்களின் மீது மட்டும் சற்றே நிதானத்துடன் விசையைச் செலுத்தியதோ என்று ஒரு குழப்பம் தோன்றும் வகையில் அவை ஒரு நளின நடனத்துடன் மிதந்து வந்து தரையில் படர்ந்து கொண்டன. நான் ஹெட்போனில் கேட்டுக் கொண்டிருந்த 'வெண்மதி வெண்மதியே நில்லு' பாட்டுக்குத் தோதாக அந்தப் பூக்கள் அசைந்தாடின. மேலும், அம்மரமே அந்தப் பூக்களைப் பார்த்துப் பாடுவதைப் போல, அவ்வளவு பாங்குடன் அப்பாடலின் வரிகள் அந்தச் சூழலுக்குப் பொருத்திப் போயின.
எனக்கு அது ஆச்சர்யமாகவே இல்லை. இந்த மாதிரி தற்செயலான நிகழ்வுகள் எனக்கு அடிக்கடி நிகழும். மற்றவரிடம் சொன்னால் நம்பவே முடியாததாய் இருக்கக் கூடிய தற்செயல்கள். நான் மகிழ்ச்சியாய் இருக்கும் போது மட்டுமே நிகழ்பவை அவை.
என்னுடைய செல்போனில் இருந்த அத்தனை பாடல்களையும் டெலீட் செய்துவிட்டு, கௌதம் மேனனின் படத்தின் எல்லாப் பாடல்களையும் பதிவிறக்கி, அந்தப் பாடல்கள் எல்லாம் வரிசையாகப் பாடாதவாறு, shuffle ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, ஹெட்போனில் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில், நான் நின்றிருந்த வேப்பமர நிழல் மூன்றாவது முறையாக என்னைவிட்டு முழுவதும் விலகிச் சென்றதால், பைக்கிலிருந்து இறங்கி, நிழலுக்கு அடியில் பைக்கை தள்ளி நிறுத்திக் கொண்டு மீண்டும் அதிலேறி அமர்ந்து கொண்டேன். 'நிழலை விட்டுச் சென்றாயே!' என்று பாடிய பாம்பே ஜெயஸ்ரீயை மானசீகமாக ஆறுதல்படுத்தினேன். அது மாலை நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை. ஆனால், நான் சாலைக்கு கிழக்குப் புறமாக இருந்ததால், சாலையில் நடமாடிய மனிதர்களை பார்க்கும் போது அஸ்தம நேரத்து சூரியக் கதிர்கள் கண்ணைக் கூசின. அதனால்தான் நிழலுக்கடியில் வந்து நின்றேன்.
தொடர்ந்து எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருக்கும் போது, நகரும் காட்சிகளையும் அவ்வப்போது பார்க்க வேண்டும். திருவான்மியூரின் ஒரு மூலையில் இருந்த அந்தக் குறுக்குச் சந்தில் நடமாடிய எந்தவொரு மனிதருக்கும் நான் அவர்களை உற்று உற்றுப் பார்ப்பது ஒரு பொருட்டாகவே இல்லை என்பது எனக்கும் வசதியாகவே இருந்தது. அந்தச் சாலையை வழக்கமாகக் கடந்து போகும் மனிதர்கள் எல்லாரும் அங்கே எத்தனை மணிக்கு வருவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்; அங்கே நடைப்பயிற்சி பயிலும் அந்த வயதான தம்பதியினரின் குரல்கள் எனக்கு நன்கு பரிச்சயம்; பள்ளி முடிந்து அந்த வழியாக வீட்டுக்குச் செல்லும் அந்த நான்கு அழகிய பெண்களில் ஒருத்திக்கு சிறு செடிகள் நடும் அளவிற்கு கன்னங்களில் குழி விழும் என்று எனக்குத் தெரியும்; மிக மெல்லிய குரலில் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே செல்லும் அந்தப் பெரியவரிடம் எத்தனை சட்டை, பேண்ட் இருக்கிறது என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்களில் யாருக்கேனும் என்னைத் தெரியுமா என்பது சந்தேகமே. அந்தப் பிராந்தியத்தில் என்னைத் தெரிந்த ஒரே நபர் யாரென்றால், நான் எந்த வீட்டுக்கு முன்பாகக் காத்திருந்தேனோ அந்த வீட்டின் வாட்ச்மேன் மட்டுமே. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திருவான்மியூர் அலுவலகத்தின் வாட்ச்மேன். ஆனால், அவரை விட அதிகமாக அங்கே 'வாட்ச்' பண்ணியது நானாகத்தான் இருக்க வேண்டும்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக நான் முதல் முறையாக திருவான்மியூருக்கு வந்தபோது, என் வாழ்க்கையில் அதுவரைக்கும் நான் செய்திராத ஒரு செயலில் இறங்கும் மனோதிடத்துடன்தான் வந்தேன். திருவான்மியூருக்கு வந்து சேர்வதற்கு முன்பாக நான் கௌதம் மேனனின் ராயப்பேட்டை அலுவலக வாசலில் ஒரு வாரம் காத்திருந்தேன்.
அந்த ராயப்பேட்டை அலுவலகத்தைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். முதலில் 'ராயப்பேட்டை' என்ற பெயர் கொண்ட ஒரு பகுதி அவ்வளவு நாசூக்காக இருந்ததே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. யார் யாரிடமோ கேட்டு அவரின் அலுவலகம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தேன். அது ஒரு தனிக் கட்டடமாக இல்லை. சாலையோர நடைமேடையை (platform) ஒட்டியவாறு இருந்த காம்பௌண்ட் சுவரைக் கடந்து உள்ளே சென்றால், அங்கே ஒரு புதிய கட்டடத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. அந்தக் கட்டடத்தின் பேஸ்மெண்ட் போலிருந்த இடத்தில் பத்துப் பதினைந்து புல்லட் பைக்குகள் நின்று கொண்டிருந்தன. சரியான முகவரிக்குத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புதிய கட்டடத்தை ஒட்டியவாறு ஓர் இரண்டு அடுக்கு கட்டடம் இருந்தது. கீழ்த்தளத்தில் இருந்த வீடு பூட்டியிருந்தது. மாடியில் இருந்த ஒரே ஒரு அறையின் கதவு திறந்திருந்தது.
