தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை - 1
படம் : பாமா விஜயம் (1967)
உரையாடல் : கே. பாலச்சந்தர்
இயக்கம் : கே. பாலச்சந்தர்
தயாரிப்பு : மனோகர் பிக்சர்ஸ்
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பற்றிய பேட்டியொன்றில் அப்படத்தின் திரைக்கதையாசிரியர் கமல்ஹாசன் நகைச்சுவையைப் பற்றிய மிக முக்கியமானதொரு விஷயத்தைப் பதிவு செய்திருந்தார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்லுமளவுக்கு அது எனக்கு ஞாபகமில்லை என்றாலும், அதன் சாரம் இதுதான்.
"வழக்கமாக காமெடிப் படங்களில் கதை மாந்தர்கள் பலரும் (if not அனைவரும்) ஒரு யதார்த்தமில்லாத, மிகைப்படுத்தப்பட்ட கோமாளித்தனத்துடனே இருப்பர். அந்தக் கோமாளித்தனம் அவர்களின் பேச்சு மற்றும் உடல்மொழியில் மட்டுமல்லாது, மொத்தமாகவே அவர்கள் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவே காட்டப்படுவார்கள். ஆனால், மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் கதாபாத்திரங்கள் சற்றே நம்பகத் தன்மையுடனும் யதார்த்தத்தை மீறாமலும் இருக்கும்" என்றார்.
அவர் சொன்ன மாதிரி கோமாளித்தனமான பாத்திரங்களும் மட்டமானவை என்று நாம் சொல்லிவிட முடியாது. Slapstick comedy என்ற அந்த மிகப் பிரபலமடைந்த, அதைவிட முக்கியமாக, மிகவும் சிரிப்பூட்டக் கூடிய நகைச்சுவையை கமல்ஹாசனே கூட ஆராதிக்கும் சார்லி சாப்ளின் போன்றோர் செய்திருக்கிறார்கள்.
ஆனால், சார்லி சாப்ளினின் slapstick comedy-க்கும் யதார்த்தத்தை மீறிய கோமாளித்தனத்துக்கும் இடையே இருப்பது ஒரு மிகச் சிறிய இடைவெளிதான். 'கதை' என்னும் ஈரெழுத்து இடைவெளி.
நடிகரின் முகக் கோணல், கீழே விழுதல் போன்ற செயல்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் நிகழும் கதை நகர்வுக்கும் ஓர் இறுக்கமான பிணைப்பிருக்க வேண்டும். (Modern Times படத்தில் வரும் உணவூட்டும் எந்திரம் பற்றிய காட்சி மிகச் சிறந்த உதாரணம்)
இன்னொன்று, உடல்மொழியை மட்டுமே வைத்துச் செய்யப்படும் நகைச்சுவைக் காட்சிகளில் பார்வையாளரின் escapism அடிபட்டுப் போய், அவர்களுக்கு 'தான் பார்ப்பது ஒரு சினிமா' என்றொரு தவிர்க்கவியலாத எண்ணம் தோன்றிவிடும் அபாயமும் உள்ளது. நிற்க.
'பாமா விஜயம்' வெளிவந்த காலகட்டத்தில், நாம் இன்று மிகைநடிப்பு என்று அழைக்கும் நாடகபாணி நடிப்பும் வழக்கமாயிருந்து. அந்தப் படத்திலேயே ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரது நடிப்பும் அத்தகையதே. அந்த ஒருவர், டி.எஸ். பாலையா. (நாகேஷ் என்ற மகாநடிகனது நடிப்பைப் பற்றி தனி ஆராய்ச்சிப் புத்தகமே எழுதவேண்டும் என்பதால் அதனைக் குறித்து இங்கே பேசாமல் தவிர்ப்போம்).
படத்தில் ஒரு காட்சி.
இது டி.எஸ். பாலையாவின் எதார்த்த நடிப்புக்கு மாத்திரமல்ல, நகைச்சுவையில் கே. பாலச்சந்தரின் மேதைமை பற்றியும் கட்டியம் கூறும் ஒரு முயற்சி.
காட்சிக்கு முன்னால் சூழ்நிலை விளக்கம்.
