2003 - 2023

க்ரிக்கெட் எனக்கு அறிமுகமானபோது, ரப்பர் பந்து என்பது எங்களுக்கு ஓர் ஆடம்பரம். 

குக்கிராமமான எங்கள் ஊரில் நாங்கள் க்ரிக்கெட் பந்தாகப் பயன்படுத்தியது, 'ஊமாங்கொட்டை' என்று அழைக்கப்பட்ட காய்ந்த பனங்கொட்டையைத்தான். 

ஐந்து ரூபாய் இருந்தால், கொளப்பலூரிலோ கோபியிலோ ரப்பர் பந்து வாங்கிக் கொள்ளலாம். 'ஹீரோ' என்றொரு பந்து இருந்தது. அது போக சற்றே சின்ன சைஸில் 'பெப்ஸி' பந்தும் கிடைக்கும். யார் காசு கொடுத்து வாங்குகிறார்களோ, அந்த நபர் வரும்போது மட்டுமே அதனைக் கொண்டுவருவார்கள். அதுபோக, பந்து எங்காவது வேலிக் காட்டுக்குள் தொலைந்து விட்டால், தேடிக் கண்டுபிடிப்பது பெரும்பாடு.

தேடும்போது சில நகைச்சுவை சக்ரவர்த்திகள் "இங்க பாரு... பந்து இல்ல" என்றோ, "அட இங்க பாரு... ஒரு விட்ட கெடக்குது" என்றோ சொல்லி பெருமையுடன் எல்லோரிடமும் கெட்ட வார்த்தை வாங்கிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது, அந்தத் தொனியில் ஏமாந்து எத்தனை பேர் பந்து கிடைத்ததென அவர்களைப் பார்க்கிறார்கள் என்பதில்தான் சொல்பவருக்குப் பெருமிதம்.

ஆனால், ஊமாங்கொட்டைகள் எக்கச் சக்கமாகக் கிடைக்கும் என்பதால், அது தொலைந்தால் தேட வேண்டியதில்லை.

ரப்பர் பந்தே ஆடம்பரமென்றால், க்ரிக்கெட் பேட் எல்லாம் கனவுதான். தென்னை மட்டையைச் செதுக்கி க்ரிக்கெட் மட்டையாக்கிக் கொள்வோம். 'லீப்பர்' கட்டை என்று எங்களால் அழைக்கப்பட்ட இழைத்த வேப்பமரக் கட்டைகளும் சிலசமயம் பயன்படும்.

நான் க்ரிக்கெட் விளையாடிப் பழகிய புதிதில், அதிகமாக விளையாடியது ரகுவேல் அண்ணனுடன்தான். இரண்டு பேர் மட்டுமே விளையாடுவோம். எங்களுடைய ஆரம்பப் பள்ளிக்கு முன்பிருந்த பூவரச மரம்தான் ஸ்டம்ப். அதன் தண்டிலே பூவரச இலையைக் கசக்கி ஒரு கோடு போட்டுக் கொள்வோம். அதற்குக் கீழே மட்டும் தான் ஸ்டம்ப். 

Under arm throw தான் பந்துவீச்சு. பவுலரே தான் ஃபீல்டரும். பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் தவறவிட்டால், அவரேதான் பின்னாடி ஓடிச்சென்று எடுத்து வர வேண்டும். 

மூன்று ஓவர் மேட்ச் மூன்று விளையாடுவோம். அது பெப்ஸி கப் சீரீஸ். அது முடிந்தால், இன்னொரு சீரீஸ். அது கொக்கொ கோலா கப் என்று நாங்களே பெயரிட்டுக் கொள்வோம். எல்லாம் அப்போது டிவியில் நாங்கள் பார்த்த க்ரிக்கெட் தொடர்கள்.

ஆமாம். சர்வதேச க்ரிக்கெட். அது ஒரு பரவச உலகம். என் பால்யத்தை அழகாக்கியவற்றுள் அதுவும் ஒன்று. டிவிக்குள்ளே சொர்க்கத்தை அழைத்து வந்தது க்ரிக்கெட் போட்டிகள்தான்.

1996 உலகக் கோப்பையை நான் பார்த்தேனா என்பது நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு வந்த ஆட்டங்களைப் பார்த்த நினைவு இருக்கிறது. 

96-ல் உலகக் கோப்பையை வென்று அசுர பலத்துடன் இருந்த இலங்கை அணியுடனான ஆட்டம் ஒன்று அப்படியே பசுமரத்தாணியாய்ப் பதிந்துள்ளது என் மனதில். 

