தலைப்பில்லாமல் பேசுதல்
ஓர் எழுத்தாளனுக்கு மிகப் பெரிய சாபம், அவன் எழுதுவது யாருக்கும் புரியவில்லை என்பதே.
என்னுடைய அக்காவே என்னிடம் சொல்லியிருக்கிறார், "தம்பி! நீ எழுதறது எதுமே புரிய மாட்டேங்குது" என்று.
அதில் ஒரு சிறு கர்வம் உண்டாகிறதென்றபோதிலும், சுவரைப் பார்த்து உரையாடும் பைத்தியகாரனாய் இருக்க யார்தான் விரும்புவார்கள்?
என் எழுத்தை நானே இரசித்துக் கொள்வது, பைத்தியக்காரனின் சீழ்புண்ணில் தோன்றும் அரிப்புக்குத் தோதான சொறிதல் போன்றதே! அவனுக்கு மட்டுமே அது இன்பம் தரும்.
'என் எழுத்து புரியவில்லை' என்பது என்னுடைய கவலையல்ல. ஆதங்கம்.
ஆனால், நீங்கள் நல்லவர்கள்.
எழுதியதின் அர்த்தம் என்னவென்று ஓர் எழுத்தாளனைப் பார்த்துக் கேட்காதவர்கள் நீங்கள்.
'அது என்ன கருமாந்தரமோ இருந்துட்டு போகட்டும்' என்று நினைத்து நீங்கள் அர்த்தம் கேட்காமல் போனாலும், உங்களுக்குப் புரிந்து போய், ஆனாலும் பிடிக்காமல் போனதால்தான் அதைப் பற்றி என்னிடம் கேட்காமல் போனீர்கள் என்று நம்பி வந்திருக்கிறேன்.
என் எழுத்தைப் பற்றி என்னிடம் ஒருவர் திட்டியாவது பேசவில்லையென்றால், அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது பிடிபடவில்லை என்றே நான் நினைக்க விரும்புகிறேன்.
என் எழுத்து பிடிக்கவில்லையெனில், நான் உம்மையோர் சிந்தனாவாதியாய் கற்பனை செய்து கொள்கிறேன்.
என் எழுத்து பிடிபடவில்லையெனில், என்னை மன்னியுங்கள். அதனால் இழப்பு உங்களுக்கே!
இங்கே, உணர முடியவில்லையெனில், புரிந்து கொள்ளவும் முடியாது.
இப்போதும், என் எழுத்து விளங்கவில்லையெனில், மன்னிக்கவும்!
நான் உங்களைப் போன்ற அறிவாளிகளுக்காய் எழுதவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பிறக்கக் கூடும் என்னைப் போன்றொரு பைத்தியத்துக்காய் எழுதுகிறேன்.
நான் எனக்காக எழுதுகிறேன். புத்தகத்தில் மயிலிறகு வைத்தால், படிப்பு வரும் என்று நம்பும் குழந்தையின் நப்பாசையுடன், என் எழுத்தினால் மானுடம் உய்யக் கூடும் என்று நம்பியே எனது எழுத்தை உம்மிடம் காட்டுகிறேன்.
காதல் கொண்டேன் படத்தில், நா.முத்துக்குமார் எழுதிய ஒரு வரியை உங்களுக்காக சொல்ல விரும்புகிறேன்.
"குறை சொல்லும் மனிதர் எல்லாம் போர்வை போர்த்தித் தூங்குங்கள்!"
ஆம்.
உம்மால், எமக்கொன்றும் ஆகப் போவதில்லை.
Kadhal konden la yendha edathula indha line varudhu?
ReplyDeleteபடத்தின் முதலில் வரும், "18 வயதில்" பாட்டில், 2:27-ல் வரும் வரி அது.
ReplyDeleteAda amam. I listened to it now. Padathula matha yella paatume manapadam, adha idhu yennada pudhusa iruke nu keten.
Delete