'சினிமா ஸ்டார்' பாமாவின் எதிர்பாரா வருகையால் ஒரு நடுத்தரக் குடும்பம் தம்மைப் பணக்காரர்களாய்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில் சேமிப்புகளைக் கரைக்கிறார்கள். பணத் தட்டுப்பாடு. மருமகள்களில் ஒருவர், வெள்ளிக்குடத்தை வேலைக்காரரிடம் கொடுத்து, அதை அடகு வைத்துப் பணம் நூறு ரூபாய் வாங்கி வரச் சொல்லுகிறார். ஒரு கண்டிஷன். அந்த விஷயம் மாமனார் டி.எஸ். பாலையாவுக்குத் தெரிந்துவிடக் கூடாது.
மாமனாருக்குத் தெரியக்கூடாது என்று மருமகள் சொல்லும்போதே, 'அது அவருக்குத் தெரிந்தால், அவர் திட்டுவார் அல்லது மருமகளின் திட்டம் கெட்டுவிடும்' என்பது பார்வையாளருக்குச் சொல்லப்பட்டுவிடுகிறது.
திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு இனிவரும் காட்சி ஓர் உதாரணம்.
இனி காட்சியைப் பார்ப்போம். தோளில் போட்டிருக்கும் துண்டால் வெள்ளிக் குடத்தை மறைத்தவாறே எடுத்துப் போகிறார் வேலைக்காரர்.
அடுத்த frame-லேயே மாமனார் இவரது வழியில் குறுக்கிடுகிறார்.
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?
'துண்டுக்குள்ள என்ன வெச்சுருக்க?' என்று மாமனார் கேட்பார் என்றுதானே?
ஏனென்றால், பார்வையாளராக நாம் ஒரு காட்சியில் எதிர்பார்ப்பது, 'ஒரு செயல் நடந்ததா இல்லையா' என்பதை மட்டும்தான். நம்மைப் பொறுத்தவரை, 'துண்டுக்குள் இருக்கும் குடத்தை மாமனார் உடனடியாகப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கத் தவற வேண்டும்'. What we want to know is a binary answer. ஆனால், வாழ்க்கை என்பது ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளால் நிரம்பி வழிவதாயிற்றே!
நாம் ஒருவரைச் சந்திக்கிறோம். அவரிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. நமக்கு அது இருப்பதே தெரியாது. அவர் துண்டிற்குள் எதையோ வைத்து எடுத்துச் செல்கிறார் என்பதை நாம் பார்த்தாலுமே கூட, அது ஏதோ தவறு என்று நினைக்க மாட்டோம்.
பாலையாவும் அதையேதான் செய்கிறார். வேலைக்காரரைப் பார்த்த உடனேயே, அவரது வயிற்றுப் பகுதியில் துண்டால் எதையோ மூடியிருப்பதைப் பார்க்கிறார். ஆனால், அதைப் பற்றி அவர் எதுவும் கேட்பதில்லை. அவரது உடல்மொழியில் தெரியும் அசௌகரியத்தைத் தான் முதலில் கவனிக்கிறார்.
"ஏன்டா நெளியுற?" என்கிறார் பாலையா.
"எதுவுமில்லை" என்கிறார் வேலையாள்.
அடுத்து மீண்டும் ஒருமுறை அவரது 'வீங்கிய' வயிற்றைப் பார்த்துக் கேட்கிறார்.
"இடுப்பு வலியா?"
(ஒருவர் நெளிவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கக்கூடும். அதிலே ஏன் அவர் 'இடுப்புவலி' பற்றி கேட்கிறார் என்று பார்வையாளர் யோசித்தால் அங்கே தொனிக்கிறது நகைச்சுவை).
வேலையாள் 'இடுப்பு வலி' இல்லை என்கிறார். பிறகுதான் பாலையா கேட்கிறார்,
"துணிக்குள்ள என்ன?" என்று.
வேலையாள் "ஒண்ணுமில்லீங்க." என்கிறார்.
பெரியவர் அதை வெளியே எடுக்கச் சொல்லிக் கேட்கிறார். உண்மையில் மிரட்டுகிறார். வேலையாள் மீண்டுமொருமுறை "ஒண்ணுமில்லீங்க." என்கிறார். ஆனால், அவர் சொல்வதற்கு சற்றும் சம்பந்தமே இல்லாமல் குடத்தை வெளியே எடுக்கிறார். அதற்கு பாலையா கேட்கும் கேள்வி,
"இதுக்குப் பேரு ஒண்ணுமில்ல. இல்ல?"
வேலையாளின் செயலுக்கும் சொல்லுக்கும் உள்ள முரண்பாட்டை, இதைவிட மிகச் சரியாகவும், மிக மிக நியாயமாகவும் வேறு எப்படிக் கேட்க முடியும்!