முதல் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிவிடும். அடுத்த இன்னிங்ஸில் ஸ்ரீநாத் முதல் ஓவர் வீசுவார். ஜெயசூர்யா முதல் பந்தைச் சந்திப்பார். முதல் பந்திலேயே LBW முறையிடுவார்கள். அம்பயர் அவுட் தர மாட்டார். அடுத்த பந்தில் inside edge ஆகி க்ளீன் போல்ட் ஆவார் அவர். அந்த ஆட்டத்தில் 98 ரன்னுக்கு இலங்கையை ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெறும் இந்தியா. அடுத்த நாளெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டது "இலங்கையவே 98-க்கு ஆல் அவுட் பண்ணிட்டோம்." என்பதாக இருந்தது. 

நன்றாக நினைவு தெரிந்து நான் பார்த்தது 1999 உலகக் கோப்பைதான். கங்குலியும் சடகோபன் ரமேஷும் ஓப்பனர்களாக ஆடிய உலகக் கோப்பை. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா தோற்கும். அது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகள்தான் ஜாம்பவான்கள்.

இரண்டாவது ஆட்டம் ஜிம்பாப்வேயுடன். அப்பா இறந்த காரணத்தால் அந்த ஆட்டத்தில் சச்சின் ஆடமாட்டார். ஜிம்பாப்வேயுடனும் இந்தியா தோற்கும். (அடுத்த மேட்சிலேயே, சச்சின் திரும்பி வந்து சதமடிப்பார்). அந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறும். 

அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்தான் நான் முதன் முதலாக அந்த வீரரைப் பார்த்தேன். "என்னடா இவன் இப்புடி அடிக்கறான்!" என்று நான் பார்த்து மிரண்ட அவர்தான் ஆடம் கில்கிறிஸ்ட். ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.

2003 - உலகக் கோப்பை

பல புதிய வீரர்கள். ஷேவாக் என்றொரு பயமறியா இளங்கன்று, தினேஷ் மோங்கியா, அடுத்த டிராவிட் எனப் புகழப்பட்ட முகமது கைஃப், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் என்று புது ரத்தம் பாய்ச்சிய இந்திய அணி. 

ஓப்பனர்களான சச்சினும் ஷேவாக்கும் எதிரணிகளைத் துவம்சம் செய்ததெல்லாம் - கோபி கச்சேரி மேட்டில் இருக்கும் சுமி எலக்ட்ரானிக்ஸ் டிவிகளில் பார்த்துப் பரவசப் பட்டோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அக்தர் பந்தில் சச்சினும், வக்கார் யூனிஸ் பந்தில் ஷேவாக்கும் ஒரே மாதிரி அப்பர் கட் சிக்ஸ் அடித்ததெல்லாம் மறக்குமா?
 கச்சேரி மேட்டில் ஒரு ஃப்ளெக்ஸ் வைத்திருந்தார்கள். சச்சினின் உருவத்தைப் போட்டு, "திரும்புமா 1983? வெல்லுமா இந்தியா?" என்று எழுதியிருந்தார்கள்.

லீக் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் இந்தியா தோல்வி. எதிரணி ஆஸ்திரேலியா. மற்ற எல்லா அணிகளையும் வென்றுவிட்டு இறுதிப் போட்டி மீண்டும் ஆஸ்திரேலியாவுடன்.

எங்கள் வீட்டில் நான் ஜீவா அண்ணா, சமுகன் என்றழைக்கப்பட்ட சண்முகம் அண்ணா, என்னுடைய மாமா எல்லாரும் அந்த மேட்சைப் பார்க்கக் கூடியிருந்தோம். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஆப்பிரிக்க பழங்குடி நடனமென்று ஒரு பெண் டாப்லெஸ்ஸாக ஆடியதைப் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டோம். 

டாஸில் ஜெயித்து ஃபீல்டிங் தேர்வு செய்தார் கங்குலி. ஓப்பனர்கள் ஹெய்டனும், கில்கிறிஸ்டும்! முதல் ஓவரிலேயே 10 ரன்னுக்கு மேலே போனது. 

அந்த இன்னிங்ஸில் விழுந்தது இரண்டே விக்கெட். பாண்டிங்கும் மார்ட்டினும் ஆடிய தாண்டவத்தில் ஆஸ்திரேலியா அடித்தது 359. அதாவது, முதல் பேட்டிங்கில் ஓர் அணி 300 அடித்தால் அந்த அணிதான் வெற்றி என்று இருந்த அந்தக் காலத்தில் அடிக்கப்பட்ட 359.

