மழலை

ஜெயக்குமாருக்கு சென்னை நகரைப் பிடிக்கவேயில்லை.
சலூன் காரரிடம் நட்பாயிருக்க வாய்ப்பளிக்காத சென்னை; நள்ளிரவு வரைக்கும் தெருமுக்கில் நின்று நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்த அனுமதிக்காத சென்னை; மயில்கள் உலவாத சென்னை; வீட்டில் தேங்காய்ச் சோறு கிளறிவிட்டால், நைஸாக நழுவிச் சென்று கத்தரிக்காய் கூட்டும், கொள்ளு ரசமும் போட்டுச் சாப்பிட்டுக் கொள்ள பெரியப்பன் வீடோ மாமன் வீடோ இல்லாத சென்னை; இட்லியைப் பார்த்து உவகை கொள்ளாத சென்னை; ஆங்கிலத்தில் உரையாடிய சென்னை; பேருந்தில் 'அக்கவுண்ட்' வைக்க முடியாத சென்னை; மார்த்துணி விலகினால் கலவரப் படாத சென்னை மீது ஜெயக்குமார் வெறுப்பைக் கொண்டிருந்தான்.
அது ஒன்றும் அவனைக் கவலையில் ஆழ்த்தியிருக்காது, அவன் மட்டும் அந்த சாட்ஸாத் சென்னையில் பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்படாமலிருந்திருந்தால்.
-------------------------------------------------------------------
4:30 மணி அலாரம் கத்தியபோதுதான், குளிருக்கு இதமாக போர்வையை இழுத்துப் போர்த்தியிருந்தான். அன்றைய அவனது நிகழ்ச்சி நிரல் கண் முன்னே தோன்றியது. அனைத்து மாணவர்களும் எழுந்து குளிக்கச் சென்றுவிட்டார்களா என்று பார்க்க வேண்டும்; ஓரிருவர் பின்தங்கியிருந்தால், புட்டத்தைப் பிடித்துத் தள்ள வேண்டும்; ஸ்டடி ஆர் ட்யூட்டி பார்க்க வேண்டும்; ப்ரேக்ஃபாஸ்ட் நடத்த வேண்டும்; ப்ரேயருக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; அனைத்திலும் முக்கியமாக க்ரிஷ்வந்தின் பெற்றோரைச் சந்திக்க வேண்டும். கோபத்தின் காரணமாக யாரிடமேனும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டால், வழக்கமாய் ஏற்படும் குற்றவுணர்ச்சி க்ரிஷ்வந்த் விஷயத்தில் அவனுக்கு ஏற்படவேயில்லை. ஏற்படாது என்று அவனுக்கும் தெரியும். மீண்டும் மூடிக்கொள்ள ஆயத்தமான வெட்கங்கெட்ட இமைகளின் மீது ஏற்பட்ட சினத்தின் காரணமாக, சராலென போர்வையை விசிறி எறிந்துவிட்டு எழுந்தான்.