விண்ணைத் தாண்டி வருவாயா படமெடுத்த கௌதம் மேனன் அங்கே இரத்தமும் சதையுமாக அமர்ந்திருப்பார் என்ற எண்ணமே என் தலையைக் கிறுகிறுக்க வைத்தது. அவரின் அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடித்தேவிட்டேன் என்ற களிப்பு எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
படபடக்கும் இதயத்துடன் படியேறிச் சென்றேன். திறந்த கதவின் முன்பாகச் சென்று நின்றேன். "சார்" என்று கூப்பிட்டேன். உள்ளே எந்தச் சலனமும் இல்லை. மீண்டும் சத்தமாகக் கூப்பிட்டேன். கதவைத் தட்டினேன். உள்ளே யாரும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஓரடி எடுத்து உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்தேன். இரண்டு மேசைகளும் நாற்காலிகளும் இருந்தன. திடீரென யாராவது வந்து அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்ததற்காகத் திட்டிவிடுவார்களோ என்று பயந்தேன். உள்ளே இன்னொரு அறையும் இருப்பது தெரிந்தது. அந்த அறைக்கு இட்டுச் செல்லும் நிலைப்படியின் அருகே சென்றேன். மீண்டும் கூப்பிட்டேன். அங்கேயும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த உள்ளறைக்குள்ளே நுழையும் தைரியம் எனக்கு வரவில்லை. சத்தமே இல்லாமல் கீழே வந்தேன். படிக்கட்டு தொடங்கும் இடத்தில் அமர்ந்து கொண்டேன். யாராவது உள்ளறையில் ஏதாவது வேலையாக இருந்தால், எப்போதாவது வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மாலை வரையிலுமே அங்கே காத்திருக்கத் தீர்மானித்தேன். பையிலிருந்த புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். கண்கள் வாக்கியங்களைப் படித்தாலும் மனம் அதைப் பொருட்படுத்தவில்லை. பக்கத்தில் ஏதாவது காகம் கரைந்தால் கூட படிக்கட்டை அண்ணாந்து பார்த்தேன். யாரும் வருவதாகத் தெரியவில்லை.
ஒரு மணி நேரம் சென்றிருக்கும். கட்டடப் பணி செய்யும் ஆட்கள் வந்தார்கள். யாராவது என்னைப் பார்த்து விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் என்னைப் பார்த்தார்கள். ஆனால், கண்டுகொள்ளவில்லை. படியில் ஒருவன் அமர்ந்திருப்பது கூட எப்படி இவர்களுக்கெல்லாம் சகஜமாகத் தெரிகிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. எழுந்து அவர்களில் ஒருவரிடம் சென்றேன்.
"அண்ணா!"
அவர் திரும்பிப் பார்க்கவில்லை. மீண்டும் கூப்பிட்டேன்.
"அண்ணா!"
திரும்பினார். அதையே நான் அவர் என்னவென்று கேட்டதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
"கௌதம் மேனன் சார் ஆஃபிஸ் இதுதானே?"
"ஆமாப்பா."
"நான் மேல போயி கூப்புட்டுப் பாத்தேன். யாருமே வரல?"
"யாரும் இருக்க மாட்டாங்க."
யாருமே இல்லாத அலுவலகம் ஏன் திறந்திருக்க வேண்டும்? அவர் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
"எப்போ வருவாங்க?"
"எப்பவாவது யாராச்சும் வருவாங்க. உடனே போயிருவாங்க."
அந்த இரண்டாவது தகவல் எனக்கு முக்கியமில்லை.
"நா அந்தப் படியில போயி உக்காந்து வெய்ட் பண்ணட்டுமா?"
"எப்போ வருவாங்கனு எல்லாம் சொல்லமுடியாது."
அவர் என் மீதான அக்கறையில் சொன்னாரா இல்லை நான் அங்கே இருக்கக்கூடாதென்று சொன்னாரா என்று எனக்குப் பிடிபடவில்லை.
"அது பரவால்லைங்கண்ணா. நா அங்க வெய்ட் பண்ணிக்கட்டுமா?"
'அதனால் எனக்கென்ன' என்று சொல்வதைப் போல அவர் தலையசைத்தார். நான் சென்று அமர்ந்து கொண்டேன். மாலை உதிர்ந்து இரவானது. அதுவரையிலுமே அந்த அலுவலகத்துக்கு யாரும் வரவில்லை. அந்த அலுவலகத்திலிருந்தும் யாரும் வரவில்லை.
நான் திரும்பி மேலக்கோட்டையூர் போகவேண்டியிருந்தது. அங்கேதான் நான் தங்கியிருந்தேன். என்னுடைய நண்பர்கள் வி.ஐ.டி கல்லூரியில் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த வீட்டில் நானும் தங்கியிருந்தேன். ஒண்டியிருந்தேன் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் பத்துப் பதினைந்து பேர் இருந்ததால், நான் ஒருவன் பணமேதும் தராமல் தங்கியிருந்தது அவர்களுக்கு ஒரு சுமையாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் கௌதம் மேனனைச் சந்தித்து உதவியாளனாகச் சேரும் முயற்சியையே ஒரே வேலையாகச் செய்து கொண்டிருந்த நான், ஓரிரு வாரங்களில் துரைப்பாக்கத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் சப்ஜெக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்டாக மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அருமையான வேலை அது. மாதத்தில் பதினைந்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டாலும் ஏனென்று கேட்பாரில்லை. எனவே, வாரத்துக்கு இரண்டொரு நாள் மட்டும் வேலைக்குப் போய்விட்டு மீதி நாட்களில் வாய்ப்பு தேடுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டு இருந்த சமயம் அது. அதற்கு மேலும் அந்த அலுவலகத்துக்கு யாரும் வருவார்கள் என்று தோன்றவில்லை. நான் வீட்டுக்குத் திரும்பினேன்.
அடுத்த நாளும் அங்கு சென்றேன். அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கே சென்றேன். ஒரு வாரமும் அலுவலகக் கதவு திறந்தே இருந்தது. ஒரே ஒருமுறை உள்ளே தொலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. யாராவது அந்த அலுவலகத்தைப் பற்றி அறியாதவர்கள் அழைத்திருக்க வேண்டும். அங்கே தொலைபேசி இருக்கின்றது என்ற தகவல் எனக்குள்ளே ஒரு யோசனையைத் தூண்டியது. 'அங்குதான் யாருமில்லையே! நாம் உள்ளே சென்று அந்தத் தொலைபேசியிலிருந்து நம்முடைய செல்போனுக்கு அழைத்து, அதனுடைய எண்ணைத் தெரிந்து கொண்டால் என்ன?' என்று தோன்றியது. ஆனால், இரண்டு காரணங்களால் நான் அந்த யோசனையைக் கைவிட்டேன். ஒன்று, எனக்கு பயமாக இருந்தது. இரண்டு, அப்படியே அந்த எண்ணைக் கண்டுபிடித்தாலும் என்ன பிரயோஜனம்? எப்படியும் அந்தத் தொலைபேசிக்கு அழைத்தால் அதை எடுப்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை.
