பரிதவிப்பு

அது ஒரு மாலை நேரம்.
மாலை நேரம் என்றால், வடநாட்டவர் வந்து தங்கி வேலை செய்யும் ஃபேக்டரிகளும், களை-வெட்டுவது-கல் உடைப்பது-விறகு-வெட்டுவது-தோட்டத்திற்கு-தண்ணீர்-கட்டுவது-போன்ற-உடல்-உழைப்பு-கோரும்-வேலைகளைச்-செய்யும் மக்களும், தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடை ஒன்றும், அதனை நம்பி பிழைப்பு நடத்தும் சிறு கடைகளும் அமைந்த ஓர் இந்திய கிராமத்தில் ஒரு மாலை நேரம்.

('தண்ணீர் கட்டுவது' என்றால் கிணற்று நீரை பம்ப் செட் மூலமாக உறிஞ்சி எடுத்து தோட்டத்துக்கு பாய்ச்சுவது. அப்படி பாய்ச்சும் போது, மண்வெட்டியைக் கொண்டு மடை மாற்ற வேண்டும். தண்ணீர் ஒரு 'பாத்தியில்' பாயும்போது, இன்னொரு 'பாத்திக்குப்' போகாமல் தண்ணீரைக் கட்டுவது. அதற்குப் பெயர்தான் தண்ணீர் கட்டுவது.)

வெள்ளப் பாறை என்பது அந்த இடத்தின் பெயர்.

ஒரு முதியவர் தனது சைக்கிளை தள்ளியபடி நடந்து வருகிறார். நாம் அவருக்கு இடப்புறமாக நின்று பார்த்தபடி அவருடனே நகர்கிறோம் (நமக்கு இடப்புற திசையில்).

அந்தக் காட்சியை நாம் பார்த்துக் கொண்டே நகரும் போது, நமக்கு ஒவ்வொரு தகவலாக தெரிய வருகிறது.

அவருக்கு 70 வயது இருக்கலாம்.
சற்றே நைந்து போன ஒரு சட்டையும் பழைய வேட்டியும் அணிந்திருக்கிறார். அவருடைய சைக்கிள் கேரியரில் சிறிதளவு ஈரமண் அப்பியிருக்கும் ஒரு 'கொத்து' மாட்டப்பட்டிருக்கிறது. ('கொத்து' என்றால் ஒரு சின்ன சைஸ் மண்வெட்டி. களை வெட்டுவதற்காகவும் சிறு செடிகளை மண்ணிலிருந்து செதுக்கி எடுப்பதற்காகவும் வடிவமைக்கப் பட்டது). = எனவே, அவர் எங்கோ பக்கத்து ஊருக்கு களைவெட்டப் போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். (களைவெட்டுக்கு இரண்டு நாள் முன்பாக, களைவெட்டுக்குத் தோதாக தோட்டத்திற்கு தண்ணீர் கட்டுவார்கள். அதனால்தான் அவருடைய கொத்தில் ஈரமண் இருக்கிறது).

அறுந்துபோன ஒரு செருப்பினை பெரியதொரு 'பின்னூசி' கொண்டு கோத்திருக்கிறார் = அவரிடம் காசில்லை அல்லது அவர் சிக்கனமானவர். ஆனால் அவரோ வேலைக்குப் போகிறார். எனவே அவரிடம் காசு இருக்க வேண்டும். அப்படியிருந்தும் அவர் புதுச்செருப்பு வாங்கவில்லை எனும்போது, அதை அவர் செலவு செய்திருக்கலாம் அல்லது அவர் சிக்கனக் காரராகவே இருக்கலாம். 

அவர் முன்னே நகர்ந்து செல்கையில் அவருக்குப் பின்புலத்தில்... பின்புறத்தில் இல்லை, பின்புலத்தில். அதாவது ரோட்டுக்கு வலது புறமாக டாஸ்மாக் கடையின் சாறுண்ணிகளான சைட் டிஷ் விற்கும் கடைகள் தெரிகின்றன. ஆங்காங்கே சில ஆண்கள் கைகளில் கோட்டர் பாட்டில்களுடன் அங்கிருந்த கடைகளில் டம்ளர்களும், மிக்ஸிங்கும் வாங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. முதியவர் முன்னே செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிறது. = அங்கே நிச்சயமாக ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அந்த முதியவர் புதுச் செருப்பு வாங்காமல், வேறொரு செலவு செய்திருந்தால், அது மிக முக்கியமான அவசரச் செலவாக இருந்திருக்கலாம். அல்லது அவர் சாராயம் குடிப்பவராக இருக்க வேண்டும். 