ஜெயக்குமார் அப்படியொன்றும் இயல்பிலேயே கோபக்காரன் அல்லன். இருப்பினும் அந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாத காலத்தில், பற்பல காரணங்கள் அவனது மன அமைதியைக் கெடுத்திருந்தன. வாரத்தில் 4 நாள்கள் அவன் ஸ்டடி ஆர் ட்யூட்டி பார்க்க வேண்டும் எனவும், மீதியிருந்த சீனியர் டீச்சர்ஸ் இருவரும் ஆளுக்கு 2 நாள் ட்யூட்டி பார்ப்பார்கள் எனவும் அவனுக்குச் சொல்லப்பட்டது; மாணவர்கள் எத்தனை குறும்பு செய்தாலும் கடுஞ்சொல் சொல்லவோ அடிக்கவோ கூடாதென அறிவுறுத்தப் பட்டிருந்தான்; அவனை விட அதிகத் திறமையோ, படிப்போ இல்லாத பள்ளித் தாளாளர் அறையின் முன்னே இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தான்; தானாகவே உடையணிந்து கொள்ளும் வயது கூட வராத பாலகர்கள் எல்லாம் விதவிதமான சொகுசு கார்களிலிருந்து இறக்கிவிடப்பட்டார்கள்; வாட்ச்மேனிடம் பேசும்போது அவர் தனது சொந்த மாநிலத்துக்குச் சென்று ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்று அறிந்து கொண்டிருந்தான். அனைத்து நிகழ்வுகளுமே அவனுக்கு கோபத்தை உண்டாக்கினாலும், அதற்கு உரித்தானவர் யாரெனத் தெரியாததால், ஒருவித எரிச்சலுடனேயே வலம் வந்து கொண்டிருந்தான்.
-------------------------------------------------------------------
முன்தினம் மாலை.
வகுப்புகளை முடித்துவிட்டு விடுதியை நெருங்கியபோது மணி 6-ஐத் தாண்டியிருந்தது. அந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் ஒரு சிறிய இடைவெளி இருந்தது. அதனைச் சூழ்ந்த வண்ணமே அறைகளும் வராண்டாவும் கட்டப்பட்டிருந்தன. அந்த இடைவெளிப் பகுதியில் சில மாணவர்கள் க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இல்லையில்லை. அவர்களின் ஆட்டம் ஏனோ தடைப்பட்டிருக்க வேண்டும். அங்கே ஏதோ சலசலப்பு கேட்டது. விடுதியின் பணியாளர் முருகேசன் அந்த மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

"தம்பி, இங்க வெளயாடக் கூடாதுனு சொன்னேன்-ல?"
யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. பந்து வீச நின்று கொண்டிருந்த ஆதி மட்டும் தயங்கி நின்றான். இதற்குள்ளாக ஜெயக்குமார் அந்த இடத்தை அடைந்திருந்தான். பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த க்ரிஷ்வந்த் கத்தினான்.
"ஹே, பெளல் டா!"
"தம்பி சொல்றேன்ல. நீங்க பாட்டுக்கு வெளயாடிட்டே இருக்கீங்க?"
"ட்ரை டேக் மை விக்கெட்"
முருகேசனுக்கு அவன் பேசியது மட்டுமல்ல, அவன் தன்னிடம் பேசவில்லையென்பதும் விளங்கவில்லை. தன்னிடம் ஏதோ சமாதானம் பேசுகிறான் என அவர் எண்ணியிருக்க வேண்டும்.
"தம்பி, பல்பு, கண்ணாடி ஜன்னல் எல்லாம் இருக்கு. பந்து பட்டா ஒடஞ்சுரும்."
அவரைத் திரும்பிப் பார்க்காமல், பேட்டை தரையில் ஊன்றிக்கொண்டே சொன்னான்.
"ஐ கேன் பே ஃபார் தட்!"

அடுத்த வினாடி ஜெயக்குமார் அவனுக்கு முன்னால் நின்றான். வராண்டாவில் கிடந்த ஒரு ஸ்டீல் ஸ்கேலை எடுத்தான். க்ரிஷ்வந்த் அவனை நிமிர்ந்து பார்த்து என்ன நடக்கப்போகிறது என்று சுதாரிப்பதற்குள்ளாக ஜெயக்குமார் அவனை மூர்க்கமாக அடிக்கத் தொடங்கினான். வயதில் மட்டுமல்ல உருவத்திலும் தன் தந்தையை ஒத்திருந்த முருகேசன் துச்சமாக மதிக்கப்பட்டதாலா, 'ஒரு சிறுவனிடம் இத்தனை பணத்திமிரா' என்ற ஆற்றாமை கலந்த கோபத்தினாலா அல்லது பொதுவாகவே வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்த மனிதர்கள் மீது அவனுக்கு இருந்த காழ்ப்பினாலா என்று தெரியவில்லை - சத்தம் கேட்டு சீனியர் டீச்சர்ஸ் இருவரும் ஓடிவந்த போது, க்ரிஷ்வந்தின் ஆடுசதைகளில் குருதி கந்திப் போய் நின்றது. பல இடங்களில் ஜெயக்குமாரின் கோபம் வரிவரியாக எழுதப்பட்டிருந்தது. அழுததன் காரணமாக அவனது கண்கள் சிவந்து போயும், நீர் தேங்கியும் காணப்பட்டன.

