அத்தியாயம் நான்கு - தகவல் பரிமாற்றம்

சிவகார்த்திகேயனும் வெற்றியும் பெரும்பள்ளம் நோக்கிய, சர்வ நிச்சயமாக (கணிதவியல் தேற்றங்களின்படி ஒரு நேர்கோட்டில் இல்லாமல் போவதுகூடப் பரவாயில்லை) தமிழ்நாட்டுப் பொதுப்பணித்துறை நம்பும் நேர்ழியில் கூட இல்லாத ஒரு பைக் ரைடில் இருந்தார்கள். ரோட் சென்ஸ் மிக்க வெற்றி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். சிவகார்த்திகேயன் பில்லியனில் அமர்ந்திருந்தான், கையில் ஏந்தியதொரு போட்ஸ்டோன் 2000 ப்ளூடூத் ஸ்பீக்கருடன் என்று ஒரு prepositional phrase- ஐப் போடவில்லையென்றால், இந்தச் சொற்றொடரே வீணாகிடும். வெற்றி ஓட்டினால், சிவகார்த்திகேயன் பில்லியன் தானே. ஸ்பீக்கரில் ஒலித்த பாடல் வெற்றிக்கும் கேட்கும்படி, அவனது பின்னங்கழுத்தின் மீது ஸ்பீக்கரை வைத்தான். பாட்டில் கனிந்த வயலின் மீட்டலுக்கேற்ப தலையை ஸ்லோ-மோவில் எல்லாத் திக்கிலும் சுழற்றிக் கொண்டே ரோட்டையும் கவனித்துக்கொண்டிருந்த வெற்றி சுழற்றலை நிறுத்தியவுடன் சிவகார்த்திகேயன் உரக்கக் கேட்டான்.

"டேய் ஏப்பா! நடுநடுவுல எதாச்சும் பேசுனா கீது டிஸ்டர்பிங்கா இருக்குமா உனக்கு?"

"டேய், பேசுடா  *#$%"

இனி அவன் எப்படி உடனடியாகப் பேசுவான்! கதைசொல்லி நான் பேசுகிறேன்.

சிவகார்த்திகேயன் தோளில் மாட்டியிருந்த பையில் இருபத்தைந்து எருக்கிலைகள், (சிவகார்த்திகேயனோ வெற்றியோ பாட்டனி  மாணவர்கள் கிடையாது. அப்படியே கிடையுமென்றாலும், அவர்கள் இருவரும் அவ்வளவு சின்சியர் மாணவர்கள் கிடையவே கிடையாது) தளும்பத் தளும்ப சார்ஜ் செய்யப்பட்ட மூன்று பவர் பேங்க்குகள், பச்சை வாழை இலைகள் மற்றும் பழைய தினத்தந்தி பேப்பர்கள் ஆகியவற்றால் கச்சிதமாக வ்ரேப் செய்யப்பட்ட, இதயம் நல்லெண்ணை விளம்பர ஜோதிகா (இதய ஜோதிகா-வுக்கு நடுவிலே நல்லெண்ணை விளம்பரம் வந்து புகுந்து கொண்டது) போன்ற தாராள மனம் கொண்ட சமையல்காரரால் நெடுக வகுந்த பச்சை மிளகாய்களும், காட்டு மிளகுத்தூளும் போட்டுச் சமைக்கப்பட்ட நாட்டுக்கோழி காட்டுவறுவல் இரண்டு கிலோ, கொளப்பலூர் கடையில் வாங்கிய பலவிதமான நெய்யொழுகும் ரோஸ்ட்டட் மீண் துண்டங்கள் நானூறு ரூபாய்க்கு, மீன் துண்டுகளின் இளஞ்சூடு குறையாமல் கட்டியணைத்துப் பாதுகாக்கும் ஹாட் பாக்ஸ், இரண்டு மினியேச்சர் எல் பி ஜி தீப்பந்தங்கள், நான்கு பெட்டிகள், எழெட்டு ஷீட்டுகள் அனைத்தும் பத்திரமாக இருந்தன. மற்ற என்னென்ன எங்கெங்கே இருக்கின்றன என்பதை இந்தச் சொற்றொடருக்குப் பின்னர் இவர்களை வழிமறித்து நிறுத்தப் போகிற ட்ராஃபிக் கான்ஸ்டேபிளால் கூடக் கண்டுபிடிக்க முடியாது.