ஒரு வாரத்திற்குப் பிறகு புல்லட்டில் ஒருவர் வந்தார். அந்த ஒரு வாரத்தில் பலர் அங்கே வந்து போயிருந்தனர். யாருமே நான் அமர்ந்திருந்த படிக்கட்டின் பக்கமாக வந்திருக்கவில்லை. அதுகூடப் பரவாயில்லை. வேறு வேலையாக அங்கே வந்தவர்களும் நான் அங்கே இருந்ததையே பொருட்படுத்தவில்லை. எனவே, புல்லட்டில் வந்தவரையும் நான் பொருட்படுத்தாமல் தொடர்ந்து புத்தகம் படித்தேன். சில நொடிகளில் அவருடைய குரல் என்னருகே கேட்டது.
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றார்.
நான் நிமிர்ந்து பார்த்துப் பதட்டமானேன். புத்தகத்தையும் பையையும் அசௌகர்யமாக அள்ளிக்கொண்டு எழுந்தேன். அவர் என்னைக் கடந்து படியில் மேலே ஏறப்பார்த்தார். பிறகு ஆச்சர்யப்பட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவரைத் தடுத்து நிறுத்தினேன்.
"சார்"
அவர் நின்று என்னைப் பார்த்தார்.
"எஸ்?"
"சார், நா கௌதம் மேனன் சார பாக்கணும்."
"என்ன விசயமா பாக்கணும்."
"அவர்கிட்ட அசிஸ்டெண்ட்-ஆ சேரணும்."
அவர் என்னை எடைப்போடுவாரோ என்று பயந்தேன். ஆனால், அவர் முகத்தில் சலனம் ஏதும் தெரியவில்லை. அதுவே எனக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது.
"அவர் இங்க இல்லயே! டர்க்கி போயிருக்காரு."
அதற்கு முன்பாக அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால், அது எங்கே இருக்கிறதென்று கேட்டு என் அறியாமையை அவருக்கு வெளிப்படுத்த நான் விரும்பவில்லை.
"எப்போ வருவாரு?"
"தெரியலயே. இப்பதான் ஒரு வாரத்துக்கு முன்னால போனாரு."
ஆக, நான் அவரது அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடித்த பிறகுதான் கிளம்புவதென்று அவர் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். நான் வேறு ஏதும் கேட்பதற்கு முன்னால் அவரே சொன்னார்.
"திரும்பி வந்தாலும் இங்க வரமாட்டாரு. திருவான்மியூர்ல ஒரு ஆஃபிஸ் இருக்கு அவருக்கு. அங்கதான் போவாரு. நீங்க வேணா அங்க போயிப் பாருங்க. அவரோட அசிஸ்டெண்ட்ஸ் இருந்தாலும் இருக்கலாம்."
அவரை எனக்கு மிகவும் பிடித்தது. 'அவர் எப்போ வருவார்' என்று நான் கேட்டதற்கு 'தெரியல' என்று சொல்லாமல், 'தெரியலயே' என்று வருந்தியவர். நான் கேட்காமலேயே ஓர் உபரித் தகவலை எனக்குத் தந்தவர். நான் மனம் நெகிழ்ந்து அவரிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். எதையோ சாதித்ததைப் போல உணர்ந்தேன். உள்ளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஆறாம் வகுப்புக்கு கோபிசெட்டிபாளையம் போனபோது, அதன் நகரத் தன்மையைக் கண்டு மருட்சியுற்ற பாலகன் இன்னுமே எனக்குள் கொஞ்சம் மிச்சமிருந்தான். எனவே, சென்னை நகருக்குள் நான் செய்த இச்செயல் ஒரு சாதனையாக எனக்குப் பட்டதில் வியப்பில்லை. விசிலடித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன்.
சற்று தூரம் சென்றபின் வண்டியை நிறுத்தி 'டர்க்கி' எங்கே இருக்கிறது என்று செல்போனில் பார்த்தேன். துருக்கிக்குப் பேர்தான் ஆங்கிலத்தில் டர்க்கியாமே! நானொரு தமிழ் மீடியம் மாணவன். ஆனால், அதெல்லாம் இப்போது முக்கியமில்லை. எனக்குத் தகவலைத் தந்த மனிதர் மீதிருந்த நன்றிப் பெருக்கில் ஒரு முக்கியமான தகவலை அவரிடம் கேட்காமல் விட்டுவிட்டேன். திருவான்மியூர் என்றால் ஏதோ கவுந்தப்பாடியைப் போல இருக்கும் என்று நினைத்துக் கொண்டேனா? திருவான்மியூரில் அவரது அலுவலக முகவரி என்ன? வண்டியைத் திருப்பி ராயப்பேட்டை அலுவலகத்துக்கு விட்டேன். அங்கே அவரது புல்லட்டைக் காணவில்லை.
ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக நான் முதல் முறையாக திருவான்மியூருக்கு வந்தபோது, என் வாழ்க்கையில் அதுவரைக்கும் செய்திராத ஒரு செயலில் இறங்கும் மனோதிடத்துடன்தான் வந்தேன். திருவான்மியூரில்தான் அவரது அலுவலகம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், துல்லியமாக எங்கே என்று தெரியாது. எனவே, அங்கே இருந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி விசாரித்துக் கண்டுபிடித்துவிடுவதெனத் தீர்மானித்தேன். அதை நினைக்கும் போது எனக்கு மலைப்பு தோன்றவில்லை. மாறாக உற்சாகமாக உணர்ந்தேன். 'ஒருத்தன் ஒண்ணு வேணும்னு முடிவு பண்ணி தெருவுல எறங்குனான்னா, அவனுக்கு என்ன வேணாலும் கெடைக்கும்' என்ற வாரணம் ஆயிரம் படத்தின் வசனம் காதுக்குள் கேட்டது. முதலில் அந்த ஏரியாவில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் அத்தனை பேரிடமும் கேட்பதென்று முடிவு செய்தேன். கண்ணில் பட்ட முதல் ஆட்டோவை நோக்கிச் சென்றேன்.
அதன் டிரைவர் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவருக்கு அருகில் சென்றபோதே என்னை நிமிர்ந்து பார்த்தார். நான் வண்டியிலிருந்து இறங்காமலேயே கேட்டேன்.
"அண்ணா, இங்க டைரக்டர் கௌதம் மேனன் ஆஃபீஸ் எங்க இருக்கு?"
"கோத்தம் மேனன் ஆபீசா? தா அங்க ரைட்ல ஒரு ரோடு கட் ஆகுது பாரு. அதுல போ. லெஃப்ட் சைடுல மொத பில்டிங்."
எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. முயற்சி செய்யத் தொடங்கிய உடனேயே அதற்கான பலன் கிடைத்தது
ஒரு காரணம். தன் படங்களில் கௌதம் காட்டவே காட்டாத பாத்திரமான ஓர் ஆட்டோ டிரைவர் அவரது அலுவலகத்தை அவ்வளவு உரிமையுடன் சுட்டிக் காட்டியது இன்னொரு காரணம்.
