ஒரு சனிக்கிழமை காலை

சித்தோடு பேருந்து நிறுத்தத்தைத் தாண்டும் போது, 'செந்தில் சார்' நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். உண்மையில் அவருடைய பெயர் 'செந்தில் சார்' இல்லை. அவன்தான் அவருக்கு மானசீகமாக அந்தப் பெயரைச் சூட்டியிருந்தான். தனது புரொஃபஸர் திரு. செந்தில் அவர்களைப் போலவே இருந்ததால், அந்த இரகசியப் பெயர். பெயருக்கு உரித்தானவருக்கே தெரியாத அளவுக்கு இரகசியம்.

பெயர் தெரியாத அளவுக்கு அவர் அன்னியரும் இல்லை. தினமும் இரண்டு பேருமே சித்தோட்டில் பஸ் ஏறுபவர்கள் தான். இருவருமே ஒரே பள்ளியில் வேலை செய்பவர்கள்தான். இருவரும் பேசிக்கூட இருக்கிறார்கள். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த அந்த ஒரு மாதத்தில், அந்தப் பள்ளியில் அவனைவிடக் குறைவாகப் பேசிய ஒரே நபர் செந்தில் சார்தான். 

அவர் கோபியிலிருந்து வருபவர். வள்ளிப்புரத்தான் பாளையத்திலிருக்கும் பள்ளியிலிருந்து பள்ளிப் பேருந்து எதுவும் கோபி வரைக்கும் போகாத காரணத்தால், காலையில் ஆறரை மணிக்கு கோபியில் பஸ் ஏறி, ஏழே காலுக்கு சித்தோட்டை அடைந்து, டீக்கடையில் இரண்டு மெதுவடைகளையும் ஒரு  டீயையும் காலை உணவாக எடுத்துக் கொண்டு, ஏழரைக்கு நிறுத்தத்துக்கு வரும் பஸ்சுக்காக ஏழு இருபதுக்கே வந்து சேர்பவர் அவர். சித்தோட்டிலேயே உறங்கி எழுந்து அந்த பஸ்சுக்கு வரும் ஆசிரியர்கள் கூட, அவ்வப்போது தாமதமாக வருவார்கள். ஆனால், அவர் பன்றிகள் பறக்கும் போது மட்டும்தான் தாமதமாக வருவார். ஃபினான்ஸ் செக்ஷனில் வேலை பார்ப்பவர். வேலை முடிந்து தினமும் மாலை எட்டு மணிக்கு வீட்டை அடைபவர். அவரைப் பற்றி அவனுக்கு நிறைய தகவல்கள் தெரியும், அவருடைய பெயரைத் தவிர. கேட்டு மறந்துவிட்டானா அல்லது கேட்கவே இல்லையா என்றெல்லாம் அவனுக்கு நினைவில்லை.

பொதுவாக யாராவது புது நபருடன் பேசி அறிமுகமாகி இரண்டொரு நாள்களுக்குப் பிறகும் அவனுக்கு அவர்களுடைய பெயர் தெரியவில்லை என்றால், அதற்குப் பிறகு அவர்களுடைய பெயர் என்னவென்று யாரையும் கேட்க மாட்டான். காத்திருந்து தெரிந்து கொள்வான். யாராவது அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்கள். அல்லது, அவர்களே அவர்களுடைய பெயரைக் குறிப்பிடுவார்கள். அல்லது, ஏதேனும் சர்க்குலரில் அவர்களுடைய பெயருக்குப் பக்கத்தில் கையெழுத்துப் போடுவார்கள். இப்படி அனைத்தையும் கூர்ந்து கவனித்து பெயரை அறிந்து கொள்வானே தவிர, அவனாகக் கேட்கமாட்டான். 