அவர் தொடர்ந்து நடக்கிறார்.
நாம் ஒரு பறவைப் பார்வைக்குச் செல்கிறோம். அவருக்கு இடப்புறமாகப் பிரியும் ஒரு மண் தடம் டாஸ்மாக் கடையில் முடிகிறது. 

நாம் இப்போது பறவைப் பார்வையிலிருந்து கீழே இறங்கி அவருக்கு வலது புறமாகச் சென்று அவரைப் பார்த்தபடியே நமக்கு வலது புறத் திசையில் அவருடனே நகர்கிறோம்.

அவர் டாஸ்மாக் செல்லும் வழியை நெருங்குகிறார். அதைத் தாண்டி நடக்கிறார். = அவர் குடிக்க மாட்டார்; அல்லது இப்போது குடிக்கவில்லை; அல்லது சைட் டிஷ் கடைக்குப் போகிறார்.

அவர் தொடர்ந்து நடந்து ஒரு கடையை அடைகிறார். அது ஒரு பஞ்சர் கடை. அதன் முன்புறம், இரண்டு இளைஞர்கள் பீடி புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக்காரர் ஒரு சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுக் கொண்டிருக்கிறார். 

முதியவர் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டுவிட்டு கடை ஓரமாகச் சென்று குந்திக் கொள்கிறார். அவர் பீடி புகைப்பவர்களைப் பார்க்கிறார். பீடிப் புகை அவரிடம் வருகிறது. அவர் இருமுகிறார். = அவர் நிச்சயமாக பீடி புகைக்க மாட்டார். குடிப்பவராக இல்லாமலும் இருக்கலாம்.

கடைக்காரர் அவரைப் பார்த்து பின்புறம் செல்லுமாறு கையசைக்கிறார். முதியவர் பின்புறம் செல்கிறார். குந்துகிறார். சட்டைப் பையிலிருந்து போனை எடுக்கிறார். கால் செய்கிறார். ஸ்பீக்கர் போடுகிறார். எதிர்முனை போனை எடுக்கவில்லை. போனை பாக்கெட்டில் வைக்கிறார். 

திடீரென ஏதோ யோசிக்கிறார். = திடீரென ஏதோ ஞாபகம் வந்திருக்கலாம் அல்லது அவர் எதையாவது பார்த்திருக்கலாம். 

நாம் இப்போது அவருடைய தோளுக்குப் பின்புறமாக நகர்ந்து அவருக்கு முன்பாக இருப்பதைப் பார்க்கிறோம். அங்கே இருப்பது வெட்டவெளி. = அவர் எதையும் பார்த்துவிட்டு யோசிக்கவில்லை. 

அவர் தன்னுடைய டவுசர் பாக்கெட்டிலிருந்து காசு எடுக்கிறார். அதை உள்ளங்கையில் போட்டு எண்ணுகிறார். பதினைந்து ரூபாயை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். = பஞ்சர் அடைக்க பதினைந்து ரூபாய்.

மீதி இருக்கும் நாணயங்களை எண்ணுகிறார். நான்கு ரூபாய் இருக்கிறது. அதைக் கையில் மடித்துக் கொண்டு எழுகிறார். பின்புறமாகச் சென்று ஒரு சந்துக்குள் பார்க்கிறார்.

ஒரு கடையில் கட்டிலின் மேலே போடப் பட்டிருக்கும் பிளந்து போடப்பட்ட பலாச் சுளைகளைப் பார்க்கிறார். அதை நோக்கி நடக்கிறார். = பலாப் பழத்தின் மணம்தான் அவரை யோசிக்க வைத்திருக்கிறது. 

அதை நெருங்கும் போது விலைப் பலகையைப் பார்க்கிறார். ஒரு சுளை - 5 ரூபாய் என்று போட்டிருக்கிறது. 