"அண்ணா, ரொம்ப ரொம்ப நன்றிங்ணா."
ஆனால், அந்த நன்றி அவருக்குத் தேவைப்படவில்லை என்பது போல ஒரு சின்னஞ்சிறு தலையசைப்பைத் தந்தார்.
அந்தச் சாலை மிக அமைதியாயிருந்தது. அவர் சுட்டிக்காட்டிய திருப்பத்தை நெருங்க நெருங்க ஒரு மெல்லிய இரைச்சல் கேட்டது. அது இரைச்சல் போலவும் இருந்தது, ஆயிரம் பேர் கைதட்டும் ஓசை மிக மெல்லியதாகக் கேட்பது போலவும் இருந்தது. நான் திரும்ப வேண்டிய இடத்தில் திரும்பாமல், அந்தச் சத்தம் வந்த திசையிலேயே சென்றேன். சட்டென்று சென்னை மாநகரிலிருந்து விலகி ஒரு குக்கிராமத்தில் நுழைந்தது போலிருந்தது. ஆங்காங்கே நான்கைந்து குடிசைகளும், ஓட்டு வீடுகளும் தெரிய, நீண்டு கிடந்த மஞ்சள் மணல்வெளிக்கு அப்பால் தெரிந்தது இலட்சம் கோடி அலைகளை அள்ளித் தெளித்து விட்டிருந்த வங்கக் கடல். அங்கேயே ஒரு பத்து நிமிடங்கள் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். தொலைதூரத்தில் தெரிந்த தொடுவானத்தையே பார்த்தபடி நின்றேன். இந்த நீண்ட நெடிய பூமியில் நானொரு புள்ளிக்கும் குறைவானவன் என்று தோன்றியது. மனம் இலேசானது. ஆனால் ஏனோ உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவியது. நான் வண்டியைக் கிளப்பி கௌதம் மேனனின் அலுவலகத்தை நோக்கிச் செலுத்தினேன்.
ஆட்டோ டிரைவர் சொன்ன திருப்பத்தில் திரும்பினேன். நூறிலிருந்து இருநூறடி முன்னே சென்றபோது, இடது புறத்தில் மிக அழகாக நின்றது கௌதம் மேனனின் பீச் ஹவுஸ் அல்லது பீச் ஆஃபிஸ் அல்லது ஏதோ ஒன்று. அந்தச் சாலையிலிருந்து அந்த வீட்டிற்கென்றே பிரத்தியேகமாக ஒரு சிறிய சாலை சென்றது. அந்தச் சிறிய சாலை தொடங்கிய இடத்தில் அதற்கு வலதுபுறமாக ஒரு வேப்பமரம் இருந்தது. அதற்கு எதிர்ப்புறமாக ஒரு காகிதப் பூ மரம் இருந்தது. மரத்துக்குப் பின்புறமாக இருந்த ஒரு சுவர் வீட்டின் கேட் வரை சென்றது. சிறிய சாலையின் வலதுபுறமிருந்த வேப்பமரத்துக்குப் பின்னால் பயன்பாட்டில் இல்லாத ஒரு சிறு கட்டடம் இருந்தது. அதற்குள்ளே அடுக்கப்பட்டிருந்த பழைய இரும்புச் சாமான்கள் ஜன்னல் வழியாகத் தெரிந்தன. நான் வேப்பமரத்தின் அடியில் பைக்கை நிறுத்திவிட்டு, என்னுடைய பையிலிருந்த ஒரு ஃபைலை எடுத்தேன். அதிலே இருந்தவை பின்வருமாறு,
1) என்னுடைய சுயவிவரப் படிவம் (ரெஸுமெய்)
2) உலகத்தில் எத்தனையோ இயக்குனர்கள் இருக்க, நான் ஏன் கௌதம் மேனனிடம் உதவியாளராக விரும்பினேன் என்பதற்கான பதினைந்து காரணங்கள் எழுதப்பட்ட காகிதங்கள்.
3) திரைக்கதை என்று நான் நம்பிய ஒன்றின் அச்சுப் பிரதி.
4) இவை எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருந்த ஒரு டி.வி.டி தட்டு
அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு, அந்தச் சிறிய சாலையின் முடிவில் தெரிந்த மூடிய கேட்டை நோக்கி நடந்தேன். இரும்புச் சாமான்கள் நிரம்பிய வீட்டைத் தாண்டியவுடன் சாலையின் வலது புறம் ஒரு வெட்டவெளி தெரிந்தது. இரண்டு டென்னிஸ் மைதானங்கள் அளவுக்கு விரிந்த வெளி. எல்லாவற்றையும் தாண்டி கேட்டை அடைந்தேன். முதல் முறையே சத்தமாகக் கூப்பிட்டேன். அறுபது வயது மதிக்கத்தக்க வாட்ச்மேன் ஒரு கேட்டைத் திறந்து வெளியே வந்தார்.
"யாருபா?"
"அண்ணா, கௌதம் மேனன் சாரப் பாக்கணும்."
"நீ யாருபா?"
"அவருகிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா சேரணுங்ணா."
"அவுரு இங்கெல்லாம் வர மாட்டாரு."
"சரி பரவால்லைங்கண்ணா. அவரோட அசிஸ்டெண்ட் யாராச்சும் இருக்காங்களா?"
"யாரும் இல்ல."
"சரிங்கண்ணா. யாராச்சும் வந்தா இத அவங்ககிட்ட குடுத்துர்றீங்களா ப்ளீஸ்?"
ஃபைலை எடுத்தேன். அதை வாங்கிக் கொண்டார்.
"இங்க எல்லாம் அதிகமா வர மாட்டாங்க. ராயப்பேட்டைல ஒரு ஆஃபீஸ் இருக்கிது. அங்க வேணா போயி பாரு."
"அங்கதாங்ணா போயி பாத்தேன். இங்க வந்து பாக்க சொன்னாங்க."
"வந்தா குடுக்கறேன்" என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு உள்ளே போக முற்பட்டார்.
"அண்ணா."
"என்னா?"
"நா அந்த மரத்துக்குக் கீழ வெயிட் பண்ணட்டுமா?"
"அதனால எந்தப் புரோஜனமும் இல்ல. எப்போ வருவாங்கனு யாருக்கும் தெரியாது."
"பரவால்லைங்கண்ணா. நா அங்க வெயிட் பண்ணா ஒண்ணும் பிரச்சினை இல்லைல?"
"அதெல்லாம் ஒண்ணுங் கெடையாது."
"ரொம்ப நன்றிங்கண்ணா."
நான் திரும்பி வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தேன். பையிலிருந்து ஜெயகாந்தன் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்தேன். வண்டியின் மீது அமர்ந்து படிக்கலானேன்.
