யாராலும் வாங்கப்படாத புத்தகத்தின் சில பக்கங்கள்

***முன்குறிப்பு : இந்தத் தலைப்பில் நான் அவ்வப்போது  எழுதி, சரியாகச் சேகரம் செய்யாமல் விட்டு, துண்டுக் காகிதங்களில் தொலைத்து பின்னர் ஷேவிங் ரேஸரையோ, பேங்க் பாஸ் புக்கையோ தேடும்போது கண்டெடுத்த படைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். இவை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. தங்களது அன்பினை தங்கள் கருத்துகள் மூலம் வெளிப்படுத்த வேண்டுகிறேன்.**

ஆகஸ்ட்  2015, சென்னை

திடீரென ஒரு யோசனை தோன்றியது. முத்தமிடும் நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டும் இன்பம் தரும். (என் சிற்றறிவுக்கு எட்டியவரை. அசகாயசூரர்கள் விதிவிலக்கு.) ஆனால் அதற்கு முந்தைய நாளே அந்தச் செய்தி நமக்குத் தெரிந்துவிடின், 'நாளை நாம் முத்தமிடப் போகிறோம்' என்ற எண்ணமே நமது அடுத்த இருபத்தி நான்கு மணி சொச்ச நேரத்தையும் இன்பமயமானதாக மாற்றிவிடுமல்லவா? இங்கே நான் ஒரு எடுத்துக்காட்டாக முத்தத்தைப் பற்றிச் சொன்னேன். இரண்டு நாள் விடுமுறையின் எண்ணம் தோன்றும் வெள்ளிக்கிழமை மாலை; நைட்ஷோ பார்க்கப் போகும்போது கடக்கும் தூரம்; ஒரு வாரம் பட்டினி கிடந்தபின், நாளை பணம் வந்துவிடும் என்ற செய்தி வந்துசேரும் நாள்; காதலி/காதலன் நமது காதலை ஏற்றுக்கொள்ளும் போது, வாழ்நாள் முழுதும் அவர்களுடன் வாழப் போகிறோம் என்று தோன்றுகிற எண்ணம் என பல்வேறு எண்ணங்களே நமக்கு இன்பம் தருகின்றன. உண்மையில், பெரும்பாலான சமயங்களில் 'இது நடக்கப் போகிறது' என்கிற எண்ணமே இன்பத்துக்குக் காரணமாகிறது. ஒருவருக்குப் புதையல் கிடைத்தால், ஏன் அது கிடைத்த அந்த நாளன்று மகிழ்கிறார்? அந்த நாளன்று அவர் அதைப் பயன்படுத்தவில்லையென்றாலும்,அவர் ஏன் மகிழ்ச்சியில் திளைக்கிறார்? அன்று அவருக்கு புதையல் கிடைக்காமல் போயிருந்தால் அவர் வாழ்க்கையில் என்ன நடந்திருக்குமோ, அதுவேதான் புதையல் கிடைத்தபோதும் நிகழ்கிறது. புதையல் அவரிடம் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை, அவருடைய எண்ணத்திலன்றி. அவரது எண்ணம் என்ன? 'இனிமேல் நாம் உழைக்கவே தேவையில்லை, உட்கார்ந்துகொண்டே சாப்பிடலாம்' என அவர் நினைக்கிறார். அதாவது, எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்த்து மகிழ்கிறார். நான் சொன்ன அனைத்து உதாரணங்களிலும் - முத்தம், விடுமுறை, நைட்ஷோ, சாப்பாடு, புதையல் போன்ற விஷயங்களில் ஒன்றில் கூட எதிர்காலத்தில் இதுதான் நிச்சயம் நடக்குமென்று நம்மால் அறுதியிட்டுக் கூறிடமுடியாது. அடுத்த நொடி என்ன நிகழும் என்பது நமது கட்டுப்பாட்டிலில்லை. (ஹலோ சார், போலீஸ் ஸ்டேஷனா? என் பக்கத்து வீட்டுக் காரருக்கு நெலத்துல தங்கம் கெடச்சுருக்கு சார். அட்ரஸ் நோட் பண்ணிக்கறீங்களா?) ஆனால், எந்த அடிப்படையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்? ஏதோ ஒரு செயல் நடக்கிறது. அதன் விளைவாக இவ்வாறு நடக்கும் என நாம் கற்பனை செய்துகொண்டு மகிழ்கிறோம்.