வெற்றி அவர் மிக எதிர்பார்த்திருக்கக் கூடிய இடத்தில் வண்டியை நிறுத்தினான். அவர் சாவியை எடுத்துக் கொண்டார். அவர் பாட்டுக்கு நகர்ந்தார்.

"சார்!"
அவர் திரும்பமாட்டார்.
ஏனென்றால், வெற்றி பைக்கிலிருந்து இறங்கினான் என்று நான் எழுதவில்லை.

ஹெட்-கான்ஸ்டபிளாக இருக்க வேண்டும். அவரிடம் சென்று நின்றுகொண்டார்.

"சார்! சாவியக் குடுங்க!"
"இங்க வா!"

அவன் இறங்கிச் சென்றான். அவனுடைய உடுப்பை மேலும் கீழும் பார்த்தார். தள்ளிப்போகாதே பாட்டில் சிம்பு வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி ஸ்டைல், கழுத்தில் சுற்றப்பட்ட நீல மஃப்ளர், பட்டன்கள் போடப்படாத ஒரு அரைக்கை ஷர்ட், உள்ளே வெளிர்நீல நிற காலர் இல்லா டீ-ஷர்ட், டெனிம் ஜீன், ரிபோக் ஸ்னீக்கர்ஸ்.

"எங்க போறீங்க?"
"கடம்பூருக்கு சார்."
"அங்க எதுக்கு?"
"ஃப்ரெண்டு ரூமுக்கு சார். ஸ்டோரி டிஸ்கஷனுக்கு."
"என்ன வேல பாக்கற?"
"டைரக்டர் செல்வராகவன் கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கேன்."
உங்களுடைய உடல்மொழியை மாத்திரம் வைத்தே நீங்கள் சொல்லுவது உண்மையா இல்லையா என்று போலீஸ்காரர்களால் கண்டுடுபிடித்துவிட முடியும். அவர் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவரிடம் ஒரு தேக்கரண்டி அளவு மரியாதை கூடியிருந்தது.
"எவ்ளோ சம்பளம்?" வாங்கற என்று அவர் முடிக்கவில்லை.
"மாசம் முப்பத்தஞ்சாயிரம். பெட்ரோல் அலவன்ஸ். அப்பப்போ சரக்கடிக்க காசு."
'இதுபோக வேற நீ சரக்கடிப்பியா?' என்றது அவரது பார்வை.
உடல்மொழியை வைத்து உண்மையுள் ஒளிந்திருக்கும் பொய்யைக் கண்டுபிடிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக இதற்கும் அவரே ஓர் எடுத்துக்காட்டு கணக்காகிவிட்டார்.