அவர் நிற்கிறார். கடைக்காரர் தன்னைப் பார்ப்பதற்கு முன்பே திரும்பி நடக்கிறார். அவருடைய முகத்தில் பரிதவிப்பு தெரிகிறது. 

இப்போது அவர் அந்த இடத்தையெல்லாம் தாண்டி சைக்கிளை ஓட்டியபடி சென்றுகொண்டிருக்கிறார். எங்கோ கோயில் ஸ்பீக்கரில் 'தாயே கருமாரி' பாடல் கேட்கிறது.

Comments

  1. ப. ராஜன்26 February 2024 at 08:19

    அருமை 👌👏👏

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      Delete
  2. ரசிகன் விக்கி26 February 2024 at 21:01

    சில திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக கண்டு ரசிக்கிறோம். சில திரைப்படங்கள் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி அதில் உள்ள ஆழமான விஷயங்களை ஆராய தள்ளப்படுகிறோம். No degrading of any movies/creators here but merely comparing the level of intellect that every movie demands from its audience.

    உதாரணமாக, கமல் அவர்கள் இயக்கிய / நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் இரண்டாம் வகையைச் சேரும். பார்த்துவிட்டு அப்படியே கடந்து போக முடியாது. போகிறவர்கள் போகலாம். ஆனால் அதை திரும்பத் திரும்ப பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு விஷயம் புலப்படும்.

    அதைப்போல இந்த ‘பரிதவிப்பு’. Single reading ஐ விட multiple readings பல நுணுக்கங்களை வெளிக்கொணருகிறது.

    நல்ல தரமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் ரசிகன் என்ற வார்த்தை சத்தியம். உங்கள் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. என்னுடைய எழுத்துக்கான பாராட்டு கிடைத்தது ஒரு காரணம். நுட்பமான தகவல்களை கிரகிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் அறிவது இன்னொரு காரணம். நன்றி நண்பரே.

      Delete
  3. ரசிகன் விக்கி26 February 2024 at 22:04

    ஒரு படைப்பாளி தன் ரசிகர் பக்கத்துல உக்காந்து தன் படைப்பை பத்தி அவரே விவரிச்சா எப்படி இருக்கும்! அப்படி இருக்கு இந்த கதை.

    அட அட அடா…என்னா டீடெயிலிங்…

    அந்த கேமரா ஆங்கிள்ஸ கற்பனை செஞ்சு, அத வார்த்தைல கொண்டு வர நல்ல spatial reasoning ability வேணும். ஆறேழு தடவ கற்பனை பண்ணி பாத்து grasp பண்ண முடுஞ்சுது. ஒரு கதைலயே ஒரு படத்தோட சீன பாத்த திருப்தி.

    ஏனோ அந்த முதியவர பத்தி படிச்சவுடனே நல்லாண்டி அய்யா தா ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு ஒரு பத்து வயசு கம்மியா இருந்தா எப்படி இருப்பாரோ அப்படி நெனச்சுதா படிச்சேன்.

    நடு நடுவுல எழுத்தாளரே சின்ன சின்ன விளக்கங்களும் கமெண்டரியும் கொடுக்கறது ரொம்ப நல்லா இருந்துச்சு.

    அந்த sensory details ரொம்ப பிரமாதம். ஃபோன ஸ்பீக்கர் ல போடும்போது ஆட்டோமேடேட் வாய்ஸ் காதுல கேட்டுச்சு. நிஜமாதா.

    அந்த பலாச்சுளைய அறிமுகப்படுத்தின விதம் பாராட்டுக்குறியது. அவர் யோசிக்க, நாம பின்னாடி இருந்து முன்னாடி பாக்க, வெட்ட வெளினு தெரிய, காச எண்ணி பையில போட, எந்திருச்சு போய் ஒரு சந்துல இருக்கற கடையோட வாசல்ல இருக்கற கட்டில்ல பிளந்து போட்ருக்கர பலாச்சுளைய பாக்கறாரு. அந்த தருணத்துல படிக்கறவங்களுக்கு அந்த பலாச்சுளை வாசனை வரலேனா தா ஆச்சர்யம்.

    அதேபோலதா எல்.ஆர்.ஈஸ்வரியம்மா குரலும்.