யோசித்துப் பாருங்கள்! வெள்ளிக் குடத்தின் பெயர் 'ஒண்ணுமில்ல'!
'ஏன்டா! ஒண்ணுமில்லைனு சொல்லிட்டு வெள்ளிக் கொடத்தவா எடுத்துட்டுப் போற?' என்று அவர் கேட்டிருந்தால், அதன் சுவாரஸ்யம் எவ்வாறு குன்றிப் போயிருக்கும்!
அப்படியே இயல்பான உரையாடல் தொடர்ந்து, அந்தக் குடத்தை தன்னிடம் கொடுத்து பணம் வாங்கிச் செல்லுமாறு மாமனார் சொல்லுகிறார்.
இந்த இடத்தில், பேச்சு வழக்கில் mind voice என்று அறியப்படும் aside உத்தியைப் பயன்படுத்தாமல், உரையாடல்கள் மூலமாகவே வேலையாளின் மனவோட்டத்தை பார்வையாளருக்குப் புரியும்படி செய்கிறார் திரைக்கதை ஆசிரியர். ஆனால், பார்வையாளருக்குப் புரியும் வேலையாளின் மனவோட்டம், மாமனாருக்குப் புரியாமல் போகும் மாயம் என்ன?
இதுதான், verbal irony-க்கான ஒரு சிறந்த உதாரணம். Verbal irony-யின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தின் (speaker) உரையாடலில் உள்ள முழு அர்த்தம் அல்லது உள்ளர்த்தம், அவர் யாருடன் பேசுகிறாரோ (listener) அந்தக் கதாபாத்திரத்துக்குப் புரியாது. ஆனால், பார்வையாளருக்குப் புரியும். ஏனென்றால், கேட்பவருக்குத் தெரியாத ஏதோ ஒரு தகவல், திரைக்கதை ஆசிரியரால், பார்வையாளருக்கு முன்னமே தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான ஒரு கூடுதல் தகவல். அது என்ன கூடுதல் தகவல்? உரையாடலைக் கவனிப்போம். மாமனாருக்குப் புரியாத, ஆனால் பார்வையாளருக்குப் புரியும் வேலைக்காரரின் உள்மன ஓட்டங்கள் அடைப்புக் குறிகளுக்குள்.
மாமனார் வேலைக்காரரை அழைத்துக் கொண்டு பணப்பெட்டி இருக்கும் அறைக்குப் போகிறார்.
மாமனார்: எவ்வளவுடா வாங்கிட்டு வரச் சொன்னாங்க?
வேலையாள்: (நாம 100 ரூபாய்னு சொன்னா, 100 மட்டும்தா தருவாரு. அதனால அதச் சொல்ல வேண்டாம். பொதுவாச் சொல்லுவோம். அதிகமா குடுத்தாருனா, 100 ரூபாய் மருமகளுக்கு. மீதி? கம்பேனிக்கு.)
கெடைக்கறத வாங்கிட்டு வரச் சொன்னாங்க.
மாமனார்: நா உனக்கு 50 ரூபா தரேன்.
வேலையாள்: (ஐயையோ!) ஒரு நூறு ரூபாயா குடுங்க.
நிற்க.
திரைக்கதை உத்திகள் அனைத்தும் தெரிந்தவர் திரைக்கதையாசிரியர். தான் கையாளும் genre-வுக்குத் தகுந்த மாதிரி, எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்த வேண்டும், அதைவிட முக்கியமாக, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்தவர் இயக்குனர்.
பாயசத்தில் மிளகாயும் கறிக்குழம்பில் வெல்லமும் சேர்ப்பவர் சமையல்காரரே அல்லர். இயக்குனர் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னார், "நீங்கள் ஒரு நல்ல சமையல்காரரெனில், உங்களால் ஒரு நல்ல இயக்குனராகவும் இருக்க முடியும்."
KB ஒரு நளன்.
Enjoyed reading your writing... I'm writing this comment here as this is your 'most recent' post. The thing which you have written in your profile....that 'moment'....i'm yet to find mine...I really don't know what i'm good at...sometimes i feel hopeless wondering 'enaku edhuvume olunga varadha?' nu...'what am i good at?..' seriously don't know....
ReplyDeleteYour posts are like wafts of fresh air for me, who is like constantly a feet below the water always....will read your posts....thanks for writing....
It is evident through your comments that you are good at writing. I think your 'moment' has already arrived. Just start writing. The journey of thousand miles... Yes! Just take the first step. All the best and thank you for your kind words.
ReplyDelete