"பேப்பர்ஸ் எல்லா இருக்குதா?"
"இருக்கு சார்."
"எங்க?"
"வண்டில."
அவர் பொறுமையிழக்கிறார்.
"காட்டு!"
அவன் வண்டியை நோக்கிச் சென்றான். அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் வால்யூம் வைத்து ஸ்பீக்கரில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான், சண்டாளன் சிவகார்த்திகேயன். அவனைப் பார்க்காமலேயே வண்டியின் தாள்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றான். அதை நோக்கி வந்த அவர், அனைத்தையும் வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டு பார்த்தவாறே கேட்டார்.
"ஹெல்மெட் போட மாட்டீங்களா?"
அடுத்த வினாடியே நிமிர்ந்து அவனைப் பார்த்தார் அப்போதுதான் உயிர்ப்பிக்கப்பட்டு வைக்கப்பட்ட சிகரெட் விரல்களின் பிடியேதுமின்றி உதட்டில் புகைய.
"எடுத்து வெச்சோம் சார், மறந்துட்டோம்."
"அங்க பாட்டு கேட்டு இருக்கறவரு யாரு? ஃப்ரெண்டா?'
"இல்ல சார்."
"அளவா மட்டுந்தா பேசுவியா?"
"ப்ரோ சார்."
"(எழுத்தில் கச்சிதமாக நிர்ணயித்துவிடமுடியாத ஒரு கொங்குத் தமிழ் வினவல் உயிரெழுத்து)"
"தம்பி சார்."
அவனைப் பார்த்தார். ஆள்காட்டி விரலை கொக்கி போல் செய்து அவனை வருமாறு அழைத்தார்.
"இங்க வா."
அவன் சாவதானமாக ஸ்பீக்கரை ஆஃப் செய்து வைத்துவிட்டு, எவருக்கும் எரிச்சலூட்டும் பொறுமையுடன் நடந்து வந்தான்.
"பாட்டு கேக்கலனா, செத்துருவியா?"
"இல்ல சார்."
"பேக்குல என்ன?"
"புக்ஸ்."
"கலுட்டி குடு."
செய்தான்.
அவருக்கு அருகிலிருந்த ஒரு இளைஞன் அந்தப் பையை சோதனையிடத் தொடங்...
"சார்."
திரும்பினார்.
"சரக்கு வெச்சிருக்காங்க."
அவர் வெற்றியை நோக்கித் திரும்புவதற்குள் அவன் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.
"எல்லா பாட்டிலுமே ஓப்பன் பண்ணியிருக்கு. டிஸ்கஷனப்போ சாப்புடத்தான் சார்."

சில மரபுச் சொற்களை நன்கு கையாளத் தெரிந்த திரைக்கதை ஆசிரியன் அவன். ஆனால், அவரது பார்வை சிவகார்த்திகேயனின் பக்கம் நிலைத்தது. தொடர்ந்து அவனையே முறைத்தார்.
"சார், அப்போ அவன் வெச்சுருக்கற பேக்குல இருக்கறது புக்ஸா இருக்கும். நா அதுதா சரக்குனு நெனச்சுட்டேன்."

அவர் திரும்பி வெற்றியிடம் சாவியைத் தந்தார்.