    பஞ்சர் கடைக்காரருக்கு பீடி குடிக்கறவங்கள விட இந்த வயசானவரு கடைக்கு முன்னாடி உக்காரறது தா பெரிய பாடா போச்சு போல.

    ஓவராலா ரொம்ப ரொம்ப basic ஆ பாத்தா இந்த கதையோட ஒன் லைனர் இவ்ளோதா:

    ‘ஒரு முதியவர் தன் பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து பஞ்சர் போடுகிறார்.’

    இதுக்குள்ள எத்தனை எத்தனை டீடெயில்ஸ் இந்த சின்ன கதைல.

    கடைசில அந்த அய்யன நெனச்சு பீல் பண்ண வெச்சுட்டீங்களே . அவருக்கு மட்டுமில்ல பரிதவிப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஜெயகாந்தனின் 'மௌனம் ஒரு பாஷை' சிறுகதையில் ஓரிடத்தில் அம்மா ஒரு பெருமூச்சு விடுவார். அந்தப் பெருமூச்சில் தொனிக்கும் அர்த்தத்தை ஜெயகாந்தன் வார்த்தைகளால் விவரித்திருப்பார். 'ஓ, இதை இப்படித்தான் புருஞ்சுக்கனுமா' என்று அதைப் படித்த சிறுவனான எனக்கு விளங்கியது. ஒருவேளை அவர் அந்த விளக்கத்தைக் தராமல் போயிருந்தால், பாத்திரங்களின் ஒவ்வொரு அசைவுக்கு ம்ம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் என்று நான் உணராமல் போயிருப்பேன்.

      இந்தப் பதிவைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா, "ஒரு படைப்பாளி தன் ரசிகர் பக்கத்துல உக்காந்து தன் படைப்பை பத்தி அவரே விவரிச்சா எப்படி இருக்கும்! அப்படி இருக்கு இந்த கதை" என்று?

      மிகச் சரியாக அப்படி நினைத்து எழுதியதே இது. மிக்க மகிழ்ச்சி.

      அந்தக் காட்சிகளும் சத்தங்களும் வாசனையும் உங்களை அப்படியே ஒட்டியிருந்த பில் மகிழ்ச்சி.

      ஒரு கவிஞரோ திரைப்பட இயக்குனரோ தங்கள் படைப்பிற்கான விளக்கத்தை படைப்பிலேயே தரமுடியாது. ஆனால் சிறுகதையில் அதைச் செய்து பார்க்கலாமே என்றொரு முயற்சியே இது.

      இவ்வளவு விளக்கமாகவும் தெளிவாகவும் நீங்கள் எழுதியிருப்பதை என் தோளில் தட்டுவதாக உணர்கிறேன். நன்றி நண்பரே.

      Delete
    2. எழுத்துப் பிழையை மன்னிக்கவும். அந்தக் காட்சிகளும் சத்தங்களும் வாசனையும் உங்களை அப்படியே எட்டியிருப்பதில் மகிழ்ச்சி.

      Delete
  4. We want more of this writing.

    ReplyDelete
    Replies
    1. ரசிகன் விக்கி29 February 2024 at 04:15

      ஆமாம்... சரியாகச் சொன்னீர்.

      Delete
  5. ரசிகன் விக்கி5 March 2024 at 20:50

    https://youtube.com/@suvaissance?si=nFdFH0QLGNaYQeGn

    Suvaissance என்ற இந்த youtube சேனலை பார்க்கவும்...

    அப்படியே 'பாரம்' திரைப்படத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பரிந்துரைக்கு நன்றி. 'பாரம்' என்றொரு திரைப்படம் இருப்பதை உங்கள் மூலமாகவே அறிகிறேன். அதற்காகவும் நன்றி. நிச்சயம் அதைப் பார்க்கிறேன்.

      Delete
    2. ரசிகன் விக்கி4 April 2024 at 21:26

      இயக்குனர் ராம் அவர்கள் பரிந்துரைத்து அதை இயக்குனர் மிஸ்கின் அவர்கள் பார்த்து வியந்து பாராட்டி தள்ளியதை பார்த்த பிறகுதான் நானே அப்படத்தைப் பார்த்தேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?