இந்தியா இன்னிங்ஸ். 
அந்த மொத்தத் தொடரிலுமே முதல் பந்தை ஷேவாக் தான் சந்தித்தார். இரண்டு போட்டிகளைத் தவிர. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் சச்சின்தான் முதல் பந்தைச் சந்தித்தார். நான்காவது பந்தில் ஒரு ஃபோர் அடித்தார். அடுத்த பந்தை அவர் அடிக்க, in the air என்று ரவி சாஸ்திரி கத்த, அது கேட்சாக இருக்கக் கூடாது என்று மனது பதறித் துடித்தது. ஆனால், ஆமாம். அந்தக் கணத்தில் மொத்த இந்தியாவுமே ஸ்தம்பித்தது என்றால் அது பொய்யாகாது. பாதி நம்பிக்கை தகர்ந்தது. ஆம். தாங்க முடியாத இழப்பு. இருந்தாலும் இன்னும் நம்பிக்கையிருந்தது. ஷேவாக் இருந்தார். வழக்கமாக அவுட் ஆவதைப் பற்றிக் கவலைப் படாமல் அதிரடி காட்டும் ஷேவாக் அன்று பொறுப்புடன் நிதானமாக ஆடினார். அடுத்து வந்த கங்குலியும் அவரும் போட்ட பார்ட்னர்ஷிப் நம்பிக்கையளித்தது. ஆனால் கங்குலியும் அவுட் ஆனார். டிராவிட் வந்தார். ரன் ரேட் திருப்தியாக இல்லாவிட்டாலும், கடைசியில் அடிப்பார்கள் என்று பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். சண்முக அண்ணன் அடிக்கடி, "ஜெயிச்சுரும்லோ?" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நாங்களும் அவருக்கு சொல்வதைப் போலே எங்களுக்கும் சொல்லிக் கொண்டோம், "ஜெயிச்சுரும் ஜெயிச்சுரும்". 

இவ்வாறாக, ஒரு பேரதிசயம் நிகழும் என்று எதிர்பார்த்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் நாங்களே எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. மழை தூறத் தொடங்கியது. 

குறிப்பிட்ட ஓவர் வீசுவதற்கு முன்னால் மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால், அடுத்த நாள் மீண்டும் ரீமேட்ச் நடக்கும் என்று கமெண்டரியில் சொன்னார்கள் (அல்லது) நாங்கள் அப்படி நம்பினோம். 

அடுத்த நாள் மட்டும் ரீமேட்ச் நடந்தால், சச்சின் நிச்சயமாக வெறித்தனமாக ஆடுவார் என்று நினைக்கும் போதே சந்தோசத்தில் அழுகையே வருவது போலிருந்தது. மழை பொத்துக்கொண்டு ஊற்ற வேண்டும் என்று வேண்டத் தொடங்கினோம்.

ஆஸ்திரேலியாவோ, மழை வருவதற்கு முன்பாக அந்தக் குறிப்பிட்ட ஓவர்களை வீசிமுடித்துவிட வேண்டும் என்பதற்காக ஸ்பின்னர்களுக்கு ஓவர்களைக் கொடுத்தார்கள்.

அதுவரைக்கும் பதுங்கிய புலியாயிருந்த ஷேவாக், ஸ்பின்னர்கள் வந்த உடனே தன் அதிரடியைத் தொடங்கினார். தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். ஆஸ்திரேலியா சுதாரித்துக் கொண்டு, மீடியம் பேசர்களிடம் திரும்பியது. 

அன்றைக்கு மழை வரவே இல்லை. இந்தியா தொடர்ந்து விக்கெட் இழந்தபடியே இருந்தது. 1983 திரும்பவில்லை. இந்தியா தோற்றுவிட்டது. பரிசளிப்பு விழாவில் சச்சினுக்கு தொடர் நாயகனுக்கான விருது கொடுத்தார்கள். சச்சின் வலிமிகுந்த முகத்தோடு அதைப் பெற்றுக் கொண்டார். 

ஸ்ப்ரிங் பேட் கதையெல்லாம் கேட்டு நம்பியிருந்தேன். செய்தியில் உலகக் கோப்பை என்றாலே ஓடிச் சென்று பார்த்தேன். 'ஸ்ப்ரிங் பேட் கொண்டு ரிக்கி பாண்டிங் ஆடியதால், ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வாங்கியது செல்லாது என அறிவிக்கப்பட்டது' என்று செய்தி சொல்வார்கள் என மிக ஆவலாயிருந்தேன். ஆனால், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு உலகக் கோப்பையைக் காட்டுவதைத்தான் செய்தியில் சொன்னார்கள். 

