சிறுகதை அறிமுகம் - எறாக்கறி புறாக்கறி - பாக்கியம் சங்கர்

09.03.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருக்கும் பாக்கியம் சங்கரின் 'எறாக்கறி புறாக்கறி' என்னும் இந்தக் கதை அனைவராலுமே படிக்கப்பட வேண்டிய கதை என்பேன்.

அந்தக் கதையின் ஒரு சிறு பகுதியைக் கூட நான் இங்கே சொல்லப் போவதில்லை. மாறாக, அந்தக் கதையை ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்கான 6 காரணங்களைப் பட்டியலிட விழைகிறேன்.

1. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது இது. "இந்த உலகம் மிகவும் அபாயகரமானது. அதற்கு காரணம் யார் தெரியுமா? தீமை செய்பவர்கள் அல்லர். தீமை நடப்பதைப் பார்த்தும் அதைத் தட்டிக் கேட்காதவர்கள்தான்". 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்கிப் போகாமல், தீமைக்கு எதிராகத் தன் உரத்த குரலைப் பதிவு செய்யும் ஒரு ஹீரோவைப் பற்றிய கதை இது.

2. இந்தக் கதையில் ஹீரோ அனுபவிக்கும் வலியை, நீர் குடித்து உயிர் வாழும் நம் எல்லோராலுமே மிகச் சுலபமாக உணர முடியும்.

3. 'இதையெல்லாமா வெட்டவெளியில் பேசுவது' என்று பெரும்பான்மையோரால் கருதப்படக் கூடிய கதைக்கரு இந்தக் கதையை உலக இலக்கியமாக்குகிறது.

4. முக்கால்வாசி கதையைப் படிக்கும் வரையிலும், ஹீரோவின் துயரங்களைக் கண்டு சோகம் வடிக்கும் உங்கள் முகம், க்ளைமேக்ஸ் படிக்கும் போது ஆனந்தப் புன்னகையில் திளைக்கும்.

இப்படியொரு க்ளைமேக்ஸ் நிச்சயமாக அற்புதம். மாஸ்டர் ஸ்ட்ரோக். எதார்த்த வாத கதைகள் இந்த மாதிரிதான் முடிக்கப்பட வேண்டும்.

5. பொதுவாக தீமைகளைத் தட்டிக் கேட்காமல் இருப்பதற்கு நாம் சொல்லும் சால்ஜாப்பு என்னவென்றால், "ஊருக்காக பேசப்போயி, நமக்குத்தான் ஆபத்து வந்து சேரும்" என்பதுதான். இதே மாதிரி ஓர் அறிவுரையை, சோபி என்னும் கதாபாத்திரம் சொல்லும் போது, ஹீரோ சொல்லும் பதில், பல பேரின் மனதை மாற்றும். இன்னும் கொஞ்சம் பச்சையாகச் சொல்லவேண்டுமென்றால், கொஞ்சமாவது ரோஷம் வரும்.

6. ஹீரோ என்னும் வார்த்தைக்கு ஆக்ஸ்‌ஃபோர்ட் அகராதி தரும் பொருள் -  a person who is admired by many people for doing something brave or good. இதில் எந்த இடத்திலும் அந்த ஹீரோ ஆணாகத்தான் இருக்க வேண்டும்  என்று சொல்லவில்லை.

இதுவரை இந்தப் பதிவில் 'ஹீரோ' என்ற சொல் வந்தபோதெல்லாம் உங்கள் மனம் ஓர் ஆணைக் கற்பனை செய்திருந்தால், மன்னிக்கவும்! இந்தக் கதையின் ஹீரோ ஒரு பெண்.

இனிமேல் எப்போதெல்லாம் 'ஹீரோ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்போதெல்லாம் அது பெண், ஆண், திருநங்கை, திருநம்பி என அனைவருக்கும் பொதுவான வார்த்தை என்பதை உணர்ந்தே பயன்படுத்துங்கள்.

மீசை முளைப்பது மட்டுமே ஒரு ஹீரோவுக்கான அடையாளம் அல்ல.

இந்த உலகம் பெண்களும் வாழத் தகுதியான இடமாக மாறட்டும். இல்லையெனில் உச்சியில் குட்டி அதனை மாற்றும் வல்லமை 'எறாக்கறி புறாக்கறி' விற்கும் தனம் போன்ற ஹீரோக்களுக்கு உண்டு.

உலகை அழகாக்கும் பெண்கள் யாவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்.

-திருஞான சம்பந்தம்,
சிற்றோடை.
08.03.2022.

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?