சிறுகதை அறிமுகம் - The Funeral
ரஸ்கின் பான்ட் எழுதிய இளம் வாசகர்களுக்கான முக்கியமான தொகுப்பு (The Essential Collection for the Young Readers) படித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு சிறுகதைத் தொகுப்பு.
அதிலே The Funeral என்றொரு சிறுகதை. மூன்றே பக்கங்கள்தான். ஆனால், அது நம்முள் ஏற்படுத்தவல்ல தாக்கம் மிகப் பெரியது. அந்தக் கதையின் நிகழ்வுகளை இங்கே தருகிறேன். இது ஒரு மொழிபெயர்ப்பு கிடையாது. எனவே, இதைப் படித்த பிறகும் நீங்கள் அந்தக் கதையைப் படிக்கலாம். இதிலே சொல்லாத பல விசயங்கள் அந்தக் கதையில் இருக்கின்றன.
ஒன்பது வயது மகனை தனியாக விட்டுவிட்டு ஒரு தந்தை இறந்து கிடக்கிறார். அவர் யாருடனும் அதிகம் பேசாதவர். அந்த இறுதிச் சடங்குக்கு வந்திருந்த பலரும் அப்போதுதான் முதல்முறையாக அங்கே வந்திருக்கிறார்கள். மகனோடு இருந்த நேரம் தவிர்த்து அவர் அதிக நேரம் செலவிட்டதெல்லாம் புத்தகங்கள், இசை, தாவரங்கள் ஆகியவற்றுடன் தான்.
அவருடைய உடல் ஓர் அறையில் கிடத்தப்பட்டிருக்க, மற்றோர் அறையில் அமைதியாக அமர்ந்திருக்கிறான் சிறுவன். அவன் தந்தையின் உடலைப் பார்த்தால் குமுறி அழுதிடுவான் என்பதால், அவனைத் தனியறையில் வைத்திருக்கிறார்கள். பலர் வந்து இவனிடம் தாஜா செய்தாலும் இவன் பேசுவானில்லை.
சவப்பெட்டியை வண்டியில் எடுத்து வைத்து புதைகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். வீட்டு வேலையாட்களின் பொறுப்பில் இவனை விட்டுவிட்டு அனைவரும் ஊர்வலத்துடன் போகிறார்கள். அவர்கள் போவதை இவன் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான். எல்லாரும் போனபிறகு அறையைவிட்டு வெளியே வருகிறான். வீட்டின் பின்வாசல் வழியாகச் சென்று பிரதான சாலையை அடைகிறான். சற்றே இடைவெளிவிட்டு ஊர்வலத்தைப் பின்தொடர்கிறான்.
அந்தச் சாலையின் ஓரமாக இருக்கும் அனைத்துத் தாவரங்களின் பெயர்களும், அங்கே சப்தமெழழுப்பிக் கொண்டிருந்த பறவைகளின் பெயர்களும் அவனுக்குத் தெரிந்திருந்தன. அவனுடைய அப்பாதான் அவற்றைப் பற்றியெல்லாம் அவனிடம் சொல்லியிருந்தார். அவன் அதை நினைத்துக் கொள்கிறான்.
புதைகாட்டை அடைகிறான். குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பார்க்காத ஓரிடத்தில் சென்று அவன் நின்று கொள்கிறான். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் தூரத்தில் இருந்த இமயமலையின் பனிச்சிகரங்களும் அவற்றின் மீது பிரகாசித்த சூரிய ஒளியும் தெளிவாகத் தெரிகின்றன.
அங்கே கல்லறைகளில் தூங்கிய நபர்கள் எழுந்து இந்தக் காட்சிகளைப் பார்ப்பார்களா என்று யோசிக்கிறான். அது சாத்தியமில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. அவனுக்கு ஆறுதல் சொன்ன யாரோ கடவுளுக்கு அவனுடைய அப்பாவின் உதவி தேவைப்பட்டதால் அவரை அழைத்துக் கொண்டதாகக் கூறியிருந்தார்கள். அவன் சுற்றிலும் பார்த்தான். நூற்றுக்கணக்கான கல்லறைகள் அங்கே இருந்தன. இத்தனை பேரின் உதவியுமா கடவுளுக்குத் தேவைப்படுகிறது என்று வியக்கிறான். இறந்து போனவர்களால் கடவுளுக்கு என்ன உதவி செய்துவிட முடியும் என யோசிக்கிறான்.
இப்போது சவப்பெட்டியை குழிக்குள் இறக்குகிறார்கள். அது மிக மிக ஆழமாகப் போய்க்கொண்டே இருப்பதைப் போல உணர்கிறான். அவ்வளவு ஆழத்தில் புதைத்தால் புஜபலம் மிக்க சாம்சனால் கூட மேலே வரமுடியாது என்று அவனுக்குத் தோன்றுகிறது. மிக மென்மையானவரான அவனுடைய அப்பாவால் எப்படி அந்த மண்ணைத் தோண்டி மேலே வரமுடியும் என யோசிக்கிறான்.
தான் இவ்வாறு புதைக்கப்படும் போது, ஏதாவது ஒரு மரத்தின் வேரில் புகுந்து ஒரு மலராக வெளியே வந்துவிடவேண்டுமென நினைத்துக் கொள்கிறான். இப்போது அனைவரும் வெளியேறுகிறார்கள். இரண்டு பேர் குழியை மூடத் தொடங்குகிறார்கள். அருகே சென்று பார்ப்பதா கூடாதா என்று குழம்பி நிற்கிறான். குழி மூடப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே செல்கிறான். அவனுடைய அப்பாவும் அவனும் பலமுறை நடந்த அந்தச் சாலையில் நடந்து போகிறான். அவர் அவனுடன் நடந்து வருவதாக உணர்ந்து அவனையறியாமல் கைநீட்டி அவரைத் தொடப் பார்க்கிறான். அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் அவனுக்கு நினைவு வருகிறது. எல்லோருமே தனியாக வாழ்ந்து பழக வேண்டும். ஆனால் அது சுலபமாக இருக்கப் போவதாகத் தெரியவில்லை அவனுக்கு. தலை குனிந்தபடி நடக்கும் அவன் அழுது கொண்டிருக்கிறான். கதை முடிகிறது.
Comments
Post a Comment