எனக்குத் திடீரென தோன்றிய யோசனை என்னவென்றால், நாம் கற்பனை செய்து மகிழ்ந்திட அந்த 'ஏதாவதொரு செயல்' நடந்திடத்தான் வேண்டுமா? நாமே கற்பனை செய்துகொள்ள முடியாதா? பலர் இதனை பகல் கனவு எனக் கூறலாம். ஆனால் எனக்கு இது ஊக்கமூட்டும் ஒரு விஷயமாகப் படுகிறது.

நான் இப்போது சென்னையில், நண்பனின் அறையில் 'டேரா' போட்டுக்கொண்டு, சினிமாவில் உதவி இயக்குனன் ஆவதற்கு முயன்று கொண்டிருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தவுடனே, இவர்களுக்கெல்லாம் போன் செய்து அதனைத் தெரிவிக்க வேண்டும் என்று என்னிடம் ஒரு மிக நீண்ட பட்டியல் உள்ளது. அது ஒரு மிகவும் சுகந்தரும் அனுபவம். இப்போதுவரை எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காத இந்த நேரத்தில், நான் ஓர் இயக்குனரிடம் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டதாக எண்ணி, யாருக்கெல்லாம் சொல்லவேண்டும் என ஒவ்வொருவரின் பெயராக எழுதிப்பார்க்க முடிவு செய்துள்ளேன். "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே" -வில் பாரதி பின்பற்றிய அதே உத்தி.

இவர்களிடமெல்லாம் நாம் பேசப்போகிறோம் என்ற எண்ணமே இப்போது எனக்கு எனது இலக்கை அடைந்திட உற்சாகமளிக்கிறது.

நான் வாழ்வில் இரசித்தவர்கள், என் முன்னேற்றத்தில் இன்பம் காண்கிறவர்கள், என்னை உத்வேகம் கொள்ளச் செய்தவர்கள், எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என அனைவரையும் உள்ளடக்கியதே இப்பட்டியல். இவர்களில் ஒருவரையும் நான் ஒருபோதும் மறக்கத் தலைப்பட மாட்டேன். இதே வரிசையில்தான் இவை படிக்கப்பட வேண்டும் என்று நினைத்து நான் எழுதவில்லை. இதில் வெவ்வேறு அத்தியாயங்களுக்கிடையே ஒரு sequence கிடையாது. சில பள்ளிகளில் எப்படி பதினோறாம் வகுப்பின் தொடர்ச்சியாக பன்னிரண்டாம் வகுப்பு இருப்பதில்லையோ, அதுபோலவே இவற்றினிடையே நிகழ்வின் தொடர்ச்சி ஏதும் இல்லை.

