கதையல்ல விளம்பரம்
ராமனுக்கு திடீரென ஓர் ஆசை வந்தது.
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை.
அதுவும் மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் மதன கோபால் பாத்திரம் பேசுவது போலப் பேச வேண்டும் என்ற ஆசை.
மணிப்பரஸ் என்றே சொல்லிப் பழக்கப் பட்ட ஒரு வஸ்துவை கமல்ஹாசன் மிக அழகாக 'பேள்ஸ்' என்று உச்சரித்தது கூடக் காரணமாக இருக்கலாம்.
அந்த ஒரு காட்சியில் அவன் அவர் மீது மையலே கொண்டுவிட்டான்.
அவனுக்கு ஆங்கிலம் பேச வேண்டும். ஆனால், அவனால் ஒரு வகுப்பில் எல்லாம் சென்று உட்கார முடியாது. பாடம் நடத்துவது மற்றும் அதைக் கவனிப்பது என்ற சமாச்சாரங்களை எல்லாம் நினைத்தாலே அவனுக்கு மன உளைச்சல் ஆகிவிடும்.
ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் 'எல்லாரு வீட்டுப் பாடத்த எடுத்து வையிங்க' என்று ஆசிரியர் சொன்னாலே அவன் நெஞ்சுக்குள் கருக்கென்று ஆகும்.
தனக்குப் பிடிக்கவே பிடிக்காத அந்த வேலையை அவன் எப்போதுமே செய்யத் தலைப்பட்டதில்லை. அதுமட்டுமில்லை. சொல்லி வைத்தாற் போல, ஆசிரியர்கள் எதுவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னார்களோ அது எதுவும் அவனுக்குப் பிடித்ததில்லை. எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னார்களோ (ஊர் சுற்றுதல், ஊமாங்கொட்டை ஆடுதல், கெட்ட வார்த்தை பேசுதல், மரமேறி மாங்காய் திருடுதல், ஓணான் அடித்தல், பரிட்சைக்குப் படிக்காமல் டி.வி. பார்த்தல் இன்ன பிற) அது அனைத்தும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அவன் பள்ளியை வெறுப்பதே நியாயமாக இருந்தது.
அவனும் பல்லைக் கடித்துக் கொண்டு பள்ளிக்குப் போய் வந்தான். திடீரென ஒரு திங்கட்கிழமை காலையில் 'நாம பள்ளிக்கொடமே போகலைனா எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று அவனுக்குத் தோன்றியது. உடனே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டான்.
அதிர்ஷ்டவசமாக அவன் சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண்கள் வாங்காத மாணவன் என்பதால் அவனுடைய பெற்றோரும் அவனைப் பள்ளிக்குப் போகச் சொல்லி வற்புறுத்தவில்லை.
அவனுக்கு பள்ளிக்கூடம் போகத்தான் பிடிக்கவில்லையே தவிர கற்றுக்கொள்வது பிடித்திருந்தது.
பதிமூன்று வயதிலேயே ரிக் வண்டியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். உள்ளூருக்குள்ளேயே ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு இந்தியா முழுக்கச் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வேலையொன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை. பேசாமல் வாத்தியாரிடம் அடி வாங்கி டவுசரில் தேய்த்து விட்டுக்கொண்டு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நான்கைந்து வருடங்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து சொந்த ஊருக்கு வந்தான்.
அப்போது அவனுடைய கீச்சுக் குரல் உடைந்திருந்தது; ஹிந்தி பேசிப் பழகியிருந்தான்; சம்பாதித்து வீட்டை நடத்தத் தொடங்கியிருந்தான்.
உள்ளூரிலேயே ஒரு நூல் மில்லுக்கு பேல் தூக்கும் வேலைக்குப் போனான். இரும்பு தூக்கிய கைகளுக்கு அது ஒன்றும் கடினமாக இல்லை. செலவுகள் போகவும் மிச்சம் பிடிக்கக் கற்றுக் கொண்டான்.
இப்போது அவனுக்கு வயது முப்பது. வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறான்.
