சா
Who could have thought such darkness lay concealed
Within thy beams, O sun! or who could find,
Whilst thy fly and leaf and insect stood revealed,
That to such countless orbs thou mad'st us blind!
Why do we then shun death with anxious strife?
If light can thus deceive, wherefore not Life?
From the poem Night and Death by Joseph Blanco White
சா. இந்தத் தமிழ் வார்த்தையை நான் அறிந்து கொண்டபோது, அதன் அழகில் சொக்கிப்போனேன். அதன் பொருள்?
படித்தான் என்ற வினைமுற்றுச் சொல்லின் வினை வடிவம் 'படி'.
சொன்னாள் என்ற வார்த்தைக்கு 'சொல்'.
நடுங்கினாள் என்பதற்கு 'நடுங்கு'.
இசைந்தான் என்பதற்கு 'இசை'.
நிறுத்தினான் என்பதற்கு 'நிறுத்து'.
'செத்தான்' என்ற சொல்லின் வினை வடிவம் என்ன? அந்த வினைச்சொல்தான் 'சா'.
ஒருவரைப் பார்த்து நீங்கள் 'சா' என்று சொன்னால், அவர் பொருள் புரியாமல் விழிக்காமல், செத்துப்போக வேண்டும்.
சாவு. பகைவனைப் போலொரு நண்பன். ஏறத்தாழ அனைவராலும் அஞ்சப்படுகிற, விரும்பத்தகாத ஒன்றாகவே சாவு இருந்து வந்துள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், சாவு ஓர் அழகான, இரசிக்கத்தக்க விஷயம். அப்படியென்ன இருக்கிறது அதில்?
1. ஜென் சொல்கிறது. முதலில் சாவு என்ற ஒன்று இல்லையென்றால், நம்மால் வாழ்வு என்ற ஒன்றையே உணர முடியாது. பிறவியிலிருந்தே கண்பார்வையற்ற ஒருவருக்கு இருட்டு என்றால் என்னவென்றே தெரியாது என்று சொன்னால் என்னைக் கல்லெறிந்து கொல்லமாட்டீர்கள்தானே?ஆம். வெளிச்சம் என்ற ஒன்றை அவர் அறிந்தால் மட்டுமே அவருக்கு இருட்டு என்றால் என்னவென்று பிரித்துப் பார்க்க முடியும். இல்லையென்றால், வாழ்நாள் முழுக்க அவர் வெளிச்சத்தையே பார்க்கவில்லையென்றால், எப்போதுமே இருட்டை அவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், இருட்டென்றால் என்னவென்று அவருக்கு உங்களால் புரியவைக்கவே முடியாது. வெயிலில் அன்றி வேறெங்கே? நிழலின் அருமை.
எனவே நாம் உயிருடன் இருப்பதை நமக்கு உணர்த்துவது மரணமே. உயிருடன் இருப்பதன் மகோன்னதம் உணர்ந்தால் மட்டுமே ஒருவரால் அதனை இரசித்து வாழ முடியும்.
2. பிரபஞ்ச இரகசியத்தை மானுடம் அறிந்துகொள்ள வழிகள் இருப்பின், சர்வநிச்சயமாக, அதில் மரணமும் ஒன்று. நாங்கள் இளங்கலை படிக்கும் போது, எங்கள் நண்பன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டான். நானும் பிரபுவும் மருத்துவமனையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். ஒருவர் இறந்தால், நாம் வழக்கமாகப் பேசுவன இரண்டு.
ஒன்று. "நேத்து கூட பாத்து பேசிட்டுத்தா வந்தனே!" (என் கேள்வி : நேத்து பேசுனா, இன்னைக்கு சாகக் கூடாதா?)
இரண்டு. அருமையான ஆளு பாவம்.
நானும் பிரபுவும் இதையெல்லாம் பேசிவிட்டு, அந்த மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஒரு நிதான நொடியில் அவன் சொன்னான்.
"டேய் ஏன்டா. சொர்க்கம் நரகம் இருக்கான்னு இந்நேரம் ரகுவுக்குத் தெரிஞ்சுருக்கும்ல?"
3. சாவு என்பதொரு பணி ஓய்வு. ஒரு டிபார்ட்மெண்ட் HoD ஓய்வு பெறும்போது, அவரிடம் பாடம் கற்றோர் கூடி அவரை ஒரு கொண்டாட்டத்துடன் வழியனுப்ப வேண்டும். கண்ணீர் சிந்தினால், அது நெகிழ்ச்சியால் சிந்தப்பட வேண்டுமே தவிர, துயரத்தால் அல்ல. மரணமும் கொண்டாடப்பட வேண்டியதே. நானொன்றும் முதல் முறையாக இதைச் சொல்லவில்லை. இறுதி ஊர்வலத்தில், மேளம் கொட்டி ஆட்டம் போடுவது இந்தியக் கலாசாரங்களில் ஒன்றே.
சாவினால் உள்ளே ஒரேயொரு மிகப்பெரிய குறை, பிரிவுதான். அதிலும் சாகிற நபருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடைய உற்றாருக்கே வேதனை. அகாலச் சாவுகள் மட்டுமே, கொடிய வலி தரக்கூடியவை.
4. சாகின்ற கடைசி நிமிடங்களில், அனைவருக்கும், அவர்களின் முழு வாழ்க்கையும் ஒரு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் போல கண்முன்னால் தெரியுமாம். என்ன ஒரு சில்லிட வைக்கும் அனுபவமாக அது இருக்கும்!
5. சில மரணங்கள் சில புரிதல்களைத் தரும். சில சாவுகள் அறிவுக் கண்ணைத் திறக்கும். சில இறப்புகள் உங்களை மாற்றும்.
6. அறிவியலின் படியே கூட, உடல் வேறு உயிர் வேறுதான். உடல்தான் மூப்பெய்துகிறது. இயக்கம் நிறுத்துகிறது. உயிருக்கு தோல் சுருக்கம் கிடையாது. Consciousness எனும் பிரக்ஞை, ஓர் உடலில் சாறுண்ணியாகத்தான் வளர்கிறது என்ற போதும், உடல் இல்லாமல் பிரக்ஞை இருக்க முடியாது என்பதும் நிரூபணமாகவில்லை. பேய் இருக்குன்னு சொல்லல. வாய்ப்பிருக்குனு சொல்றேன்.
7. எங்கேயோ படித்த நினைவு. நீ பிறப்பதற்கு முன்னேயே, உனக்காக உன் தாயின் மார்பில் பால் சுரக்க வைத்த கடவுள்/இயற்கை/பிரபஞ்சம், நீ இறந்த பின்னாலும் உனக்கொரு ஏற்பாடு வைத்திருக்கும். அஞ்சாதே.
8. ஒரே ஒரு நிமிடம் உங்கள் மனக்கண்ணில் பின்வருவோரை நிறுத்துங்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன். இப்போது சொல்லுங்கள். காலன், நல்லவரா கெட்டவரா?
Maranathin meethu piriyam vara vaikkum varthaigal.. arumai Thiru
ReplyDeleteAdhu thaa indha article oda objective brindha. Thanks...
Delete