தி னே ஷ்
எனது உறவினன். என்னுடைய அத்தை மகளின் மகன். என்னைவிட ஆறு மாதங்கள் மூத்தவன். உறவினன் என்பதைத் தாண்டி, அவன் எப்போதும் எனக்கு நண்பனாகவே இருந்திருக்கிறான். ஒவ்வொருவரின் நினைவிலும் பசுமையாய் இருப்பது அவர்களது பால்யமே. என்னுடைய பால்யகால நினைவுகளை இவனை நீக்கிவிட்டு எழுத முடியாது. தினேஷின் வீடு இருந்தது சென்னிமலைக்கு அருகேயுள்ள வாய்ப்பாடியில். (இப்போதும் அங்குதான்). ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் இருப்புப் பாதை வாய்ப்பாடி வழியாகச் செல்லும். சிறுவயதிலே, தொடர்வண்டியைப் பார்ப்பதே ஆச்சர்யமளித்த நாட்களில், அரைமணிக்கொருதரம் இரயில் கடந்து சென்றவண்ணம் இருந்த வாய்ப்பாடி எனக்கோர் அதிசயமாய்த் தெரிந்தது. எங்களுடைய வீடு இருப்பது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு (சுருக்கமாக கோபி) அருகே இருக்கும் நாமக்கல் பாளையத்தில். (இதன் சுருக்கம் நாமக்கல் இல்லை). கோடை விடுமுறையில் இருவரும் ஒன்றாக இருப்போம். ஆனால், நான் வாய்ப்பாடிக்குப் போவதோ அவன் நாமக்கல் பாளையம் வருவதோ நடக்காது. இரண்டு பேரும் என் அத்தையின் (அப்பாவின் அக்கா) ஊரான நீலாக்கவுண்டன்பாளையம் சென்றுவிடுவோம். என்னுடைய அத்தை அவனுக்கு அம்மாயி. அவன் அவரை 'அம்மாயி' என்று விளிக்கும் போது, எனக்கு வினோதமாகப் பட்டது. ஏனென்றால், எங்களுடைய ஊர்ப்பக்கம் அம்மாவின் அம்மாவை 'அம்மத்தா' என்றுதான் விளிப்போம். அம்மாவின் அப்பா - அப்புச்சி, அப்பாவின் அம்மா - அப்பத்தா அல்லது ஆயா. அப்பாவின் அப்பா - அப்பாரு. இன்றும் கூட எங்கள் குழந்தைகள் தாத்தா, பாட்டி எனக் கூப்பிடும் அளவிற்கு 'மாடர்ன்' ஆகாதது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய ஊரிலேயே என்னுடைய இரண்டு பெரியப்பாக்களின் வீடுகளிலும் அக்காக்கள் அப்பாவை 'அண்ணா' என்றுதான் அழைப்பார்கள். என்னுடைய பெரியம்மாவின் இயற்பெயரே 'பெரியம்மா ' என்று இருந்ததால், அவரைப் 'பெரிய ஆயா' என்று விளிக்கவேண்டும் என்று என்னைப் பெற்றோர் பணித்திருந்தார்கள் என்பது எனக்கு நினைவு தெரிந்தபோது புரிந்தது.

மார்ச் மாத இறுதியிலேயே, எனக்கும் தினேஷூக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தீவிரமடையும். எனக்குத் தெரிந்து, வானநீல நிறத்தில் இருந்த Inland letter- ல் நான் கடிதம் எழுதியது அவனுக்குத்தான். கடையில் சென்று கேட்கும்போது England letter என்றுதான் கேட்பேன். இங்கிலாந்துக்கும் அந்தக் கடிதத்துக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு மர்மமாக இருந்தது. தேர்வுகள் முடிந்ததும் அப்பா என்னை நீலாக்கவுண்டன்பாளையத்தில் கொண்டு விட்டுவிடுவார். நான் முதலில் சென்று, தினேஷ் வந்துசேர ஓரிரு நாட்கள் தாமதமானால், அவன் எப்போது வருவானென்று ஏங்கியவண்ணம் இருப்பேன். எனக்கு அந்த ஊரிலேயே அவனைத் தவிர வேறு யாரும் நெருக்கமானவர் கிடையாது. ஆனால், அவனுக்கு அப்படியல்ல. அவனுக்கு வாய்ப்பாடி, நீலாக்கவுண்டன்பாளையம் இரண்டுமே சொந்த ஊர்தான்.

அத்தை வீட்டிலேயே இட்லி வியாபாரம் செய்துவந்தார். ஆனால், நன்கு படித்த கிராமத்துக் கனவான்கள் மட்டுமே அதனை 'இட்லி' என்பர். மற்ற அனைவரும் 'புட்டு மாவு' என்றே சொல்வர். அத்தைக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் அன்பரசு மாமா. அவருக்கும் ராசாமணி அக்காவுக்கும் எனக்கு நினைவு தெரியும் முன்னரே திருமணம் முடிந்திருந்தது. இளையவர் செந்தில் மாமா. அவருக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை. இரண்டு பேரும் டிரைவர்களாக இருந்தார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. எங்கே, எந்த வண்டியில் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதைவிட, அதையெல்லாம் தெரிந்துவைத்திருக்க வேண்டுமென்றெல்லாம் எனக்கு அப்போது தோன்றியிருக்கவில்லை. ராசாமணி அக்கா வீட்டிலேயே ஒரு தையல் எந்திரம் வைத்து தைத்துக் கொண்டிருப்பார். பெரிய மாமா (அத்தையின் கணவர்) வீட்டின் முன்பக்கத்தையே ஒரு டீக்கடையாக வைத்திருந்தார். அவருடன் நான் ஒருமுறை கூட பேசியதே இல்லை. அவரும் தினேஷைத் தவிர வீட்டிலிருக்கும் எவருடனும் பேசியதாக எனக்கு ஞாபகமில்லை. எப்போதும் ஒரு காக்கிச் சட்டையும் லுங்கியுமாகத்தான் இருப்பார். அப்போது நான் கண்டு பயந்த இருவர் தினேஷப்பா (தினேஷின் அப்பா) மற்றும் அன்பரசு மாமா. இருவரின் கணீரென்ற குரல்களையும் கேட்டாலே எனக்கு பயமாக இருக்கும்.