இந்தச் சூழலில் தான் அவன் ஆங்கிலம் கற்க விரும்பினான். ஆனால் பாடம் நடத்தினால் அவனுக்குப் பிடிக்காது. புரியாது. ஹிந்தியை அவன் பேசிப் பேசியே கற்றுக் கொண்டான். எந்த ஹிந்தி பண்டிட்டும் அவனுக்கு வகுப்பெடுக்கவில்லை. எனவே ஆங்கிலத்துக்கும் வகுப்பு தேவையில்லை என்று அவனுக்குத் தெரியும். ஆனால் யாரிடம் சென்று ஆங்கிலம் பேசுவது. அவனுக்குத் தெரிந்த யாருக்குமே ஆங்கிலம் பேசத் தெரியாது. கமல்ஹாசனுடன் பேசிப் பழகுவதென்பது நடக்காத காரியம். எனவே அவனுடைய ஆனைப் பசிக்கு அப்போதைக்கு கிடைத்த சோளப் பொறியை மட்டும் எடுத்துக் கொண்டான். கேட்ச் மை பாய்ண்ட்?
.....................……….............................................
இந்தச் சமயத்தில்தான் ராமன் அவனைச் சந்தித்தான். அவர்கள் ஊரிலேயே ஒரு கிடா விருந்துக்குப் போயிருந்தபோது அவனும் வந்திருந்தான். ஆளைப் பார்த்தாலே வெயிலுக்கு வராமல் வேலை பார்ப்பவன் என்று புரிந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து ராமனுக்கு அருகில் அமர்ந்திருந்தான். ராமனோ எக்கச்சக்கமான பசியோடு உள்ளே பந்தியில் மணக்கும் கறிக்குழம்பை வாசம் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். சாப்பிடுபவர்கள் ஒவ்வொருவராக ரசத்துக்கு வருவதை ஒட்டுக் கேட்டபடியே கையைக் கழுவிவிட்டு வந்து தயாராக இருந்தான். அப்போதுதான் அந்த வெயில் படாதவனுக்கு ஒரு போன் கால் வந்தது. போனை எடுத்தவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினானோ இல்லையோ, பந்திக்கு முந்திய ராமனின் கால்கள் நின்றன. அவனோ ஆங்கிலத்தை என்ன சேதி என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டான் என்று ராமனுக்குத் தெரியும். எங்கே தான் உள்ளே போகும் சமயம் இவன் வெளியே போய்விடுவானோ என்று தயங்கினான். அவனுக்கு அருகிலேயே அமர்ந்தான். அவன் பேசி முடிக்கும் வரை அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனும் கவனிக்காமலில்லை. பேசி முடித்துவிட்டு ராமனைப் பார்த்தான். நேர்மையான வியப்புடன் ராமன் கேட்டான்.
"எப்புடீங்க இங்கிலீசுல பட்டையக் கெளப்புறீங்க?"
"மலேசியாவுல வேல பாக்கறாரு. நம்மளாட்ட இந்தப் பட்டிக்காட்டுலயா இருக்கறாரு?" என்று பின்னாடி இருந்து ஒருத்தன் வலைக்கு முன்பாக கல்லை வீசினான்.
ராமன் அவனை முறைத்தான்.
"உனய கேட்டனா உப்பொ? மலேசியாவுல மலாய் தான்டா பேசுவாங்கொ. போ. போயி கட்டிங் வாங்க உங்கொளுந்தியா கிட்ட காச வாங்கு."
திடீரென நினைவு வந்தவனாய் அவன் நகர்ந்தான்.
ராமன் மீண்டும் மலேசியாக் காரனிடம் வந்தான்.
"சூப்பரா பேசறீங்க!"
அவன் புன்னகைத்தான்.
"என்ன பண்றீங்க நீங்க? வாத்தியாரா?"
"இல்லைங்க. ஆர்க்கிடெக்ட்."
"அப்படீன்னா?"
இந்தக் கேள்வியை மலேசியாக் காரனிடம் எவருமே கேட்டதில்லை. ஒன்று அதைப் புரிந்து கொள்வார்கள். இல்லையென்றால், 'சரி அது ஒரு வேலை' என்று நினைத்துக் கொள்வார்கள்.