ஒன்றரை மாதங்களாக அது தொடர்ந்தது. காலையில் ஒன்பது மணி சுமாருக்கு அங்கே செல்வேன். வண்டியை நிறுத்தி அதிலே சாய்ந்து அமர்ந்து கொள்வேன். சில நேரங்களில் சென்டர் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி தாண்டுக்கால் போட்டு அமர்ந்து கொள்வேன். மரநிழல் நகர நகர வண்டியை இடம் மாற்றி நிறுத்திக் கொள்வேன். புத்தகம் படிப்பேன். ஹெட்போனில் பாட்டு கேட்பேன். எப்போதாவது தோன்றினால் பிரதான சாலை இருக்கும் இடத்துக்குச் சென்று டீ குடித்து சிகரெட் புகைத்து விட்டு வருவேன். அவ்வப்போது வாட்ச்மேன் கேட்டுக்கு வெளியே வந்து அமர்ந்து கொள்வார். சில சமயம் அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். அவரும் என்னிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினார்.
"உனக்கு இந்தி தெரியுமா?"
"தெரியாதுங்கண்ணா."
"இந்தி தெரியுமானு தான் கேக்குறாங்க வர்றவங்க கிட்ட. தமிழ் படம்தான் எடுக்கறாங்க. ஆனா இந்தியும் தெரியணும். பழகிக்கோ" என்றார்.
அவர் என்னுடன் நட்பாகி விட்டார் என்று மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு தருணத்தில் என்னைப் பற்றிய விவரங்கள் கேட்டார்.
"காலேஜ் புரபசர் வேலய வுட்டுட்டு இங்க வந்தியா?"
"ஆமாங்கண்ணா."
"பேசாம ஊருக்கே திரும்பிப் போப்பா நீயி. இதெல்லாம் ஜாம்பவான்கள் இருக்கற எடம். ஜாம்பவானா இருந்தாத்தான் இங்க இருக்கலாம்."
நான் அவர் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொள்வேன். சில சமயம் நான் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே எழுந்து போய் விடுவார். எனக்கு அந்த கேட் தான் லக்ஷ்மண ரேகை. அதைத் தாண்டிப் போக மாட்டேன். திரும்பி வேப்ப மரத்துக்கே வந்து விடுவேன்.
மாலை நான்கு மணியிலிருந்து சாலையில் நடமாட்டம் அதிகமாகும். மனிதர்களைப் பார்ப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு. ஆறு ஆறரை வரைக்கும் அங்கேயே இருப்பேன். அதற்குப் பிறகு வீட்டுக்குக் கிளம்பி விடுவேன். இதுவே என்னுடைய அன்றாடமாக இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் அந்த நாளும் வந்தது. இந்தக் கதையை எழுதக் காரணமான நிகழ்வு நடந்த அந்த நாள். மாலை ஆறு மணி வரையிலும் எல்லாம் வழக்கம் போலவேதான் நடந்தன. நான் வண்டியிலிருந்து இறங்கி சோம்பல் முறித்துக் கொண்டு ஆசுவாசமாக ஒரு நடை போட்டேன்.
அப்போது அங்கே ஒரு பெரிய வேன் வந்து இரும்புச் சாமான் கொட்டகைக்கு அடுத்து இருந்த வெட்டவெளியில் நின்றது. எனக்குள்ளே ஒரு 'ராகவன் இன்ஸ்டிங்க்ட்' தோன்றியது. இன்னும் சற்று நேரம் காத்திருக்கலாமா என்று தோன்றியது. அந்த வேன் பத்துப் பதினைந்து நிமிடங்களில் கிளம்பிச் சென்றது. நானும் வீட்டுக்குக் கிளம்பினேன். போகும் வழியில் வழக்கத்துக்கு மாறாக நிறைய வண்டிகள் எதிர்த் திசையில் போவதாக எனக்குத் தோன்றியது. அவற்றில் சில முகங்கள் காரணமே இல்லாமல் சினிமா முகங்களாக எனக்குப் பட்டது. நான் யோசித்துக் கொண்டிருந்தேனேயொழிய வண்டியை நிறுத்தவில்லை. அது ஏனென்று இப்போது எவ்வளவு யோசித்தாலும் எனக்குப் புரியவில்லை.
யோசித்துக் கொண்டே ஒரு ஏழெட்டு கிலோமீட்டருக்கும் அதிக தூரம் சென்றிருப்பேன். எனக்குள் இப்போது உள்ளுணர்வு தீவிரமாகக் குரல் கொடுத்தது. திரும்பவும் அங்கே சென்று பார்த்தால் கௌதம் மேனன் இருப்பார் என்று தோன்றியது. ஆனால், என் பைக்கிலோ பெட்ரோல் குறைவாக இருந்தது. திரும்பவும் திருவான்மியூருக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென்றால் இருபதிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் அதிகமாகப் பயணிக்க வேண்டும். எந்த நேரத்தில் வண்டி நிற்கும் என்று தெரியாது. என்னிடம் பெட்ரோல் அடிக்கப் பணமோ, யாரிடமாவது பணம் அனுப்பச் சொல்லி எடுத்துக் கொள்ள ஏ.டி.எம் கார்டோ எதுவுமில்லை. மாதக் கடைசி என்பதால், என்னுடன் தங்கிய நண்பர்களுக்கும் ஸ்டைபெண்ட் பணம் வந்திருக்கவில்லை. (அது கூகுள் பே எல்லாம் அறிமுகமாவதற்கு முன்பு. இரண்டாயிரத்துப் பதினாறு.)
எனவே, திருவான்மியூருக்குப் போய்விட்டு மேலக்கோட்டையூருக்குத் திரும்ப வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இருபது கிலோமீட்டராவது பைக்கை தள்ளியே ஆகவேண்டும். அது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இன்னொன்றும் எனக்கு சர்வநிச்சயமாகத் தெரிந்தது. திரும்பிப் போனால், அங்கே கௌதம் மேனன் இருப்பார். அவரை மட்டும் சந்தித்துப் பேசி உதவியாளர் வாய்ப்பு கிடைத்துவிட்டால், இருபது கிலோமீட்டரை சந்தோசமாகத் தள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். வண்டியைத் திருப்பினேன் திருவான்மியூருக்கு.
............
ஒன்றரை மாதங்களாக நான் அந்த இடத்தில் இருந்திருக்கிறேன். ஆனால் இரவில் பார்ப்பதற்கு அவ்விடம் மிக அன்னியமாகத் தெரிந்தது. வேப்பமரத்திலிருந்தே பல வாகனங்கள் நின்றிருந்தன. முதலில் வந்து சென்ற வேன் மீண்டும் அங்கே நின்றுகொண்டிருந்தது. அந்த வெட்டவெளியில் ஷுட்டிங் நடப்பதற்கு அடையாளமாக விளக்குகள் ஒளிர்ந்தன. ஐம்பது அறுபது பேர் அங்கே குழுமியிருந்தார்கள். அந்த இடமே அமைதியாக இருந்தது. நான் கேட்டைப் பார்த்தேன். வாட்ச்மேன் நின்றிருந்தார். வேகவேகமாக அவரிடம் சென்றேன்.