தினேஷைத் தவிர மற்ற யாருடனும் பேச எனக்கு மிகுந்த கூச்சமாக இருக்கும். அதனாலேயே என்னை 'நல்ல அமைதியான பையன்' என அனைவரும் நம்பினர். எனக்கு நேர்மாறாக, தினேஷ் அத்தனை வால்தனங்களுடனும் இருப்பான். தாயக்கரம் ஆடும்போது ஏமாற்றுவான். என்ன காம்பினேஷனில் காய் விழுந்தாலும், எதிராளியை வெட்டுவான்.
"மூணு பன்னண்டுக்கு ஒரு வெட்டு, ரண்டு அஞ்சு, ஒரு மூணுக்கு ஒரு வெட்டு, இப்போ நாலு வெட்டாட்டம் ஆடுவேன்" என்று அவன் சொல்லும் போது எதிராளி சீனிவாச ராமனுஜமாகவே இருந்தாலும் மண்டை கிறுகிறுக்கும். ஐம்பது மீட்டர் தள்ளியிருக்கும் கடைக்குப் போவதானால் கூட, மாமாவின் டி.வி.எஸ். ஃபிஃப்டியில்தான் போவதாக அடம்பிடிப்பான்; யார் அவனைத் திட்டினாலும் அதே மாடுலேஷனில் அவர்களைப் பழித்துக் காட்டுவான்;எந்தவொரு மிரட்டலையும் துச்சமாக மதிப்பான்; இரண்டு மாமா மற்றும் ராசாமணி அக்காவிடம் சரிக்குச் சரியாக வாயாடுவான். செந்தில் மாமா அவனை 'சின்ன நரி' என்றும், தினேஷப்பாவை 'பெரிய நரி' என்றும் சொல்வார். அவனைத் திட்டாமல் இருந்தது பெரிய மாமா மட்டுமே. ஆனால், என்னிடம் அவன் வில்லத்தனம் ஏதும் செய்ததில்லை. முற்றிலும் புதிய சூழலான அங்கே எனக்கு ஒருவித சகஜநிலையையும் பாதுகாப்பு உணர்வையும் தந்தவன் அவனே.

காலையில் இருவரும் இட்லி சாப்பிடுவதே ஒரு சுவையான நிகழ்வாக இருக்கும். யார் அதிக இட்லி சாப்பிடுகிறார்கள் என்று அத்தை எங்களுக்குள் விளையாட்டாய் ஒரு போட்டி வைப்பார். இரண்டு பேருமே சமபலமுள்ள போட்டியாளர்கள் என்பதால், மாறி மாறி ஜெயிப்போம். கடைசி இட்லியை மட்டும் பிய்த்து தின்னாமல், சோறு போலப் பிசைந்து, கவளம் பிடித்துத் தின்பது எங்களுக்குள் ஒரு வேடிக்கையான பழக்கமாயிருந்தது. இப்போதுகூட நான் இட்லி சாப்பிட்டால், என்னையுமறியாமல் கடைசி இட்லியை மட்டும் பிசைந்துதான் சாப்பிடுகிறேன், ஓர் ஏக்கப் புன்னகையோடு.