"ஆர்க்கிடெக்ட் அப்படீன்னா, கட்டடம் கட்ட டிசைன் பண்றவங்க."
"அப்போ இஞ்ஜினியர் என்ன பண்ணுவாங்க?"
"ம்ம்ம்... இஞ்ஜின் தயாரிப்பாங்க. டேய்
ராமா. அவர உட்றா பாவம்." என்று ஒரு பெரியவரின் குரல் கேட்டது. அதுதான் வாய்ப்பு என்று மலேசியாவும் எழுந்து நகர்ந்தான். ராமனும் எழுந்து அவனை விளித்தான்.
"சார்."
அவன் திரும்பினான். ராமன் அவனருகில் சென்றான்.
"எனக்கும் இங்கிலீசு பேசனும்னு ஆசை."
அவன் மெலிதாகப் புன்னகைத்தான்.
"எனக்கு கூடத்தான் மீனாட்சி சௌத்ரிய கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை. நாம ஆசப் படறது எல்லாம் நடந்துடுமா என்ன?"
ராமனின் புன்னகை மறைந்தது. அந்த வார்த்தைகள் அவனது மனதில் பசுமரத்தாணியாய் இறங்கின.
.....................……….............................................
அதற்கு அடுத்த இரண்டு நாளும் ராமன் தனக்குத் தெரிந்த எல்லாரிடமும் கேட்டான். 'இங்கிலீஸ் பேசிப் பழகனும். ஆனா க்ளாஸ் எடுக்கக் கூடாது'.
முதல் வாக்கியத்தைச் சொல்லும் போது கண் விரிந்த எல்லாரும், இரண்டாவதைச் சொன்னபோது கைவிரித்தனர்.
எழுபத்தி நான்காவது நபரிடம் அதையே சொன்னான்.
"இங்கிலீஸ் பேசிப் பழகணும். ஆனா, க்ளாஸ் எடுக்கக் கூடாது."
அவர் சொன்னார்.
"அப்போ நீ ஐரிஸ்-க்கு தான் கூப்புடனும்."
ஐரிஸ் - எ லேங்வேஜ் ஸ்டுடியோ என்று அவர் தந்த நம்பருக்கு அழைத்தான். ரிங் போனது.
இடையிலே இருந்த இரண்டு வார்த்தைகளும் சரியாக உச்சரிக்க வராததால், 'ஹலோ, ஐரிஸ் ஸ்டுடியோங்களா... ஹலோ ஐரிஸ் ஸ்டுடியோங்களா...' என்று மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டது.
"ஹலோ, ஐரிஸ் ஸ்டுடியோ."
சொன்னது ராமனில்லை. எதிர்முனையில் கேட்ட பெண் குரல்.
தான் தயாரித்து வைத்திருந்த வாக்கியத்தை எதிர்முனை சொல்லிவிட்டதால் சற்றே துணுக்குற்றான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்.
"ஹலோ, நா நாமக்கல் பாளையத்துல இருந்து ராமன் பேசறேன்."
"சொல்லுங்க மிஸ்டர் ராமன்."
ராமன் ஒரு துரிதப் புளகாங்கிதமடைந்தான்
மிஸ்டர் ராமன்! மிஸ்டர் ராமன்!!! ஆகா! சின்ராச மிஸ்டர் சின்ராசுனு மரியாதையா கூப்புட்ட ஒரே ஆள் நீங்க தாங்க. டேய் மலேசியா வாசுதேவா! இர்றா வர்றேன்.
"நா இங்கிலீஸ் பேசிப் பழகணுங்க."
"ம்ம்ஹூம்!"
"அய்யய்யோ. ம்ம்ஹூம்-னு மட்டும் சொல்லாதீங்க. நீங்கதா க்ளாஸ் எடுக்காமயே இங்கிலீஸ் சொல்லித் தர்றீங்கனு சொன்னாங்க."
"சாரி சார். நா முடியாதுங்கற அர்த்தத்துல ம்ம்ஹூம்-னு சொல்லல. தமிழ்-ல தான் ம்ம்ஹூம்-னா, இல்ல, முடியாதுனு அர்த்தம். இங்லிஷ்-ல ம்ம்ஹூம்-னா '
அப்படியா, சரின்னு அர்த்தம்."