நேற்றுக் கூட, ஒரு மேடம் இவனை நன்றாகக் காலை வாரியிருந்தார். அந்தப் பள்ளியில் இருக்கும் ஐநூற்று சொச்சம் மேடங்களில் ஒரு மேடம். கரெக்ஷன் செய்வதற்கு நோட்டுகளை வீட்டுக்குச் சுமந்து செல்ல அவனுக்கொரு கட்டைப்பை தேவைப்பட்டது. அவனுடைய ஸ்டாஃப் ரூமைத் தாண்டி, ஆறாம் வகுப்பு பகுதியைத் தாண்டி, அந்த வகுப்பறைகளுக்கு முன்பாக அமர்ந்திருந்த மேடங்களைக் கடந்து, ஏழாம் வகுப்பில் இருந்த ஹிந்தி சாரைத் தேடிச் சென்றான். அவருடைய பெயர் அவனுக்குத் தெரியும். அது புவன் குமாரோ, சூரஜ் வர்மாவோ இல்லை. ரங்கசாமி. இன்னும் சொல்லப் போனால் அரங்கசாமி. திருச்சியில் பிறந்த பச்சைத் தமிழ் ஹிந்தி சார் அவர். அவன் வாழ்க்கையில் பேசிப் பழகிய ஒரே ஹிந்தி ஆசிரியர் அவர் என்பதால், அவன் அவரை 'ஹிந்தி சார்' என்று குறிக்கவே விரும்பினான். 

ஹிந்தி சார் அவருடைய வகுப்பில் பையைத் தேடிப் பார்த்துவிட்டு, அவனை ஆறாம் வகுப்புப் பகுதிக்கு இட்டுச் சென்றார். அவன் கடந்து வந்த மேடங்களில் ஒருவரைக் கேட்டார். 

"கட்டப் பை, வெச்சுருக்கீங்களா?"

"எதுக்குங் சார் உங்குளுக்கு கட்டப் பையி?"

"எனக்கில்ல. இதா இவுருக்கு."

அந்த மேடங்களில் ஒருவர் உடனே அவனைப் பார்த்தார்.

"சார், என்னோட கப் போர்டுல இருக்கும் எடுத்துக்குங்க."

அவருடைய கப் போர்ட் எதுவென்று அவனுக்குத் தெரியாது. விழித்தான். மேடம் அவனுடைய முகபாவனையை மிகத் தெளிவாகப் படித்திருக்க வேண்டும். 

"என்னோட கப் போர்ட் தெரியாதா? என் பேரே எழுதியிருக்கும் போங்க."

'அடப் போங்க' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அவருடைய பெயருமே அவனுக்குத் தெரியாது என்பதை அவர் தெரிந்து கொள்ளும் முன்னதாக விறுவிறுவென கிளம்பிவிட்டான். 

நிற்க.

செந்தில் சார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

"என்ன? சார் நின்னுட்டு இருக்காரு?" என்றான். 

வண்டியில் அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த அவள், 
"லீவுதானா இன்னைக்கு?" என்றாள்.

"ஆமா, லீவுதான். ஒருவேள ஆஃபிஸ் ஸ்டாஃப்புக்கு மட்டும் வொர்க்கிங் டேவா இருக்கும்."

"நல்லாத் தெரியுமா?"

"நல்லாத் தெரியும். நேத்து கெளம்பும் போது, அத்தன பேரு 'ஹேப்பி வீக் எண்ட்'னு சொன்னாங்களே!"

"அத வெச்சுத்தா சொல்றீங்களா?"

"ஆமா. ஆனா லீவு இல்லைனா எதுக்கு அத்தன பேருமே அப்படிச் சொல்லணும்? அதுவும், டீச்சர்ஸ் கூட ஒண்ணு ரெண்டு பேருதான் சொன்னாங்க. ஸ்டூடண்ட்ஸ் தான் எல்லாருமே சொன்னாங்க. அவ்வளவு சந்தோசம் எல்லாருக்கும்."

அவளும் அப்பாவும் சிரித்துக் கொண்டார்கள். அப்பா வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். மூவரும் பவானிக்குப் போய், அங்கே வண்டியை விட்டுவிட்டு, பஸ் ஏறி சேலத்துக்குப் போய், அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து வேறு ஏதோ ஓர் ஊருக்குப் போக வேண்டும். ஒரு நெருங்கிய சொந்தத்தின் கல்யாணம்.

அவன் ஓர் எழுத்தாளன். அதாவது, 'விதண்டாவாதி'. அவள் ஒரு 'ஃபர்ஸ்ட் பென்ச் மாணவி'. இப்போதல்ல. எப்போதுமே.