நான் ஊரிலிருந்து கிளம்பும்போது மாற்றுடை ஏதும் எடுத்துச் செல்ல மாட்டேன். நீ.க.பாளையத்திலேயே நிரந்தரமாக தினேஷின் ஆடைகள் சில இருக்கும். தினமும் குளித்தபிறகு, என்னை முதலில் பிடித்த உடையை எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, பிறகு அவன் எடுத்துக் கொள்வான். நாங்கள் இருவரும் சேர்ந்து எப்போதாவது தாயக்கரமும், எப்போதுமே க்ரிக்கெட்டும் ஆடியவண்ணம் இருப்போம். அதே ஊரில் எங்களைவிட வயதில் சற்றே மூத்தவரான முருகண்ணன்தான் க்ரிக்கெட்டில் எங்களுக்கு காட்ஃபாதர். அவ்வப்போது, செந்தில் மாமா எங்கள் இருவரையும் வீடியோ டெக் வாடகைக்கு எடுக்க திங்களூருக்குக் கூட்டிச் செல்வார். ஒவ்வொரு முறை திரும்பி வரும்போதும், ரோஸ்மில்க் வாங்கித் தரவில்லையென்றால், தினேஷ் வண்டியில் ஏற மறுப்பான். ஒருமுறை எங்கள் இரண்டு பேரையும், வண்டிக்கு அருகே நிறுத்திவிட்டு, பக்கத்துக் கடை வரைக்கும் சென்றுவருவதாக மாமா போனார். அவர் போனபிறகு, என்னிடம் குறுநகை செய்தவாறே, குடிப்பது போல சைகை செய்து காண்பித்தான். இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்று எனக்கு பிரமிப்பாக இருக்கும். என்னுடைய IQ அவ்வளவு.

எனக்கு சுபாவை அறிமுகப்படுத்தியவன் தினேஷ் தான். அதற்கு முன்பும் நாவல்கள் படித்தேன் என்றாலும், ராஜேஷ்குமார் நாவல்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தேன். அவன் எனக்கு படிக்கக் கொடுத்த 'மனித வேட்டை' நாவல் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்குப் பிறகே நான், பழைய புத்தக தள்ளுவண்டிக் கடைகளில் சுபாவின் நாவல்களைத் தேடத் தொடங்கினேன். அவ்வப்போது நான் சிறு சிறு கதைகள் எழுதிக் கொண்டிருந்ததால், சுபாவைப் போல, (சுரேஷ் - பாலா) நானும் அவனும் சேர்ந்து கதைகள் எழுதலாமென யோசித்தோம். அனைவரும் என்னை விளித்த பெயர் சம்பத். எனவே, சம்பத்தையும், தினேஷையும் சேர்த்துப் பார்த்தோம். 'சதி'. திருஞான சம்பந்தமும், தினேஷூம் சேர்ந்து 'திதி' என்றானது. கதைகள் எழுதும் யோசனையைக் கைவிட்டோம்.

உளவியலின்படி, சிறுவயதில் குறும்புகள் செய்யும் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறிவிடுவதாக ஒரு தியரியைப் படித்திருக்கிறேன். அது தினேஷின் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. அனைவரின் எதிர்பார்ப்புக்கு எதிராக, அவன் +2 வில், குறைவான மதிப்பெண்களே எடுத்தான். ஆனால் தினேஷப்பாவும், விஜயாக்காவும் (அம்மா) அவனை ஊக்கப்படுத்தினார்கள். SIT -யில் EEE படித்தான். சிறுவயது முதலே அவனுக்கு எலக்ட்ரானிக்ஸ் மீது தனியார்வம். ரேடியோ பாடவில்லையென்றால், கழற்றிப் பார்க்கக் கூடிய வகையைச் சேர்ந்தவன். (அதைப் பாட விடாமல் செய்ததும் அவனாகத்தான் இருக்கும்). பாலிடெக்னிக்கில் ஆசிரியைகளை சைட் அடித்தது போக, நன்கு படிக்கவும் செய்தான். Essar நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாணவர்களுள் ஒருவனாக சூரத்துக்கு வேலைக்குச் சென்றான். வாய்ப்பாடிக்கு அருகிலுள்ள விஜயமங்கலத்தில், பெற்றோருக்கு ஒரு துணிக்கடை வைத்துக் கொடுத்து, சூரத்திலிருந்து மலிவு விலைக்கு வாங்கி கடைக்குத் துணிகள் அனுப்பினான். இப்போது துபாயில் இருக்கிறான். நான் சென்னைக்குக் கிளம்பி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அவனை சில வருட இடைவெளிக்குப் பின் சந்தித்தேன். அவனுடன் விஜயாக்காவும், அத்தையும் வந்திருந்தார்கள். அவனது ஒடிசலான தேகம் காணாமல் போய், சதை போட்டு, தொப்பை எல்லாம் போட்டிருந்தான். நான் அந்தச் சூழ்நிலையில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குக் கிளம்புவது சரியல்ல என்று அறிவுறுத்தினான். அத்தை அவன் பேசுவதற்கு ஆதரவாகப் பேசினார். காலம் எவ்வளவு சீக்கிரம் உருண்டோடிவிட்டது என்பதை நினைத்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. அப்போதே நாங்கள் இருவரும் எங்கள் வீட்டின் பின்புறம் சென்று க்ரிக்கெட் விளையாட மாட்டோமா எனத் தோன்றியது. இன்னமும் உனக்கு இன்ஸ்விங் வருகிறதா எனக் கேட்க நினைத்தேன். ஆனால் அதெல்லாம் Out of syllabus எனத் தெரிந்து அமைதி காத்தேன். அவன் சொன்னதற்கெல்லாம் சரியெனத் தலையாட்டி அவர்களை வழியனுப்பிவைத்தேன். அவன் ஓட்ட, அவர்கள் வந்த ஸ்விஃப்ட் கார் என் பார்வை எல்லையிலிருந்து விலகிச் சென்றது. செந்தில் மாமா ஒருமுறை எங்களை அம்பாஸிடர் காரில் கூட்டிச் சென்றபோது, 'நான்தான் முன்சீட்டில் அமர்வேன்' என்று நாங்கள் அடித்துக் கொண்டது ஞாபகம் வந்தது. மிக லேசாக கண்ணீர் சுரந்தது.