இதோ மீண்டும் ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா. என்னதான் 2011 உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவை ஜெயித்தாலும், இறுதிப் போட்டியில் ஜெயிப்பதே காயம்பட்ட நெஞ்சுக்கு ஆறுதலாய் இருக்கும். அதுபோக, 2015 உலகக் கோப்பை அரையிறுதிக்கான பழிவாங்கலும் மிச்சமிருக்கிறது. 

இந்தியா பல்வேறு விதமான அணியாக இருந்திருக்கிறது. பரிதாபமாகத் தோற்று நம்மை துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வெற்றிக் கொக்கரிப்பில் மிதக்க வைத்திருக்கிறது. என்னவாயிருந்தாலும், இது நமது இந்திய அணி. இதைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.

இந்தியா வெல்கிறதோ தோற்கிறதோ. அது என்றுமே நமது நெஞ்சில் நிறைந்திருக்கும்.

Comments

  1. பால்யத்த ஒரு ரீவைண்ட் பண்ணிபுட்டியே ❤️🥰

    ReplyDelete
  2. கண்டிப்பாக இந்திய ஜெயிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அப்படித்தான் எல்லாரும் நம்பினோம். சரி பரவால்ல. WTC ல பாத்துக்கலாம்.

      Delete
  3. ஆஹா பழைய ஞாபகங்கள் வருகிறது

    ReplyDelete
  4. 'கிரிக்கெட்' க்கு பதிலாக 'க்ரிக்கெட்' புதுமை. தி லேட்டர் தான் ஆங்கில உச்சரிப்பின் மிகச்சரியான பிரதிநிதி.

    ரப்பர் பந்துகளின் பெயர்கள் நினைவில்லை ஆனால் ஒரு வகை ரப்பர் பந்தில் ரப்பர் பேண்ட் ஒன்று இணைத்திருப்பார்கள். அந்த ரப்பர் பேண்டை விரல்களின் இடையில் நேக்காக பிடித்து அது பிய்ந்து போகும்வரை பந்தை எல்லா திசைகளிலும் வீசியடித்து விளையாடிய ஞாபகம்.

    அதன் பிறகு டென்னிஸ் பால் என கொஞ்சம் மொசு மொசுவென ஃப்ளோரசென்ட் பச்சை நிறப் பந்து வந்தது. அதில் ஒரு groove இருக்கும். அந்த groove இன் வழியிலேயே விரல்களை இட்டுச்சென்றால் இன்ஃபினிட்டி லூப் போல சென்று கொண்டே இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.

    தெருவில் க்ரிக்கெட் விளையாடும்பொழுது பந்து போய் டிச்சில் விழும். எந்தவித அருவருப்புமின்றி அதை அப்படியே எடுத்துப் போய் தெருவில் உள்ள பைப் தண்ணீரில் கழுவி விட்டு அந்த lingering ditch smell உடன் விளையாடியதெல்லாம் மறந்து போகுமா? அப்பொழுதெல்லாம் handwash ஆவது ஒன்றாவது. இருந்தாலுமே we didn't fall sick.

    அப்பொழுதெல்லாம் கொக்கொ கோலா மூடிகளை சேகரித்துக் கொடுத்தால் 'flicker book ' தருவார்கள். ஜவகல் ஸ்ரீநாத் பந்து வீசுவது ஒரு புறமும், கொக்கொ கோலா அருந்துவது மறுபுறமும் இருந்த flicker book எனக்கு கிடைத்தது. இன்றுவரை அது பத்திரமாக உள்ளது.

    ஸ்ப்ரிங் பேட் சம்பவம் இன்றும் நினைவில் உள்ளது. பிபிசி இல் போட்டாதாகக் கூட சொன்னார்கள். பள்ளி முடிந்து சென்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. The exact scenario the way you narrated.

    இதோ 2023 உலகக் கோப்பை நிறைவடைந்து விட்டது. We missed it due to some miscalculations. So what? We are gearing up for 2027. பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. ரப்பர் பேண்ட் ரப்பர் பந்து, infinity loop groove, lingering ditch smell... Wow!!! அந்த flicker book எல்லாம் கேள்விப்பட்டது இல்ல நாங்க. நீங்க தனியா ஒரு கட்டுரை எழுதணும்.

      Delete
  5. அத வேற ஞாபகப்படுத்திட்டீங்க. நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி 😭

    ReplyDelete
  6. Yenna oru memory power!!!

    ReplyDelete
  7. ரசிகன் விக்கி5 February 2024 at 22:55

    எனக்குள் ஒருவன் (2015) திரைப்படத்தின் திரைக்கதையைப் பற்றி ஒரு கட்டுரை வரைந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.

    படத்தின் லிங்க்:
    https://youtu.be/6NY24dzHnAM?si=kMs76EmLkfPG8Myg

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?