ராமன் ஒரே ஒரு வினாடி மட்டுமே யோசித்தான். பிறகு சொன்னான்.
"ம்ம்ஹூம்."
"வெரி குட் சார். ரொம்ப வேகமா கத்துக்கறீங்க. வெல்கம் டு ஐரிஸ்."
"தேங்க்ஸ் மேடம்."
"ஓகே சார். நீங்க கேள்விப்பட்ட மாதிரி நாங்க க்ளாஸ் எல்லாம் எடுக்க மாட்டோம். உங்ககிட்ட பேசுவோம். நீங்க பேசறதுல ஏதாவது மாத்தணும்னா அதச் சொல்லுவோம்."
"ஓகே மேடம்."
"ஆமா, உங்களுக்கு என்ன எல்லாம் ரொம்பப் பிடிக்கும்?"
"கிரிக்கெட் புடிக்கும்."
"சூப்பர். ஆனா அத கிரிக்கெட்-னு சொல்லக் கூடாது. க்ரிக்கெட்-னு சொல்லணும்."
"ஓகே மேடம்."
"எங்கே சொல்லுங்க?"
"கிரிக்...கெட்."
அவனுக்கே தெரிந்தது மீண்டும் தவறாகத்தான் சொல்கிறானென்று.
"ம்ம். இன்னும் கொஞ்சம் ப்ரேக்டிஸ் பண்ணா வந்துடும்."
"ஓகே மேடம்."
"சரி. யூ லைக் க்ரிக்கெட். நீங்க என்ன பண்றீங்கன்னா, இன்னைக்கு நைட் நடக்கற க்ரிக்கெட் மேட்ச் பாருங்க. இங்லிஷ் கமெண்ட்ரி-ல பாருங்க. நாம நாளைல இருந்து பேசத் தொடங்குவோம், இங்லிஷ்-ல."
பள்ளியில் படிக்கும் போது, இங்கிலீஸ் பரிட்சைக்கு முந்தின இரவு அவன் கிரிக்கெட் பார்த்ததை அடுத்த நாள் அப்பா வெங்கிடுசாமி வாத்தியாரிடம் சொல்ல, அவர் அவனது வயிற்றைப் பிடித்து கிள்ளித் திருகியது ஞாபகம் வந்தது.
"ஓகே மேடம். இந்த ஃபீஸ் எல்லாம் எத்தன?"
"சார் இந்த ட்ரைனிங் மொத்தம் முப்பது மணி நேரம். அதுக்கு ஃபீஸ் ஐயாயிரம் ரூபா. இல்ல குறைவான மணி நேரம் போதும்-னு சொன்னீங்கன்னா, அதுக்குத் தகுந்த மாதிரி ஃபீஸ் கொறையும்."
"எப்போ பேசுவீங்க நீங்க?"
"உங்களுக்கு எந்த நேரம் வசதியோ அப்போ பேசுவோம்."
"ஓகே மேடம். தேங்க் யூ."
"யுவ வெல்கம் சார்."
.....................……….............................................
அடுத்த நாளிலிருந்து காலை நான்கு மணிக்கே எழுந்தான். ஐந்து மணி வரை நடைப்பயிற்சி. ஐந்தரையிலிருந்து ஆறு வரை பேச்சுப் பயிற்சி என்று மிக உற்சாகமாகக் களமிறங்கிவிட்டான்.
நான்கு நாள் கழித்து ஆறரை மணிக்கு வசூலுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் போது, அவனுடைய வண்டியை ஓர் உருவம் கைகாட்டி நிறுத்தியது. அருகே நெருங்கிப் பார்க்கும் போதுதான் தெரிந்தது அது மலேசியா என்று. ராமன் உற்சாகமானான்.
"சார், என்ன ஜீன்ஸ் பேன்ட் போட்டுட்டு வாக்கிங் போயிட்டு இருக்கீங்க? அதுவும் தனியா. இங்க ராசேந்திரன் ஊட்ல சிப்பிப்பாறை ஒண்ணு இருக்குது சார். கவ்வுச்சுனா உடாது."
மலேசியா குளிரில் நடுங்கியவாறே சொன்னான்.
