ஒளிக்கவிதை
நண்பன் ஒருவனின் மூலமே அப்படம் எனக்கு அறிமுகமானது. கொரிய மொழிப் படமான அதன் லிங்க்கை அனுப்பிய அவன் அதற்கான ஆங்கில சப்டைட்டில்ஸும் அனுப்பினான். சப்டைட்டில்ஸ் சரியாகப் பொருந்துகிறதா என்று பரிசோதிக்க படத்தை சிறிது தூரம் ஃபார்வர்டு செய்தேன். சப்டைட்டில்ஸ் வரவில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றேன். வரவில்லை. மேலும் சிறுதூரம், பிரிதும் கொஞ்சதூரம் என்று Random ஆக எந்த இடத்திலிருந்து ஓடவிட்டாலும், சப்டைட்டில் வரவேயில்லை. ஏனென்றால், எந்த இடத்திலும் எவரும் பேசிக்கொள்ளவேயில்லை. இதுதான் Spring, Summer, Fall, Winter... and Spring என்னில் உண்டாக்கிய முதல் இம்ப்ரெஷன். இத்தனைக்கும், அப்படம் மௌனப்படம் கிடையாது. படத்தில் உரையாடல்கள் உண்டுதான். ஆனால், உரையாடல் என்பதற்குப் பின்னால் உள்ள கள் எனும் விகுதியளவுக்கு அவை குறைவானவையே.
ஒரு மலைப்பகுதி. மலைகளுக்கு நட்டநடுவே ஒரு பெரிய நீர்நிலை. அதன் மையத்தில் மிதக்கும் ஒரு மரவீடு. அதில் வசிக்கும் ஒரு ஜென் குருவும் அவரது சீடனும். படத்தின் தொண்ணூற்றைந்து சதவீதக் கதையை நான் சொல்லிவிட்டேனென்றால் நம்பமுடிகிறதா?
நான்கு பருவங்களிலும் அங்கே நடக்கும் நிகழ்வுகளே கதை. மிகப் பொறுமையாய் நகரும் கதையினை, சலிப்பூட்டாமல் நகர்த்துபவை திரைக்கதையும், ஒளிப்பதிவும். படத்தில் குறைந்தபட்சம் ஓர் ஐம்பது ஃப்ரேம்களாவது உங்கள் ரெட்டினாவை விரியவைக்கும்.
சிக்கலான கதையமைப்போ, அதிகம் அறியப்படாத வரலாற்றுப் பின்னணியோ, குழப்புகின்ற காட்சியமைப்போ ஏதுமில்லாத, வெறும் பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு சொல்லப்படும் மிக மிக எளிமையான கதை. எவருக்குமே எளிதில் புரிந்திடும் எளிமையே இப்படத்தில் என்னைக் கவர்ந்தது. சினிமா மீதான மலைப்பையும் மிரட்சியையும் போக்கி, இப்படியும் கூட படமெடுக்கலாம் என்று அறிவுக்கண் திறந்ததிந்தப் படம்.
திரையில் ஒரு கவிதை என்று இப்படத்தைச் சொல்லலாம். எப்படித்தான் ஒரு திரைக்கதை எழுதுவது என்ற குழப்பத்துடனும், அயர்ச்சியுடனும் இருப்போருக்கான உற்சாக டானிக் என்றும் சொல்லலாம்.
குழந்தைகளுக்கும் காட்டப்படக்கூடியதொரு கதையே படத்தின் ஆரம்பத்தில் வருகிறது என்றபோதிலும், படத்தின் பிற்பகுதியில் நிர்வாணமும், கலவியும் காட்டப்படுவதால், இது குழந்தைகள் பார்க்க உகந்ததில்லாமல் போகிறது.
வழக்கமாக தத்துவம் தொடர்பான படங்களை வெகுஜன ரசிகர்கள் வெகுவாக ரசிக்கமாட்டர். ஆனால், நான் யாருக்கெல்லாம் இந்தப் படத்தைப் பரிந்துரைத்தேனோ, அனைவருமே இப்படத்தை மிகவும் விரும்பிப் பார்த்தனர் என்பது இதன் இன்னுமோர் சிறப்பு. யூட்யூபிலேயே இது காணக்கிடைக்கிறது என்பது மற்றுமோர் சிறப்பு.
இப்படத்தின் மூலம் உத்வேகம் பெற்று இயக்குனராகும் கடைசிக் கலைஞன் இருக்கும் வரை கிம் கி டுக் அவர்களுக்கு சாவு கிடையாது.
Spring, Summer, Fall, Winter and Spring
ReplyDeletehttps://youtube.com/shorts/A93gxJVVqDw?si=8qH7D5K2T0jSyV5k
DeleteAbout the director's style
I'd like to suggest a movie which also has seasons in its name.
ReplyDelete"8 vasanthalu"
Available in Tamil dub too. One of the best dialogues in recent times. Every writer must watch.