அவர்கள் ஐந்து மணிக்கே எழுந்து ரெடியாகி, ஆறு மணிக்கு பவானியில் பஸ் ஏறியிருக்க வேண்டும். அவளும் அப்பாவும் எழுந்து குளித்து ரெடியான பின்பு ஆறு மணிக்கு வந்து மெதுவாக அவனை எழுப்பினாள். அது எப்போதுமே அவளுக்கு பயமாக இருக்கும். தூங்கும் போது எழுப்பினால், அவன் 'மூஞ்சியைக்' காட்டுவான். காட்டித்தானே ஆக வேண்டும்? எங்கே மறைப்பது அதை? அவனுடைய 'மூஞ்சி' தானே அது?

அவர்கள் பவானியை அடையும் போது, மணி ஏழு முப்பது. அப்பா வண்டியை ஷெட்டில் விடுவதற்காகப் போனார். அவள் பிஸ்கெட் வாங்குவதற்காக பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போனாள். அந்தக் கடையின் தொலைக்காட்சியில் ஜீ தமிழ் சேனலின் 'ஒளிமயமான எதிர்காலம்' ஓடிக் கொண்டிருந்தது. அதில், இராசிபலன் சொல்லும்போது, ஒவ்வொரு இராசிக்கும் அந்த இராசிக்கான பொம்மையுடன் அந்த இராசியின் பெயரும் தோன்றும் அனிமேஷன் காட்டப்படும். பின்னணியில் ஒரு இசைத்துணுக்கு கேட்கும். இரண்டு வினாடிகள்தான் வரும் அந்த அனிமேஷனும் இசைத்துணுக்கும். கல்யாணத்துக்கு முன்பாக அவன் அந்த இசைத்துணுக்கைக் கேட்டபடிதான் தினமும் காலையில் கண்விழிப்பான். அவனுடைய அம்மா சமைத்தபடியே இராசிபலன் கேட்டுக் கொண்டிருப்பார் அல்லது இராசிபலன் கேட்டபடியே சமைத்துக் கொண்டிருப்பார். 

பிரத்தியேகமாக அந்த இசைத் துணுக்கைக் கேட்பதற்காகவே அந்தக் கடைக்குப் போனான். எப்போதுமே இராசிபலனைச் சொல்லும் அந்தப் பெரியவர் வழக்கமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஏதோ ஓர் இராசிக் காரர்களுக்கு அவரவர் வயதுக்குத் தக்கவாறு நடக்கவேண்டியது நடக்கும் என்றார். படித்து முடித்திருந்தால் வேலை கிடைக்குமாம்; திருமணமாகவில்லையென்றால் திருமணமாகுமாம்; குழந்தை பிறக்க வேண்டுமென்றால் குழந்தை பிறக்குமாம். இந்த வயதில் இது நடக்க வேண்டும் என்ற விதியில் நம்பிக்கையில்லாத அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது. டீ குடிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்குள்ளாக அப்பா வண்டியை நிறுத்திவிட்டு வந்திருந்தார். 

"போலாங்கலாப்பா?" என்றான்.

"இங்க தாங்க பஸ் நிக்கும்." என்றார். 

உடனே அவன் குதூகலமானான். 

"நான் ஒரு டீ குடிக்கறேன்." என்று அவளுடைய காதில் கிசுகிசுத்தான்.

அந்த முடிவை அவள் வரவேற்க மாட்டாள் என்று எதிர்பார்த்தான். 

"பஸ் வந்துரும்ங்க."

"அட, இங்க தானே வரும். உடனே குடிச்சுட்டு ஏறிக்கலாம்."

அவளுடைய ஒப்புதலுக்குக் காத்திருந்தால் பஸ் வந்துவிடலாம் என்பதால், டீ மாஸ்டர் அக்காவிடம் சென்றான். 

"அக்கா ஒரு டீ. சூடு கம்மியாப் போடுங்க." என்றான். 

'நல்லா ஆத்திக் குடுங்க' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அது மிகவும் உரிமையுடன் சொல்வதைப் போல் இருக்கும் என்பதால், இப்படி மாற்றிச் சொன்னான். அந்த அக்கா வினோதமாகப் பார்ப்பார் என்று நினைத்தான். இல்லை. வெறுமையாகத் தலையசைத்தார். போக, பஸ் ஏறுவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர் கேட்டுக் கொண்டுதானிருந்தார் என்பதால், அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். 