"சார், கோயம்புத்தூர் பஸ் புடிக்கணும். குருமந்தூர் வரைக்கும் ட்ராப் பண்றீங்களா?"
ராமன் புன்னகைத்தான். மலேசியாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தான். புன்னகை மாறாமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
"வித் ப்ளஷ. ஐ வில்."
............................................................................
பின்குறிப்பு: இந்தக் கதையைப் படித்த நண்பர்களே! இதில் வரும் ஐரிஸ் - எ லேங்வேஜ் ஸ்டுடியோ என்பது நாங்கள் நிஜமாகவே நிறுவியிருக்கும் எங்களுடைய நிறுவனமே.
போன் கால் மூலம் மட்டுமல்லாது, வாட்ஸாப் உரையாடல்கள் மூலமாகவும் நாங்கள் ஆங்கிலம் பயிற்றுவிக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு...
சுஜிதா மகாதேவன் - நிறுவனர் - 9952262603
திருஞான சம்பந்தம் - இயக்குனர் - 8148037837
'கேட்ச் மை பாய்ண்ட்?'
ReplyDeleteயெஸ்.. காடிட்...
அதில் அவிநாசி அவர்கள் காமேஸ்வரனிடம் மனப்பாடம் செய்ததை பேசிக்காட்டச் சொல்வார்..
பீம் பாய் /போய் வசனம்..
காமேஸ்வரன் பேசுவதை கேட்டுவிட்டு அவர் சொல்வார்,
"ஏது 'போயின்ட்' ஆ? முள்ளங்கி பத்தை மாதிரி பத்தாயிரம் ரூபாய் வாங்கிட்டு 'போயின்ட்' ங்கறான்."
கடைசியில் அந்த ஆறு /ærʊ/ (அப்படி உச்சரித்தால்தான் அது காமேஸ்வரன் எஃபெக்ட்) லட்ச ரூபாயும் கிடைக்கவில்லை.
அவர் செய்த செலவில் பாதியைக் கொண்டு ராமன் சிறப்பாக ஆங்கிலம் கற்றுக்கொண்டுவிட்டார். வாழ்த்துகள் 👏🏼👏🏼👏🏼👏🏼
ரசத்திற்கு வந்திருப்பதை ஒட்டுக்கேட்டல் - ஆஹா பிரமாதம் 👌🏽👌🏽
'மிஸ்டர் ராமன்! மிஸ்டர் ராமன்!!! ஆகா! சின்ராச மிஸ்டர் சின்ராசுனு மரியாதையா கூப்புட்ட ஒரே ஆள் நீங்க தாங்க. டேய் மலேசியா வாசுதேவா! இர்றா வர்றேன்.'
இதை படிக்கும்போது சத்தமாக சிரித்து விட்டேன். 😆
ஏனோ இதை படிக்கும்போது விவேக் அவர்கள் சிவாஜி அவர்களின் modulation இல் இதை சொல்வது போல தோன்றியது குறிப்பாக மிஸ்டர் ராமன் part.
'தான் தயாரித்து வைத்திருந்த வாக்கியத்தை எதிர்முனை சொல்லிவிட்டதால் சற்றே துணுக்குற்றான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்.'
பல தடவை இது நடந்துள்ளது. நாம் முதல் கேள்வியாக கேட்கலாம் என்று வைத்திருப்பதை எதிர்முனை முதல் கூற்றாக கூறும்பொழுது "இப்பொழுது என்ன பேசுவது?" என்று திணறிய தருணங்கள் உண்டு.
சிப்பிப்பாறை ஏதோ கடல்வாழ் உயிரினம் போல என முதல் தடவை தோன்றினாலும்.. அடுத்த வரியில் 'கவ்வுச்சுன்னா உடாது' என்பதை வைத்து நாயாக இருக்கவேண்டும் என எண்ணினேன். அழகான பெயர், நாயும் கூட.
கதையல்ல விளம்பரம் - புதுமை
'எழில் கொஞ்சும் சோலை' யின் தொடர்ச்சி எப்பொழுது வெளியாகும்?
ReplyDeleteஅட நம்ம ராமமூர்த்தி அண்ணன் super
ReplyDelete