"அண்ணா, டைரக்டர் வந்திருக்காரா?"
"ஆமாப்பா. ஆனா இப்போ போயி பேசிடாத."
"ஏன்?"
"கரண்ட் பூடிச்சி பா. ஜெனரேட்டர் ரெடி பண்ணி வைக்காம உட்டானுக. செம காண்டுல இருக்கான் மனுசன். முன்னால மட்டும் போயிட்டீனா கடிச்சு கொதறிடுவான்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
எனக்கு ஏற்கனவே பயமாகத்தான் இருந்தது. அவர் அப்படிச் சொன்ன உடனே மேலும் பயம் அதிகரித்தது. அதுவும் போக, அந்த நேரத்தில் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற பொறுப்புணர்வும் தோன்றியது. ஏனோ எனக்கு அங்கே நிற்கவே தோன்றவில்லை. அவரிடம் சென்று எப்படிப் பேசுவது என்ற பயத்திலும் படபடப்பிலும் இருந்த எனக்கு, பேசத் தேவையில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது. பயத்தை மீறி அவரைப் போய்ப் பார்க்க முடியவில்லையே என்று ஆற்றாமையாகவும் இருந்தது. வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பாதி வழியிலேயே வண்டி நின்று போனது.
ஏற்கனவே மனதளவில் அதற்கு ஆயத்தமாகி இருந்ததால், நான் பெரிதாக வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. இருபது கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் -- சற்றேறத்தாழ இருநூறு கிலோ கிராம் இருக்கக் கூடிய -- அப்பாச்சி பைக்கை உருட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்று மனதளவில் நான் ஏற்கனவே ஆயத்தமாகி இருந்தாலும், அந்த ஆயத்தம் ஒரு சமாதானத்தின் பேரில்தான் கையெழுத்தாகி இருந்தது.
கௌதம் மேனன் நிச்சயமாக அங்கே இருப்பார் என்று கணித்தது பொய்யாகவில்லை. ஆனால், அவரைச் சந்தித்துப் பேசி அவருடைய உதவியாளராகிவிடலாம் என்று நினைத்தது நடக்கவில்லை. இல்லை. அப்படிச் சொன்னால் நா அழுகிவிடும். அதை நடத்துவதற்கான தைரியம் எனக்கு வாய்த்திருக்கவில்லை.
நாம் நினைத்தது நடக்காமல் போனால் நம்மை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கு வசதியாகத்தான் நாம் ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோமே! விதி. அந்த நாளில் நான் அவரைச் சந்திக்க வேண்டுமென்று என் விதியில் எழுதப்படவில்லை என்று என்னை நானே நம்ப வைத்துக்கொண்டேன். என்னுடைய கூச்சத்தின் காரணமாகவே அவரிடம் சென்று என்னால் பேச முடியவில்லை. ஆனாலும், அந்த இக்கட்டான நேரத்தில் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் நினைத்தது வெறும் சால்ஜாப்பு மட்டுமே இல்லை. வண்டியை தள்ளிக்கொண்டு நடந்தேன்.
எனக்கும் கௌதம் மேனனுக்குமான பிணைப்பு என்பது நான் மட்டுமே அறிந்தது. என்னுடைய அக்காவுக்கு திருமணமான புதிதில், அக்காவும் மாமாவும் எங்கள் வீட்டில் கொஞ்ச நாள் தங்கியிருந்தார்கள். நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இருந்த டேப் ரெக்கார்டரில் இரண்டு படத்தின் பாடல்களை மட்டும் மாமா திரும்பத் திரும்பப் போடுவார். ஒன்று ஸ்டார். இன்னொன்று மின்னலே. நான் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகனாக இருந்ததால், ஸ்டார் படத்தின் பாடல்கள் நன்றாக இருந்ததில் எனக்கு பிரமாதமான ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், மின்னலே படத்தின் பாடல்கள் என்னில் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. ஹாரிஸ் ஜெயராஜ் என்ற பெயரே மிக அழகாய் இருந்ததாக உணர்ந்தேன்.
அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டால் புதியதொரு பிரபஞ்சத்தில் நுழைந்து விட்டதைப் போன்றதொரு மயக்கம் தோன்றும். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்ததொரு பிரபஞ்சம். அதற்கு முன்னதாக மின்சார கனவு படத்தின் பாடல்களைக் கேட்டு மட்டுமே எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. ஒரு படத்தின் பாடல்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று முடிவு செய்வது அப்படத்தின் இயக்குனர்தான் என்ற அறிவு எனக்கு அப்போதே இருந்த காரணத்தால், கௌதமின் பெயரையும் சேர்த்து நான் நினைவில் வைத்துக் கொண்டேன்.
பொதுவாக சில நிகழ்வுகள் கௌதம் மேனன் படத்தில் மட்டும்தான் சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். காதலியைத் தேடி அமெரிக்கா போகிறேன் என்று சொல்லும் மகனை அவனது தந்தை உற்சாகப்படுத்துவது; தங்கையின் தோழி வீட்டுக்கே வந்து தங்கியிருப்பது; இரவு நேர இரயில் பயணத்தில் ஒரே ஒரு அழகிய பெண் மட்டும் உடன் பயணிப்பது; இது எல்லாவற்றையும் விட முக்கியமாக, போலீஸ்காரர்கள் அதிகாரமோ ஆர்ப்பாட்டமோ பேச்சில் இல்லாதவர்களாக இருப்பது.
அவையெல்லாம் வெறும் கற்பனை இல்லை என்பது அவரைச் சந்திக்கப் போன அந்த நாளிலேயே எனக்கு நிரூபணமானது.