துரை சார் என்று அழைக்கப்பட்ட பி.இ.டி ஓடி வந்தார். ஏறத்தாழ கசக்கி எறியப்பட்ட ஒரு தாளைப் போல இருந்தான் க்ரிஷ்வந்த். அடுத்த நாள் நடக்கப்போகும் விசாரணை பற்றிய எண்ணம் அவருக்கு எரிச்சலூட்டியது.

"என்ன சார் செஞ்சான்? என்னக் கூப்புட்டு இருக்க வேண்டியது தானே!"

ஜெயக்குமார் பதில் ஏதும் பேசவில்லை. ஸ்கேலை தூக்கிப் போட்டுவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான்.
-------------------------------------------------------------------
தாளாளர் அறைக்குள் ஜெயக்குமார் நுழைந்தபோது, அங்கே தாளாளரின் இருக்கை காலியாக இருந்தது. மேசைக்கு மறுபுறம் இருந்த நாற்காலிகளில் க்ரிஷ்வந்தின் பெற்றோர் அமர்ந்திருந்தார்கள். தாளாளரின் இருக்கையை ஒட்டிய வண்ணம் போடப்பட்டிருந்த நாற்காலியில் பள்ளி முதல்வர் மரகதம் அமர்ந்திருந்தார். அவர்கள் மூவரும் அமர்ந்திருந்த தோரணையிலிருந்து அவர்கள் அதுவரையிலும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை என்பது அவனுக்குப் புலனானது. சுயமாக முடிவுகள் எடுக்க அனுமதிக்கப்படாமல் எதற்காக ஒரு முதல்வர் என நினைத்து எரிச்சலடைந்தான். அவன் நுழைந்த அரவம் கேட்டு க்ரிஷ்வந்தின் அம்மா நிமிர்ந்து பார்த்தார். அவன் தலையை வேறு புறமாகத் திருப்பிக் கொள்ளாதது அவனுக்கே ஆச்சர்யத்தை அளித்தது. அவனது அப்பா இவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. இருவருமே இளவயது பெற்றோர்களாகத் தெரிந்தார்கள்.

உண்மையில் அங்கே நடக்கப்போவது விசாரணை அல்ல - மாறாக ஒரு திட்டித் தீர்க்கும் படலமே என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அங்கே அவனது வேலை விளக்கம் சொல்வதோ, கேள்வி கேட்பதோ அல்ல என்பதும் திண்ணம். உட்காரவைக்கப் படுவானா என்பதே சந்தேகம். ஆனால், அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு திரும்பிச் செல்ல அவன் தயாராக இல்லை.

"நீங்கதா க்ரிஷ்வந்த் பேரண்ட்ஸ் ஆ?"

முதல்வர் அம்மா துணுக்குற்றார். இந்த விசாரணையில் மிஸ்டர். ஜெயக்குமார் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும். ஆனால் அவரோ நீதிபதியின் சுத்தியலை அபகரிக்கப் பார்க்கிறார்.

ஆனால் பெற்றோர் அப்படி எண்ணவில்லை.

"எஸ் சார்!" என்றனர் இருவரும்.

"பையன இப்படித்தா வளத்துவீங்களா? செவன்த் ஸ்டேண்டர்ட் தான் படிக்கறான். அதுக்குள்ளயே ஒரு தப்பு செஞ்சா அத காசு குடுத்து சரி பண்ணிடலாம்னு நெனைக்கறான். ஒரு சின்னப் பையனால அப்படி யோசிக்க முடியுமா? எல்லாம் உங்க கிட்ட இருந்து வந்தது."