பாய்லர், டிகாக்ஷன் சல்லடை எதுவும் இன்னும் வைக்கப்பட்டிருக்கவில்லை அல்லது வைக்கப்பட்டிருக்கவே இல்லை. வீட்டில் டீ வைப்பதைப் போல, ஒரு பால் பாத்திரத்தில் பாலை ஊற்றி, ஒரு த்ரீ ரோசஸ் பாக்கெட்டைப் பிரித்துக் கொட்டினார். ஒரு பஸ் வந்தது. அவள் அவனைப் பார்த்தாள். 

"இந்த பஸ்சா?" என்றான் அவசரமாக.

"பரவால்ல நீங்க குடிங்க. அடுத்த பஸ்ல போயிக்கலாம்." என்று அப்பா சொன்னார். 

அவன் திரும்பி அக்காவைப் பார்த்தான். சர்க்கரையைப் போட்டுக் கொண்டிருந்தார். 

'கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னே பின்னே போனால்தான் என்ன?' என்று அவனுக்குத் தோன்றியது. எங்கேயும் எப்போதும் நிதானமாக ஆற அமர வாழ்வின் சிறுசிறு தருணங்களை இரசித்து ருசித்துவிட்டுச் செல்வதே அவனது வாடிக்கை. தூக்கம் நன்கு கலைந்தபிறகு எழுந்திருக்க நினைப்பதும், பாய்ண்ட் டு பாய்ண்ட் பஸ்சை விட்டுவிட்டு, பாட்டு பஸ்சுக்குக் காத்திருந்து அதிலே போவதும் அவனுக்கு மிகப் பிடித்திருப்பதன் உளவியல் காரணம் அதுவே.

சீக்கிரமாகச் செய்து முடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? சீக்கிரத்தின் அவசியந்தான் என்ன? ஒரு குழந்தை பேசிப் பழகத் தாமதமானால் என்ன? கொஞ்சம் அதிக காலம் உளறிக் கொண்டிருக்கட்டுமே? சீக்கிரம் பேசிப் பழகி அவ்வளவு அவசரமாக மனப்பாடச் செய்யுள் சொல்ல வேண்டியது எதற்காக? இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், மகிழ்ச்சியே இல்லையா? டீக்கடையில் வீட்டுமுறை டீ போட்டுத்தரும் அக்காக்கள் இந்த உலகில் இல்லையா? நாற்பது வயதுக்குள் சொந்த வீடு கட்டாதவர்களுக்கு, எரிநரக தண்டனையா அளிக்கப்படும்? தனது அறுபதாவது வயதில், 27 வயதுப் பெண்ணை மணந்த வுடி ஆலன் மனதில் வந்தார். கூடவும் ஒரு பெருமூச்சும் வந்தது. 

அக்கா, டம்ளரில் டீயை ஊற்றும் போதே இன்னொரு பஸ் வந்தது. அவன் அக்காவைப் பார்த்தான். 

"கப்புல ஊத்தித் தருட்டுமா?" என்றார்.

"செரிங்கக்கா." என்றான்.

ஊற்றப்பட்டது.

"இல்ல இல்ல குடிங்க. அடுத்த பஸ்ல போயிக்கலாம்." என்றார் அப்பா.

"குடிங்க குடிங்க. பஸ் தொடர்ந்து வந்துட்டேதான் இருக்கும். டீ குடிக்கறதுக்குள்ளயே ரெண்டு பஸ் வந்துடும்." என்றார் அருகே நின்றிருந்த இன்னொரு பெரியவர்.

அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. அவளைப் பார்த்தான். அவள் முறைத்தாள். வேறுபுறம் திரும்பிக் கொண்டான். டீயை உறிஞ்சினான். திவ்யமாய் இனித்தது.

"டீ சூப்பருங்க்கா." என்றான்.

அக்கா புன்னகைத்தார்.

நுரையைக் கூட விட்டுவைக்காமல் குடித்து முடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு பஸ் எதுவும் வரவில்லை. அந்தப் பெரியவர் சற்றே கலவரமாகியிருக்க வேண்டும். 

"இந்நேரம் வந்திருக்கணும். இன்னும் பஸ்ச காணோமே!" என்று நேர்மையான கவலையுடன் சொன்னார்.

சர்வநிச்சயமாக அதே நொடியில், அவருக்குப் பின்னால் பஸ் வருவது தெரிந்தது. 

"பஸ் வந்துருச்சுங்க ஐயா!" என்றான்.