ஒரு கிலோ மீட்டர் கூட வண்டியைத் தள்ளியிருக்க மாட்டேன். அதற்குள்ளாக என்னைக் கடந்து போனவர்களில் நான்கைந்து பேர் அவர்களது வண்டியை நிறுத்தி என்ன ஏதென்று விசாரித்தார்கள். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டார்கள். அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, என்னுடைய சொந்த ஊரிலும் நான் நிறைய முறை பெட்ரோல் தீர்ந்து போய் வண்டியைத் தள்ளிச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஒருவர் கூட அவர்களாகவே வண்டியை நிறுத்தி இந்த மாதிரியெல்லாம் கேட்டதில்லை. இரண்டாவது காரணம் சென்னையைப் பற்றி நான் அதுவரை கேள்விப்பட்டிருந்த விசயம். சென்னை போன்றொரு ஊரில் யாரும் மற்றவருக்கு உதவ மாட்டார்கள் என்றே நான் அதுவரையிலும் கேள்விப்பட்டிருந்தேன். நான் கேட்காமலேயே பலர் உதவி செய்ய முன்வந்தது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால், நான் அவர்களது உதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆமாம், எப்படி ஏற்றுக் கொள்வது? பெட்ரோல் தீர்ந்து விட்டது எனச் சொன்னால், பங்க் வரைக்கும் 'டோ' செய்வதாகச் சொல்கிறார்கள். பங்க் வரைக்கும் போய்விட்டு அவர்கள் கண் முன்னாடியே எப்படி பங்க்கையும் தாண்டி தள்ளிக்கொண்டு செல்ல முடியும்? பெரிய மனதுடன் உதவ முன்வரும் அவர்களிடம் பணம் கேட்பதும் எனக்கு நியாயமாகப் படவில்லை. எனவே, அவர்கள் அனைவரிடமும் எனது வீடு பக்கத்தில்தான் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து தள்ளலானேன்.
நான் பயணித்த கிழக்கு கடற்கரை சாலை ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லாமல் சமனாக இருந்த காரணத்தால் தள்ளுவதில் பெரிய சிரமங்கள் இருக்கவில்லை. ஆனாலுமே தொடர்ந்து தள்ளிக்கொண்டே இருப்பது சற்று சிரமமே. நான் கடக்க வேண்டிய தொலைவை நினைவுக்கு கொண்டு வராமல் தள்ளிக் கொண்டிருந்தேன்.
மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருப்பேன். சாலையின் மறுபுறத்தில் ஒரு பெட்ரோல் பங்க் தெரிந்தது. சரி அதனாலென்ன? நான் தொடர்ந்து தள்ளினேன். பெட்ரோல் பங்க்கைத் தாண்டி ஒரு டோல்கேட் இருந்தது. நான் அதை நெருங்கும் போதுதான் எனக்குத் தெரிந்தது. அங்கே இரண்டொரு ட்ராஃபிக் போலீஸ் காரர்கள் நின்று வண்டிகளை மடக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கண்டுகொள்ளாமலேயே தொடர்ந்து போனேன். அந்தப் போலீஸ் காரர்களில் ஒருவர் என்னை அழைத்தார்.
"ஏப்பா, இங்க வா."
நான் வண்டியை ஓரமாகத் தள்ளி நிறுத்தினேன்.
"ஏன் தள்ளீட்டு வர்ற?"
"பெட்ரோல் இல்ல சார்."
"பெட்ரோல் பங்க்க தாண்டி தள்ளீட்டு வர்ற?"
"காசு இல்ல சார்."
என்னுடைய குரலில் எந்தத் தயக்கமும் இல்லை.
"ம்ம், எங்க போகணும்?"
"கேளம்பாக்கம் சார்."
உண்மையில் நான் கேளம்பாக்கத்தையும் தாண்டி ஆறேழு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் மேலக்கோட்டையூருக்குப் போக வேண்டும். ஆனால், அவருக்கு அந்தத் தகவலே அதீதம் என்று எனக்குத் தோன்றியது.
"பத்து கிலோ மீட்டருக்கு மேல் வருமே? தள்ளீட்டேவா போகப் போற?"
"ஆமா சார்."
"ம்ம், என்ன பண்ற?"
"சினிமால அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆக ட்ரை பண்ணிட்டு இருக்கேன் சார்."
அப்படியென்றால் நான் காசில்லையென்று சொன்னது உண்மைதான் என அவர் திருப்தியாகியிருக்க வேண்டும்.
"சரி, கொஞ்சம் வெய்ட் பண்ணு போலாம்."
நான் வண்டியைச் சற்றே தள்ளி நிறுத்திவிட்டு அதனருகில் நின்றேன். வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த அயர்ச்சியில் உட்கார வேண்டும் என்றே இருந்தது. ஆனால், அதை ஒரு மரியாதைக் குறைவான செயலாக நினைத்து, அவருக்குக் கோபம் வந்துவிட்டால் என்ன செய்வதென்று பயந்து நின்று கொண்டேன். அப்போது மிக வேகமாக ஒரு பைக் அங்கே வந்தது. ஏதோ வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த முகஜாடையுடன் மூன்று இளைஞர்கள் அதில் வந்தார்கள். போலீஸ் நின்று கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்காமல் வந்திருப்பார்களாக இருக்கும். என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் அவர்களை மடக்கினார். மூவரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அவர் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவர்களும் பதட்டத்துடனே பதில் சொன்னார்கள். கடைசியாக அவர் வண்டியை ஓட்டி வந்தவனைப் பார்த்துச் சொன்னார்.
"ஹண்ட்ரெட் ருப்பீஸ் ஃபைன்."
அதை எடுத்துத் தருமாறு சைகை செய்தார். அந்த இளைஞனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததைப் போல, அவன் சடுதியில் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.
"போ. இனிமேல் ட்ரிப்ள்ஸ் வரக் கூடாது" என்று சொல்லி அவர்களை அனுப்பினார்.
பிறகு என்னிடம் வந்தார். அந்த நூறு ரூபாயை என்னிடம் நீட்டினார்.
"போ. போயி பெட்ரோல் அடிச்சுட்டுப் போ" என்றார்.
எத்தனை உணர்ச்சிப் பெருக்கோடு நன்றி சொன்னாலும் அது போதாதென்று என் மூளை எண்ணியதோ என்னவோ, நான் என்னையும் அறியாமல் கைகூப்பினேன். பிறகு சொன்னேன்.
"சார். ரொம்ப ரொம்ப நன்றி சார்."
அவர் தலையாட்டி அதை ஏற்றுக்கொண்டார். நான் பங்க்கிற்கு சென்று பெட்ரோல் அடித்துவிட்டு மீண்டும் அவரிடம் சென்றேன். அவர் இன்னொரு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று அவரை அழைத்தேன்.
"சார்."
அவர் திரும்பினார்.
"நா வர்றேன் சார்."
அவர் தலையாட்டினார்.
"சார், நா உங்களுக்கு நாளைக்கு கொண்டு வந்து குடுத்துடறேன் சார். நீங்க எங்க இருப்பீங்க?"
"இங்கயேதான் இருப்பேன்."
"ஓகே சார். ரொம்ப நன்றி."
நான் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். அடுத்த நாள் அங்கே சென்று பார்த்தேன். அங்கே அவர் இல்லை. நான்கைந்து முறை முயற்சி செய்தும் அவரைப் பார்க்கவே முடியவில்லை. பிறகு கொஞ்ச நாளில் அவரது முகம் எனக்கு மறந்து போனது.
இதோட தொடர்ச்சி வருமா?