அவனுடைய பேச்சை மீறி சென்னைக்குக் கிளம்பி வந்தேன். கையில் காசில்லாதபோது அவனை Facebook - ல், தொடர்பு கொண்டு பணம் கேட்டேன். அக்கௌன்ட் நம்பரைத் தவிர எதையும் கேட்கவில்லை. இப்போது நான் உதவி இயக்குனன் ஆகிவிட்டதை அழைத்துச் சொன்னால் மிகவும் மகிழ்வான். அடுத்த மாதம் அவன் ஊருக்கு வரும்போது அவனை மீண்டும் பார்க்கப் போகிறேன்.

Comments

  1. Asusual cool & detailed writing da try using some catchy words also use related to current trending words in between so that it wil be more interesting

    Keep it up da👍

    ReplyDelete
  2. Bro you just rocked with your past life. The words are awesome and you have used the words in a good way

    ReplyDelete
  3. Really I'm gone to watch ur childhood stage while i m reading this article..i saw your article visually...i smell the aroma of our village attitudes...feel good...thumbs up...

    ReplyDelete
  4. There is no doubt u r good at writing. But still u don't exhibit it. Apart from that, I really enjoyed it... Keep it up

    ReplyDelete
  5. U r awesome.. Really i loved it.. Hats off..when i was reading ur childhood it remembered mine... Tq for sharing this to me

    ReplyDelete
  6. U r awesome.. Really i loved it.. Hats off..when i was reading ur childhood it remembered mine... Tq for sharing this to me

    ReplyDelete
  7. சம்பத் ஜி செம இந்த கதை மூலம் என் பழைய நினைவுகள் வருகிறது i love u

    ReplyDelete
  8. Bro really u r rocking. It makes myself to think about my childhood days which never comeback. Superb bro

    ReplyDelete
  9. Beautifully reminiscences were deified by the usage of parlance. Some words fought with me to get into my mind because I was not used to. Though some words were unfamiliar to me the memories you brought back were understandable really. Your writing acted as Time machine to me - Nostalgic moments. All the very best for your upcoming writings Pa.

    ReplyDelete
  10. Indha post inaiku dha padikaren, but andha disclaimer la use panna idea, that feel , i used it in my previous post. Not exactly but a similar feel. Something like 'The mere presence of something/someone itself will make us happy.' Bit surprised to find a similar one here.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எங்களைத் தற்குறிகள் என்று சொல்பவர்களுக்காக.

என் ஆசிரியர்கள்

நீதி வென்றுகொண்டுதான் இருக்கிறதா?