அந்த பஸ் ஒய்யாரமாக வந்து கொண்டிருந்தது. சற்றே அருகில் வரும்போதுதான் தெரிந்தது, அது ஒரு ஏசி பஸ் என்று. அவனது மனம் குதியாட்டம் போட்டது. அதே நேரம், ஏசி பஸ்சில் டிக்கெட் விலை அதிகமாக இருக்குமோ என்று அஞ்சினான். எத்தனையாக இருந்தாலும் அது அவனுக்கு ஒன்றுமில்லை. விலை அதிகமென்பதால், அவர்கள் அந்த பஸ்சை தவிர்த்துவிடுவார்களோ என்பதே அவனது கவலை. 

"இதுல, நார்மல் ரேட்டுங்களா, இல்ல டிக்கெட் எச்சுங்களா?" என்றான் அப்பாவிடம்.

"தெரியலயேங்க." என்றார் அப்பா.

அவர்களுக்கு சற்றே தள்ளி நின்றிருந்த ஒருவரைக் காட்டி டீக்கார அக்கா சொன்னார்,  "அவருதான் கண்டக்டர்."

அவரிடம் சென்று கேட்டான். 
"அண்ணா, நார்மல் ரேட்டுங்களா, இல்ல டிக்கெட் எச்சுங்களா?"

"சேலத்துக்கு எழுவத்தஞ்சு ருவா." நெருங்கி வந்த பஸ்சிலிருந்து பார்வையை விலக்காமல் சொன்னார்.

அந்தத் தகவல் அவனுக்குப் போதுமானதாக இல்லை.

"எழுவத்தஞ்சு ரூபான்னா? அது நார்மல் ரேட்டுங்களா, எச்சுங்களா?"

பஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த கண்டக்டர் ஒரு வினாடி நின்றார். திரும்பி அவனை வினோதமாகப் பார்த்தேவிட்டார். 

"நார்மல் ரேட்டுதான் பா."
சொல்லிவிட்டு பஸ்சில் ஏறுவதற்கு நகர்ந்தார்.

Comments

  1. 'பொதுவாக யாராவது புது நபருடன் பேசி அறிமுகமாகி இரண்டொரு நாள்களுக்குப் பிறகும் அவனுக்கு அவர்களுடைய பெயர் தெரியவில்லை என்றால், அதற்குப் பிறகு அவர்களுடைய பெயர் என்னவென்று யாரையும் கேட்க மாட்டான்.'

    Relatable 😊

    'இன்னும் சொல்லப் போனால் அரங்கசாமி.'

    எனக்கு தெரிஞ்ச ஹிந்தி சார் பேர் 'ரங்கன்'.

    'அடப் போங்க' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.'
    😄😄

    'அவனுடைய அம்மா சமைத்தபடியே இராசிபலன் கேட்டுக் கொண்டிருப்பார் அல்லது இராசிபலன் கேட்டபடியே சமைத்துக் கொண்டிருப்பார்.'
    😯🤔😃👌

    இந்த வயதில் இது நடக்க வேண்டும் என்ற விதியில் நம்பிக்கையில்லாத அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது.
    👏👏

    "அக்கா ஒரு டீ. சூடு கம்மியாப் போடுங்க." என்றான்.

    'நல்லா ஆத்திக் குடுங்க' என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அது மிகவும் உரிமையுடன் சொல்வதைப் போல்'
    👆இந்த வரிகள் ரொம்ப புடுச்சுது.

    'சீக்கிரமாகச் செய்து முடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? சீக்கிரத்தின் அவசியந்தான் என்ன?'
    🙏🙏🙏
    This particular paragraph கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. நமக்கு பின்னால வர சந்ததிகள் பாத்து படிச்சு தெளிவா நடந்துக்கட்டும்.

    So the wait is worth both the tea and a comfortable ride.. 👏👏

    The curve of the narrative, if i had a pen and paper, i'd have drawn it.
    Boarding salem bus is the main task here. But how the narrative travelled from sendhil sir, to unknown names to kattapai to hindi sir to madam to cupboard; then weekend holiday doubt, rasi palan, some wisdom, a quick sip of tea, waiting for the bus, some wisdom, the periyavar, the AC bus, the conductor.. Finally the boarding of the bus left understood.

    Once again a fluent narrative and a worthwhile read. Thank you.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?