#####################

பௌர்ணமி நிலவின் ஒளியியல் பிம்பம் பெரும்பள்ள நீர்த் தேக்கத்தில் ட்ரெட்மில் நடை போட்டுக் கொண்டிருந்தது. அணையின் ஓரமிருந்த மரங்களனைத்திலும் மின்மினிப் பூச்சிகள் வர்ணஜாலம் காட்டின.
அவற்றை நீர்த்தேக்கம் பிரதிபலித்தது. அவ்வப்போது கொண்டையூசி வளைவுகளில் சென்ற வண்டிகளின் முகப்பு விளக்கு மஞ்சள், நகரும் அகல் விளக்குகளைப் போன்றத் தோன்றியது. அவற்றையும் நீர்த்தேக்கம் பிரதிபலித்தது. தவளைகளின் விளங்கவியலாக் கவிதைகள் அமானுஷ்ய நிசப்தத்தை மேலும் அமானுஷ்யமாக்கியது. அணைக்கட்டின் நட்டநடுவில் படுத்திருந்தனர், சிவகார்த்திகேயன், வெற்றி மற்றும் பலர். அவர்களுடன் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டாலும், சொற்றொடரைப் பகிர்ந்துகொள்ளாத அளவுக்கு சற்றே தள்ளிப்படுத்திருந்தன, மூன்று நாய்கள். ஓர் அம்மா நாய் மற்றும் இரண்டு குட்டிகள். எப்போதும் அந்த அணைக்கட்டிலேயே இருக்கக்கூடிய ஆதிகுடிகள். அங்கே கூடும் ஆட்களின் தயவால் மிக்சர், முறுக்கு, ரஸ்க் (exclusive), கேக், ஜிலேபி, சிக்கன், மீன் இன்னபிற அனைத்தும் கிடைக்கும். சிவகார்த்திகேயன் அவைகளுக்கு ஒரு செல்லப்பெயர் வைத்திருந்தான். Reservoir Dogs!
சிவகார்த்திகேயனுக்கு இடதுபுறமாகப் படுத்திருந்த தாத்தா ரேடியோவில் பாட்டு போட்டிருந்தபடியால், ஸ்பீக்கருக்கும் ஹெட்ஃபோனுக்கும் ஓய்வு கொடுத்திருந்தான். ஆடி அடங்கும் வாழ்க்கை காற்றில் கரைந்துகொண்டிருந்தது. வெற்றிக்கு வலதுபுறமாகப் படுத்திருந்த தாத்தா மெள்ளத்தான் என்றாலும் ரேடியோ தாத்தாவிடம் இரைந்தார்.
"மாரப்பா! அந்தப் பொட்டிய நிறுத்து!"
"தூங்குலாங்குறீங்களா?"
"அஆ!"
நீர்க்குமிழி உடைந்தது. சிவகார்த்திகேயன் ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டான். விங்க் ம்யூஸிக்கில் டௌன்லோடு செய்து வைத்திருந்த பாடல்களை ஒலிக்கவிட்டான் shuffle on செய்து. எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. அவன் ஏற்கனவே பலநூறுமுறை கேட்ட பாடல்களில் கூட புதிது புதிதான சப்தங்களைக் கேட்டான்; எதிர்பாரா இடங்களில் தபேலாவைக் கேட்டான்; ஷக்கலக்க பேபி பாட்டின் கடைசியில், 'அதையுமொர் சமீபம்' என்ற Mondygreen திரிபிற்குப் பதிலாக 'ஹோகிமா ஸோயிதா' என்று கேட்டது, Jo bhi mein பாடலின் 1:02 வது வினாடியில் வரும் கிடார் மீட்டல் பின்னங்கழுத்தை வயலின் கம்பி கொண்டு மீட்டியது போலிருந்தது, Windows Media Player-ல் பாட்டு கேட்கும்போது, Visualization என்பதில் Random என்பதைத் தேர்ந்தெடுத்தால் மானிட்டரில் என்னவிதமான ஜாலங்கள் நடக்குமோ, அது சிவகார்த்திகேயனின் மூடிய கண்களுக்கு முன்னே தெரிந்தது. அவற்றையெல்லாம் திளைக்கத் திளைக்கப் பருகியபடியே உறங்கிப்போனான். அங்கிருந்த நாய்களில் ஒன்று குரைத்ததாலோ என்னவோ, அவன் விருட்டென விழித்தான். தூக்கம் கலைந்தாலும் இமைகளை மூடியபடியே படுத்திருந்தான். காதுகளுக்குள் காற்றுப்புகா வண்ணம் கச்சிதமாகப் பொருத்தப் பட்டிருந்த ஹெட்ஃபோனில் இருந்து கனிந்தது, சாமி பாட்டா இல்லை ஒரு தாலாட்டா என்று மயக்கம் ஏற்படுத்தியதொரு தேன் கீதம். அது தமிழ்ப் பாட்டல்ல. ஆனாலும், தமிழ் வெர்ஷன் ஒன்று இருக்கிறதுதான். உன்மத்தம் கொண்டது மாதிரி