ReplyDeleteவாசுதேவை சந்திச்சீங்களா இல்லையா? தெரிஞ்சுக்கணும். பயங்கரமான experience. வாழ்க்கைல ஒரு ரீவைண்ட் பட்டன் கெடச்சா நல்லாதா இருக்கும். மெமரிஸ் ல ரீவைண்ட் போற மாதிரி in person, 3டி ரியாலிட்டி ல ட்ராவெல் பண்ண முடுஞ்சா நல்லாதா இருக்கும்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
இந்த குறள் தான் ஞாபகம் வந்துச்சு அந்த டிராஃபிக் போலீஸ்காரர் பத்தி படிச்சவுடனே.
இந்த போஸ்ட் டைட்டில் படிச்சவுடனே பின்னணில ரஹ்மான் பாடிட்டு போனாரு. (நா சொல்லப்போறத நீங்க தெரிஞ்சு வெச்சீங்களா தெரியாம வெச்சீங்களான்னு எனக்கு தெரியது.) ஒண்ணு கவனிச்சிங்களா? 'வெண்மதி' பாட்டு எப்படி மரத்துக்கும் பூவுக்கும் பொருந்தி போச்சோ அதே போல 'மறக்குமா நெஞ்சம்' இந்த போஸ்ட் க்கு நல்ல பொருத்தம். எப்படின்னா... VTK ல 'இதோ ஆரம்பம்' னு ஒரு பீஸ் இருக்கு..
இதோ ஆரம்பம்
இவன் கோடை வெப்பம்
தீர்க்கப்போகும் கார்காலம்
இதயம் துடிக்க ஒரு கணம் மறுக்கும்
இரவு திண்டாடும்
கொஞ்சம் நின்றாடும்
ஏதோ புதிய அனுபவம் பொறக்கும்
கைக்கெட்டாத பூவும் மணக்கும்
மறக்குமா நெஞ்சம்?
அடடா இது யாரோ?
மறக்குமா நெஞ்சம்?
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத் தந்தா என்ன ஆகும்?
நா மொதல்ல எழுத வந்தது என்னனா 'மறக்குமா நெஞ்சம்?' னு ஆரம்பிச்சு அந்த போலீஸ்காரர பாத்து 'அடடா இது யாரோ?' னு கதை முடியுதுனுதா எழுத வந்தேன். பாட்டோட ஆரம்ப வரியும் கடைசி வரியும் கதையோட முதலும் கடைசியும்கூட பொருந்தி போகுதுனு சொல்ல வந்தேன். அப்பறம் பாத்தா எல்லா வரிகளும் பொருந்தி போகுது!!!!
The lyrics match perfectly and chronologically to the story. இதை விரிவா எழுதுனா இதுவே ஒரு பதிவு ஆயிடும். நீங்களே படிச்சு பாத்து தெரிஞ்சுக்கோங்க.
ஆனா அந்த கடைசி வரி வாசகர்களாகிய எங்களுக்கும் பொருந்தும். நல்ல படைப்புகள, அனுபவங்கள படிக்கணும்னு நச்சரிக்கிற பட்டாம்பூச்சிக்கு இந்த மாதிரி ஒரு பதிவுங்கிற தேனத் தந்தா என்னவாகும்? மென்மேலும் எழுதுங்க.
Watch the Malayalam movie "Varshangalukku Shesham"... Must must watch... Miss panna nashtam padathukilla... All aspiring film makers and film makers must watch.
ReplyDeleteEnaku romba naala oru sandhegam. Movies la menakettu details vekkarangalla? Adha yethana pear gavanippangangra nambikkaila vekkaranga? Gavanikkaradhu mattumilla adha appreciate panradhumkooda dha. Directors avanga self-satisfaction ku vekkarangala or audience idha gavanipanga nu nambikkaila vekkarangala? What's your take on this?
ReplyDeleteFor example, Taramani opening scenes la Director Ram voice-over la meenava pengal mazhai vandhu India Srilanka match stop aaganumnu pray pannitu irupanganu solvaru. India thoakkanum or else avanga kadarpadayinar Indian fishermen a puduchuvechuruvanganu solvaru.
In the later scene, when Andrea visits Vasanth's house, background la news oditu irukum. Adhula ilangai kadarpadayinar tamizhaga meenavargala siraipidichutadha varum. Aduthu varadhudha highlight ae. Sports news la mazhai vandhu chepauk stadium la nadandhittirundha Ind-SL match ninnupochunnum, DLS method la India jeichitadhavum solluvanga. WHAT AN IRONY!!!! Idha paathutu Director Ram a paaratanumnu thonuchu. Ipadi details gavanikapattalum adhanudaya neradi paaratukkal andha iyakunara poai seruma????
Another example, Maharaja movie la when Natarajan enters the police station after the 7C house robbery scene, andha jeep la kutty siren onnu poduvanga to get the attention of somebody. Frame oda right la paatha rendu women police officers ninnutu irupanga. Adhula oruthanga thalai viri kolathula irupanga. Siren a ketutu takkunu salute pannuvanga.
Adutha scenes la when VJS narrates to Natarajan, oru kutty shot la andha police group reactions kaatuvanga adhula andha thalaiviri kolam police ninnutu irupanga. Thalaimudiya mudunjirukka maatanga. Yethana pear gavanippanganu ippadiyellam vekkaranga?
I'm so impressed by the screenplay of Maharaja. It lets the audience to guess the sequence of events. There are some non-linear screenplays too. But this one stands out differently. Amazing writing.
Yepdi yepadiyelam thedunen nu oru chinna kadhaye ezhudhalam.
ReplyDeleteAana nijama edhirpaakala. Enaku adhu nyabagamum illa. Aana idhula kandupidipen nu edhirpaakala. Thanks for watching🙏🏽
Chumma youtube reels la 'athuvaana kaatukulla' beat nalla irukenu keka ponen. Anganga oru rendu bits ketruken.
ReplyDeleteIvlo naal kalichu ipodha Bison songs pakkame ponen. My God!!!!!!
Nivas K Prasanna has grasped the knack of stirring souls.
Watch 'Eko'. Casual watching lam saripattu varadhu. But watch casually without any expectations.
ReplyDeleteFiltered listening:
ReplyDelete1. Plug in your earphones
2. Play "Chinna chinna aasai"
3. Switch your ears and mind to listen only to the bass guitar
4. Get surprised
(Mostly the music from bass guitars are unsung heroes. Only its absence makes its presence felt. Sometimes it takes decades to notice what's been already there.)
Forgot to mention: This should be listened in a very peaceful and quiet surrounding to appreciate its beauty.
DeleteSome worlds take us into another world. Some Studio Ghibli movies:
ReplyDeleteGrave of the Fireflies
Spirited Away
Whisper of the Heart
Kiki's Delivery Service
When Marnie was there
Howl's Moving Castle
https://t.me/English_dubAnime11
Delete