அவர்கள் இருவரும் அமைதி காத்தது முதல்வரை வியப்பிலாழ்த்தியது. ஜெயக்குமாருக்கோ அவர்கள் மீது துளி பச்சாதாபமும் மரியாதையும் ஏற்பட்டது.

"பிடிவாதம் புடிக்க அனுமதிக்காதீங்க. ஏதாச்சும் வாங்கித் தரலீனா சாப்புட மாட்டேன்னு சொன்னா, சாப்புட வேண்டாம்னு சொல்லுங்க. எதுவும் ஈஸியா கெடைச்சுடும்னு நம்ப வைக்காதீங்க. ஹாஸ்டலுக்குள்ள வெளையாடாத, எதாச்சும் ஒடஞ்சுடும்னு சொன்னா, "ஐ கேன் பே ஃபார் தட்" -னு சொல்றான். இந்த ஏட்டிட்யூட் வளர விடாதீங்க."

சொல்லிவிட்டு முதல்வரின் அனுமதிக்காகவோ, தாளாளரின் வருகைக்காகவோ காத்திருக்காமல் வெளியேறிவிட்டான். முதல்வர் கைகளைப் பிசைந்துகொண்டே தர்மசங்கடப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.
-------------------------------------------------------------------
அந்த நிகழ்வுக்குப் பிறகு, ஜெயக்குமார் வந்தால், மாணவர்களின் கூச்சல் குறையத் தொடங்கியது; வாரத்தில் ஏழு நாள்களும் அவனுக்கு ஸ்டடி ஆர் ட்யூட்டி போடப் பட்டது; மாணவர்கள் மத்தியில் அவனுக்கொரு பட்டப்பெயர் இடப்பட்டது; க்ரிஷ்வந்த் விடுதியின் உள்ளே விளையாடுவதை நிறுத்தினான்.
-------------------------------------------------------------------
இரண்டொரு வாரங்கள் கழித்து, ஒருநாள் மாலை வகுப்புகள் முடிந்து ஜெயக்குமார் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த இடத்தைக் கடந்து சென்றான். பெண்களும் ஆண்களும் கட்டிட வேலையில் ஈடுபட்டிருக்க, சில சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஏறத்தாழ பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், சிறுகுன்று போல குவித்து வைக்கப்பட்டிருந்த மணலின் மீது ஏறி, சறுக்கி வந்தான். எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணின் குரல் அவனை எச்சரித்தது.

"அடக் கண்டாலி பய்யனே! எறங்குடா கீழ. மண்ணெல்லா சரிஞ்சுதுனா கொன்னே போடுவ."

அந்த so-called பையன் கீழே இறங்கினான். கால்சட்டையை இளக்கிவிட்டு மணலின் மீது சிறுநீர் கழித்தான். நுரைத்துக் கொண்டும், சுழித்துக் கொண்டும் ஓடாமல், மணலின் மீது விழுந்த மறுவினாடியே சிறுநீர் மறைந்து போனது அவனுக்கு அளவிலா வியப்பையும் களிப்பையும் அளித்திருக்க வேண்டும். தன்னுடைய அம்மா நெருங்கி வருவது தெரிந்தும் அதே நிலையில் அங்கேயே இருந்தான். அடுத்த நொடி அகப்பட்டு விடுவோம் என்று உணர்ந்த போது, அவள் மீதும் தெறிக்கும்படி கால்சட்டையை மாட்டிக்கொண்டு, கண நேரத்தில் அவளை விலகிப் பறந்தான். சிறிது தூரம் ஓடி, 'இனி அகப்படமாட்டோம்' என்ற நம்பிக்கை வந்தபிறகு அவளைத் திரும்பிப் பார்த்து 'கொக்கானி' காட்டிவிட்டு மீண்டும் ஓடி மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜெயக்குமாருக்கு அச்சிறுவன் மீது கோபம் பொங்கவில்லை.
-------------------------------------------------------------------

Comments

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?