அடித்தாலும், மெதுவான வேகத்தில் அடிக்கப்பட்ட பெர்கஷன் வாத்தியத்தின் பின்னணியில் ஒலித்த பம்பையின் ஓலம் இன்பத்தின் எல்லைக்குக் கொண்டு சென்றது. அந்தப் பாட்டு, க்வாஜா மேரே க்வாஜா. பாட்டின் தொடக்கத்தில் ஒலித்த கிட்டாரின் ரிதத்தைக் கேட்டபோது, ஒவ்வொரு படிக்கட்டாக இறைவன் இறங்கிவரும் தாளத்தில் இருந்ததாகத் தோன்றியது அவனுக்கு. நாய்களுடன் படுத்திருந்த அவனுக்கு அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்து தன் மடிமீது அவனது முகத்தை எடுத்து வைத்துக் கொண்ட__ கடவுள். தன் இளஞ்சூட்டு உள்ளங்கை கொண்டு அவனது வெயிலில் காய்ந்த கேசத்தை வருடிவிட்ட__. சிவகார்த்திகேயனின் மூடிய இமைகள் சுரந்த நீர்த்துளி அவனது பொய்க்கன்னத்தில் ஒரு நேர்கோட்டுக் குறுகுறுப்பைத் தூண்டிய வண்ணம் மிகப் பொறுமையாக இறங்கியது. இந்த அண்ட சராசரத்தை அனைத்தையுமே வென்று தன் பாதத்தின் கீழ் கொண்டுவந்துவிடும் தன்னம்பிக்கை அவனுக்குள் துளிர்த்தது. எண்களால் வரையறுக்கப் படும் கவலைகள் பறந்தோடின, உறவுகள் குறித்த குழப்பங்கள் நீங்கி சுனைநீர்த் தெளிவு கிட்டியது, தன் மனசாட்சி தன்னைப் பற்றி எப்போதுமே வாசித்து வந்த நற்சாட்சிப் பத்திரத்தை கிறித்துவம் பரிந்துரைக்கும் கேள்வி வினவா விசுவாசத்துடன் நம்பினான். அது உண்மையென்று அறிந்து தெளிந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இனி தான் வாழப்போகும் ஒவ்வொரு க்ஷணத்தையும் மிக மிக உயிர்ப்புடனும் விழிப்புணர்வுடனும், ஒரு குழந்தையின் விரிந்த விழிகளோடு, அனுபவித்து, இரசித்து, உருசித்து, தேவாதி தேவர்களுக்கு எப்போதுமே இருப்பதாக நம்பப்படும் தி சப்ஸ்டான்ஷல் இன்பத்துடன் வாழப்போவது அவன் கண்முன்னே காட்சிகளாக விரிந்தது. சுருங்கச் சொன்னால், அவனிடமிருந்த அணுவின் உட்கருவளவு துன்பமும் புயலில் அழுபவனின் கண்ணீர் போலச் சிதறி இல்லாமல் போனது. காரணமேயில்லாக் களிப்பையும் ஃபிஸிக்கல் தூண்டுகோலே இல்லாப் போதையையும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுத்த__ கடவுள். அவனது ஒவ்வொரு செல்லையும், டி என் ஏவையும், க்ரோமோசோமையும், அமினோ அமிலத் துளிகளையும் என்றும் திளைத்திடாப் பேரின்பம் கொண்டு மூச்சுமுட்ட முட்ட மூழ்கடித்தது, இசை வடிவில் அவனது செவிவழி இருதயம் ஊடுருவிய இருள்நீக்கும் அன்பின் பேரொளி. தனது தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் முழுக்க முழுக்க நிறைவேறிய பின்னர்தான் அந்தத் தகவலையே பரிமாறத் தொடங்கிய__ கடவுள். சிவகார்த்திகேயனின் காதுகளில் பாடலின் பின்னணியில் லிட்டரலாகக் கேட்டது கடவுளின் குரல். அது கதைக்கத் தொடங்கியது.

நீஇ!
ஆம்! நீயேஎ தான்!!

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பயண அனுபவத்தைச் சரியாக சொல்லி உள்ளீர்கள். கொளப்பலூர் கல்லு மீன் ஒருநாள் சாப்பிடனும் ஆசை.

    குட்டி குட்டித் தகவல்கள் அங்கங்கே சொல்லி உள்ளீர்கள். மொழிநடையில் மட்டும் சற்று கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. The way you discribe the things is always great. It made me to feel like I'm also traveling along with vetri. Awesome sir.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?